உள்ளடக்கத்துக்குச் செல்

குறுந்தொகை 51 முதல் 60 முடிய

விக்கிமூலம் இலிருந்து

பாடல்: 51 (கூன்முண்)

[தொகு]
தோழிகூற்று
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரு மவனொடு மொழிமே.

என்பது, வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவுமலிவு கூறியது.

பாடியவர்
குன்றியனார்.
  • திணை - நெய்தல்

செய்தி

[தொகு]

வளைந்த முள் கொண்டது முண்டகச்செடி. அதன் பூக்கள் நூல் அறுந்து கொட்டும் முத்துக்களைப் போலக் காம்போடு கொட்டும் கடல்நிலத்துத் தலைவன் அவன். நான் அவன்மேல் காதல் கொண்டுள்ளேன். என் தாயோ என் காதலை விரும்பாத கொடியவள். எனவே என் தந்தைதான் என்னை அவனுக்குக் கொடுக்கவேண்டும். ஊர் முணுமுணுக்கிறதே!- என்கிறாள் சேர்பனின் காதலி.

தாயை முண்டக முள்ளோடும், முத்தை ஊர்வாய் உதிர்க்கும் அம்பலோடும் ஒப்பிட்டு உள்ளுறை காணவேண்டும்.

பாடல்: 52 (ஆர்களிறு)

[தொகு]
தோழி கூற்று
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனயையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை
பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே.

என்பது, வரைவுமலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, 'முன்னாளின் அறத்தொடு நின்றமை காரணத்தான் இது விளைந்தது' என்பதுபடக் கூறியது.

பாடியவர்
பனம்பாரனார்.
  • திணை - குறிஞ்சி

செய்தி

[தொகு]

தோழி தலைவியிடம் சொல்கிறாள் - அழகிய யானை மிதித்த சேறு போல அன்று நீ வதங்கினாய். உன் கூந்தலில் நரந்தத்தின் மணம் கமழ்ந்தது. என்னிடம் கெஞ்சுவது போல நீ அன்று உன் வெண்பல்லைக் காட்டினாய். அதனால் அன்று நான் இரக்கம் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தாயிடம் அறத்தொடு நின்றேன் அல்லவா?

  • இறை இறையானே = கொஞ்சம் கொஞ்சமாக

பாடல்: 53 (எம்மணங்கினவே)

[தொகு]
தோழி கூற்று
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரொ டுற்ற சூளே.

என்பது, வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது.

பாடியவர்
கோப்பெருஞ் சோழன்.
  • திணை - மருதம்

செய்தி

[தொகு]
  • சூரர மகளிர் = தவறு செய்பவரை வருத்தும் காளி போன்ற தெய்வப் பெண்கள்
  • அணங்கிற்று = நினைவில் நின்று ஆட்டுகிறது

அன்று எம் ஊர்க் கடல்வெளி மணல் மேட்டில் வேலனின் வெறியாட்டு நடந்தது. புன்கம் பூ வெண்மணலில் உதிர்ந்து கிடப்பது போல வெறியாடிய களத்தில் நெல்லுப்பொறி சிதறிக் கிடந்தது. அங்கே நீ வந்து என் கையைப் பற்றி என்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்துச் சூள் உரைத்தாய்(சத்தியம் செய்தாய்). அதுதான் என்னை அணங்கிற்று.

பாடல்: 54 (யானேயீ)

[தொகு]
தலைவி கூற்று
யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.

என்பது, வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பாடியவர்
மீனெறி தூண்டிலார். பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்.
  • திணை - குறிஞ்சி

செய்தி

[தொகு]

தலைமகள் தன் தோழியிடம் சொல்கிறாள் - நான் இங்குதான் இருக்கிறேன். என் நெஞ்சோ என் காதலன் கானக நாடனொடு அங்கே கிடந்தொழிக்கின்றது.

காட்டு யானை மூங்கிலை வளைத்து மேய்ந்துகொண்டிருந்தது. தினைப்புனம் காக்கும் காவலர் கவணால் கல் எறிந்து அதனை ஓட்டினர். கவண்கல் பட்டு அந்த யானை தின்ன வளைத்த மூங்கிலை விட்டுவிட்டது. மூங்கில் யானையின் கையை விட்டுப் போய்விட்டது. அதுபோல என் நெஞ்சம் என்னை விட்டுப் போய்விட்டது.

பாடல்: 55 (மாக்கழி)

[தொகு]
தோழி கூற்று
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்கு றைஇக்
கையற வந்த தைவர லூதையொ
டின்னா வுறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.

என்பது, வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும் எனத்தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.

பாடியவர்
நெய்தற் கார்க்கியார்
  • திணை - நெய்தல்

செய்தி

[தொகு]

ஊதைக்காற்று வீசிற்று. அதனால் பொங்கிப் பிதிர்ந்த நீர்த்திவலைகள் பட்டு உப்பங்கழியில் பூத்திருந்த மணிப்பூ கூம்பியது. அந்த அளவுக்குத் துன்பம் தரும் ஊராக இந்தச் சிறிய நல்ல ஊர் உள்ளது. தலைவன் மணந்துகொள்ள வராவிட்டால் தலைவி இறந்துவிடுவாள் என்பது படத் தோழியானவன் சிறைபுறத்தில் இருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி சொல்கிறாள்.

பாடல்: 56 (வேட்டச்)

[தொகு]
தலைவன் கூற்று
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

என்பது, தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

பாடியவர்
சிறைக்குடி யாந்தையார்.
  • திணை -பாலை

செய்தி

[தொகு]

தலைவியை அழைத்துக்கொண்டு தன் ஊருக்குச் செல்ல விரும்பாத தலைவன் தலைவியிடம் பக்குவமாகச் சொல்கிறான்.

தலைவி தைரியம் இருந்தால் என்னுடன் வரட்டும். வழியில் நல்ல தண்ணீர் கிடைக்காது. வேட்டையாடிய செந்நாய் கலக்கி உண்டபின் மீதமுள்ள நீரைத்தான் உண்ணவேண்டும். அந்த நீரிலும் கொட்டும் குளவி மொய்த்துக்கொண்டிருக்கும். அவ்விடத்திற்குச் செல்லும் வழியும் வழுக்கும். வளையல் அணிந்த கையால் அதனை உண்ணத தைரியம் இருந்தால் தலைவி என்னுடன் வரட்டும்.

பாடல்: 57 (பூவிடைப்படினும்)

[தொகு]

திணை-நெய்தல்

தலைவி கூற்று
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே.

என்பது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பாடியவர்
சிறைக்குடி யாந்தையார்.

செய்தி

[தொகு]

அவனும் அவளும் கூடி வாழும் காலத்தில் பூ பூக்கும் கால அளவு பிரிவு நேர்ந்தாலும் அது அவளுக்கு ஓர் ஆண்டு காலம் போல இருக்குமாம். இப்போது அவர்கள் இருவரும் தனித்தனியாக இருக்கிறார்களாம். அவர்கள் உய்ந்து வாழவேண்டுமானால் அவர்கள் இருவரும் ஒருவர் போல ஒன்றி வாழும் நிலை வேண்டுமாம்.

மகன்றில்

[தொகு]

தண்ணீரில் வாழும் மகன்றில் என்னும் விலங்கு ஆணும் பெண்ணும் எப்போதும் இணைந்தே வாழ்வது போல அவர்கள் வாழவேண்டுமாம்.

பாடல்: 58 (இடிக்குங்)

[தொகு]
தலைவன் கூற்று
இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையி லூமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெ யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

என்பது, கழற்றெதிர்மறை.

  • திணை - குறிஞ்சி
பாடியவர்
வெள்ளிவீதியார்.

செய்தி

[தொகு]

தலைவனின் தோழன் பாங்கன். பாங்கன் தலைவனின் காமநோயைப்பற்றிக் கிண்டல் செய்கிறான். அவனுக்குத் தலைவன் சொல்கிறான்.

நீ சொல்வது நன்றன்று. இத்தோடு நிறுத்திக்கொள். கடுமையாகக் காயும் வெயிலில் வெண்ணெய் உருண்டையைப் பாறாங்கல்லின் மேல் வைத்துவிட்டுக் கை இல்லாத ஊமையன் ஒருவன் அந்த வெண்ணெய்க்குக் காவல் இருப்பது போல நான் காமநோய்க்குக் காவல் இருந்தேன். அந்தக் காமநோய் அந்த வெண்ணெய் வெயிலில் உருகிப் பாறையில் பரவுவது போலப் பரவிக்கொண்டிருக்கிறது. இதுதான் நிலைமை.

பாடல்: 59 (பதலைப்பாணி)

[தொகு]
தோழி கூற்று
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய வரும்பொருள்
நிரம்பா வாகலி னீடலோ வின்றே.

என்பது, பிரிவிடை யழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

  • திணை - பாலை
பாடியவர்
மோசிகீரனார்.

செய்தி

[தொகு]

தலைவன் பிரிவுக்காக வருந்தும் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்.

வறண்ட நிலங்கள் பலவற்றைக் கடந்து தேடும் பொருள் கிடைத்தற்கு அரியதுதான். என்றாலும் அந்தப் பொருள் என்றும் யாருக்கும் நிறையப் போவதும் இல்லை. நிறைவு தரப் போவதும் இல்லை.

வள்ளல் ஒருவனின் குன்றத்துச் சுனையில் குவளைப் பூவோடு பொதிந்து கிடக்கும் குளவிப் பூ மணக்கும் உன் கூந்தலை அவர் மறப்பாரோ?

பாடல்: 60 (குறுந்தாட்)

[தொகு]
தலைவி கூற்று
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.

என்பது, பிரிவிடை யாற்றாமையிற் றலைமகள் தோழிக்குரைத்தது.

  • திணை - குறிஞ்சி
பாடியவர்
பரணர்.

செய்தி

[தொகு]

தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் தலைவியானவள் தலைவன் தந்த இன்பத்தின் இனிமையைத் தோழியிடம் சொல்கிறாள்.

நீண்ட பாறையில் பெருந்தேன் கூடு கட்டியிருந்தது. அங்கிருந்த கூதளிமரம் ஆடியதால் தேன்கூட்டில் ஓட்டை உண்டாகித் தேன் மெல்ல மெல்லச் சொட்டிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த இரண்டு காலும் இல்லாத முடவன் ஒருவன் அடியில் உட்காரந்துகொண்டு எப்போதாவது விழும் தேன் சொட்டைச் சுவைத்துக்கொண்டிருந்தான்.

அதுபோல நான் அவன் இன்பத்தைச் சுவைத்துக்கொண்டிருக்கிறேன்.