உள்ளடக்கத்துக்குச் செல்

அகமும் புறமும்/005-008

விக்கிமூலம் இலிருந்து

நாட்டு வளமும் மக்கள் வளமும்

தமிழன் கண்ட நாடு

தமிழன் வாழ்க்கையைப் பார்க்கப் புகுமுன், ‘அவன் நாடு எத்தகையது? எதை அவன் நாடு எனநினைத்தான்?’ என்பதைக் காணவேண்டும். தமிழனுக்கு ஒரு வேதம் தந்த திருவள்ளுவர், நாட்டைப்பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறார்:

‘நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளந்தரு நாடு.’

(குறள்–739)

இதன் கருத்தென்ன? முயற்சி செய்யாமல் பலன் தரக் கூடியதே நாடு என்பது மட்டும் அன்று; பெருமுயற்சி செய்து சிறு பயன் தருவதும் நாடு அன்று. வளம் என்பன இயற்கையாகக் கிடைக்கும் நலன்களாம். இதனை வேறு பாடல்களாலும் அறியலாம். மதுரைக் காஞ்சி என்றொரு நூல் உண்டு. மாங்குடி மருதனார் என்ற புலவர் பெருமான், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைப் பாடிய பாடலாகும் அது. அதில் பாண்டி நாட்டைப்பற்றி அவர் கூறுவதாவது:

மழைதொழில் உதவ, மாதிரங் கொழிப்ப,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயனெதிர்பு நந்த
நோயிகந்து நோக்கு விளங்க,

(மதுரைக்காஞ்சி, 10–15)

என்பது. [உழவுத் தொழில் நன்கு நடைபெறுமாறு வேண்டுங்காலத்தில் மழை உதவவும், ஒருமுறை விதைத்தது ஆயிரமாக விளையவும், நிலமும் மரமும் தம்முள் போட்டி இட்டுக்கொண்டு மக்களுக்கு வேண்டிய பயனைத் தரவும், விளைந்த பயனை நன்கு அனுபவித்தலால் நாட்டு மக்கள் நன்கு வாழவும்]

இப்பகுதியிலிருந்து நாம் அறியவேண்டிய செய்திகள் பல உண்டு. வளத்தைப் புலவர் எங்ஙனம் கூறுகிறார் என்பதைக் காணல் வேண்டும். ‘மழை உதவ’ என்று கூறியவர், பிறகு வித்தியது என்று கூறலினால், இயற்கையின் பயனாகிய மழையும், மனித முயற்சியாகிய விதைத்தலும் ஒன்று கூடலைக் கூறுகிறார். இவ் விரண்டினுள் ஒன்று குறையினும் பயனில்லை; நாடு நாடாய் இராது. அம்மட்டோ? இன்று அரசியலாரின் காட்டிலாக்கா செய்யும் வேலையை நாமறிவோம். ஆனால், அன்று தமிழர் காட்டைப் போற்றி வந்தனர் என்பதை, மரத்தின் செயலும் மேற்பாடலின் கூறப்படுதலால் அறியலாம். மனித முயற்சி நாட்டின் செம்மைக்கு இன்றியமையாதது.

நீர் வளம்

இயற்கையினால் உண்டாகும் மழைநீரை மட்டும் தம்பித் தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் கால்வாய்கள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கினான். குளங்களும் ஏரிகளும் அவனது விடாமுயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன. இருநூறு வருட ஆங்கில ஆட்சியாற் பெற்ற பயன், நீரில்லாத ஆறுகளும் காய்ந்துபோன குளங்களுமேயாம்! ஆனால், காவிரியும், வைகையும், தாமிரவருணியும் தமிழன் முயற்சியின் சிகரங்கள். காவிரியைப் பற்றிப் பட்டினப்பாலை,

வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்

(பட்டினப்பாலை, 5–8)

[மழை பெய்யாவிடினும் தான் தவறாமல் மலையிடத்துப் புறப்பட்டு நீரைப்பெருக்கிப் பொன் கொழிக்கும் காவிரி]

என்று கூறுகிறது. அது மழைவளங் குறையினும் தான் நீர் குன்றாது பொன்னை வாரிக் கரையில் ஏற்றும் தன்மையுடைய ஆறு.

வையை ஆற்றைப் பெண்ணாக உருவகப்படுத்துகிறார், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார ஆசிரியார்:

விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிர்அறற் கூந்தல்
உலகுபுரந் துட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி

(சிலம்பு 13: 166–170)

[குறுக்கும் நெடுக்கும் ஓடும் கயல் மீனாம் கண்களையும், மணம் பொருந்திய அறலாகிய கூந்தலையும், பொருந்தி உலகைக் காக்கப் பல பொருளையும் விளைவித்து ஊட்டுபவள் வையை என்ற பெண்]

இத்தகைய நீர் வளமுடைய நாடாய் இருப்பினும், தமிழ் மன்னர் சும்மா இருந்து விடவில்லை. ஆறுகள் செல்லாவிடங்களில் குளங்கள் வெட்டினர் எனப் பட்டினப்பாலை கூறுகிறது.

‘குளந்தொட்டு வளம்பெருக்கி’ (பட்டினப்பாலை–284)

‘நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தொட்டோர்’
‘நாட்டின் நீர்வளம் மிகும்படியாகக்
   குளந் தோண்டியவரே சிறப்புடையர்’

(புறம்– 28)

என மேற்காட்டிய புறப்பாடல் கூறுகிறது. எனவே, இத்தகைய அருமைப்பாட்டோடு தமிழ் நாடு செழித்திருந்தது. இவ்வளவு வளம் பொருந்திய நாட்டில் வறுமை ஏற்படுவதே அரிது. ஒருவேளை இயற்கையின் கோளாறுகளால் மழைகெட்டுப் பஞ்சம் வந்தால், அதற்கும் அரசரே காரணம் என மக்களும் அரசருமே நினைத்தார்கள். இக்காலத்தில் வாழும் நமக்கு ஒருவாறு இது வியப்பாகவும் இருக்கும். ஆனால், பழந்தமிழ் மன்னன் மழை வளம் முதலியன குறையாதிருப்பது தன் செங்கோல் நலத்தால்தான், என்று நினைத்தான்.

மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;
பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்;
குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்

(சிலம்பு, காட்சி. 100–104)

[நாட்டில் மழை வளங்குறையினும், உயிர்களுக்கு வேறு எத்தகைய துன்பம் வரினும், செங்கோல் பிழையாமல் ஆட்சி செய்யும் மன்னர் குடியில் மகனாய்ப் பிறத்தல் பெருந்துன்பமே அல்லது, விரும்பத்தக்கது அன்று.]

இவ்வடிகள் அரசன் தன் வாழ்க்கையை எவ்வாறு நினைத்தான் என்பதை அறிவிக்கும். மன்னர்களாகப் பிறந்தது பிறர் பொருளைச் சுரண்டிச் சுகமடைவதற்காகவே என்று நினைக்கும் இந்நாளில், இவ்வடிகள் சிறிது மன அமைதியை அளிக்கின்றன. மேலே கூறிய இவை நீங்க ஏனைய துன்பங்களும் வராமல் தமிழ் மன்னர் காத்து வந்தனர்.

வழிகளின் நிலை

நாகரிகம் மிகுந்துள்ள இந்நாளில் கொலையும் கொள்ளையும் எல்லையற்று நடைபெறுகின்றன. ஆனால், அந்நாளில் அவ்வாறில்லை என அறிகிறோம். போக்குவரவு சாதனம் குறைந்திருந்த அப்பொழுதுகூட மன்னர் ஆனை மூலை முடுக்குகளிலும் நடைபெற்று வந்தது. அரசன் எங்கிருப்பினும் அவன் ஆணை எங்கும் சென்று உலகைக் காப்பதாக இன்றும் ஏட்டில் எழுதியிருக்கக் காண்கிறோம். அரசனைத் தம் வாழ்நாளில் கண்டிராத பலரும், அவன் ஆணை நன்கு நடைபெறுமாறு உதவி செய்கின்றனர். இக்கருத்தைப் பிற்காலத்து வந்த சிந்தாமணி ஆசிரியர் நன்கு எடுத்துக் கூறுகிறார்:

உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி,
கறங்கு தெண்திரை வையகம் காக்குமால்

(சிந்தாமணி. 248)

அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும் என்பதே இதன் பொருள். இது போலவே பழந்தமிழ் நாட்டில் ஆட்சி நிலவியதெனச் சங்க நூல்கள் முழங்குகின்றன.

தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் ஆண்ட நாட்டைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில் பின்வருமாறு கூறப்படுகிறது;

அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றுஅவன் கடியுடை வியன்புலம்;
உருமும் உரறாது; அரவுந் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா

(பெரும்பாணாற்றுப்படை 370–374)

[வழியிடைச் செல்வோர் வருந்தப் புடைத்து அவர் கைப்பொருளைத் திருடும் மக்கள் அவன் நாட்டில் இல்லை. மேலும், வனவிலங்குகளும் பாம்புகளுங்கூட அவன் நாட்டில் துன்பஞ் செய்தலில்லை.]

இம்மட்டோ? ஊர்க் காவல் செய்யும் பாதுகாப்புப் படைஞர், நீண்ட வழிகளிலும் கவர்த்த வழிகளிலும் நின்று வியாபாரப் பொருள்களின் போக்குவரத்துக்குத் துன்பம் ஏற்படா வண்ணம் காவல் புரிகின்றனர். அவர்கள் எத்தகையவர்கள்? ஆசிரியர் அவர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்:

கடம்பமர் நெடுவேள் அன்னமிளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காடு.....

(பெரும்பாணாற்றுப்படை 75–78)

[கடப்பம்பூமாலை அணிந்த முருகனைப் போன்ற எஃகுடனும், நீண்ட கைகளும் உடைய (போலீஸ்) வீரர்கள், சுங்கம் வசூலிக்கும் வழிகளிலும் நீண்ட பெருவழிகளிலும் நின்று காவல் புரிகின்றனர்]

அவர்களுட்பலர் அரசனைக் கண்டிராவிடினும், அவன் கொற்றம் நன்கு நடைபெற உதவுகின்றனர். இத்தகைய மாட்சிமையுடைய நாட்டில் தமிழன் வாழ்ந்தான். ஆதலால், அவனது நாட்டில் ஒரு வேலி நிலம் ஆயிரங்கலம் விளைவதாயிருந்தது.

வாணிக எல்லை

இதுவரை கூறியவற்றைக் கொண்டு பழந்தமிழன் பயிர்த் தொழில் ஒன்றுமே கொண்டு வாழ்ந்தான் என்று நினைத்து விடுதலாகாது. அந்நாளில் தமிழ் நாடு வாணிகத்தில் சிறந்த நாடுகளில், தலையாய நாடாயிருந்தது. தமிழரின் வாணிகச் சிறப்பைக் குறிக்கத் தமிழ் நூல்களேயன்றி, ஏனைய நூல்களும் சான்று பகரும். பெரிபுளூஸ் (கி. பி. 75) என்ற நூலும், கிரேக்க சரித்திரமும், வேண்டும் அளவு தமிழ் நாட்டின் வாணிகத்தைப் பேசுகின்றன. இன்றும் கொற்கை, காயல்பட்டினம் போன்ற கீழ்க்கடற்கரைப் பட்டினங்களிலும், முசிரி போன்ற மேலைக் கடற்கரைப்பட்டினங்களிலும் பழைய உரோமநாட்டுக் காசுகள் அகப்படுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியான முக்கியப் பொருள்கள்–முத்து, பவளம், மிளகு, உணவுப் பொருள்கள், அரிசி, மயில் தோகை என்பவையாம். இன்றும் கிரேக்க மொழியில் காணப்படும் ‘ருஷ்’ (orydsa) என்ற சொல்லும் ‘துஹ்’ (taos) என்ற சொல்லும் முறையே அரிசியையும், தோகையையுைம் குறிக்கும் வடிவு மாறிய தமிழ்ச் சொற்களாம். கி. மு. 55ல் வாழ்ந்த உரோமாபுரிச் சக்கரவர்த்தியாரான மார்க்கஸ் அரேலியஸ் என்பார், “உரோமர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கையைத் திருப்தி செய்துகொள்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து முத்துக்களை வரவழைக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனுப்பும் பொன் எண்ணிலடங்காது,” எனக் கூறியிருக்கிறார். சிறிது காலம் தமிழ் நாட்டிலிருந்து முத்து இறக்குமதி செய்யப்படக்கூடாதென்ற சட்டமும் உரோமாபுரியில் அமலில் இருந்து வந்தது. இம்மட்டோடு அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நிற்கவில்லை. உயிர்ப் பொருள்களாகிய கிளி, குரங்கு, மயில் முதலியவற்றையும் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். முத்துக் குளிப்பதிலும் சிறந்த முத்துக்களைச் சேகரிப்பதிலும் பாண்டி நாட்டார் உலகப்புகழ் பெற்றவர். பிளினியின் வாக்கின்படி, மரக்காலால் அளந்து மூலைகளிற் குவிக்கும் படியான அவ்வளவு முத்துக்கள் பாண்டி மன்னனிடம் இருந்தன. எல்லா நாட்டினரோடும் தமிழர் வியாபாரஞ் செய்யினும், சிறப்பாக யவனர், கிரேக்கர் இவர்களுடன் தொடர்பு கொண்டு வியாபரஞ் செய்தனர் என அறிகிறோம். (பெரிபுளூஸ்: சோமசுந்தரதேசிகர் மொழிபெயர்ப்பு, பக்கம் 62.) காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற தலைநகரங்களில் யவனர்களும் கிரேக்கர்களும் குடும்பங்களோடு வந்து தங்கி வாழ்ந்தார் என்பது அறிய முடிகிறது. தங்கி வாழ்ந்த அவர்கள் தங்கள் மொழியையே பேசிவந்தமையின் இப்பட்டினங்கள் பலமொழி வழங்கும் ஊர்களாயின.

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்

(பட்டினப்பாலை 215–217)

[பல மொழிகளும் வழங்கும் குற்றம் இல்லாத பட்டினம். வேற்று நாட்டார் கலந்து வாழும் காவிரிப் பூம்பட்டினம்]

என்ற பட்டினப்பாலை அடிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. யவனர்கள் சிறப்பாகக் குதிரைகளையும், சாராயத்தையும், இங்கு இறக்குமதி செய்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அணிகலன்களையும் முத்துக்களையும் ஏற்றுமதி செய்து சென்றார்களென்பது மதுரைக்காஞ்சி யால் தெரிகிறது.

நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப (ம. காஞ்சி. 822–24)

[இடம் அகன்ற யவனம் முதலிய தேசங்களுக்கு இந்நாட்டுப் பெரிய அணிகலன்களைக் கொண்டு போவான் வேண்டி அங்கிருந்து கொணர்ந்த குதிரைகள்.]

உள்நாட்டு வாணிபம்

பழந்தமிழன் வாணிகம் கப்பல் மூலம் நடைபெற்றது ஒரு புறமிருக்க, அவனது உள்நாட்டு வாணிகமும் மிக்க பெருமை வாய்ந்திருந்தது. சங்கப் பாடல்களில் எங்கும் இதனைக் காணலாம். சகடம் என்று கூறப்படும் வண்டிகளில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வணிகர், பல செளகரியங்களை முன்னிட்டுக் கூட்டமாகவே எங்கும் செல்வர். அத்தகைய கூட்டத்திற்குச் சாத்து என்ற பெயரும் வழங்கி வந்துளது. பொருள்களை வைத்து வாணிகஞ் செய்யும் கடைத்தெருவிற்கு அங்காடி என்ற பெயர் காணப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடைவீதியைப் பற்றிப் பட்டினப்பாலையிலும், மதுரை மாநகரின் கடைவீதிச் சிறப்பைப்பற்றி மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களிலும் பரக்கக் காணலாம்.

இறக்குமதியும் ஏற்றுமதியும்

இவற்றுள் ஒன்றை விரிவாக ஆராய்வோம்: மதுரை மாநகரத்து நாளங்காடியைப் பற்றி மதுரைக்காஞ்சி ஆசிரியர் கூறும் வகையால் பழந்தமிழ் நாட்டின் செல்வ நிலை நம்மால் ஒருவாறு அறிய முடிகிறது. ஒரு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களைப் பொறுத்தே, அந்நாட்டின் பொருளாார நிலை இருக்கும். எந்த நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கிறதோ, அந்நாடு வறுமையால் வாட நேரிடும். உதாரணமாக, நமது இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். இன்றைய நிலையில் நம்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம்.

இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோம். உணவுப் பொருள்களை வேற்று நாடுகளிலிருந்து அந்நாடு வரவழைக்கிறது; ஆனால், அதற்குப் பதிலாக இயந்திரங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்கிறது. மேலும், எவ்விதமாகவேனும் தன் பொருள்களைப் பிறர் வாங்குவதற்காகப் பல வழிகளையும் அந்நாடு கையாளுகின்றது. அந்த நாட்டில் இயந்திரங்கள் உண்டு. ஆனால், வெற்று இயந்திரங்களை ஓடவிட்டால் அவை பொருள்களை உண்டாக்குமா? மூலப் பொருள்களாகிய பஞ்சும் எண்ணெய் விதைகளும் இருந்தால்தானே துணியும் சோப்பும் உண்டாக்க முடியும்? இந்நிலையில் நாம் என்ன செய்கிறோம்? நமது நாட்டில் உண்டாகிற பஞ்சையும் எண்ணெய் விதைகளையும் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம்; அவற்றையே மீண்டும் துணியாகவும், சோப்பாகவும் பெறுகிறோம். (இது விடுதலைக்கு முந்தைய நிலை) இவ்வாறு நடைபெற்று வருமானால், நமது பொருளாதார நிலை கீழே போகாமல் வேறு எங்ஙனம் இருக்க முடியும்?

இஃதொரு புறமிருக்க, போர் நடைபெற்ற சென்ற சில ஆண்டுகளில் எண்ணற்ற பொருளை ஏற்றுமதி செய்தோம். பணத்தால் நிறைந்த பிரிட்டனைக்கூட நமக்குக் கடன்கார நாடாக்கி விட்டோம். ஆனால், இந்நிலை எங்ஙனம் முடிந்தது? நமது நாட்டிற்குத் தேவையான பொருள்களை நாமுபயோகிக்காமல் பிறருக்கு அனுப்பி வைத்ததனாலேயே இது முடிந்தது. அப்பொழுது நாம் அனுபவித்த வறுமை சொல்லிலடங்காது. இன்று நாமடைந்த பயனென்ன? நமது கடனை அத்தேசம் திருப்பித்தர இயலுகிறதா? சாதாரண மக்கள் ஒருவர்க்கொருவர் கடன்படுவதும் கொடுப்பதும் போலத் தேசங்கள் செய்ய முடியாது. சாமான்கள் மூலமாகவே கடனைத் தீர்க்க இயலும்.

இவற்றிலிருந்து நாம் அறிவதென்ன? சாதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார நிலை கேடு அடையாமல் இருக்கவேண்டுமேயானால், அந்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி என்ற இவ்விரண்டும் தம்முள் ஒத்த அளவுடையனவாய் இருக்க வேண்டும். இன்றேல், தீங்கே விளையும். அமெரிக்காவைப் போன்ற தேசம் பணச் செல்வத்தோடு, பொருள் வளத்தையும் பெற்றிருப்பதால், மேற்கூறிய இரண்டனுள் ஒன்று மிகினும் குறையினும் நாட்டின் செல்வ நிலை இடர்ப்படுவதில்லை. எனவே, எந்த ஒரு நாடு பொருள் வளம் மிக்கு விளங்குகிறதோ, எந்த நாடு தன் தேவைக்குப் பிறர் கையை எதிர்பாராமல் இருக்கிறதோ, அந்த நாடே செல்வநாடு என்று கூறப்படும். மேலே கூறிய கருத்துக்களை மனத்திலிருத்திக் கொண்டு பழைய தமிழ் மதுரையைக் காண்போம்.

மதுரையில் வாணிக நிலவரம்

மதுரையம்பதியை,

‘மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்’

(மதுரைக்காஞ்சி.429)

என்று மதுரைக் காஞ்சி ஆசிரியர் கூறுகிறார். வானை முட்டுங் கட்டடங்கள் உலகின் பலவிடங்களிலும் தம் புகழைப் பரப்பி நிற்கின்றன. கடைத்தெரு மிகவும் அகன்றது. பணியாரம் விற்கும் பாட்டி முதல் மணியும் பொன்னும் விற்கும் பெருங்குடி வணிகர்வரை அனைவரும் நிறைந்துள்ளனர். இவர்கள் விற்கும் பொருள்களைப் பெரிதும் விரும்பி வாங்குகிறவர் வேற்று நாட்டினர் என்பதுந் தெரிகிறது. இங்ஙனம் வந்த வேற்று நாட்டவர் தங்கள் பொருள்களை இங்கு கொணர்ந்து விற்று, அவற்றிற்குப் பதிலாக இப்பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இற்றை நாளில் இங்ஙனம் பெருவாணிகம் நடைபெறுகிற இடங்களில் திடீரென மாறுதல்கள் ஏற்படுவது கண்கூடு. பொருள்களின் விலைகள் திடீரென ஏறியும் இறங்கியும் பலரைப் பெருஞ்செல்வராகவும், ஓட்டாண்டிகளாகவும் செய்தல் நாம் அறிந்ததொன்றே.

ஆனால், இவ்வளவு பெருவியாபாரம் நடந்தும் (வாணிக) நிலை மாறாது இருந்ததாம் மதுரை மாநகரில். இதனை ஆசிரியர் இக்காலப் பொருளாதார சாத்திரத்திற்குறிக்கப்படுஞ் சொற்களாற் குறிக்கவில்லை; ஆனால், அதனைவிடச் சிறந்த முறையிற் குறிக்கிறார். வியாபாரப் பெருக்கிற்கு ஓர் உவமை தருகிறார். அவ்வாறு உவமிக்கும் பொருள் கடல் ஆகும். அக்கடலுக்குக் கொடுக்கிற அடைமொழிகளால் முதல்பொருளையுஞ் சிறக்க வைக்கிறார். அதெங்ஙனம் என்பதைக் காண்போம். கடலுக்குப் பல இயல்புகள் உண்டு. அவற்றுள் சிறந்த ஒன்றை அவர் எடுத்தாளுகிறார். கடல் தன்பால் எவ்வளவு நீர் வந்துங் கூட உயருவதில்லை; மேலும், எவ்வளவு நீர் ஆவியாகப் போனாலும் தன்னளவில் ஓர் அங்குலமும் குறைவில்லை. இவ்வியல்பை ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். இவ்வியல்பை மதுரையின் வியாபாரத்திற்கு வைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் கப்பலாகப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்தாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால் மதுரை நகர நாளங்காடி (பகற்கடை) நிலவரம் மாறுபடவில்லையாம். அதாவது, நாட்டின் பொருளாதார நிலையில் வேற்றுமை காணப்படுவதில்லை. இது ஆச்சரியப்படத் தக்கது அன்றோ? ஓர் உவமானத்தால் ஆசிரியர் இந்தப் பொருளாதாரக் கருத்தை விளக்கிக் கூறிவிட்டார். இதோ, பாடலைக் காணுங்கள்:

மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங்காடி

(மதுரைக்காஞ்சி 425–450)

[கரைபொருதிரங்கு முந்நீர்–கரையை மோதி ஒலிக்குங் கடல், கொளக்கொள–வேற்று நாட்டவர் பலமுறை அள்ளிச் செல்ல, தரத்தர–அவரது பொருளைப் பல முறை கொண்டு வந்து சேர்க்க.]

பண்டமாற்று வாணிகம்

தமிழ்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் நடைபெற்றது. அவ்வாறு நடந்தும், நாட்டின் பொருளாதார நிலையைக் குலைக்கக்கூடிய அளவில் நடைபெறவில்லை என்பதும் சில பாடல்களால் அறிகிறோம். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் வெவ்வேறானவை. ஆனால், அவற்றின் மதிப்பு ஒன்றாகவே இருந்தது என அறிகிறோம். இன்றும் அதே நிலையில்தான் வெளிநாட்டு வாணிகம் நடைபெற்று வருகிறது. இதனைப் பழங்காலத்தில் ‘பண்டமாற்று’ என்று கூறுவர். வெளிநாட்டிலிருந்து வருகிற பொருளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால், அவ்விலையை நேரடியாக நம் நாட்டில் வழங்குகிற பணத்தால் கொடுக்க முடியாது. ஏனென்றால், நம் நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேற்றுநாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேறுபாடு உண்டு. எனவே, வருகிற பொருள் எவ்வளவு விலை மதிப்புள்ளதோ, அவ்வளவு விலை மதிப்புள்ள மற்றொரு பொருளை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் வாணிகம் இன்றும் நடைபெறுகிறது; அன்றும் நடைபெற்றது. இம்முறையில் இரண்டும் ஒத்த மதிப்புள்ள பொருள்களாக இருக்க வேண்டும் என அறிகிறோம். இக் கருத்தைப் பட்டினப்பாலை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். அவரும் மழை நீரையே உவமையாகக் காட்டுகிறார். ஆனால், அவர் அவ்வுவமையைக் கையாளுகிற முறையே வேறு. மழையின் உற்பத்தி நாமறிந்ததே. கடலிலுள்ள நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக மாற்றிப் பிறகு மேகமாக்குகிறது. இம் மேகம் நிலப்பரப்பில் நெடுந்துரம் செல்கிறது. மலைகள் நிறைந்த பிரதேசங்களில் மேகம் தன் பாலுள்ள நீரை மழையாகப் பொழிகிறது. அம்மழை நீர் மீண்டும் சிறு கால்களாகத் தொடங்கிப் பெரிய ஆறாக மாறி, இறுதியில் புறப்பட்ட கடலுக்கே வந்து சேருகிறது. வேறு வழியாகவும் இதனைக் கூறலாம். நீர் கடலிடத்திலிருந்து ஆவி வடிவாகச் சென்றது; நீர் வடிவாகத் திரும்பி வந்தது. இரண்டும் தன்மையால் மாறுபடினும் மதிப்பால் ஒத்தே உள்ளன அல்லவா? இம்மாதிரியே காவிரிப்பூம் பட்டினத்துத் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெறுகின்றன. தன்மையால் இரண்டு சரக்குகளும் மாறுபடினும், மதிப்பால் அவை ஒத்தவையே. இதனை அவ்வாசிரியர் கூறும் முறை நோக்கற்பாலது.

வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி

(பட்டினப்பாலை 126–32)

[மேகம் முகந்த நீரை மலையில் பொழியவும், மலையில் பொழியப்பட்ட நீர் கடலில் சேரவும் உள்ள நிலை போல, நீரிலிருந்து மூட்டைகளைக் கரையிலேற்றவும் கரையில் இருந்து கப்பலில் ஏற்றவும் நிறைந்த பொருள்கள் உள்ளன]

கடல் நீர் ஆவியாகி மேலே செல்வதும் பிறகு மழையாகப் பொழிந்து கடற்கு வருவதும் நீர் என்ற அளவில் ஒன்றே யாயினும் நீராவி வேறு. நீர் வேறு.

ஆழ்ந்து நோக்கினால் தமிழ்நாடு ஏற்றுமதி செய்த பொருள்கள் வேறு இறக்குமதி செய்யப்பெற்ற பொருள்கள் வேறு என்பன இவ்வுவமை வாயிலாகத் தெளிவாக எடுத்துக் காட்டப் பெறுகின்றன.

இவ்வாறு நாம் பொருள் கொள்வது சரியானதுதான் என்பதனை,

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு

(பட்டினப்பாலை 185–193)

என்னும் தொடர்கள் விளக்குகின்றன.

(கடல் வழியாக–பாய்மரக்கப்பலில் கொண்டுவரப் பெற்ற நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும் மேலைக் கடற்புறத்திலிருந்து கொணரப்பெற்ற கரிய மிளகுப் பொதிகளும், பொதிய மலையில் கிடைக்கும் சந்தன, அகிற்கட்டைகளும் கொற்கைத் துறையிலிருந்து வந்த முத்தும் கீழைக் கடல் பவழமும், கங்கையாற்றங்கரை வளமும் (யானை, மாணிக்கம், பொன்) கடாரத்திலிருந்து பெறப்பட்ட நுகர் பொருள்களும் சீனத்திலிருந்து தருவிக்கப் பெற்ற கருப்பூரம், பனிநீர், குங்குமம் முதலவாய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி இடப்பட்டிருந்தன)

இவற்றுள் புரவி முதலியன கடல்வழி (கலத்தில்) வந்தவை. மணி, பொன் முதலியன நிலத்து வழி (காலின்) வந்தவை, என்று அறிகிறோம்.

குணகடல் துகிர் என்னும் பொழுது இன்றைய ஆஸ்திரேலியப் பகுதியின் பவழத்தைக் குறிக்கின்றது என்று கொள்வதில் பிழையில்லை.

இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் மேற்சொன்ன உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

கடலிலிருந்து ஆவியாகிச் செல்லும் நீரின் அளவும், மழையாகக் கடலுள் வந்து சேரும் அளவும் ஒத்து இரா.

கடலிலிருந்து ஆவியாவது மிகுதி.

வந்து சேரும் நீரின் அளவு குறைவு என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையே.

இத்தகைய ஓர் உவமை கூறுவதன் மூலம் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் அளவு மிகுதி; இறக்குமதி ஆகும் பொருள்களின் அளவைவிட மிகுதி.

மேற்காட்டிய அடிகளால் அரேபியா, பர்மா ஆஸ்திரேலியா சீனம் முதலிய வெளிநாட்டவருடன் இத்தமிழர் வாணிகம் செய்ததுடன், கங்கைவெளி, இலங்கை முதலிய அண்டை நாடுகளுடன்கூட வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று அறிகிறோம்.

இத்தகைய நிலையை இக்காலப் பொருளதாரச் சொற்களால் கூறவேண்டுமானால், ‘சமன் செய் வாணிகம்’ (Balanced Trade) என்று கூறலாம்.

சுங்கவரியும் பயனும்

இதனைப் பார்க்கும்பொழுது, எல்லா நாட்டினரும் அவரவர் விருப்பம் போல வேண்டுவனவற்றைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்யலாம்போலும் என்று நினைத்துவிடுதல் ஆகாது. அவ்வாறு செய்கின்றதை இக் காலத்தார் ‘கட்டுப்பாடற்ற வாணிகம்’ (Free Trade) என்று கூறுவர். இத்தகைய ஒரு வாணிகமே நாட்டின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஏற்றது என்று வாதாடுகிறவர்களும் உண்டு. ஆனால், இத்தகைய ஒரு நிலை, நாட்டின் பொருளாதாரத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. இவ்விரு கட்சியாரும் இன்றுங்கூட ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், பழந்தமிழர் இதனைப் பற்றி என்ன நினைத்தனர் என்பதைக் காணலாம்.

பழந்தமிழர் வேற்று நாட்டினருடன் செய்த வாணிகத்தை வரையறுத்தே செய்தனர் என்பதை அறிகிறோம். அதனை எவ்வாறு வரையறுத்தனர் என்பதை அறிவது மிக இன்றியமையாதது. இன்றும் வேற்று நாட்டிலிருந்து அதிகமான பொருள்கள் வரக்கூடாதெனக் கருதினால், அரசாங்கத்தார் அதனைத் தடுப்பதற்கு ஒரே முறையைத்தான் கையாளுகின்றனர். அப்பொருளின் மேல் சுங்கவரியை உயர்த்திவிடுவதே (Higher Tariff) அம்முறை. அங்ஙனம் செய்வதால் பொருளுக்கு இயற்கையாக வைக்க வேண்டிய விலைக்குமேல் இந்தச் செலவையும் ஏற்றி வைத்து விற்க நேரிடுகிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க அப்பொருள் தகுதியற்றதாகிவிடுமேயானால், அதனை யாரும் வாங்கமாட்டார். வாங்காத பொருளை யாரும் இறக்குமதி செய்யமாட்டார். எனவே, இம்முறையினால் வேற்றுநாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்தலாம். இம்முறையிலேயே அன்றைய தமிழ்நாட்டில் வாணிகம் நடைபெற்றதெனப் பட்டினப்பாலை குறிக்கிறது. பட்டினப்பாலை கரிகாற்பெருவளத்தான் என்ற சோழ அரசன் மேல் பாடப்பட்ட அரிய பாடல். அவன் இமயஞ் சென்று புலிக்கொடி நாட்டி மீண்டவன். எனவே, அவன் காலத்தில் தமிழ்நாடு செல்வம் கொழித்திருக்குமென்பதில் ஐயமில்லை. அவனுடைய முக்கியத் துறைமுகப் பட்டினம் காவிரிப்பூம்பட்டினம்.

காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் பொருள்கள் வந்து இறங்குகின்றன. அவற்றைச் சுங்க இலாக்காவைச் சேர்ந்த அலுவலர் வந்து பார்வையிடுகின்றனர்; அவற்றின் மதிப்பை அளவிடுகின்றனர். பொருளின் மதிப்பென்பது எப்பொழுதும் ஒரு நிலையாக இருப்பதில்லை. அங்ஙனம் இருக்கவும் இயலாது. அப்பொருளுக்கு இருக்கும் அவசியத்தைப் (demand) பொறுத்து அதன் மதிப்பும் (Value) மாறுபடும் என்பது நாமறிந்ததொன்று. எனவே, அதன் அவசியத்தை, அப்பொழுதுள்ள நாட்டின் நிலையைச் சீர்தூக்கிப் பார்த்து அச்சுங்க அலுவலர் மதிப்பிடுகிறார்; ஏற்ற முறையில் சுங்கம் விதிக்கிறார்; இங்ஙனம் விதிக்கின்ற முகத்தாலேயே வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்பாடு செய்கிறார். இதனை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். தினந்தோறும் இச்செயல் ஓய்ச்சல் ஒழிவின்றி நடைபெறுகிறது. இதனைச் செய்பவரும் மனத்தாலும் உடலாலும் வலிமை பெற்றவர். அங்ஙனம் சுங்கம் வசூலித்தமைக்கு அடையாளமாக மூட்டைகளின் மேல் சோழநாட்டு இலச்சினையாகிய புலிக் கொடியைப் பொறித்து, அவை மற்ற மூட்டைகளோடு கலந்துவிடாதபடியும், கொடி பொறிக்கப்படாதவை நாட்டினுள் நுழையாமலும் கண்காணித்துக் கொடி பொறித்த மூட்டைகளை மிகவும் காவல் பொருந்திய பாதுகாவலான இடங்களிலும் அடுக்குகிறார்.

வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
 *****
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி

(பட்டினப்பாலை 124–135)

[வைகல்தொறும்–தினந்தோறும்; அசைவின்றி–சோம்பலல்லாமல்; உல்கு–சுங்கவரி]

சுங்க அலுவலர்

இவ்வடிகளிலிருந்து அறியவேண்டும் பொருள்கள் இரண்டுண்டு. அச்சுங்க அலுவலர் ‘வலியுடைய வல்லணங்கினோன்’ என்று கூறப்படுகிறார். ஏன்? சுங்கம் வசூலிப்பவருக்கு வலிமை எதற்காக? ஈண்டு வலிமை என்றது மனவலிமையை. அம் மனவலிமை இல்லாதவன் சுலபமாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு அரசனை ஏமாற்றுபவன் ஆகிவிடலாமல்லவா? இந்நாளில் வாழும் நமக்கு இது ஒன்றும் புதுமையன்று. ஆனால், பழந்தமிழ் நாட்டில் அரச நீதியை நடத்துபவர் எங்ஙனம் மனத்திட்பம் வாய்ந்தவராய் இருந்தனர் என்பதை இவ்வடிகள் அறிவுறுத்துகின்றன. மேலும், ஒன்று நோக்க வேண்டும். அவர் வெறுஞ் செம்மையுடையவராக மட்டும் இருத்தல் போதாது. பிறர் அவரை ஏமாற்றுவர். அவர் அங்ஙனம் செய்யாதிருக்க, அலுவலர் தமது அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருக்க வேண்டும். இது கருதியே ஆசிரியர் அவர் படை வலியாலும், தம் அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருந்தார் என்பதை அறிவிப்பதற்காக ‘வல்லணங்கினோன்’ (பிறரை வருத்தக்கூடிய பலமுடையவன்) என்று கூறுகிறார். இம்மட்டோடு இல்லை. இவையெல்லாம் இன்றுங்கூட இருக்கக் காண்கிறோம். ஆனாலும், திருட்டுத்தனமாகச் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ‘கள்ளக் கடத்தல்’(Smuggling) இன்றும் நின்றபாடில்லை. அத்தகைய செயல் அந்நாளில் இல்லை என்பதை ஆசிரியர் ‘அருங்கடிப் பெருங்காப்பின்’ பொருள்கள் இருந்தனவெனக் கூறுமுகத்தால் கூறுகிறார்.

இவற்றால் அரேபியா, பர்மா முதலிய வெளிநாட்டு வாணிகத்தோடு கங்கை வெளி, இலங்கை முதலிய இடங்களுடன் உள் நாட்டு வாணிகமும் நன்கு நடந்தமை அறியப்படுகிறது.

உடையார் இல்லார் வேற்றுமை

ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் அந்நாட்டில் சிலரே பொருள் படைத்தவராய் இருப்பர்; ஒரு சிலர் ஒன்று மற்ற ஏழைகளாய் இருப்பர்; பெரும்பான்மையோர் நடுத்தர மக்கள் என்று வழங்கப்படும் நிலையிலிருப்பர். இவர்கள் வாழ்க்கைதான் நாட்டின் செல்வநிலைக்கு அறிகுறியாகும். இத்தகைய மக்கள் பெரும்பாலும் உழைப்பையே நம்பி வாழ்கின்றவர்கள். உழைத்த உழைப்புக்கேற்ற பயன் கிடைக்கின்றபொழுது இவ்வகை மக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாய் இருப்பார்கள். மேலும், தம்மினும் மேம்பட்ட பொருளாளர் நிலைமையைத் தாமும் அடைவதற்கேற்ற வழிகளை முனைந்து தேடுவர். ஆனால், இத்தகைய எண்ணம் மக்களுக்கு எல்லாக்காலத்தும் இருந்து வந்ததென்று கூற முடியாது. செல்வமுடையார் செம்மையாய் வாழ்ந்து, செல்வத்தின் பயன் ஈதலே தவிர இறுக்கிப் பிடித்தலன்று என்று நினைக்கின்ற வரை, இடையிலுள்ள மக்கள் அவர்கள்மேல் பொறாமையோ வெறுப்போ கொள்ளமாட்டார்கள். இந்நிலை இந்த நாளில் மாறிவிட்டமையாலேதான் பெருந்துன்பங்கள் தோன்றுகின்றன. இந்த நடுத்தர மக்கள் மேலும் பொருள் சேர்த்து அப்பொருளாளர் கூட்டத்தில் சேர முனைகின்றார்கள். அப்பொருளாளர்களோ இவர்கள் உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கொடாமல் இவர்களை மேலும் வறுமையடையச் செய்ய முயல்கின்றார்கள். இதனால், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை பெரிதாகிப் பூசல் முற்றுகிறது.

பழந்தமிழ் நாட்டின் நிலை

இனி, பழந்தமிழ்நாட்டை நோக்குவோம். அந்நாட்டில் ஒரு சிலர் பணம் படைத்தவராய் இருந்தனர் என்பதும், பெரும்பான்மையினர் நடுத்தர மக்களாகவும் ஒரு சிலர் மிகவும் ஏழ்மை வாய்ந்த மக்களாகவும் இருந்தனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இன்றும் இத்தகைய நிலையே தமிழ் நாட்டில் நிலவுகிறது. ஆனாலும், இரண்டுக்கும் எவ்வளவு வேற்றுமை! அன்று இம்மூவகை மக்களுக்கும் இடையே இருந்த மனப்பான்மை இன்று மறைந்தொழிந்தது. மறைந்ததோடு மட்டும் அல்லாமல் வெறுப்பு முதலிய தவறான குணங்களும் நிரம்பிவிட்டன. இதன் காரணம் என்னவென்று ஆராயவேண்டும். நாளாவட்டத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தி அடையாமல் இருக்கப் பழகினார்கள். இயற்கையோடு வாழ்ந்து, எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளுகிற வரையில் திருத்தி மனத்தில் குடிகொண்டிருக்கும்; மனத்தில் அமைதி நிலவும். திருப்தி அடைந்த ஒருவன் மனத்தில் பொறாமை, முதலிய தவறான எண்ணங்களுக்கு இடமில்லை. அதே போலப் பெருஞ்செல்வம் படைத்தவனும், அச்செல்வத்தை வைத்துக் காப்பாற்றி வேண்டியவர்க்கு வழங்கும் பொறுப்பை மேற்கொண்டவனாகத் தன்னைக் கருதினான்; அச்செல்வம் தான்மட்டும் அனுபவிப்பதற்காக ஏற்பட்டதன்று என்று நினைத்தான். எப்போதாவது ஒருவர் இருவர் தவறாக நினைக்க முற்பட்டாலும், அவ்வெண்ணம் தவறானது என்று எடுத்துக்காட்டப் பெரியோர் இருந்தனர். தகுந்த அறவுரைகளால் இத்தகைய மனநிலைகளை அவர் அகற்றினர். உதாரணமாக நக்கீரர் கூறுவதைக் காண்க;


செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறம்–189)

[செல்வத்தின் பயன் பிறருக்குத் தருதலேயாம். அவ்வாறல்லாமல் ‘யாமே அனுபவிப்போம்’ என்று நினைத்துச் சேர்த்து வைத்தால், அது அழிவது உறுதி.]

பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை. செல்வர் வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் காண்போம். கோவலன் பெருஞ்செல்வர் குடும்பத்தில் பிறந்தவன்; மணம் ஆன பிறகு தனிக்குடும்பம் நடத்தி வந்தான்; தானே வாணிகமும் செய்தான்; மாதவியோடு சேர்ந்து “குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்தான்.” மலையத்தனை செல்வத்தை அழிப்பினும், அவளை வெறுத்து வந்த பின்னர்த் தந்தையைக் கண்டிருப்பானேயாகில் மறுபடியும் மலையத்தனை செல்வத்தைப்பெற்று மீண்டும் வாணிகம் தொடங்கியிருக்கலாம். ஆனால், மானமுடைய அவன் அவ்வழியை மேற்கொள்ளவில்லை. மீண்டும் தனது உழைப்பால் பொருள் தேடவேண்டும் என்று நினைத்தானே தவிர, எளிமையாக மானத்தை இழந்து பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணவில்லை. இன்று கள்ளச் சந்தையில் பொருள் தேடும் பெரியோர் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய உதாரணம் எங்ஙனம் வரவேற்கப்படுமோ அறியோம்! ஏழையாயினும், நடுத்தர வகுப்பாராயினும், உழைப்பையே அணிகலமாகக் கொண்டு வாழ்ந்தனர் பழந்தமிழர் உழைப்பு அல்லது முயற்சியைத் “தாள்” என்ற சொல்லால் குறித்தனர் பழந்தமிழர். முயற்சியற்ற அரசரைக் கூடப் பழந்தமிழர் எள்ளி நகையாடினர்.

‘மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்’

(புறம்,-75)

என வரும் அடி பழந்தமிழர் முயற்சிப் பெருக்கைக்காட்டும்.

நடுத்தர மக்கள் பொருளாதாரம்

இனி, நடுத்தர வகுப்பில் உள்ள ஒரு குடும்பத்தைக் காண்போம். மாடுகள் வைத்துப் பால், மோர், நெய் முதலியவற்றை விற்று வாழ்க்கை நடத்தும் இடையர் குடும்பம் அது. குடும்பத்தை நடத்தும் பொறுப்புப் பெண்ணுக்கேயன்றி ஆண் மகனுக்கு இல்லை. இது கருதியே வீட்டை ஆளுகின்றவள் என்று பொருள் தரும் ‘இல்லாள்’ என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. ஆனால், அதற்கு மறுதலையாக ‘இல்லாளன்’ என்ற சொல்லை உண்டாக்கவில்லை. இவ்வாறு குடும்பத்தை நடத்தும் பெண் ஒருத்தி, மிகு விடியற் காலத்தில் எழுந்துவிடுகிறாள். பெரியதொரு பானையிலுள்ள தயிரைக் கடைகிறாள். கடையும் பொழுது புலி உறுமுவது போன்ற ஓசை உண்டாகிறது. மோரைக் கடைந்து எடுத்துக் கொண்டு சென்று வியாபாரம் செய்கிறாள்; அங்ஙனம் மோர் விற்பதோடு மட்டுமல்லாமல், தனியாக நெய்யையும் வியாபாரம் செய்கிறாள். நெய்யின் விலை மோரைவிட மிகுதியாக இருக்குமென்பதற்கு ஐயமில்லை. இவ்விரண்டினாலும் பெற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதைக் காண்போம். மோர் விற்றுவந்த பொருளால் குடும்பத்தை உண்பிப்பதோடு, சுற்றத்தாரையும் காப்பாற்றுகிறாள். பட்டினி கிடந்தாவது பொருளைச் சேகரிக்க வேண்டும் என்ற பேதைமை தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், வருமானம் முழுவதையும் செலவிட்டுக் கடனாளியாகிற வழக்கமும் இல்லை. அறிவுடைய ஒருவன் அளவறிந்து செலவு செய்வான். இது கருதியே வள்ளுவப் பெருந்தகையார்,

ஆகாறு அளவுஇட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

(குறள்-478)

என்று கூறினார். ‘வருமானம் குறைவாயிருப்பினுங் கெடுதலில்லை. செலவு அதனைவிட மேற்போகாத விடத்து’ என்பதே இதன் பொருள். மோர் விற்ற பொருளால் குடும்பத்தைக் காப்பாற்றிய நம் ஆயர் குல மடந்தை, நெய் விற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதை ஆசிரியர் கூறுகிறார்; இன்னது செய்யவில்ல என்றும், இன்னது செய்தாளென்றும் கூறுகிறார். அப்பொருளால் பொன்னை வாங்கவில்லையாம், அதற்குப் பதிலாகக் கறவை எருமைகளையும், பசுக்களையும் வாங்கினாளாம். இங்ஙனம் கூறவேண்டிய இன்றியமையாமை யாது? கறவை மாடுகளை வாங்கினாள் என்று கூறினாலே வேறு ஒன்றும் வாங்கவில்லை என்ற பொருள்தானே பெறப்படுமே! அங்ஙனமிருக்க, இவ்வாறு கூறவேண்டிய காரணமென்ன? இக்காலத் தமிழ்நாட்டில் வாழும் நம்மை இவ்வடிகள் கண் திறந்துவிடுதல் கூடும். எத்தனை கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கம் நமது தமிழ்ச் சகோதரிகள் உடலை அலங்கரிக்கின்றன! ‘தங்கமும் பொருள்தானே? அத்தங்கத்தை வாங்குவதால் நேரும் குறைவென்ன?’ என்று கேட்கலாம். ஆனால், தங்கத்துக்காகச் செலவிடும் முதல் பயனற்ற முதலாகும் (dead capital). முதல் என்றாலே அது மேலும் பொருளைச் சம்பாதிக்கக்கூடியதாகும் என்ற பொருளும் உண்டு. தங்கத்துக்காகச் செலவழிக்கப்படும் முதல் பயனற்றது என்றாலும். இன்று நம் நாட்டில் எத்தனை பெண்மணிகள் இதனை உணர்ந்திருக்கின்றனர்? ஆனால், பழந்தமிழ்ப் பெண்கள் இதனை அறிந்து அனுபவத்திலும் நடத்தினர். அதனாலேயே ஆசிரியர் அவள் பொன்னை வாங்கவில்லை என்று கூறினார். பொன்னை வாங்காமற்கூட இருக்கலாம். அதற்கு மறுதலையாக அப்பொருளைக் கலயத்தில் இட்டு மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் அதைவிடத் தீமையானதாகும். ஆகவே, அம்முதலை வைத்து அதனால் பயன் அடையும் பண்பாடே சிறந்ததாகும். தனது தொழிலுக்கு ஏற்ற முறையில் பயன்படக் கூடியவையான கறவை மாடுகளை வாங்கினாள்; வகையறிந்து, பயன்தரும் வழியில் பொருளை முதலீடு செய்து (Investing) பயன் அடைந்தாள்.

பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலில் இக் கருத்துக் கூறப்படுகிறது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்,’ என்ற பழமொழிப்படி பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த நடுத்தர மக்களின் பொருளாதார நிலைக்கு இந்த உதாரணம் ஒன்றே சாலும். இக்கருத்துள்ள அடிகளைக் காண்க:


நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
..............................
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறுஉம்
மடிவாய்க் கோவலர்,

(பெரும்பாணாற்றுப்படை 155–66)

[குறுநெறிக் கொண்ட கூந்தல்—வளைந்துள்ள கூந்தல்; அளை—மோர்; நல்லான்—பசுக்கள்; கருநாகு—எருமைக் கன்றுக்குட்டி]

மேட்டுக்குடி மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் மிகுதியாகக் காணப்பட்டாலும் மிக்க வறியவர் பற்றியும் இல்லாமல் இல்லை.

எனினும் நம்முடைய மனத்தில் ஓர் ஐயம் தோன்றுகின்றது. உடையார் இல்லார் என்ற இருபிரிவினர்க்கு இடையே நடுத்தர மக்கள் என்ற ஓர் இனம் இருந்திருக்கத்தான் வேண்டும்.

அவர்களது வாழ்வுமுறை, பொருளாதார அடிப்படை என்பவை எவ்வாறு இருந்திருக்கும் என்ற நினைவும் தோன்றலாம்.

பெரும்பாணாற்றுப்படையில் மேலே குறிப்பிட்ட அனைத்துக்கும் விடை பெறலாம்.

இன்றும் கூடப் பொதுவாக இந்தியப் பெண்கள், சிறப்பாகத் தமிழகத்துப் பெண்கள் அணிகலன்கள் என்ற பெயரில் பொன்னுக்கு அடிமையாக இருத்தலைக் காண்கிறோம்.

மிகப்பெருஞ்செல்வர் வீட்டில் முதலீடு என்ற முறையில் (Investment) பெண்கள் பொன்னும், பொருளும் சேர்த்து வைத்தனர்.

ஆனால் நடுத்தர மக்கள் வாழ்க்கையில் இவ்வாறு நடைபெறுவது கொடுமையானது. பொன்னுக்கென இடப்படும் தொகை வளர்ச்சி அடையாத மூலதனம்; அன்றாடம் பயன் தராததும் ஆகும்.

எனவே ஒரு வாணிபம் செய்து அதன் வாயிலாய்க் கிடைக்கின்ற சிறு பொருளை மேலும் வளர்த்தற்குரிய முறையில் முதலீடு செய்யாமல் பொன்னை வாங்கிச் சேமிப்பது அறியாமையின் கொடு முடியாகும்.

ஆனால் நம் முன்னோர் (பண்டைத் தமிழர்) இவ்வாறு செய்யவில்லை என்று அறிகிறோம்.


நள் இருள் விடியல் புள் எழப் போகி–
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகில்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரைதெரிந்து,
புகர் வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ–
நாள் மோர் மாறும் நல் மா மேனி
சிறு குழை துயல்வரும் காதின், பணைத்தோள்,
குறு நெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்–
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை, நல்ஆன் கருநாகு, பெறுஉம்.

(பெரும்பாணாற்றுப்படை 155–165)

[செறிந்த இருள் மெல்ல விலகும் காலத்து பறவைக் குலம் உறக்கம் நீத்து எழுகின்றன. புலியினது முழக்கம் போல தயிர் கடையும் ஓசை எழுகிறது. குடைக்காளான் போல குமிழியிட்டு, இறுகிய வெண்பாறை போல் கிடந்தன தயிர்க்குடங்கள். தயிர்க் கடைந்து, திரளும் வெண்ணெயைத் தனித்து எடுத்து வைத்து கடைந்த போது தெளித்த தயிர்ப் புள்ளிக் கோலம் கொண்ட மோர்ப்பானையை பூவால் செய்த சும்மாட்டின் மேல் வைத்து வீடு நீங்கி, வெளிச் சென்று, காலைப் பொழுதிலேயே மோர் விற்கிறாள் இவ்வாய்க்குல மடந்தை. மாந்தளிர் மேனி; தாளுருவி அசையும் காது, மூங்கில் போல் திரண்ட தோள், குறிய கூந்தல் உடைய இவள் மோர் விற்று, பண்டமாற்றாகப் பெற்ற நெல் முதலானவற்றால் சுற்றத்தினரை உண்பிக்கிறாள்;

ஆனால் காய்ச்சிய நெய்யை விற்றுப் பெற்ற தொகை கொண்டு, பசும்பொன் வாங்கவில்லை. மாறாக பால் எருமை, பசுங்கன்று, எருமைக்கன்று இவற்றில் முதலீடு செய்கின்றாள்.]

மேலே காட்டிய இடைக்குல மடந்தையின் வாழ்க்கை நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

அன்றைய பெண்கள், நிறைந்த உழைப்பினராக இருந்தனர் என்பதும், மிக்க விடியற்காலத்திலேயே எழுந்து தம் அன்றாடக் கடமைகள் மேற்கொண்டனர் என்றும், நள் இருள் விடியல் புள் எழப் போகி என்ற தொடர் வழி விளக்குகின்றார், அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி என்றமையால் மோர் விற்ற தொகை கொண்டே சுற்றத்தவருக்கும் சேர்த்தே உணவு அளிக்கின்றாளாம்.

உறை அமை தீம் தயிர், புலிக்குரல் மத்தம் ஒலிப்பக் கடைந்து எடுத்த வெண்ணெயை நெய் ஆக்கி விலைக்கு விற்கின்றாள். மோர் வாணிபத்தால் கிடைக்கும் ஊதியத்தை விடநெய் வாணிபத்தில் மிகுதியான ஊதியம் பெறலாம் என்றாலும் நெய் விற்ற பணத்தைப் பொன்னாக மாற்றியோ, ஆபரணங்களாக வாங்கியோ செலவிடவில்லையாம்.

நடுத்தரக் குடும்ப மகளிர் கைப்பொருளைப் பொன்னாக மாற்றவில்லை என்பதே வியப்புக்கு உரியதாகும்.

மிகத் தேர்ந்த பொருளியல் வல்லுநர் எதிர்கால நலன் நோக்கிக் கைப்பொருளை முதலீடு செய்வது போலவே இவளும் செய்கிறாள். நெய் விற்ற பணத்தைப் பசும்பொன் கட்டியாக மாற்றாமல், எருமை, நல் ஆன், கருநாகு (கன்றுகள்) வாங்குகிறாளாம். கன்றுகளாக வாங்கினால் விலை குறைவு. அணிகலன்கள் வாங்குவதை விடப் பல மடங்கு அது பயன் தரும்.

மேலும் கன்றுகளாக வாங்குவதால் அன்றாடச் செலவு என்ற ஒன்று அமைவதில்லை. புல்வெளிகள் நிறைந்த நாட்டில், அவை படுபுல் ஆர்ந்து வளவிய, கொழுகொழு கன்றுகளாக ஆகும்.

இடைக்குல மடந்தையின் பசு, எருமைக் கன்றுகளில் இடப்பெறும் முதலீடு ஐந்து, ஆறு ஆண்டுகளில் முதலீட்டைப் போல் பலமடங்கு பெருகிவிடும். இதனை இன்றைய நடைமுறைப்படிச் சொல்ல வேண்டுமானால் Cumulative deposit எனலாம்

பெருங்கல்வி அறிவில்லாத ஓர் இடைக்குல மடந்தை இத்துணைச் சிறந்த காரியத்தைச் செய்கிறாள் என்பதனால் அது அவர்களுடைய வாழ்க்கை முறையை மிக விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது என்று அறிய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகமும்_புறமும்/005-008&oldid=1347370" இலிருந்து மீள்விக்கப்பட்டது