அகத்தியர் தேவாரத்திரட்டு 2. பரையின் வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அகத்தியர் தேவாரத்திரட்டு 2. பரையின் வரலாறு[தொகு]

இரண்டாவது, பரையின் வரலாறு:
“அங்ஙனம் குருவருள் பெற்ற ஆன்மாவுக்கு, ஆன்மவியாபக முழுதும் நின்று விளக்குவதாகிய முதல்வனது பராசக்தியின் விளக்கம் விளங்கித்தோன்ற, அக்கணமே அப்பராசத்தியில வியாபகமுற்று, அதனோடு அநந்நியமாய் நின்று, எங்கணும் அப்பராசத்தி சொரூபமே காணப்பெற்றுப் பூரண நிட்டையில் அழுந்தி நிற்கும் நிலையே, பரையின் வரலாறாம். (திருவெண்ணீறு - பராசத்தியின் சொரூபமாகும்.)” -சோ. சிவ அருணகிரி முதலியார்.


திருஞானசம்பந்த சுவாமிகள்[தொகு]

திருவாலவாய்த் திருநீற்றுப்பதிகம்[தொகு]

இரண்டாந் திருமறை - பண் - காந்தாரம்

பரையின் வரலாறு

திருச்சிற்றம்பலம்
இந்தத் திருப்பதிகம், நின்றசீர்நெடுமாற நாயனார் என்னுங் கூன்பாண்டியர்க்கு உற்ற வெப்புநோயை “ஆலவாய் அண்ணல் நீரே, மன்னு மந்திரமுமாகி மருந்துமாய்த் தீர்ப்பீர்” என்று ஓதித் தீர்த்தருளியது.

பதிகப்பாடல்: 01[தொகு]

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. (1)

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செம் துவர் வாய் உமை பங்கன் திரு ஆல வாயான் திரு நீறே. (௧)


பதிகப்பாடல்: 02[தொகு]

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. (2)

வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதம் புனல் வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திரு நீறே. (௨)


பதிகப்பாடல்: 03[தொகு]

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே. (3)

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திரு நீறே. (௩)


பதிகப்பாடல்: 04[தொகு]

காண வினியதுநீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே. (4)

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திரு ஆல வாயான் திரு நீறே. (௪)


பதிகப்பாடல்: 05[தொகு]

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே. (5)

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம்அது ஆவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆல வாயான் திரு நீறே. (௫)


பதிகப்பாடல்: 06[தொகு]

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. (6)

அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆல வாயான் திரு நீறே. (௬)


பதிகப்பாடல்: 07[தொகு]

எயிலது அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்திரு நீறே. (7)

எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம்அது ஆவது நீறு
அயிலைப் பொலி தரு சூலத்து ஆல வாயான் திரு நீறே. (௭)


பதிகப்பாடல்: 08[தொகு]

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யாலவா யான்திரு நீறே. (8)

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பரா வணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தரா வணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா அணங்கும் திரு மேனி ஆல வாயான் திரு நீறே. (௮)


பதிகப்பாடல்: 09[தொகு]

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலமு துண்டமி டற்றெம் மாலவா யான்றிரு நீறே. (9)

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய் அது வெண் பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும இன்பம் தருவது நீறு
ஆல் அமுது உண்ட மிடற்று எம் ஆல வாயான் திரு நீறே. (௯)


பதிகப்பாடல்: 10[தொகு]

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மாலவா யான்திரு நீறே. (10)

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண் திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆல வாயான் திரு நீறே. (௰)


பதிகப்பாடல்: 11[தொகு]

ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலிநி லாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. (11)

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆல வாயான் திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. (௧௧)


திருச்சிற்றம்பலம்.


(நேரிசை வெண்பா)
குருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில்
அரனுருவு மென்றலைமே லாக்கும் - திருவடியும்
சிட்டான வர்ச்சனையுந் தொண்டுஞ் சிவாலயர்க்கென்(று)
இட்டார் அகத்தியனார் எட்டு.பார்க்க

அகத்தியர் தேவாரத்திரட்டு 1. குருவருள்

அகத்தியர் தேவாரத்திரட்டு 3. அஞ்செழுத்துண்மை

அகத்தியர் தேவாரத்திரட்டு 4. கோயிற்றிறம்

அகத்தியர் தேவாரத்திரட்டு 5. சிவனுருவம்

அகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி

அகத்தியர் தேவாரத்திரட்டு 7. அருச்சனை

அகத்தியர் தேவாரத்திரட்டு 8. அடிமை

அகத்தியர் தேவாரத்திரட்டு