அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/5. 1930 ஆம் ஆண்டுகளில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5

1930 ஆம் ஆண்டுகளில்


பலமுறை கைது செய்யப்பட்டதன் காரணமாகவும், சோஷலிஸ்டுகளின் இயக்கத்தை கட்டியமைத்து வந்தவர்களை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பல்வேறு தொல்லைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கி வந்த நிலைமையின் காரணமாகவும், இருபதாம் ஆண்டுகளின் இறுதியில் சிங்காரவேலர் சோஷலிசக் கருத்துக்களைச் சட்ட பூர்வமான முறைகளின் மூலம் மட்டுமே பரப்பிவர முற்பட்டார். இதுவே அந்நாளில் கடவுள் எதிர்ப்பு, மாதர் விடுதலை, ஜாதிக் கொடுமையிலிருந்து விடுதலை முதலிய நோக்கங்களுக்காகப் பாடுபட்டு வந்த சுயமரியாதை இயக்கத்தோடு அவர் தொடர்புகளை மேற்கொள்ள வழி வகுத்தது. இந்தத் தொடர்பின் பயனாக, சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும் தலைவருமான பெரியார் ஈ.வே.ரா., “பேஜ்போஷ்னிக்” என்ற சோவியத் நாத்திகக் கழகத்தின் விருந்தினராக 1931-ல் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்தார். ஈ.வெ.ரா. தாயகம் திரும்பிய பின் தமது சொந்த அச்சகத்தை நிறுவி, குடியரசு என்ற வாரப் பத்திரிகையையும் வெளியிட்டு வரத் தொடங்கினார். மேலும், அவர் தமது அச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவின் மூலம், மதம் பற்றி லெனின் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் தமிழாக்கத்தை “லெனினும் மதமும்” என்ற தலைப்பில் 1933-ல் வெளியிட்டார். தமிழில் புத்தக வடிவில் வெளிவந்த லெனி னது முதல் நூல் இதுதான் என்பதைக் குறிப்பிட வேண்டும் . சிங்காரவேலரும் மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த சோஷலிசக் கருத்துக்களைக் கொண்ட இளைஞர்கள் சிலரும் குடியரசுப் பத்திரிகையில் ஆரம்ப முதற்கொண்டே சோஷலிசத்தைப் பற்றி எழுதிவரத் தொடங்கினர். அந்த இளைஞர்களில் ஒருவரே ப. ஜீவானந்தம்.

ஜீவானந்தம்

ஈ.வே.ரா. வுடன் இருந்து, பின்னால் கம்யூனிஸ்டுகளாக மாறியவர்களில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டியமைத்த மூத்த தலைவர்களில் ஒருவரும், ‘ஜீவா’ என்று தமிழக மக்களால் அன்போடும் அருமையோடும் குறிப்பிடப்பட்டவருமான ஜீவானந்தம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த காரணத்தால், முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜீவானந்தம் திருச்சி சிறையில் அரசியல் கைதியாக இருந்து வந்தார். அந்தச் சிறைவாசத்தின் போது, பூதகேஸ்வர தத், ஆச்சார்யா போன்ற சில இந்தியப் புரட்சிவாதிகள் லாகூர் சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டனர். இது அவர்களுக்கு எதிர்பாராமல் கிட்டிய நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் திருச்சி சிறையிலிருந்த அரசியல் கைதிகளுக்கு மார்க்சையும் லெனினையும் பற்றி, கம்யூனிஸ்டுக் கோட்பாடுகளைப் பற்றி வகுப்புக்கள் நடத்தினர். மேலும், அந்தப் புரட்சிவாதிகள் சிறைக்குள் எப்படியோ கடத்திக் கொண்டு வந்திருந்த மார்க்சிய நூல்கள் சிலவற்றைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பும் திருச்சி சிறையிலிருந்த அரசியல் கைதிகளுக்குக் கிட்டியது, இந்த அரசியல் கைதிகள் பின்னர் விடுதலையான போது, சிறையில் அந்தப் புரட்சிவாதிகள் நடத்திய அரசியல் வகுப்புகளின் போது தாம் எடுத்த குறிப்புகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தனர். அவற்றின் அடிப்படையில் அவர்கள் குடியரசுப் பத்திரிகையில் பல கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதினர். இந்தக் கட்டுரைகள் 1933-ல் குடியரசுப் பதிப்பகத்தின் வெளியீடாக, “பொதுவுடைமைத் தத்துவங்கள்” என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.

என்றாலும், 1934-ல் சுயமரியாதை இயக்கத்தின் தலைவரான ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு, ஜீவாவும், சோஷலிச மனப்பான்மை கொண்ட ஏனைய இளைஞர்களும் அந்த இயக்கத்திலிருந்து விலகினர். ஜீவானந்தம் பின்னர் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூல கர்த்தாக்களில் ஒருவராக மாறிவிட்டார்.

தமிழறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்த ஜீவா 1932ம் ஆண்டுதொட்டே அக்டோபர் புரட்சியைப் பற்றியும் லெனினைப்பற்றியும் சோவியத் நாட்டைப் பற்றியும் பல பாடல்களைப் புனைந்து வெளியிட்டு வந்தார். இந்தப் பாடல்கள் பலவும் பின்னர் தொகுக்கப்பட்டு, “ஜீவாவின் பாடல்கள்” என்ற தலைப்பில் சென்னை என்.சி.பி.எச். வெளியீடாக 1962ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

ஜீவாவின் பாடல்கள் அந்தக் காலத்திலேயே அரசியல் மேடைகளில் பாடப்பட்டன; அவற்றில் சில தொழிலாளி மக்களிடையே மிகவும் பிரபலமும் அடைந்தன. 1932-ம் ஆண்டிலேயே அவர் சோவியத் யூனியனை நோக்குமாறு தொழிலாளிகளை அறைகூவி அழைத்துப் பின்வருமாறு பாடினார்

புது உலகத்தை நோக்குவீர் பூரிப்படைவீர்
இதுவரை ஈடேறா ஏழைத் தொழிலாளிகள்
எழுச்சி பெறுவதற்கே--இசைந்த இன்பப் (புது
லெனின் வழித் தியாகிகள் நேர்மை நிறைந்த தோழர்
அநியாய மென்பதறியார்- ஆட்சி கொள் ரஷ்யப் (புது
ஊணில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை
உற்ற நற் கல்வியில்லை
உரிமையும் கடமையும் ஒத்ததாயில்லை யெனும்
ஒப்பாரி அங்கு இல்லை

வீணில்லை வேலையற்றோரில்லை தனி உடைமை
வெம்பூத ஆட்சியில்லை
வீழ்வில்லை ரஷ்யாவில் மேலில்லை கீழில்லை
வெற்றி எல்லோர்க்கும் எல்லை

அக்டோபர் புரட்சியைப்பற்றி, உணர்ச்சியூட்டும் வழிநடைச் சந்த கதியும் வாக்குவன்மையும் மிக்க பாடலொன்றை அவர் 1936ல் எழுதினார். அந்தப் பாடலில் அவர் இவ்வாறு பாடினார்;

சடசட வென்றே முறிந்து ஜார் விழுந்த காரணம்
தரணியெங்கும் பொதுவுடைமை தழைப்பதற் குதாரணம்
படபடத்துத் துடிதுடித்துப் பாமரர் முன்னோர்
பணம் சுமந்த ராட்சதர்கள் பதறி நொந்து சாகிறார்
வசியமிக்க மார்க்சின் கொள்கை மாநிலத்தில் பலிக்குதே
மகிழும் ரஷ்யா லெனின் படைத்த வாழ்வினால் ஜொலிக்குதே
பசியெழுப்பும் புரட்சி வெந்தீ பார் முழுதும் எரியுதே
படையை ஏவி விடும் ஏகாதிபத்ய வாழ்வு சரியுதே!

ஜீவா தமது பாடல்களைத் தவிர, தமிழ்நாட்டு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தியிலும், மற்றும் 1958ல் அவர் தொடங்கி, 1962 தொடக்கத்தில் அவர் காலமாகும் வரையில் அவரே ஆசிரியராகவும் இருந்து வந்த கலை இலக்கிய மாத இதழான தாமரையிலும், அக்டோபர் புரட்சியைப் பற்றியும், சோவியத் ஆட்சிக் காலத்தில் மலர்ந்துள்ள இலக்கியங்களைப் பற்றியும் பல கட்டுரைகளையும் எழுதினார். சோவியத் எழுத்தாளர்களையும் இந்திய இலக்கியங்களையும் பற்றி அவர் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் பலவும், படைப்பிலக்கியம் சம்பந்தமாகப் பல இளம் தமிழ் எழுத்தாளர்கள் தமது கண்ணோட்டத்தையும் அணுகல் முறையையும் உருவாக்கிக் கொள்ளவும் நம்பிக்கையூட்டும் பல தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கவும் உதவின என்றும் கூறலாம். அவர் தொடக்கி வைத்த மரபைத் தாமரை இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. பாரதிதாசன்

கனக சுப்புரத்தினம் என்ற தமது இயற்பெயரைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றியமைத்துக் கொண்ட பாரதிதாசன், பாரதியின் அஞ்ஞாத வாச காலத்தின் போது பாண்டிச்சேரியில் பாரதியோடு நெருங்கிய தோழமை கொண்டவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் பாரதியின் காலத்திலேயே திறமைமிக்க இளம் கவிஞராகவும் திகழ்ந்தார். மேலும் தமது புனைபெயருக்கேற்ப, நெடுங்காலம் வரையிலும் அவர் பாரதியின் கருத்து வழி நின்று, அவரது உண்மையான சீடராகவும் விளங்கினார். என்றாலும், பிற்காலத்தில் அவர் பெரியார் ஈ.வெ.ரா.வின் கருத்துலகத் தொண்டராக மாறி, அறுபதாம் ஆண்டுகளில் தாம் காலமாகும் வரையிலும், மூர்க்கமான தமிழினப்பற்றையும், பார்ப்பனீய எதிர்ப்பையுமே முழு மூச்சாகக் கொண்டு எழுதி வந்தார். எனினும், ரசிகர்கள் பலரும் அவரைப் ‘புரட்சிக் கவிஞர்’ என்று அருமையோடும் பெருமையோடும் குறிப்பிடும் அளவுக்கு அவர் வலிமைமிக்க கவிஞராகவும் விளங்கினார். முப்பதாம் ஆண்டுகளிலும் நாற்பதாம் ஆண்டுகளிலும் அவர் எழுதிய மிகப் பெரும்பாலான கவிதைகள், மானிட மகத்துவத்தையும், சமுதாய, பொருளாதார சமத்துவத்தையும் ஏற்றிப் போற்றும் கருத்துக்கள் நிறைந்த, வலிமையும் வைரமும் பாய்ந்த கவிதைகளாக இருந்ததே இதற்குக் காரணம்.

அக்டோபர் புரட்சியின், சோஷலிசக் கருத்துக்களின் செல்வாக்குக்கு ஆட்பட்ட கவிஞர்களில் பாரதிதாசனும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க கவிஞரேயாவார். வீழ்ந்து கிடக்கும் மனிதனுக்குத் தெம்பூட்டும் விதத்தில் தாம் எழுதிய கவிதையொன்றில் அவர் இவ்வாறு பாடியுள்ளார்:

மனிதரில் நீயுமோர் மனிதன் : மண்ணன்று
இமைதிற! எழுந்து நின்று எண்ணுவாய்.
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!

விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!
உனது வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டோடு நாட்டை இணைத்து, மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு! மேன்மேல்
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல்! பார்த்து மகிழ்ச்சி கொள்!
அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை;
அணைத்துக் கொள்; உன்னைச் சங்கமம் ஆக்கு!
மானிட சமுத்திரம் நன்றென்று கூவு
பிரிவிலை! எங்கும் பேதம் இல்லை.
உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் .....

மற்றொரு பாடலில் அவர் இவ்வாறு பாடியுள்ளார்:

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம்

1941ல் நாஜிப் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கிய காலத்தில், சோவியத் யூனியனைத் தாக்கிய தவறினாலேயே ஹிட்லரின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் பாரதிதாசன் ஒரு கவிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

எத்தனை நாட்டின் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!

எத்தனை நாட்டில் இருந்த காலாட்கள்!
அனைத்தையும் சேர்த்து, அலை அலையாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்களின் வாழ்வின் மதிப்பு இன்னதென,
ஒக்க வாழும் உறுதி இதுவென
முதிய பெரிய முழு நிலத்திற்கும்,
புதிய தாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!