பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இவர்கள் பாவம்! தங்கள் உயிரை வாங்குவதற்காக வந்து நிற்கும் யானையைக் கண்டு, முன்பு அழுத அழுகையைக்கூட நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எவ்வளவு புனிதமானவர்கள்! என்ன பேதைமை! அரசர்பிரான் ஒன்றும் அறியாத இந்தக் குழந்தைகளைக் கண்டு மருண்டு இவர்களுடைய உயிரையே போக்கத் துணிகையில், இந்தக் குழந்தைகளோ உண்மையிலே தங்கள் உயிரை வாங்க வந்த யானையைக் கண்டு வேடிக்கை பார்க்கிறார்களே! இது இரங்கத் தக்கது அல்லவா? மன்னர் பிரான் திருவுள்ளத்தில்......

வளவன்:- (கனைத்துக்கொண்டு உரத்த குரலில்) அமைச்சரே, தண்டனையை நிறுத்துங்கள். குழந்தைகளை விடுதலை செய்யச் சொல்லுங்கள். (தழுதழுத்த குரலுடன்) புலவர் பெருமானே! என்னைத் தாங்கள் பழியினின்றும் விடுவித்தீர்கள். என் மனநிலை சரியாக இல்லை. என் வாழ்த்தைத் தங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்....மற்ருெரு முறை சந்திக்கிறேன்.

(அரசன் வேகமாகப் போய்விடுகிறான். கோவூர் கிழார் வேகமாகச் சென்று குழந்தைகளைக் கட்டிக்கொள்கிறார்.)

கோவூர் கிழார்:- இன்று கடவுள் திருவருளால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள்.

(குழந்தைகள் அழுகை)

(கூட்டத்தில் கோவூர் கிழார் வாழ்க!” என்ற முழக்கம்.)