அகமும் புறமும்/008-008

விக்கிமூலம் இலிருந்து



தமிழர் கண்ட உண்மைகள்

விடை காணா வினா

ம்முள் எத்தனை பேர் ‘வாழ்க்கை’ என்றால் என்ன? என்னும் வினாவிற்குச் சரியான விடைகூற முடியும்? நாம் நமது விருப்பம் இருந்தோ இல்லாமலோ பிறந்துவிட்டோம்; விருப்பம் இல்லாமலிருந்தும் இறக்கத்தான் போகிறோம். இடை நடுவே இவ்வுலகில் தங்கி இருப்பதே வாழ்க்கை என்ற கருத்துடன் பலரும் அமைந்துவிடுகிறோம். இதற்கு முன்னர் வாழ்க்கை இருந்ததுண்டா? இனி வாழ்க்கை இருக்கப்போகிறதா? இவ்வினாக்களைக் கேட்டும் பயன் இல்லை. காரணம் இவற்றிற்கு விடையை நாம் அறிதல் இயலாது, என்றாலும், ‘இடையில் உள்ள இவ்வாழ்க்கையின் உட்கருத்தென்ன?’ என்று ஆய்வது நமது கடமையாகும்.

மாந்தர் பல வகையினர்

மிகப் பெரியவரான தாயுமான அடிகள், நம் போன்றவர்கள் வாழ்க்கையை அலசிப் பார்த்து ஒரு முடிவு கூறுகிறார். ‘யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்ற அவருடைய சொற்கள் நம்முள் பெரும்பாலோர் வாழ்க்கையில் நடைபெறுவதொன்றாகும். ஆனாலும், இதிலும் ஒரு சிறப்புளது. நம்முள் எத்தனை பேர் பசிதீர உண்பவர்கள்? பசிக்காக உண்பவர்கள் மிகப் பெரியவர்களும், யோகிகளும், மிக வறியவர்களுமேயாவார்கள். ஏனையோர் உண்பது பசிக்காக அன்று. உருசிக்காகவே. உண்பதற்காகவே உயிர்வாழ வேண்டும் என்று நினைப்போர் எத்தனை பேர்? சோம்பித் திரிவதற்காகவே வாணாளை வீணாளாக்குபவர் எத்தனை பேர்? கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்பவர் எத்தனை பேர்? இவர்கட்கெல்லாம் வாழ்க்கை நடைபெறாமலா இருக்கிறது? நடைபெறத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுவதைக் காட்டிலும், வாழ்க்கை இவர்களை ஆட்கொண்டுளது என்று கூறுவதே பொருத்தமுடையது. இன்றைய நாளில் இத்தொகுப்பைச் சேர்ந்தோர் பலராவர்.

நிலைபெற வழி

ஆனால், பழந்தமிழன் இவ்வாறு நினைக்கவுமில்லை; வாழவுமில்லை. அவன் கண்ட பேருண்மை, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்பதாம். அஃதென்ன என்பதைக் காண்போம், வாழ்க்கை நடைபெறுவது இவ்வுலகிலாகும். எனவே இவ்வுலகைப் பற்றிப் பழந்தமிழன் என்ன நினைத்தான்? வாழத் தகுந்த இடமாக இதனை நினைத்தானா, அன்றி இதனை பயனற்ற ஓர் இடமாகக் கருதினானா? இடைக்காலத்தில் உலகைப்பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஒருவாறு மனிதன் வாழ்வைக் கெடுக்கும் சூழல் நிறைந்த ஓர் இடமாகவும் இது கருதப்பெற்றது. ஆனால் பழந்தமிழன் உலகின் இயல்பை நன்கு அறிந்திருந்தான். ‘உலகம் நிலையில்லாதது’ என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், இது நிலையில்லாதது என்பதனால், தானும் இதனோடு சேர்ந்து நிலையில்லாமல் அழிவதை அவன் விரும்பவில்லை. நிலையில்லாததாகக் கருதப்பெறும் இவ்வுலகிடை வாழ்ந்து தான்மட்டும் நிலை பெறும் வழியை அவன் தேடினான்; தேடிக் கண்டறியவும் அறிந்தான். அவன் கண்ட முடிவு,

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே,
(புறம்–165)

என்பதாகும். எனவே, நிலையற்ற உலகிடை நாம் நிலைபெற வேண்டுமாயின், செய்யத் தகுவது நம் புகழை நிலை நிறுத்துவதேயாகும். நிலையாமையின் நடுவே நிலைபேற்றுக்குரிய வழிகண்ட தமிழன் வாழ்க! உலகம் நிலையற்றது என்பது உலகிடை வாழ்ந்த அனைவருங் கண்ட உண்மையாகும். உலகம் போற்றும் ஷேக்ஸ்பியர்,

“The Cloud-capp’d towers the gorgeous palaces,
The solemn temples, the great globe itself,
Yea, all which it inherit, shall dissolve,
And, like this insubstantial pageant faded,

Leave not a rack behind.”
–THE TEMPEST: Act IV, SCENE l.

என்று தாம் எழுதிய ‘புயல்’ என்னும் நாடகத்தில் குறிப்பிடுதல் அறிதற்குரியது.

இத்தகைய நிலையாமை பொருந்திய உலகத்தில் வாழ்ந்த மனிதன் தான்மட்டும் நிலைபெற வேண்டிச்செய்த செயல் புகழைத் தேடுதலேயாம் என்பதைக் கண்டோம். ‘அப்புகழை எவ்வாறு தேடவேண்டும்?’ என்பதே அறியவேண்டுவதொன்றாகும். இதற்குரிய விடை தெளியப்படுமானால், அதுவே, வாழ்க்கை வாழ்வதற்கு, என்னும் உண்மையை நன்கு புலப்படுத்தும். புகழ் என்பது எல்லாரும் விரும்பப்படும் ஒன்றாகும். புகழ் விரும்பாத மனிதனே உலகிடை இல்லை எனலாம். ஆனால், எல்லாராலும் போற்றி விரும்பப்படும் இதனையடைய இவ்வனைவரும் முயற்சி எடுத்துக்கொள்கின்றனரா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே கூறிவிடலாம். இதுவே உலகியற்கை புகழை அனைவரும் விரும்புகின்றனர்; ஆனால், அதற்குரிய வழியை மட்டும் மேற்கொள்வதில்லை பெரியோர்.

‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்.’ (புறம்–182)

என்று புறநானூறு பறை சாற்றுகிறது.

ஆனாலும், ஏன் அனைவரும் அதற்குரிய வழியை மேற்கொள்வதில்லை என்பதை அறிய வேண்டுமன்றோ? காரணம் இருவகைப்படும். ஒன்று, வழி இன்னது என்றே அறியாமல் இருப்பது; இன்னொன்று. வழி இது என்று அறிந்திருந்தும், வேறு காரணங்களால் முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது. இவ்வினத்தைச் சேர்ந்திருப்போர் மிகச் சிலரே. பெரும்பாலோரைப் பொறுத்தமட்டில் வழி இன்னதென்றே அறியாமல் இருப்பதே உண்மை. அதிலும், ஒரு விந்தை என்ன என்றால், தவறான வழிகளை உண்மை வழி என்று நினைத்திருக்கும் திரிபுணர்ச்சியேயாம். ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு அதனால் புகழ் தம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர் பெரும்பாலும் ஏமாற்றமே அடைவர். ஒருவேளை புகழ் வருவது போலத் தோன்றினும், அது நிலைத்து இருப்பதில்லை. காரணம், வருவது புகழன்று அது ‘இசை’ என்று கூறப்படும். அவன் உயிருடன் இருக்கும்வரை அதுவும் இருந்து, அவனுடன் கூடவே அதுவும் அழிந்துவிடும். போர்களால் தம்புகழ் பரப்ப நினைத்த பழந்தமிழ் மன்னர் இவ்வினத்தைச் சேர்ந்தவரேயாவர். புகழ் பின்னரும் நிலைத்திருப்பதாகலின் அதனை அடையும் வழியும் வேறாய் உளது. அதனை விரும்பி வேட்டையாடுபவர்களை அது விட்டு ஓடும் இயல்புடையது; தன்னைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாதவர்களிடம், தானே வலியச்சென்று அடையும் இயல்புடையது.

வாழ்வில் பல வகை அனுபவம்

இனி, இப்புகழ் யாரைத்தேடிச் சென்று அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற உண்மையை அறிந்து தங்கள் கடமையைச் சரிவரச் செய்துகொண்டு வாழ்க்கையையும் நன்கு அனுபவித்துக்கொண்டு இருக்கும் பெரியோர்களையே புகழ் தேடிச்சென்று அடைகிறது. வாழ்க்கை வேண்டும்பொழுது நமது விருப்பம் போலக் கிடைக்கும் ஒரு கருவியன்று. அது உள்ளபொழுதே அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏதோ ஒன்றின் மேற்கொண்ட பற்றுக் காரணமாக அதனையே செய்துகொண்டு வாணாளைக் கழித்துவிடின், அதுவும் பயனற்ற வாழ்க்கையேயாம். எல்லாவகை அனுபவங்களும் வாழ்க்கையில் வேண்டுவனவே. எனவே, போரே பெரிது எனக்கருதி வாழும் மன்னன் ஒருவனை விளித்துப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் அறவுரை பகர்கின்றார். போர் செய்வது அரசனுக்குரிய கடமையாயினும், அதையே வாழ்க்கையின் பயன் என்று மன்னன் கருதி வாழ்வானாயின், அது மடமையன்றோ? எனவே, புலவர்; ‘வாழ்க்கை வாழ்வதற்கே,’ என்று மன்னனுக்கு நினைவூட்டுகிறார்.

ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப. (புறம்–24)

என்று மாங்குடி கிழார் என்ற புலவர் கூறுகிறார்; போரே செய்யும் ஒருவனை நோக்கி, “தேறல் மடுத்து மகிழ் சிறந்து வாழ்வாயாக! அதுவே வாழ்க்கை வாழ்வதாகும்; அதுவே புகழுடன் வாழ்வதற்கும் வழியாகும்” என்று கூறுகிறார். இவ்வொரு கவிதை நமக்கு ஒரு பேருண்மையை அறிவுறுத்துகிறது. வாழ்க்கை, கேவலம் ஒரே வகையில் மூடியணியப் பெற்ற குதிரை போலச் செலுத்தப்பெறுதல் தவறு. அவ்வொரு வகை, எத்துணை சிறந்ததாயினும், அதற்கே வாழ்க்கையைச் செலவழித்தல் போற்றற்குரிய தன்று. அங்ஙனம் வாழ்வோர், ‘வாழ்க்கை வாழ்வதற்கே,’ என்ற பேருண்மையை மறந்தவரேயாவர். அவ்வாறல்லாமல், வாழ்க்கையில் பலதிறப்பட்ட சுவைகளையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உண்மையைத் தமிழர் அனுபவத்தில் கண்டு கூறினர்.

மனிதன் யார்?

மனித வாழ்க்கையை ஏனைய விலங்குகளின் வாழ்க்கையிலிருந்து பிரித்துக்காட்டப் பல சிறப்பியல்புகள் உள்ளன. பகுத்தறிவு வாழ்க்கைச் சீர்திருத்தம் முதலியன அவற்றுட் சில. எனினும், இவை எல்லாவற்றினும் மேம்பட்ட ஒன்றும் உண்டு. அதுவே குறிக்கோள் அல்லது இலட்சியம் எனப்படும். குறிக்கோள் என்பது என்ன? தனது வாழ்வு இன்னவாறு இருத்தல் வேண்டும் என்று மனிதன் செய்து கொண்டுள்ள கற்பனையே குறிக்கோள் எனப்படும். கண்டதை உண்டு, வாழ்வில் வேறுவித அலுவல் ஏதும் இன்றித் திரியும் விலங்கினங்களிலிருந்து தோன்றிய மனிதனுக்கு, விலங்கினங்களிற் காணப்படும் சில பண்புகள் மறைந்தும், பல புதிய பண்புகள் தோன்றி வளர்ந்தும் வரலாயின. அங்ஙனம் வளர்ந்தவற்றுள் ஒன்றே குறிக்கோள் என்பதாம்.

வாழ்வோருக்கு வினா

உலகிடைப் பிறந்த எல்லா மனிதரும் வாழ்ந்து, காலம் வந்தவுடன் மாய்ந்து போகின்றனர். பெரும்பாலார்க்கு, ‘ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? இவ்வாழ்க்கையின் தத்துவமும் காரணமும் என்ன? வாழ்வின் முடிவு எதுவாய் இருக்கும்?’ என்பன போன்ற வினாக்கள் தோன்றுவதே இல்லை. இங்ஙனம் கூறினவுடன் எல்லோரும் வேதாந்த விசாரணையில் இறங்கவேண்டும் என்று கூறுவதாக நினைத்துவிட வேண்டா. இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, ஒருவாறு இவற்றிற்கு விடையுங்கண்டவர்களே பெரியோர்களாய்த் திகழ்ந்தமையை அறிகிறோம். எனவே, இவ்வினாக்கள் வாழும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை என்பது பெறப்படும்.

மேலே கூறிய வினாக்களின் விடைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்பது தெற்றென விளங்கும். ஒருவன் மனித உடலோடு பிறந்துவிட்டால் மட்டும், மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுடையவன் ஆகிவிட முடியாது. தனித்தனி மக்கள் தனித்தனியான குறிக்கோள்களைக் கொண்டு இலங்குவதைக் காண்கிறோம். இனி இக்குறிக்கோள்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்றால், வேண்டா என்று கூறிவிடலாம். தனித்தனி மனிதர் தத்தம் வாழ்க்கையின் நிலைமைக்கு ஏற்பக் குறிக்கோளைப் பெற்றிருக்கலாம். குறிக்கோள் இல்லையாயின், வாழ்க்கை சுவையற்றதாகிவிடும்.

கண்டதே கண்டும், உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும் வாழும் இவ்வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுதல் இயல்பு. ஒரு சிலர் ‘பொழுதே போவதில்லை!’ என்று குறை கூறுவதையும் கேட்கிறோம்.

நாள் என ஒன்றுபோற்காட்டி, உயிர் ஈரும்
வாள்அஃது உணர்வார்ப் பெறின்

(குறள்–334)

என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறி இருப்பவும், பொழுது போவதில்லை என்று கூறும் இவ்வகை மனிதர்களை என்னென்று கூறுவது! இவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தால் இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணத்தை அறியலாம். இவர்கள் பசி தீர உண்பதையும் உறங்குவதையும் தவிர, வேறு வாழ்க்கையில் ஒன்றையும் அறியாதவர்கள் ஆகலின், இவர்கட்குப் பொழுது போவதில்லை.

வாழ்வில் வெறுப்பு

இங்ஙனம் தோன்றிய இவ்வெண்ணம் இம்மட்டோடு நிற்பதில்லை. ஒரு சிலர், ‘வாழ்க்கையில் வெறுப்படைந்தேன்!’ என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வதையும் காண்கிறோம். வாழ்க்கைப்போரில் ஓயாது சண்டை செய்து, இன்றியமையாத பொருள்களைக் கூடப் பெறமுடியாது வறுமையில் ஆழ்ந்து, அதன் பயனாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் உண்டு. இத்தகையோர் சாவிற்கு நமது இரக்கம் உரியதாகும்! குறை இவர்களிடம் இல்லை. இவர்கள் சாவிற்குக் காரணம், இவர்கள் தோன்றி வளர்ந்த சமுதாயமே ஆகும். இனி, ஒருசார் மக்கள், வாழ்க்கையில் பெற வேண்டுவன அனைத்தையும் பெற்று இருந்தும் வாழ்க்கையில் வெறுப்புத் தட்டித் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம். செல்வங்கொழிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில், பணத்தில் புரளும் பெரும் பொருளாளர்களுட் சிலரும் இக்கதிக்கு ஆளானமையை அறிகிறோம். ஏன் இவர்கள் வாழ்க்கை இந் நிலைக்கு வந்தது? வாழ்க்கைக்கு, அதுவும் சுகமான வாழ்க்கைக்கு, எவை எவை தேவை என நினைப்போமோ, அவை அனைத்தும் இவர்களிடம் ஒன்றுக்கு நூறாய் இருப்பவும், வாழ்க்கையில் வெறுப்புத்தட்டக் காரணம் என்ன? இவற்றிலிருந்து நாம் அறிய வேண்டுவது ஒன்றுளது. வாழ்க்கையில் ஏற்படும் விருப்பும் வெறுப்பும் வாழும் மனிதனுடைய மனநிலையைப் பொறுத்தனவே தவிர, ஏனைய உலகப் பொருள்களைப் பொறுத்தவை அல்ல.

அழுகிய வெறுப்பு

வாழ்க்கையின் விருப்பு வெறுப்புக்கள் மனநிலையைப் பொறுத்தவை என்பதன் பொருள் என்ன? உடலை வளர்க்க உணவு தேவைப்படுவது போல, மனத்தை வளர்க்கச் சிறந்த எண்ணங்களும் குறிக்கோள்களும் தேவை. இவை இல்லையேல் மனம் உடலோடு சேர்ந்து வளர்ச்சியடையாமல், உரம் குன்றிப்போம். அம்மட்டோடு இல்லை. வாழ்க்கையிலும் வெறுப்படையுமாறு செய்யவுஞ் செய்யும். அழுகிப்போன ஓர் உறுப்பு உடலில் இருக்குமானால் உடல் முழுமைக்கும் தீங்கு விளைத்தல் கண்கூடு அன்றோ? எனவே, மனமும் உடலோடு சேர்ந்து வளர்ச்சியடையச் செய்ய வேண்டுவது அறிவுடையார் கடமையாகும்.

இன்பம் எங்கே?

இம்மன வளர்ச்சிக்கு ஏதுவானவை எவை எவை என்று ஆராய்ந்து தக்க முடிவிற்கு வரவேண்டும். சாதாரண ஆசைகளைக் குறிக்கோள்கள் என்று தவறுதலாக நினைத்து விட்டால், அவற்றால் உண்டாகும் துன்பம் ஏட்டில் அடங்காதது. இந்நிலையில் மனத்தின் இயல்பையும் நன்கு அறிதல் வேண்டும். எத்தகைய ஆசையாயினும், அது நிறைவேறியவுடன் அமைதியடைகிற இயல்பு மனத்திற்கு இல்லை. மேலும் புதிய பொருள்களின்மேல் ஆசை செலுத்துவதே மனத்தின் இயல்பாகும். இது கருதியே சாந்தலிங்க அடிகளார், “அரிதுபெற் றிடினும் பெற்றதில் விருப்பம் அறப்பெறா தனவிகும்பு உயிர்கள்” என்று கூறிப்போந்தார். ஆகவே, மட்டமான பொருள்கள் மேல் பற்றுவைத்து, அதையே வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டு விட்டால், அவ்வாசை நிறைவேறியவுடன் வாழ்க்கையில் அலுப்புத் தட்டிவிடும். அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் கோடீசுவரர்கள் இந்த இனத்தையே சேர்ந்தவர்கள். கேவலம் சில கோடிப் பொருளைச் சேகரிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று தவறாக உணர்ந்த இவர்கள், அப்பொருளைச் சேகரித்தவுடன் வேறு வாழ்க்கையில் சுவையுண்டு என்பதை அறிய முடிவதில்லை. காரணம் மிக இன்றியமையாதது. மனம் எப்பொழுது இன்பத்தைக் காண்கிறது. ஒரு குறிக்கோளை நாடி அடைய முற்படும் பொழுது மனத்திற்கு இன்பம் பிறக்கிறது. ஆனால், எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வின்பம் என்று ஆய்தல் வேண்டும். குறிக்கோளையடையச் செய்யும் முயற்சியில் இன்பமே தவிர, அடைந்து விட்ட பிறகு அங்கு இன்பம் என்ற ஒன்றும் இல்லை. எனவே, முயற்சியிலேதான் இன்பம் என்றால், அம்முயற்சி வாழ்நாள் முழுதும் நீடித்ததாக இருத்தல் வேண்டுமே தவிர, இடையே பயன்தரக் கூடியதாய் அமைந்துவிடின் முற்கூறியபடி வெறுப்பே மிஞ்சும். இது வாழ்க்கையின் எல்லா முயற்சிகட்கும் பொதுவான நீதியாகும்.

உயர்ந்த குறிக்கோள்

இந்த முடிபை மனத்துள் இருத்திக்கொண்டுதான் எத்தகைய குறிக்கோள் சிறந்தது என்னும் ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும். ஒருவன் வாழ்நாளில் எளிதாக அடைந்துவிடக் கூடியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டால், நேரும் இழுக்கைக் கண்டோம். அவ்வாறாயின், அடையமுடியாத குறிக்கோளை மேற்கொள்வதால் என்ன பயன் என்று கேட்கப்படலாம். ‘குறிக்கோள்’ என்பதற்குப் பொருளே, ‘எளிதில் அடைய முடியாதது’ என்பதாகும். பொதுமறை தந்த பெரியாரின் கட்டளையை உற்று நோக்குவோம்.

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
குறள்–596)

என்றல்லவோ அவர் கூறிச் சென்றார்? வாழ்க்கையில் கொள்ளவேண்டிய குறிக்கோளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், ‘உயர்வு உள்ளல்’ என்ற கூறினார். ‘உயர்வு’ என்ற சொல் ஓர் ஒப்பு நோக்குச் சொல்லேயாகும். ஒன்றை நோக்க ஒன்று உயர்வு என்றுதான் கூறவேண்டும். எனவே இங்கு உயர்வு என்று கூறினதற்கு எவ்வாறு பொருள் கூற வேண்டும் என்று ஐயுறுவார்க்கு விளக்கம் தருவார் போன்று பின் அடியைக் கூறினார். ‘மற்றது தள்ளினும்’ என்ற கூற்றால், அக்குறிக்கோள் அடைய முடியாததாகும் என்ற குறிப்பையும் பெறவைத்தார். ‘அடையமுடியாத குறிக்கோளை வைத்துக்கொள்வதாற் பயன் என்ன?’ என்று வினவினால், அதற்கு விடை ‘தள்ளாமை நீர்த்து’ என்பதன்கண் அடங்கி விடுகிறது. அடைய முடியாவிடினும், அக்குறிக்கோளும், அதனை அடையச் செய்யும் முயற்சியும் ஏற்றுக்கோடற்பாலன என்பதே வள்ளுவர் வகுத்த நெறியாகும்.

தாழ்ந்த குறிக்கோள்

மேலும், மட்டமான குறிக்கோளைக் கொண்டிருந்து, அதனை அடைந்துவிடுவதைக் காட்டிலும், உயர்ந்த குறிக்கோளைக் கொண்டிருந்து, அதற்கெனத் தளரா முயற்சி செய்து அம்முயற்சியில் தோல்வியுறுதலே சிறந்தது என்பதும் தமிழர் கண்ட கொள்கையாம். இதனையே பெரியார்,


காண முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
(குறள்-772)

என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டுப் பெருநூல்களிற் காணப்படும் பெருமக்கள் கருத்துக்களும் அவர்கள் செய்த செய்கைகளும் இத்தகைய கருத்தையே அடிப்படையாகக் கொண்டவை. அவர்கள் கொண்ட குறிக்கோளை அடையாமற்போயினும் அக்குறிக்கோள் மிக உயர்ந்ததாய் இருந்தது என்பதில் ஐயமில்லை. அவர்கள் பெற்ற உயர்வையும் அவர்கள் கொண்ட வெற்றியையும் கொண்டு கணக்கிடாமல், குறிக்கோளையும் அதற்குச் செய்யப்பெற்ற முயற்சியையும் கொண்டே தமிழர் கணக்கிட்டனர். இதனாலேயே வள்ளுவப் பெருந்தகையார்,

வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.
(குறள்–595)

என்று முழக்கினார். மனிதனின் உயர்வு அவன் உள்ளத்துட்கொண்ட குறிக்கோள் அளவாகுமே தவிர, அதனை அவன் அடைந்தானா இல்லையா என்பதைப் பொறுத்ததன்று.

உலகம் ஏன் நிலைபெறுகிறது?

இவ்வுலகம் ஏன் நிலை பெற்றிருக்கிறது? எவ்வாறு நிலை பெற்றிருக்கிறது? இவ்வினாக்கட்குப் பலர் பலவாறு விடை கூறுவர். விஞ்ஞானிகள் பெருவெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கோளங்கள் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு நிற்றலின், அந்த ஈர்ப்புச் சக்திக்குக் கட்டுப்பட்டே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது என்பார்கள். எவ்வாறு என்ற வினாவிற்கு, உலகம் தன்னில்தானே சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருத்தலினால் என்றும் விடை கூறுவர். இறைவனை நம்பியிருக்கும் அன்பர்கள் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பது இறைவனுடைய கருணையால் என்பர். எதனையுமே நம்புவதில்லை என்ற கொள்கையுடையார் சிலர், ‘இத்தகைய வினாக்களுக்கு நாம் ஏன் விடை தேடி அலையவேண்டும்? உலகந்தான் இருக்கிறது. அது எதனால் நிலை பெற்றால் என்ன?’ என்பர். பழைய புராணம் முதலியவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் உலகம் ஆதிசேடன் தாங்கிக்கொண்டிருத்தலினாலேதான் நிலைபெற்றிருக்கிறது என்பர்.

எது உலகம்?

மேலே கூறிய விடைகள் அனைத்திலும் ஓரளவு மெய்ம்மை இருக்கிறது. ஆனாலும் முழு மெய்ம்மையா என்றால், இல்லையென்றுதான் கூறவேண்டும். மேலும், உலகமாகிய சடப்பொருள் நிலைபெறும் காரணத்தைத் தான் இவ்விடைகள் ஒருவாறு விளக்கின. ஆனால் உலகத்தை மண்ணும், நீரும், நெருப்பும், காற்றும் கலந்த ஒரு ஜடப் பொருளாக மட்டும் தமிழர்கள் கருதவில்லை. உலகம் என்ற சொல்லால் உலகில் உள்ள மக்களையே இவர்கள் குறித்தார்கள். இது பற்றியே போலும், ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று,’ என்பது போன்ற முதுமொழிகள் தோன்றலாயின! எனவே, உலகம் என்பது மக்களைத்தான் சுட்டும் என்ற கருத்துடன் மேலே கூறிய வினாக்களை எழுப்பினால், கூறப்பட்ட விடைகள் பொருத்தமற்றவை என்பது நன்கு விளங்கும்.

தமிழர் கண்ட இந்த உண்மை இன்றும் ஒத்துக் கொள்ளப் பெறுகின்றது என்பதற்குச் சான்றாக ‘உலகம் வரவரக் கெட்டுப்போய் விட்டது!’ என்று கூறப்படும் வாக்கியத்தைக் கூறலாம். உலகம் என்பது அதில் வாழும் மக்களைக் குறிக்கிறது என்பது வெளிப்படை அவ்வாறாயின், இந்த உலகம் ஏன் வாழ்கிறது?

நாகரிகம் வளர்ந்த வரலாறு

உலகம் தோன்றிய நாளில் அதில் மனிதன் தோன்றவில்லை. பல நூறாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பே மனிதன் தோன்றி வளரத் தலைப்பட்டான் என்று நிலநூல் வல்லுநர் கூறுகின்றனர். ஆதியில் தனித்தனியாய் வாழ்ந்த மனிதர் பல நூறு ஆண்டுகளின் பின்னர்க் கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்டனர். தனித்தனியாய் வாழ்ந்து வந்த பொழுது அவர் அநுபவித்துப் பழகிய உரிமைகள் முதலியன, கூட்டமாக வாழும்பொழுது பயன்படவில்லை. தனி மனிதனுடைய உரிமைகள் பலவற்றைக் கூட்டத்துடன் வாழும்பொழுது விட்டுக் கொடுக்க வேண்டி நேரிட்டது. காலம் செல்லச் செல்ல இப்புதுமுறை வாழ்க்கையைப் பழகிக் கொண்டான் மனிதன். அதிகக் கூட்டம் கூடி ஒரிடத்தில் வாழத் தலைப்பட்ட இடம் நகரம் எனப் பெயர் பெறலாயிற்று. கிராமங்களில் வாழும் மக்கள் ஓரளவு பிறருடைய கையை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்த முடிந்தது. ஆனால், நகரத்தில் வாழ்க்கை நடத்துபவர் பல்வேறு துறைகளில் முயற்சி செய்யத் தொடங்கினர்; ஆதலின் பிறர் கையை எதிர்பார்த்தே அன்றாட வாழ்க்கை நடத்தும் நிலைக்கு வந்தனர். பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலையில், அப்பிறருக்காகத் தம்முடைய உரிமைகள் சிலவற்றை விட்டுவிட வேண்டிய நிலைமையும் வருமன்றோ? இவ்வாறு விட்டுக் கொடுத்து வாழ்வதே நகர வாழ்க்கையின் அடிப்படையாகும். எனவே இந்நகர மக்களின் வாழ்க்கை ‘நாகரிக வாழ்க்கை’ என்று பெயர் பெறலாயிற்று. ‘நகரம் என்ற சொல்லிலிருந்தே ‘நாகரிகம்’ என்ற சொல் பிறந்தது. நாளாவட்டத்தில் தன் நலத்தைக் குறைத்துக் கொண்டு பிறர் நலம் பேணும் வாழ்வையே ’நாகரிக வாழ்வு‘ என்று கூறத் தலைப்பட்டனர். இத்தகைய பண்பாடுடையவர்களை ‘நாகரிகர்’ என்றும், ‘நாகரிகம் அறிந்தவர்’ என்றுங்கூடக் கூறினர்.

எது நாகரிகம்?

நாகரிகம் உடையவராலேதான் உலகம் நடை பெறுகிறது என்று கூறினால், இன்றும் அதனை மறுப்பார் யாரும் இல்லை. நாகரிகம் என்பது யாது என்று கேட்டால்தான் விடை நன்கு கூறமுடியாது விழிக்க நேரிடும். சென்னப் பட்டினத்தில் வாழும் அனைவரும் தம்மை மிக்க நாகரிகம் உடையவர் என்றே கருதிக் கொள்கின்றனர்; தருக்கோடு பேசவும் செய்கின்றனர். ஆனால் இவர்கள் எதனால் இவ்வாறு கூறிக்கொள்கின்றனர் என்பதை அறிய அதிக நேரம் செல்லாது. எளிய உடை அணிந்து கோணல் எழுத்துக்களை அறியாத ஒருவர் இந்நகரப் பெருமக்கள் ஏறிச்செல்லும் பஸ் முதலியவற்றில் வந்து ஏறிவிட்டால் அவர் படும்பாட்டைப் பார்க்க பல கண்கள் வேண்டும். சென்னையில் வாழும் நாகரிகர்கள் அப்புதியவரை மனிதராகக்கூட மதிக்க மாட்டார்கள். ஏன் பஸ் கண்டக்டர்கூடச் சென்னையில் வாழும் ஒரே காரணத்தால் தம்மை மிக்க நாகரிக முடையவராகவே கருதிக்கொள்வதால், அப்புதியவரை நாட்டுப்புறத்தார் என்று ஏளனமாகப் பேசுதலைக் கேட்கிறோம்.

எனவே, இக்கால முறைப்படி பார்த்தால், வேட்டி உடுக்காமல், கடுங்கோடைக் காலமாயினும் கம்பளியால் நெய்யப்பட்ட சட்டை மாட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு சுருக்குத் துணியும் அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வாழ்வதே நாகரிகம் என்பது விளங்கும். இதுதான் நாகரிகம் எனில், இன்று வாழும் தமிழர் பலர், அவருள்ளும் இளந்தமிழர் பலர் நாகரிகம் மிகுந்தவர்களே! இத்தகைய நாகரிகம் மிகுந்துவிட்டதால், தமிழ்நாடு என்ன கதியடையும் என்று கூறத்தேவையில்லை. ஆனால் இவர்கள் நாகரிகரும் அல்லர்; இவர்கள் பண்பாடு நாகரிகமும் அன்று என்பது நன்கு அறியப்பட வேண்டும்.

உலகம் வாழக் காரணம்

உலகம் வாழ்வதற்கு உரிய காரணத்தைக்கூற வந்த வள்ளுவப் பெருந்தகையார்,

‘பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்,
 மண்புக்கு மாய்வது மன்.’

(குறள்–996)

என்று கூறினார்.

பண்புடையவர் இருத்தலினாலேதான் உலகம் நடை பெறுகிறது என்று அவர் கூறும் பொழுது, நாகரிகம் உடையவர்களையே குறிப்பிடுகிறார். ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்,’ என்று கலித்தொகை கூறுவது இக் கருத்தையேயாம். பிறருடைய இயல்பறிந்து அதற்கேற்ப நடத்தலையே ‘பாடறிந்து’ என்று கூறுகிறார் அந்த ஆசிரியர். தனக்கு என வாழாமல் பிறர்பொருட்டு வாழ்வதே நாகரிகம் எனப்படும் என்பது தெளிவு. எந்த அளவு வரை ஒருவன் தன்னலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவது சற்றுக் கடினந்தான். வேறு வகையாகக் கூறுமிடத்து ஒருவனுடைய நாகரிகம் எவ்வளவு என்பதை எவ்வாறு அளவிட்டுரைப்பது என்பதே இவ்வினாவாகும், பெரிய படிப்புப் படித்துவிட்டு வேற்று நாடுகட்குச் சென்றுவிட்டு மீட்டும் இந்த நாட்டையும் இதில் வாழும் மக்களையும் ஏற இறங்கப் பார்க்கும் பெரியோர்தாம் இன்று நாகரிகத்தில் மேம்பட்டவராகக் கருதப்படுகின்றனர். பிறருக்காகத் தம்மையே தியாகம் செய்வதுதான் நாகரிகம் என்றால் இவர்களுடைய நாகரிகத்தை எவ்வாறு மதிப்பிடுவது? தமிழன் நாகரிகம் பற்றிக் கொண்ட கருத்தை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணை இதோ கூறுகிறது.

‘முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.’

(நற்றிண–355)

‘நட்புக் கொண்டவர்கள் எதிரே இருந்து கொண்டு நஞ்சை ஊற்றி ‘உண்க’ எனத் தந்தவிடத்தும், சிறிதும் மனங்கோணாமல், முகத்தைச் சுளிக்காமல் உண்பதே நாகரிகம்,’ என்பது கருத்து. இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும்,

‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.’
(குறள்–580)

என்று கூறுகிறார். ‘மகாத்மா காந்தி’, ‘ஸாக்ரட்டிஸ்’ போன்றவர்களே நாகரிகம் உடையவர்கள்’என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே, மீட்டும் பழைய வினாவைக் கேட்போம். உலகம் எதனால் வாழ்கிறது என்றால், இத்தகைய நாகரிகம் உடையவர்கள் இருப்பதனாலேதான் என்று எளிதாக விடை கூறிவிடலாம்.

வழுதி கூறுகிறான்

‘கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி’ என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன். வழுதி என்பதால் பாண்டியன் என்பதும், ‘இளம்பெரு’ என்ற அடைமொழியால் ஆட்சி செய்யும் அரசனுக்கு அடுத்த உரிமையில் இருந்தான் என்பதும் அறியப்படும். அரசனாக மட்டும் இல்லாமல், பெரும்புலமை வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான் அப்பெருமகன். அவன் பாடிய ஒரே ஒரு பாடல்தான் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது. ‘கடலுள் மாய்ந்த’ என்ற அடைமொழியால் அவன் எதிர்பாராவிதமாகக் ‘கடலுக்கு இரையாகி விட்டான்’ என்பதும் தெரிகிறது. மிகவும் இளமையிலேயே அவன் இறந்து விட்டாலும், தமிழ் மொழி உள்ள அளவும் இறவாத சிறப்புடைய ஒரு பாடலை நமக்குத் தந்துவிட்டான். அந்தப் பாடலிலேதான் இந்தப் பழைய வினாவை எழுப்பி, அதற்கு விடையும் அவனே கூறுகிறான்.

“இவ்வுலகம் இருக்கிறது. (யாரால் எனில்) இந்திரனுக்கே உரிமையான அமிர்தம் கிடைப்பதாயினும், அதை இனிது என்று கொண்டு (பிறருக்குத் தாராமல்) தனித்து உண்ணமாட்டார்; யாரோடும் வெறுப்புக்கொள்ளமாட்டார்; பிறர் கண்டு அஞ்சுகிற துன்பத்தைக் கண்டு தாமும் அதற்கு அஞ்சி அத்துன்பம் தீருகிற வரையில் முயற்சி இல்லாமல்) மடியுடன் (சோம்பலுடன்) இருக்கமாட்டார்; புகழ் கிடைப்பதாயின், தம் உயிரையும் கொடுப்பார்; பழி வருவதானால் உலகு முழுவதும் கிடைப்பதாயினும் கொள்ளமாட்டார்; அத்தகைய மாட்சிமைப்பட்ட பண்பாட்டை உடையவராகித் தமக்கு என்று (தன்னல) முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் பொருட்டே முயற்சி செய்பவர். இவ்வுலகத்தில் இருத்தலான் (இவ்வுலகம் இருக்கிறது)” என்ற பொருள்பட அப்பெருமகன் பாடுகிறான்.

உண்டால் அம்ம! இவ் வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இவரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சீப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.

                                                          
(புறம்-182)
[முனிவு—வெறுப்பு; துஞ்சல்—சோம்பல்; நோன்தாள்—வலியமுயற்சி.]

நாகரிகத்தின் சிகரம் என விளங்குபவன் யார் என்பதை இப்பாடலில் அவ்வரசப் புலவன் மிகவும் விரிவாகப் பேசுகிறான். இந்திரனுடைய அமிழ்தத்தை நிரம்பப்பெற்ற தேவர்கள்கூட அசுரர்கட்குத் தாராமல் தாமே அதனை உண்ண விரும்பினர். ஆனால், நாகரிக மனிதர் யார் எனில், இந்த அமிழ்தத்தைக்கூடத் தனக்கே என்று எண்ணாமல் பங்கிட்டுண்பவனானான். பிற உயிர்களிடத்து இத்துணை அன்பு காட்டும் ஒருவனுக்கு அவற்றின்மேல் எவ்வாறு வெறுப்பு உண்டாக முடியும்? பிறர்மாட்டு வெறுப்புக் கொள்ளக் காரணம் தன்னலத்தில் கொண்ட பற்றுத்தானே! எனவே, தன்னலத்தைத் துறந்த பெரியவனுக்கு வெறுப்பு என்பது இருக்க இயலாது. தன்னை அடித்துப் பல்லை உடைத்தவனையும் சோதரனாகக் கருதி, அவனை விடுதலை செய்தால் ஒழிய உணவு உண்ணமாட்டேன் என்று கூறும் ஒருவனுக்கு (மகாத்மா காந்தி) எவ்வாறு வெறுப்புத் தோன்ற முடியும்? இனி அந்த நாகரிக மனிதன் துன்பத்தைக் கண்டு அஞ்சிச் சோம்பி இருத்தலும் இல்லை. பிறர் துயரம் துடைப்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவனுக்குச் சோம்பி இருக்க நேரம் ஏது? துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் எவ்வாறு பிறருக்கு உதவ முடியும்? அவன் வாழ்வின் குறிக்கோள் புகழ் ஈட்டுதல் ஒன்றுதான். பிறருக்குத் துன்பந்தாராத நன்முன்றயில் கடமையைச் செய்து நிறைவேற்றினால்தான் புகழ் உண்டு. கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ்வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்யமாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்யமாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்.

உலகம் ஏன் வாழ்கிறது என்ற வினாவிற்கு இப்பொழுது விடை கிடைக்கிறதன்றோ?

பொய் கூறார்

சரித்திரம் எட்டிப் பார்ப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லாத காலத்தில் இத்தமிழர் யாது நினைந்தனர்? எவ்வாறு வாழ்ந்தனர்? எதனைச் சிறந்தது என்று கருதினர்? எதனை இழிந்தது என்று கருதினர்? இவற்றை நாம் அறிவது இன்றும் பயன் தரக் கூடிய ஒன்றாகும். அவ்வாறாயின், இத்தமிழ்ப் பாடல்களைப் பாடிய புலவர் அனைவரும் பொய் கூறாமல் மெய்யே கூறினரா என்று எண்ணத் தோன்றுகிறதா? இதோ பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் விடை கூறுகிறார். வன்பரணர் என்ற தமிழ்க் கவிஞர் சங்கப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். அவர் தமக்கு மட்டும் அல்லாமல் தம் இனத்தவராய தமிழ்ப் புலவர் அனைவருக்குமே சேர்த்து ஓர் உண்மையை வெளியிடுகிறார். தமிழ்ப் புலவர்கள் பொய் கூறமாட்டார்களாம்! பெரிய அரசர்களிடத்து அவர்கள் தரும் பரிசிலைக் கருதியே அப்புலவர்கள் சென்றாலும், அவ்வரசர்கள் செய்யாதவற்றைக் கூறிப் புகழுதல் அப்புலவர்கட்கு மரபு அன்றாம்!

பீடுஇல் மன்னர் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே

(புறம்-148)


[பிறருக்கு வாரி வழங்கும் பெருமை (பீடு) இல்லாத அரசரைப் புகழ வேண்டி அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகக்கூறி அவர் குணங்களைக் கூறுதலை (கிளத்தல்) அறியாது (எய்யாது) எம்முடைய சிறிய செம்மையான நாக்கு]

புலவருடைய நா ஏனையோருடைய நாவைப் போலத் துணிந்து பொய் கூறாமையின், செம்மையான நா என்றார் வன்பரணர். ஆனால், தாமும் ஒரு புலவராதலின் புலவர்களுடைய நாவின் பெருமையை எடுத்துக் கூறும் பொழுதும் தற்புகழ்ச்சி ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகச் ‘சிறு’ என்ற அடைமொழி தந்து ‘சிறு நா’ என்று மிக்க அடக்கத்துடன் கூறிக்கொள்கிறார். வன்பரணர் போன்ற பெரும் புலவர்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதானால், அத்தகைய புலவர்கள் வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது!

தாழ்ந்தது எது?

இத்துணைச் சிறப்புடைய புலவர்கள் தங்களுடைய இனத்தவர் எதனை உயர்ந்தது என்றும், எதனைத் தாழ்ந்தது என்றும் கருதினார்கள் என்பதைக் கூறினால் அது அந்த இனத்தார் அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா? இன்று வாழும் நாம் மிகவும் தாழ்ந்தது என்று எதனைக் கருதுகிறோம்? பலரும் பலவாறு நினைப்பதற்கு ஏற்ற வினாவாகும் இது. ஆனால், நாம் எதை இழிந்தது என்று நினைத்தாலும், ஒன்றை மட்டும் நினைக்கமாட்டோம் என்பது உறுதி. பிறரிடம் ஒன்றைத் தா என்று கேட்டல் இழிவு என்று கூறினால் நம்மில் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவோம். காரணம், இன்று நம்முடைய அன்றாட வாழ்வில் பலருடைய கையை எதிர்பார்த்தே வாழ வேண்டியுள்ளது. நம்மால் எதிர்பார்க்கப்படும் அப்பலருள் சிலர், தாமே நாம் வேண்டியவற்றைத் தருவர்; இன்னுஞ் சிலர், நாம் கேட்ட காலத்தும் கொடுக்க மறுப்பர். அத்தகையவர்களிடத்தும் வாய் கூசாமல் கேட்டால்தான் நாம் விரும்பியது கிடைக்கும். எனவே, நம் காலத்தில் ஒருவரை ஒன்று கொடு என்று கேட்பது தவறு அன்று என்று கருதப்பட்டாலும், அந்நாளைய தமிழன் இதனை மிக இழிந்ததாகவே கருதினான்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

(புறம்–204)

என்று இந்நான்கு அடிகளில் இற்றைநாள் தமிழ்ச் சமுதாயம் இழந்துவிட்ட ஒரு நாகரிகம் பேசப்படுகிறது. உலகத்தில் எவ்வாறேனும் வாழ்ந்துவிட வேண்டும் என்ற கருத்தால் தனக்கு மிகவும் வேண்டப்படுவதாக ஒன்றைக் கருதிக்கொள்கிறான் ஒருவன். அது இல்லாவிடின் உயிர் வாழ முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. உயிரைப் பெரிது என்று மதிக்கும் ஒரு காரணத்தால் எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்கிறான். இத்தகையவன் தனக்கு மிகவும் தேவை என்று கருதப்படும் பொருளை அது உடையான் ஒருவனிடமிருந்து வேண்டிப் பெற முயல்கிறான். அப்பொருளை உடையானும், இந்த இல்லானும் சமமாக இருப்பின் அவனை நோக்கி இவன், ‘தா’ என்று கேட்கலாம். ஆனால், உடையான் உயர்ந்தவனாய் இருப்பின், அவனிடம் சென்று ‘ஈவாயாக!’ என்றுதானே கேட்க வேண்டும்? மானத்தைவிட்டு ஒரு பொருளை ஈ என்று கேட்டலினும் இழிந்தது வேறு இல்லை என்கிறார். மானம் என்ற ஒன்றை மிகப் பெரிதாக மதிக்கும் அற்றை நாள் தமிழ்ப் புலவர். பசுமாடு ஒன்று உயிர் நீங்கும் நிலையில் இருக்கிறது. சிறிது தண்ணீர் இருந்தால் அது உயிர் பிழைத்துவிடும். பசுவைக் காப்பது அறமாகும். வேண்டப்படும் பொருளோ, எங்கும் எப்பொழுதும் கிடைக்கக்கூடிய தண்ணீர்தான். என்றாலும், அந்தத் தண்ணீரை ஒருவனிடம் சென்று ‘தருக’ என்று கேட்பதில் மானம் போய்விடுவதாகக் கருதினர் அற்றை நாள் தமிழர்.

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.

(குறள்–1066)

இரத்தலின் இழிவு இத்தகையது என்று பேசிய தமிழ்ப் புலவர், இதனுடன் நிற்கவில்லை; இதனினும் இழிந்த ஒன்றும் உண்டு என்கிறார். இவ்வாறு மானத்தை இழந்தும் ஒருவன் ஒரு பொருளைத் ‘தா’ என்று கேட்டு விடுகின்றான். அவ்வாறு கேட்பவன் எதிரே அக்கேட்கப்பட்ட பொருளை இல்லை என்று கூறுதல், கேட்டலினும் மிகவும் இழிந்ததாம். கேட்பதே இழிவு எனில், கேட்டதை இல்லை என்று உரைத்தல் அதனினும் இழிந்ததாம். இழிந்தது பற்றி ஆராய்ந்த தமிழர் உயர்ந்தது பற்றியும் அடுத்துப் பேசுகிறார்.

உயர்ந்தது எது?

ஒருவன் எதிரே நின்று ஒன்றைத் தருக என்று கேட்பதன் முன்னர், நிற்போன் குறிப்பை அறிந்து, இதனைப் பெற்றுக் கொள்க என்று தருதல் உயர்ந்ததாம்; அவ்வாறு கேளாமாலும் தரப்படுகின்ற ஒன்றை வேண்டா என்று மறுத்துவிடுதல் தருதலைக்காட்டிலும் உயர்ந்ததாம். ஒருவருக்கு ஒன்றைத் தருதல் என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. அவ்வாறு தருவதிலும், அதனைப் பெறுபவர் மனம் நோவாமலும் இதனைப் பெற வேண்டியுளதே என்று வருந்தாமலும் இருக்கும்படிச் செய்து ஒன்றைத் தருதல் ஒரு கலையாகும். இவ்வாறு தருபவரே மூன்றாம் அடியில் குறிக்கப்படுகின்றனர். இவரினும் மேம்பட்டவர், தானே வருகிற ஒன்றை வேண்டா என்று மறுப்பவர். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பதற்கு இந்த முறையில் இலக்கணம் கூறிய பெருமை, இந்த உலகில் வாழும் பல்வேறு சமுதாயங்களுள்ளும் தமிழன் ஒருவனுக்கே உரியது என்று கூறுதல் தவறு ஆகாது என்றே தோன்றுகிறது.

பழைய தத்துவம்

உலகில் வாழும் பல்வேறு மக்களும் ஏன் ஒன்றாக வாழ முடியாது? எல்லோரும் சோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கூறாத பெரியவர்கள் இல்லை. ஆனாலும் இன்று வரை உலகம் அவ்வாறு வாழவில்லை. உலகம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு நாட்டில் வாழும் ஒரு மொழி பேசுபவருள்ளாது இந்த ஒற்றுமை நிலைத்திருக்கிறாதா? இல்லையே! ஏன்? அனைவரும் சமம் என்று கூறும் கொள்கை ஏனைய நாடுகளைப் பொறுத்தமாட்டில் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆனால் இத்தமிழர் மிகப் பழங்காலத்திலேயே இக்கருத்தைக் கூறியுள்ள னர். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற கருத்தைப் பலரும் கூறியிருப்பினும், தமிழர் கூறிய முறையே ஒரு தனிச் சிறப்புடையது.

ஒருவன் எல்லாம் தன்னுடைய ஊராகும், அனைவரும் தன்னுடைய சுற்றத்தார் என்று நினைத்து வாழ முற்படுகிறான் என்றே வைத்துக்கொள்வோம். எவ்வளவு வரையில் இது முடியும்? பிறர் அவனுக்குத் தீங்கு இழைக்கும் பொழுது இவ்வாறு நினைக்க முடியுமா? அதிலும் காரணம் இல்லாமல் வேண்டுமென்றே தீமை செய்யும் பொழுதும் சும்மா இருக்க முடியுமா? சிறு துன்பம் செய்தால் ஒருவேளை பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உயிர்போகிற பெருந்துன்பம் இழைத்தால் என்ன செய்வது? அப்பொழுதும் துன்பம் இழைப்பவரைப் பகைவர் என்று கருதாமல் கேளிர் என்று கருத முடியுமா? முடியாதுதான். என்றால், பிறர் அனைவரையும் சோதரர் என்றே கருதவேண்டும் என்று கூறுவது பொருளற்ற சொல்லாய் முடிந்துவிடும். இன்று நம்மைச் சுற்றி நிகழ்வது யாது? கறுப்பனை வெள்ளையன் தோலின்நிற வேறுபாட்டால் வெறுக்கிறான். பணக்காரனை ஏழை வெறுக்கிறான். பொருள்களை உற்பத்தி செய்பவன் அதனை வாங்காதவனை வெறுக்கிறான். ஒரு வகை அரசியல் முறை உள்ளவன் பிறிதோர் ஆட்சி முறையுடையவனை முழுப்பகைவனாகக் கருதுகிறான். இன்னமும் கூறப்போனால், தம்மைப் போல் எல்லா வகையிலும், நினைக்காமல் வேறு வகையில் நினைக்கிறவர்களைக்கூடப் பகைவர்கள் என்றே சில நாட்டார் கருதுகின்றனர். இத்தனை வெறுப்புக்களிடையே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறுதல் பொருந்துமா? அல்லது எடுபடுமா? இவற்றை எல்லாம் மனத்தில் நினைத்த ‘கணியன் பூங்குன்றனார்’ என்ற அந்தத் தமிழ்ப் புலவர் இவற்றிற்குச் சமாதானம் கூறுகிறார்.

ஒருவன் மற்றொருவன்மேல் எப்பொழுது வெறுப்புக் கொள்கிறான்? தனக்குத் தீங்கு இழைத்துவிட்டான் என்று நினைத்தால்தானே வெறுப்புத் தோன்றும்? அவ்வாறு நினையாமல் மற்றொருவன் தனக்குத் தீமையோ நன்மையோ செய்ய முடியாது என்று நினைத்தால், வெறுப்புக்கொள்ள வாய்ப்பே இல்லையன்றோ?

இதனாலேதான் அந்தப் புலவர் பாடலின் இரண்டாம் அடியிலேயே ‘தீதும் நன்றும் பிறர் தர வருவன அல்ல’ என்கிறார். ‘ஒருவன் நேரே நம்மைத் தாக்கும்பொழுது கண் எதிரே நமக்கு ஊறு விளைப்பவனைக் காண்கிறோமே! அப்பொழுதும் அவனை வெறுக்கக் கூடாதா?’ என்பாருக்கு விடை கூறுமுகமாக மூன்றாம் அடியில், ‘உடலில் படும் துன்பம் நீடித்து நிற்பதில்லை. எனவே, அதனால் வெறுப்புக்கொள்ள வேண்டா’ என்கிறார். ‘ஒரு வேளை பிறன் ஒருவன் நம்மைக் கொல்லவே வந்தால் அப்பொழுது யாது செய்ய வேண்டும்?’ என்பாரை நோக்கி, இறத்தல் என்பது புதுமையன்றோ? ஏன் மனம் வெறுக்க வேண்டும்? என்கிறார். ‘வாழ்வு இனிமையுடையது, சாவு துன்பந்தருவது.’ என்று நினைத்தால்தானே கொல்லவரும் பிறர் மேல் வெறுப்புக் கொள்ள நேரிடும்? ஆதலால், அவற்றையும் மறுத்து விடுகிறார். இவ்வாறு பல வழியிலும் காரணங்காட்டி ஒருவர் மேல் வெறுப்போ பகையோ கொள்வது தவறு என்று எடுத்துக்காட்டி விட்டார்.

நீரில் அகப்பட்ட கட்டை

இனி வேறு ஒரு வகையிலும் வெறுப்புத் தோன்றக் கூடும். நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகளை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவிடத்தும், நாம் செய்யும் உபகாரத்திற்கு நன்றி பாராட்டாதவிடத்தும் வெறுப்புத் தோன்றுதல் இயற்கை இதோ புலவர் அதனையும் மறுக்கிறார். ‘வானம் இடியுடன் மழை பெய்கிறது. அதனால், ஆற்றில் வெள்ளம் பெருகுகிறது. அந்த வெள்ளத்தில் ஒரு கட்டை அகப்பட்டு விடுமாயின், யாது செய்யும்? வெள்ளம் போகும் வழி கட்டையும் செல்லுமன்றோ? அதேபோல, ஒவ்வொருவனுடைய ஆன்மாவும் அதனுடைய ஊழின்வழி நடைபெறுகிறதாதலின் நன்மை செய்யும் ஒருவனைப் புகழவும் வேண்டா. அவன் அற்பனாய் இருக்கும் பொழுது வாய் தவறியும் இகழவும் வேண்டா,’ என்கிறார் புலவர். ஒருவனைப் புகழ்வதாலும் மற்றவனை இகழ்வதாலுந்தானே உலகில் வேறுபாட்டுணர்ச்சியும், வெறுப்பும் தோன்றுகின்றன? எனவே, அடிப்படையில் அவ்வாறு கூறவே வேண்டா என்கிறார் கவிஞர், ‘தப்பித் தவறிப் பெரியோரைப் புகழ்ந்துவிட்டாலும் தவறு இல்லை; சிறியவர்களை வாய் தவறியும் இகழ்ந்துவிட வேண்டா,’ என்று கூற வந்தவர் ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,’ என்கிறார். உலகம் உள்ள அளவும் மறவாமல் போற்ற வேண்டிய இந்த அருமையான பாடலை ஒரு தமிழர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கிறிஸ்து பிறக்கு முன்னரே பாடினார் என்பதை நினைத்து வியப்படையாமல் இருக்க இயலாது.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துணி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(புறம்–192)

[முனிவு–வெறுப்பு; வானம்–மழை; கல்பொருது–கல்லை உருட்டி; இரங்கும்–ஒலிக்கும்; மல்லல்–வளப்பம் பொருந்திய, புணை–தெப்பக் கட்டை; முறை–ஊழ்; திறவோர்–மெய்ஞ்ஞானிகள்; காட்சி–நூல்.]

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றினர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையுமுன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர்.

புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லாமலே விளங்கும்.

சங்கப் பாடல்களில் வரும் தெய்வம், சமயம் பற்றிய குறிப்புக்கள் அளவிறந்தனவேயாகும்.

ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் தாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுக்கென உருவு அமைத்து நிறுவினர்; வழிபட்டனர் என்பதனைத்

தெய்வம், உணாவே மாமரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

(தொல்–பொருள். அகத்திணையியல்)


என்ற சூத்திரத்தால் உணரலாம்.

இதனோடு நில்லாமல் தெய்வத்தினும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழிபட்டனர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.

தெய்வம், கடவுள் என்னும் இரண்டனையும் இன்று ஒரு பொருளனவாக வழங்குகின்றோம். எனினும் தொல்காப்பியர் காலத்தில் இவை வெவ்வேறு பொருளன என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தில் பற்றுக் கோடில்லாத பரம்பொருளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

அத்தகைய இடங்களில் ‘கடவுள்’ என்ற சொல்லை வேண்டுமென்றே பெய்கின்றார்.


ஆல் அமர் கடவுள்
கடவுள் ஆலம் (புறநானூறு)

கடவுள் காந்தள்
அருந்திறல் கடவுள் (அகநானூறு)

மலை உறை கடவுள்
குன்றக் குறவன் கடவுள் பேணி (ஐங்குறு நூறு)

கடவுள் கல்சுனை
கடவுள் ஓங்கு வரை (நற்றிணை)

நிலை உயர் கடவுள்
நீ பூப்பலி இட்ட கடவுள் (கலித்தொகை)

உருகெழு மரபின் கடவுள்
கடவுள் அஞ்சி (பதிற்றுப் பத்து)

கடவுள் கற்பின்
பேஎம் முதிர் கடவுள் (குறுந்தொகை)

இவ்வாறு அமைவன எண்ணிறந்தன.

மேலும் திருக்கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஏதோ பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் இருந்தது என்ற தவறான கருத்து இக்கால ஆராய்ச்சியாளரிடை தோன்றியுள்ளது.

ஆனால் இத்திருக்கோயில்கள் முன்னர் கோட்டம், தேவகுலம் என்ற பெயரினவாக இருந்தன (சிலம்பு—கனாத்திறம் உரைத்த காதை).


ஊரானோர் தேவகுலம்
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து (கலி)

அணங்குடை முருகன் கோட்டம் (புறம்)

கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன.


மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து

எழுது அணி கடவுள் போகலின்
(அகம்)

போற்றுவார் இன்றி, வழிபடுநர் இன்றி சில கோயில்கள் பாழாயின என்றும் அறிகிறோம்.


இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென

............கடவுள் போகலின்
(அகம்)

‘கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’
(நெடுநல்வாடை)

கர்ப்பக்கிரகம்—சிலை—அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தது.


                           நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன்....

அருந்திறல் கடவுள் வாழ்த்தி
(பெரும்பாணாற்றுப்படை)

முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
(அகம்–167)

இப்பாடல் தொடர்வழி மிக உயர்ந்த, கர்ப்பக் கிரகத்தோடு கூடிய திருக்கோயில்களே சங்க காலத் தமிழர் சமைத்து வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.

கோயில் வழிபாட்டு முறையில் ஏதோ சில சடங்குகளைச் செய்து சமயம் என்ற பெயரிட்டு வாழ்ந்தனர் என்று நினைப்பது பெருந்தவறாகும்.

சமய வாழ்க்கையின் உயிர்நாடியாக உள்ள பக்தி என்பது இத்தமிழர்கள் அனைத்து உலகத்திற்கும் அளித்த பெருங்கொடை ஆகும்.

வேதத்தில் பக்தி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அறிய முடிகிறது.

உபநிடதங்கள் அறிவின் துணைகொண்டு உண்மைப் பொருளை ஆராயத்தொடங்கின. வேதங்களை அடுத்து வந்த பெளத்தம் சமணம் என்ற இரண்டிலும் பரம்பொருட் கொள்கை இன்மையால் அங்கு பக்திக்கே இடம் இல்லை.

இந்நிலையில் வேதகாலத்துக்கு முன்னும், வேதகாலத்திலும், பின்னும் வீறுபெற்றிழந்த தமிழர், தம்சமய வாழ்க்கையில் பக்தி என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர்.

பக்தியின் அடிப்படையே தன்னை மறத்தலும், தன்னைத் தியாகம் செய்தலும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் செய்யப்படுகின்ற யாகம் முதலியற்றுள் உயர்ந்த குறிக்கோள் இருப்பதாகச் சொல்ல முடியாது.

ஆனால் சமய வாழ்க்கையர் இன்று ஆண்டவனை வேண்டி “பல்வேறு நலன்களை அடைய வேண்டும்; பொன், பொருள், புகழ் முதலாயின அருள்க” எனக்கோரக் காண்கிறோம். பக்தியின் உண்மைத் தத்துவத்தை அறிந்தவர் இவ்வாறான வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வதில்லை.

எனவேதான் பரம்பொருளிடம் முறையிடும் பொழுது

 
                                        யாஅம் இரப்பவை
பொருளும், பொன்னும், போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும்
உருளினர்க் கடம்பின் ஒலி தாரோயே!
                                                            (பரிபாடல் 5–80)

என்று வேண்டியதாகத் தெரிகிறது.

இப்பரிபாடலின் நான்கு அடிகள் இத்தமிழ்ச்சாதியின் அன்றைய வாழ்க்கைக் கொள்கை, பண்பாட்டு வளர்ச்சி, என்பனவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

சிவ விஷ்ணு வழிபட்டில் இப்பண்டைத் தமிழர் மூழ்கி இருப்பினும், இந்நாட்டில் வாழ்வதற்கென வந்த பிற புலத்தவரான சமணர், பௌத்தர் என்பவர்களோடு, மாறுபாடு கொள்ளவோ, மனக் காழ்ப்பு கொள்ளவோ செய்கிலர்.

தனி மனிதனுடைய சமய நம்பிக்கை தெய்வநம்பிக்கை, சமய வாழ்வு என்பவை அம்மனிதன் சமுதாயத்துடன் உறவாடும்பொழுது உலக வாழ்க்கையில் குறுக்கிடவில்லை என்று அறிகிறோம்.

எனவேதான் இவ்வியல்பினரான தமிழருடன் வந்த வடபுலத்தாரும் பூசலற்று காழ்ப்பு அற்று வாழ்ந்தனர் என்று அறிகிறோம்.

இங்குள்ளார் தாமும் தம்முள் சைவ, வைணவ, சமண சாக்த, பௌத்தச் சார்பினரேனும் கூட்டாக வாழ்ந்தனர். தமக்குள் எவ்வித மனவேறுபாடும், சகிப்புத்தன்மை இன்மையும் கொள்ளவில்லை.

சங்க காலத்துக்கு அணியரான இளங்கோ அடிகள்,


“பிறவா யாக்கைப் பெரியோன்”
“திருமால் சீர்கேளாதசெவி என்ன செவியே”

என்றும் பாடுவன, நம் சிந்தனைக்குரியன.

சமயப் பொறை, சகிப்புத்தன்மை முழுவதாக நிறைந்திருந்தாலன்றி இவ்வாறு பாடமாட்டார் என்பதைக் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.


 

 


Printed By: BALAJI OFFSET PRINTERS.

Chennai - 106, Ph: 4759094, 4751794.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகமும்_புறமும்/008-008&oldid=1347436" இலிருந்து மீள்விக்கப்பட்டது