அலை ஓசை/பிரளயம்/"சீதா வருகிறாள்!"

விக்கிமூலம் இலிருந்து


வாசலில் வந்து நின்று "தபால்!" என்று சத்தமிட்ட போஸ்டுமேன் வயதான மனிதர். அவர் லலிதாவை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "நீங்கள்தானா அம்மா, லலிதா பட்டாபிராமன் என்கிறது?" என்று கேட்டார். "ஆமாம்!" என்று சொல்லி லலிதா கையை நீட்டினாள். போஸ்டுமேன் கடிதத்தை அவள் கையில் கொடுத்துவிட்டுப் போனார். கடிதத்தின் மேல் விலாசம் கணவருடைய கையெழுத்திலே இருக்கிறது என்பதை லலிதா கவனித்துவிட்டு ஆவலுடன் உறையைப் பிரித்தாள். அதற்குள்ளே இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று கணவர் எழுதியிருப்பதுதான் இன்னொன்று ஆகா!- சீதாவின் கையெழுத்துப் போல அல்லவா இருக்கிறது? இருக்கட்டும்; முதலில் இவருடைய கடிதத்தைப் படிக்கலாம்:-

"சௌ. லலிதாவுக்கு ஆசீர்வாதம். "உனக்குக் கடிதம் எழுத ஆரம்பிக்கும் போது, 'என் ஆருயிரே!' 'அன்பின் சிகரமே!' 'காதற் கனிரசமே வாழ்வின் துணைவியே' என்றெல்லாம் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால் எழுதும்போது அதெல்லாம் வருவதில்லை, பழைய கர்நாடக பாணியில்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இங்கே நான் சௌக்கியமாகவும் சௌகரியமாகவும் வந்து சேர்ந்தேன். யாரும் என்னை வழிமறித்து மணிபர்ஸைப் பறிக்கவில்லை. அப்படி யாராவது பறித்திருந்தாலும் அதிகமாக அவர்களுக்கு ஒன்றும் கிடைத்திராது. ஒரு ஆளுக்குத் தேவபட்டணத்துக்கு ரயில் சார்ஜும் மேலே ஒன்றரை அணாவுந்தான் கிடைத்திருக்கும். ஏமாந்து போயிருப்பார்கள்! நல்ல சமயம் பார்த்துச் சமையற்கார அம்மா லீவு வாங்கிக் கொண்டு விட்டாள். நான்தான் இப்போது சமையல் செய்கிறேன். சமையல் 'பஸ்ட் கிளாஸ்' என்று உன் தம்பி சுண்டு சர்டிபிகேட் கொடுக்கிறான். நான் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்ததில் என்ன பிரயோஜனம் வேண்டும்? ஜெயிலில் இருந்திராவிட்டால் சமையல் செய்யக் கற்றுக் கொண்டிருக்க முடியுமா? வீட்டில் நான் சமையற்கட்டிற்குள் வந்தாலே நீங்கள் எல்லாரும் குடி முழுகிப் போனதுபோல் கூச்சல் போடுவீர்களே? போகட்டும்.'அத்திம்பேருக்கு ஒத்தாசையாயிரு!" என்று நீ சுண்டுவிடம் சொல்லி அனுப்பினாயல்லவா? சுண்டு எனக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்து வருகிறான்.

நேற்றுக் குழம்பை அடுப்பிலே கவிழ்த்து விட்டான்! 'போதும் அப்பா, உன் ஒத்தாசை! நீ சும்மா இருந்தால், அதுவே பெரிய உதவியாயிருக்கும்!' என்று சொன்னேன். சுண்டு ஒத்தாசைக்கு வந்துவிடப் போகிறானே என்று எனக்கு இப்போது ஒரே பீதியாக இருக்கிறது. உன் தாயார் ஒட்டியாணத்தை மறந்து விட்டாளா, இல்லையா? அது தங்க ஒட்டியாணம் அல்ல - முலாம் பூசிய பித்தளை ஒட்டியாணம் என்பதையும், அதை நான் விற்றுவிடவில்லை - தானம் கொடுத்தேன் என்பதையும் உன் அம்மாவிடம் சொல்லிவிட்டாயா? சொன்னால் ஒருவேளை அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகி விடுமோ, என்னமோ? உன் தாயாரின் சமாசாரம் உனக்குத்தான் தெரியும். ஆகையால் உன்னுடைய உசிதப்படி செய்துகொள். மாமாவுக்கு இப்போது உடம்பு நன்றாய்ச் சௌகரியமாகியிருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வந்ததை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. நம்முடைய சூரியா சொன்ன யோசனையைக் கேட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். இந்த மாதிரியெல்லாம் பொருள் நஷ்டமும் மனக் கஷ்டமும் ஏற்பட்டிருக்குமா? எல்லாம் கடவுளுடைய செயல்! நீ எப்போது புறப்பட்டு வருவதாக உத்தேசம்? கூடிய சீக்கிரம் வந்துவிடுவது நல்லது. நீ சீக்கிரம் வரவேண்டியதற்கு ஒரு முக்கிய காரணத்தை இத்துடன் இருக்கும் கடிதத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வாய். உன் தோழி சீதா உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லிப் பயமுறுத்தியிருக்கிறாள். அவள் வரும்போது நீ இங்கே இல்லாமல் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? அதைப் பற்றி நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. ஸ்ரீமதி சீதா புது டில்லி முதலான இடங்களில் இருந்து நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவள். நானோ சுத்தக் கர்நாடக மனிதன். ஆகையால் ஸ்ரீ மதி சீதா தேவியை வரவேற்று உபசரிக்கும் விதம் எனக்கு எவ்விதம் தெரியும்? ஆகையினால் இந்தக் கடிதம் பார்த்தவுடன் அப்பா - அம்மாவிடம் நல்லபடியாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு வந்து சேரவும். சீமாச்சுவய்யர் உன்னைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து விடுவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இங்ஙனம். பட்டாபிராமன்"

மேற்படி கடிதத்தைப் படித்து வந்த போது அதில் பல விஷயங்கள் எழுதியிருந்த போதிலும், "சீதா வருகிறாள்!" என்னும் ஒரு விஷயமே லலிதாவின் மனதில் தங்கியது. கணவன் கடிதத்தைப் படித்து முடித்ததும் அடங்கா ஆர்வத்துடன் சீதாவின் கடிதத்தைப் படிக்கத் தொடங் கினாள். அப்போது காமரா அறையிலிருந்து, "லலிதா!" என்று அப்பா அருமையாக அழைக்கும் குரல் கேட்கவே, லலிதா கடிதத்தைப் படித்த வண்ணமே உள்ளே சென்றாள். அவளைப் பார்த்ததும் கிட்டாவய்யர், "லலிதா! எனக்கு ஏதாவது கடிதம் உண்டா? கையில் இரண்டு கடிதம் வைத்திருக்கிறாய்ப் போலிருக்கிறதே! இரண்டும் உனக்கு வந்தது தானா? யார் கடிதம் எழுதியிருக்கிறார்கள்?" என்று கேட்டார். "ஒரு கடிதம் தேவபட்டணத்திலிருந்து இவர் எழுதியிருக்கிறார். இன்னொன்று அத்தங்கா சீதா எழுதிய கடிதம் அப்பா! கல்கத்தாவில் சித்ராவின் வீட்டிலிருந்து எழுதியிருக்கிறாள். சீக்கிரத்தில் அவளுடைய பெண்ணைப் பார்க்க மதராஸுக்கு வருகிறாளாம். அப்படியே தேவபட் டணத்துக்கு வருவதாக எழுதியிருக்கிறாள்..." "ஓகோ! அப்படியா! சீதா கடிதம் எழுதியிருக்கிறாளா? பாவம்! கொஞ்ச நாளாய் அவளைப்பற்றி ஒரு தகவலும் தெரியாம லிருந்தது. அவளை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற சபலம் எனக்குக்கூட உண்டு. அவளைப் பார்த்துச் சில புத்திமதிகள் சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன். தேவபட்டணத்துக்குச் சீதா வந்தால் இங்கேயும் ஒரு தடவை வரச் சொல்கிறாயா, லலிதா! எனக்குத்தான் இன்னும் ஒரு மாதம் வெளியில் புறப்பட முடியாது போலிருக்கிறது!" என்றார் கிட்டாவய்யர்.

"ஆகட்டும், அப்பா! வரச் சொல்லுகிறேன். இப்போது நான் ஊருக்குப் புறப்படலாமா, அப்பா! சீதா வருகிறதாக எழுதியிருக்கிறபடியால் என்னைச் சீக்கிரம் புறப்பட்டுச் வரச் சொல்லி இவர் எழுதியிருக்கிறார். உங்களை இப்படி விட்டு விட்டுப் போக மனது கஷ்டமாய்த்தானிருக்கிறது. ஆன போதிலும்...." நீ போக வேண்டியதுதான், லலிதா! சீக்கிரம் புறப்பட வேண்டியதுதான். மாப்பிள்ளை இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறார். அவரை எத்தனை நாள் நீ தனியாக விட்டுவிட்டு இருக்க முடியும்? சீதாவும் வருகிறதாகச் சொல்லியிருக்கிற படியால் அவசியம் போகத்தான் வேண்டும். எனக்குக்கூட ஒவ்வொரு சமயம் தேவபட்டணத்துக்கே வந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இந்த ஊரில் எனக்கு இனிமேல் நிம்மதியிராது! எங்கேயாவது போனால்தான் மனது சாந்தம் அடையும்." "அதற்கென்ன, அப்பா! பேஷாக வாருங்கள்! நீங்கள் தேவபட்டணத்துக்கு வருவதற்கு யாரைக் கேட்கவேணும்! - நான் நாளைக்குப் புறப்படுகிறேன். இன்றைக்கு அவருக்கு ஒரு பதில் எழுதி விட்டு வருகிறேன். தபால் ஆபீஸில் தபால் கட்டும் சமயம் ஆகிவிட்டது!" இவ்விதம் சொல்லிவிட்டு லலிதா உள்ளே போய்க் கடிதம் ஒன்று எழுதத் தொடங்கினாள். அப்போது அவளுடைய செல்வக்குமாரி பட்டுவும் அவளுடைய புத்திரன் பாலசுப்பிரமணியனும் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். "அம்மா! அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?" என்று பட்டு மெதுவாகக் கேட்டாள். "ஆமாம்; இந்தா! படி!" என்று லலிதா கடிதத்தை எடுத்துப் பட்டுவிடம் கொடுத்தாள். பட்டு தட்டுத் தடுமாறி அதில் ஒரு வரி படித்துவிட்டு, "அப்பா கோணலும் மாணலுமாய்க் கிறுக்கித் தள்ளுகிறார் எனக்குப் புரியவில்லை. இந்த இன்னொரு கடிதம் யார் எழுதியது!" என்று கேட்டாள்.

"அதுவா? சீதா அத்தங்கா எழுதியது!" என்றாள் லலிதா. "சீதா அத்தங்கா என்றால் யார்?" என்று பட்டு கேட்டாள். "சீதா அத்தங்கா என்னுடைய அத்தையின் மகள். ரேழி அறையில் தாத்தா படுத்துக் கொண்டிருக்கிறார், பாரு! அவருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள்தான் எனக்கு அத்தை, அவளுடைய பெண் சீதா! சீக்கிரத்தில் உங்கள் இரண்டு பேரையும் பார்ப்பதற்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாள். அதற்குள்ளே நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப சமர்த்தாக ஆகிவிட வேண்டும். நச்சுபிச்சு என்று வந்தவர்களை ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது." "இல்லை; நான் கேள்வி கேட்கவில்லை, அம்மா! சீதா அத்தங்காவை நான் பார்த்ததே கிடையாதே! எப்படி அம்மா அவள் இருப்பாள்?" லலிதாவுக்குச் சட்டென்று ஒரு எண்ணம் உதித்தது. பாதி எழுதியிருந்த கடிதத்தை அப்படியே வைத்துவிட்டுக் கூடத்துக் காமிரா அறைக்குள் போனாள். அங்கே இருந்த ஒரு பழைய அலமாரியைத் திறந்து அதில் அடைத்து வைத்திருந்த குப்பை கூலங்களில் கையை விட்டுத் தேடினாள். கடைசியாக, ஒரு மங்கிப் போயிருந்த பழைய போட்டோ படத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருக்க, அந்தப் புகைப்படத்தைக் காட்டி, "இதோ பார்த்தாயா பட்டு! இதுதான் சீதா அத்தங்கா! இதுதான் நான்! சிறு பிராயத்தில் நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். எங்களுக்குக் கலியாணம் ஆன சமயத்தில் இந்தப் படம் எடுத்தது. குளத்தங்கரை பங்களாவுக்குப் போய் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். அதையெல்லாம் நினைத்தால் இப்போது சொப்பனம் மாதிரி இருக்கிறது" என்றாள். இந்தச் சமயத்தில் சரஸ்வதி அம்மாள் கிட்டாவய்யருக்குச் சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தாள். வரும்போதே, "ஏண்டி லலிதா ! அதென்னடி நான் கேள்விப்படுகிறது? இந்தப் பிராமணர் சொல்கிறது நிஜமா? தேவபட்டணத்துக்குச் சீதா வரப் போகிறாளாமே, வாஸ்தவந்தானா?" என்று இரைந்து கொண்டு வந்தாள்.

"ஆமாம், அம்மா! சீதா வருகிறாள்! அதற்காக நீ ஏன் இவ்வளவு இரைச்சல் போடுகிறாய்?" என்றாள் லலிதா. "நானா இரைச்சல் போடுகிறேன்? அழகாய்த்தானிருக்கிறது. நீ மாத்திரம் என்னிடம் சொல்லாமல் மறைக்கலாமாக்கும்; அந்தத் துக்கிரி இப்போது எதற்காக வருகிறாள்? யார் அவளை வரச் சொன்னார்கள்? அவள் வரவில்லையென்று யார் அழுதார்கள்? லலிதா! நான் சொல்லுகிறதைக் கேள், இங்கே இப்போது சௌகரியமில்லை. ஆகையால் வரவேண்டாம் என்று உடனே கடிதம் எழுதிப் போட்டுவிடு!" "அம்மா! சீதா இந்த ஊருக்கு வரவில்லை! என்னையும் என் குழந்தைகளையும் பார்க்கத் தேவபட்டணத்துக்குத்தான் அவள் வருகிறாள். நீ எதற்காக வீணாய்ச் சண்டை பிடிக்கிறாய்!" "அப்படியானால் நான் வேறு, நீ வேறா என்று கேட்கிறேன். நான் உன்னைப் பெற்ற தாயார் இல்லையா? உன்னுடைய குழந்தைகள் என்னுடைய பேரன் பேத்திகள் இல்லையா? ஏன்தான் இப்படி என்னைக் கண்டு கரிக்கிறீர்களோ, தெரியவில்லை..." "உனக்குச் சீதா அத்தங்காவை எப்போதும் பிடிக்கிறது கிடையாது; அதனாலேதான் சொன்னேன்." "அதனாலேதான் நானும் கேட்கிறேன். எனக்குப் பிடிக்காதவள் உனக்கு மட்டும் எதற்காகப் பிடித்திருக்க வேணும்? நான் சொல்கிறதைக் கேள், லலிதா! அவள் ரொம்ப துக்கிரி; மனதில் நல்ல எண்ணம் கிடையாது. பாம்புக்குப் பாலை கொடுத்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும். இந்தச் சமயம் தேவபட்டணத்துக்குக்கூட வரவேண்டியதில்லை என்று உடனே எழுதிவிடு. இன்றையத் தபாலிலேயே கடிதத்தைச் சேர்த்துவிடு. தெரிகிறதா?...." இந்தச் சமயத்தில் வாசலில் மாட்டு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "வண்டிச் சத்தம் கேட்கிறதே! யார் வந்திருப்பார்கள்! நேற்றைக்கு முற்றத்தில் காக்காய் கத்தியபோதே எனக்குத் தெரியும், யாராவது விருந்தாளிகள் வந்து நிறபார்கள் என்று. பட்டு! நீ போய்ப் பாரடி அம்மா!" பட்டுவோடு லலிதாவும் எழுந்து வாசற் பக்கம் போனாள். வண்டியிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் லலிதாவின் அதிசயமும் மகிழ்ச்சியும் அளவு கடந்து பொங்கின.