அங்கும் இங்கும்/யார் காக்கிறார்கள் ?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


3. யார் காக்கிறார்கள்?

நாடு வளர, மக்கள் முன்னேற, உழைப்பு, பெரும் உழைப்புத் தேவை. பாரதப் பெரு நாடு வளர, கோடி கோடி கைளின் உழைப்புத் தேவை. கோடி கோடி கைகள், கூடிக் கூடி உழைத்தால் கோடி, கோடி நன்மை, தேடித்தேடி வரும் ; உண்மை.

ஆளை ஆள் தள்ளும் பணியிலும், கோடி, கோடி கைகள் ஈடுபடலாம். ஆளுக்கு ஆள் கைக்கொடுக்கும் தொண்டிலும் ஈடுபடலாம். இந்தியாவிற்கு எது தேவை ? தள்ளல் தொழில் புரியும் கைகளல்ல; தாங்கல் தொழில் புரியும் கைகள். கூடித் தொழில் புரியும் கைகள். அத்தகைய கைகளும் சிலபல போதா. கோடி, கோடி, கைகள் தேவை.

கோடி கோடி கைகளை உழைக்க வைப்பதெப்படி ? ஒன்றுபட்டு உழைக்க வைப்பதெப்படி ? ஒரு கையாயின் ஒருவர் உணர்ச்சி போதும். சில கைகளாயினும் வல்லான் ஒருவன் இயக்கிவிட முடியும். பல கைகளுக்கோ, வல்லார் சிலராவது வேண்டும். கோடி, கோடி கைகளை-இயந்திரக் கைகளையல்ல - மனிதக் கைகளை - இயக்க, ஒரு சேர இயக்கச் சிலரும் போதா : பலரும் போதா ; கோடி கோடி. மக்கள் விழிப்புப் பெற வேண்டும் ; எழுச்சியுற வேண்டும். ஆக்க உணர்ச்சி பெற வேண்டும் வளரத் துடிக்க வேண்டும். முன்னேற உழைக்க வேண்டும். அறிவிலும் வளரத் துடிக்க வேண்டும் ; உழைக்க வேண்டும்.

விழிப்பும் எழுச்சியும் தாமே விளைபவையல்ல. பயிரிடப்படுபவை. அவை சில நாள் பயிரல்ல ; பல நாள் பயிர்; அடுத்தடுத்துப் பயிரிடப்படுபவை ; பல நூறாயிரவரால் பயிரிடப்படுபவை.

நாட்டுப் பற்றும் உரிமை உணர்வும், காந்தியடிகளார் தலைமையில் பல்லாயிரவர் பாடுபட்டுப் பயிரிட்டவை , பல்லாண்டு பயிரிட்டவை அப்பயிரைத் தலைமுறைக்குத் தலைமுறை பயிரிட வேண்டும்.

காந்தியடிகளார் தீட்டிய திட்டங்களில் ஒன்று முதியோர் கல்வி. அதை மறக்கலாமா நாம் ? முதியோர் கல்வி, தானே வளருமா ? தலைமுறை தலைமுறையாக அறியாமை. நோயிலே உழலும் நம் மக்களிடையே, (அது நோயென்று உணராத நம் மக்களிடையே) முதியோர் கல்வி, தானே வளராது. அது வளர்க்கப்பட வேண்டும். இரண்டொருவரால் அல்ல, பல்லாயிரவரால்.

பன்னிர் தெளித்துச் சேடை கூட்ட முடியாது வெந்நீர் பெய்து காடு எரியாது. முதியோர் கல்விப் பயிருக்கும் சிறு சிறு தெளிப்புப் போதாது. பல்லாயிரவர் தொண்டு தேவை. அறியாமையைச் சுட்டெரிக்கவும் பல்லாயிரவர் பாடும், ஆதரவும், ஊக்கமும் தேவை.

பல்லாயிரவர்-நாட்டுப் பற்றுடைய பல்லாயிரவர் - தொண்டர் பல்லாயிரவர்-தொண்டை. பெரியவர்களிடம் ஒட்டிக் கொள்வதற்கு வழியாக அல்லாமல், தொண்டிற்காகவே மேற்கொள்ளும் பல்லாயிரவர்-கல்லாத முதியோரிடம் விழிப்பையும் எழுச்சியையும். 'கற்றுக் கொள்ளாமல் ஓய்வதில்லை, தலை சாய்வதில்லை', என்ற பேருணர்ச்சியையும் தூண்டவல்ல, பல்லாயிரவர் பாடுபட்டால், நம் நாட்டிலும், அறிவு, வெள்ளம்போல் பெருகும். அறிவு வெள்ளமே பள்ளத்தில் கிடக்கும் பலரையும் தூக்கிவிடும் : உயர்த்தி விடும். முதியோர் கல்வித் தொண்டருக்கு ஏனோ பஞ்சம் ? இவ்வளவு விரைவிலா காந்தியத் திட்டத்தை மறந்து விட்டோம் ; இவ்வெண்ணங்களை எழுப்பிய காட்சிக்கு வாருங்கள்.

தாஷ்கண்ட் நகரம். முன் இரவு நேரம். ஒன்பது மணி. இலையுதிர் காலத்தின் தொடக்கம் பூங்காக்களில், பசும் புல் தரை மாறவில்லை. இங்கும் அங்கும் போடப்பட்டிருந்த இருக்கைகள் சில்லிட்டு விடவில்லை. காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது, அதிலே குளுமையும் இனிமையும் இருந்தன. அஞ்சுமளவு கடுங்குளிரும் சீறலும் இல்லை. வானத்திலே விண்மீன்கள் மின்னின. திங்களும் தவழ்ந்தது. இவ்வினிய சூழ்நிலையில் அந்நகரப் பூங்காக்கள் திறந்து கிடந்தன. அவை எங்களை வா, வா’ என்று அழைத்தன. எங்களை மட்டுமா, யாரையுமே, வெளியே வந்து, இருந்து, மகிழ அழைக்கும் காலமும் சூழலும் அப்போது. பல்லைக் கடித்துக்கொண்டு அவற்றை விட்டு விலகிப்போனோம். நெடுஞ்சாலையொன்றில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம். கண்ட காட்சியும், கேட்டு அறிந்த தகவலும், எழுந்த எண்ணங்களும் இதோ உங்கள் முன்னே.

ஒரு மாடிக் கட்டிடத்தின் தெருவோர அறையொன்றில், முப்பது நாற்பது பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரும் பெண்கள். இளங்கன்னியரல்லர். தள்ளாதவர்களா ? அல்லர். நாற்பது, ஐம்பது வயது மதிக்கத்தக்க மாதர்கள். அம்மாதர்களுக்கு எதிரே ஒரு மாது வீற்றிருந்தார். அவர் பக்கத்திலே கரும்பலகை ஒன்றிருத்தது. அது மெய்யாகவே பெயருக்கேற்ப கருப்பாயிருந்தது. அதிலே ஏதோ எழுதிப் போடப்பட்டிருந்தது. மாதர்களெல்லாரும் எதையோ பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைக் கண்டோம். இக்கூட்டத்தைப் பற்றிக் கேட்டறிந்தோம். அப்போதே கேட்டறிந்தோம். இக்கூட்டம் அரசியல் கூட்டமல்ல கருத்தரங்கல்ல. இலக்கியச் சொற்பொழிவுமல்ல. இலக்கிய நோட்டம் என்ற திரை மறைவு அரசியல் ஊடுருவலுமல்ல. சமயச் சொற்பொழிவின் பேரால் நடக்கும் ஆட்சி எதிர்ப்பு முயற்சியும் அல்ல. பின் என்ன ? கல்வி வகுப்பு. பாலர் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிக் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிப் புலமை வகுப்பல்ல ; பிற மொழிக் கல்வி வகுப்பு. உஸ்பெக் மாதர்கள்-முதியோர்-படிக்கும் ஜெர்மன் வகுப்பே நாங்கள் கண்டது. அம்மாதர்கள், ஏற்கெனவே தாய்மொழியாகிய உஸ்பெக்கையும் சகோதர மொழியாகிய இரஷிய மொழியையும் கற்றுத் தேறியவர்கள். அலுவலகங்களிலும் தொழிற் கூடங்களிலும் பணிபுரிகிறவர்கள்.

’படியுங்கள், படியுங்கள். மேலும் படியுங்கள்’ என்ற நல்லுரையைப் பின்பற்றி மேலும் மேலும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள், அம்மாதர்கள். தங்கள் அன்றாட அலுவல் தீர்ந்த பின், அக்கடா என்று வீட்டிலே விழ்ந்து கிடக்காமல் அல்லது இன்றே நன்று ; எனவே இன்றே களித்திரு என்று பூங்காக்களில் பூரித்துக் கிடக்காமல், ’அறிவின் அளவே வாழ்வும்’ என்பதை உணர்ந்து, இரவு நேரங்களில், வேளைக் கல்லூரியில் : சேர்ந்து, புது மொழி யொன்றைக் கற்கும் முதிய மாணவிகள் அவர்கள். அவர்களிலே பலருக்குக் குடும்பப் பொறுப்பும் உண்டு. இத்தனைக்குமிடையிலேதான், அவர்கள் தொடர்ந்து கற்கிறார்கள்; முதுமையிலும் கற்கிறார்கள். இரவுதோறும் கல்லூரியில் கற்கிறார்கள் பிற மொழிகளைக் கற்கிறார்கள்- மொழித் தீண்டாமையை நினைவிலும் கொள்ளாது கற்கிறார்கள்.

நாங்கள் கண்டது காட்சிக்காக நடக்கும் கல்லூரியா ? இங்கும் அங்கும் பெருநகர்களின் நெடுஞ்சாலைகளில் வெளி நாட்டவர்களுக்குக் காட்ட நடத்தப்படும் கல்லூரியா ? இல்லவே இல்லை. வேளைக் கல்லூரிகளும், வேளைப் பள்ளிகளும் எங்குமுண்டு, சோவியத் ஒன்றியத்தில்; ஏராளமாக உண்டு. அவற்றில் சேர்ந்து, தொடர் கல்விப் பயன்பெறும் தொழிலாளர்கள். அலுவலர்கள், பட்டதாரிகள் இலட்சக்கணக்கினர். இந்த ஈடுபாட்டில் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்லர் பெண்கள். முதியோர் கல்வி பெறும் -எழுத்தறிவல்ல-தொடர் கல்வி பெறும், எண்ணற்ற மாதர்களில் நாற்பது பேரையே நாங்கள் தாஷ்கண்ட் இரவுக் கல்லூரியில் கண்டோம்; ஜெர்மானிய மொழி கற்கும்போது கண்டோம்.

மூன்று வாரங்களுக்குப் பின் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பணியொன்றில் இருந்த இரஷியர் ஒருவரைக் கண்டேன். அவருக்கு வயது அறுபதுக்கு அருகில். அவர் பொருளாதாரத் துறையில் டாக்டர் நிலைக்குப் பட்டம் பெற்றவர். அவர் கௌரவ டாக்டர் அல்லர். படித்துத் தேறிப் பட்டம் பெற்றவர். அவர் ஆதியில்-அதாவது இளமைப் பருவத்தில்-படித்து முடித்தது எவ்வளவு ? நான்காம் வகுப்பு வரையில், ஜார் ஆட்சிக் காலத்தில், ஏழ்மை காரணமாக, நான்காவதோடு நின்றுவிட்ட அவர் சோவியத் ஆட்சிக் காலத்தில், மீண்டும் வேளைப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியிறுதி தேறியதும் வேளைக் கல்லூரியில் சேர்ந்து முதற் பட்டம் பெற்றார். ஊக்கம் அதிகமாயிற்று. 'டாக்டர்’ பட்டத்திற்கும் வேளைக் கல்லூரியிலேயே படித்தார். பொருளியல் மேதையாகத் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

'கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!' இது நான் கற்ற தமிழ்ப் பாடம் ; நாட்டு மக்களிடமிருந்து ஒளிக்கும் பார்க்கும் பாடம்.

'யாதானும் நாடாமால் ஊராமால், என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’- இது தமிழ் மறை; நம் மறை; இதை ஒத யாருக்கு உரிமையுண்டு? 'இளமையிலும் இதோ( தில் தேர்ச்சிச் சீட்டுப் பெற்ற பின்னும் கண்விழித்துப் படிப்பானேன்? படிக்காத மேதை பார்த்ததில்லையா ? என்கிற போக்கிலே, நடக்கிற நமக்கா? அப்போக்கினையே வளர்க்கிற நமக்கா ? அல்லது இரவு பகல் பாராதே, முடிந்த போதெல்தாம் படி, தாய் மொழியையும் படி, அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிக்கொண்டு வா என்று சொல்லுவதோடு நில்லாமல், அவ்வழி வளர்கிற, சாந்துணையும் கற்கிற, சோவியத் மக்களுக்கா ? யாருக்குச் சொந்தம குறள் ? யார் காக்கிறார் குறள் நெறியை ?