அங்கும் இங்கும்/லெனின் நூலகம்

விக்கிமூலம் இலிருந்து
5. லெனின் நூலகம்

மாஸ்கோ நகரத்துக் காரோட்டியின் கல்வி ஆர்வத்தை வியந்தவாறே, எங்களுடன் வந்த மொழி பெயர்ப்பாளரைப் பார்த்து. " இந்த விஞ்ஞான நூல், கரோட்டியே சொந்தமாக வாங்கியதா ? அல்லது இரவலாகப் பெற்றதா ?" என்று வினவினேன். அதை அவர் காரோட்டியின் இரஷிய மொழியில் கேட்டார். காரோட்டியின் பதிலை ஆங்கிலத்தில் கூறினார். பதில் என்ன ?

"நான் படிக்கும் இவ்விஞ்ஞான நூல் நூலகத்திலிருந்து இரவலாகப் பெற்றதல்ல. விலைபோட்டு வாங்கியது. இதோ பாருங்கள் எவ்வளவு உறுதியான கட்டு, விளக்கமான படங்கள், உயர்ந்த படங்கள் அத்தனையும் அழகான அச்சிலே; உயர்ந்த தாளிலே. இவ்வளவு உயர்ந்த நூலுக்குப் போட்டிருக்கும் விலையோ மிகக் குறைவு" எந்த நாட்டிலும் இவ்வளவு மலிவாக உயர் விஞ்ஞான நூல்கள் கிடைக்கா. எல்லோரும் வாங்கக்கூடிய அளவுக்கு குறைந்த விலையிலேதான் எங்கள் நாட்டு நூல்கள் வெளியாகின்றன.

இந்த பதில் இட்டுக் கட்டிப் பேசிதல்ல; உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. நம் நாட்டில் பதினைந்து ரூபாய்க்கும் வாங்க முடியாத நூல்களை அங்கு மூன்று நான்கு ரூபாய்களுக்கு வாங்கிவிடலாம் என்பதை விசாரித்து அறிந்து கொண்டோம். நூல்களை மிக மலிவாக வெளியிட எப்படி முடிகிறது? அரசினர், ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி இலவசமாக எழுதி வாங்கிக் கொள்வதாலா? அல்லது பெயரளவில் ஏதோ சொற்பத் தொகை கொடுத்து மலிவாக கையேடுகளைப் பெறுவதாலா? அல்லது நூல் வெளியீட்டுத் தொழிலாளிகளுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாலா? எந்த உபாயங்களைக் கைக்கொண்டு விஞ்ஞான நூற்களைக்கூட மலிவாக விற்கிறார்கள் என்று கேட்டோம்.

காரோட்டி பதில் கூறுவதற்கு முன், மொழிபெயர்ப்பாளர் பதில் கூறினார்.

" இந்நாட்டில் நூலாசிரியர்களுக்கு நல்ல ஊதியம். உயர்ந்த 'இராயல்டி,' வெளியீட்டு வேலைக்காரர்களுக்கும், மற்ற வேலைகளில் உள்ளது போன்றே நல்ல சம்பளமே"

பதில் முடியவில்லை. இதற்குள் எங்களில் ஒருவர்- நானல்ல - குறுக்கிட்டார்.

"அப்படியானால் எப்படித்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது?" என்று வியப்புடன் வினவினார்.

" இதில் அற்புதம் ஒன்றுமில்லை. நூல் வெளியீடு இங்கு ஒரு வாணிபமல்ல; மக்களது படிப்புப் பசியைப் பயன்படுத்தி தனியார் யாரும் நூல் வெளியிட்டு, வாணிகம் செய்து குவிக்க முடியாது. நூல் வெளியீட்டுப்பணி, பொதுத்துறையில் உள்ளது நூல் வெளியீட்டிற்காக, ஒவ்வொரு குடியரசிலும் பொதுத்துறை அமைப்பு உண்டு. அவை அரசினரால் அமைக்கப்பட்டாலும் தன்னுரிமை பெற்றவை. பல்துறை மேதைகளைக் கொண்டவை. இலாபக் கண்ணொட்டம் அற்றவை.

" ஆகவே ஒவ்வொரு நூல் வெளியீடும் கட்டுபடியாக வேண்டுமென்ற குறியோடு விலை போடவேண்டிய நிர்ப்பந்தம் அற்றவை. வெளியிட்ட பல நூல்களுக்கும் சேர்த்து, ஒட்டு மொத்தத்தில், போட்ட முதல் வந்தால் போதும் என்ற அடிப்படையில் சிறப்பாகப் பணிபுரிகின்றன, இவ்வெளியிட்டுக் கழகங்கள்.

"மேலும், நூல்களை ஐந்நூறு ஆயிரம் படிகள் என்ற குறைந்த எண்ணிக்கையில் அச்சிடுவதில்லை. பொதுமக்களும் 'ஆளுக்கொரு நூல் நிலையம்' என்ற கருத்தோடு சொந்தமாக நூல்களை வாங்கச் சுணங்காது சுடச்சுட வாங்குவதால் நூல்களை முதல் பதிப்பிலேயே பதினாயிரக்கணக்கில் அச்சிடுகிறார்கள். பதிப்பிற்குப் பதிப்பு ஏராளமான படிகள். விரைவான விற்பனை, 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்’ சுரண்டல் கண்ணோட்டம் அற்ற நிலை. இவையே விலைக் குறைவிற்கு உள்ள முக்கிய காரணம். நாங்கள் பெற்ற பதிலின் சாரம் இது.

பதினாயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கப்படும் நூல்கள் எவை ? அக ஆயிரமா? புற ஆயிரமா? காதற் கதைகளா? போராட்ட நவீனங்களா ? பொழுது போக்குக் கதம்பங்களா ? விகடச் செண்டுகளா ?

இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. அவற்றை வெளியிட்டோம்.

"இரஷிய நூல் வெளியிட்டுக் கழகத்திற்குச் செல்லும் போது நினைவு படுத்துங்கள். அங்குள்ளவர்களிடம் இதைப் பற்றி வினவுவோம்" என்றார் மொழி பெயர்ப்பாளர்.

நாள்கள் சில சென்றன. இரஷிய நூல் வெளியீட்டுக் கழகத்திற்குச் சென்றோம். அதன் நடைமுறையைப் பற்றிப் பலப்பல தெரிந்து கொண்டோம். எங்கள் முந்தைய ஐயங்களை, மொழி பெயர்ப்பாளரே வெளியிட்டார்.

"பொழுது போக்கு நூல்களும், நகைச்சுவை நறுக்குகளும் படிக்காதவர்கள் அல்லர் சோவியத் மக்கள், போராட்டக் காவியங்களைக் கற்று, வீறு கொள்ளாதவர்கள் அல்லர் அவர்கள். காதற் கதையென்று, பச்சை பச்சையாக, பாலுணர்ச்சி யூட்டுப வையல்ல, சோவியத் நூல்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

"ஒட்டப் படிப்பு நூல்களாகிய இவற்றை ஒதுக்கிவிடவில்லை சோவியத் மக்கள். ஆயினும் இவற்றையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும் செக்கு மாடுகளாகவுமில்லை அவர்கள் அவர்கள் படிக்கிற நூல்களிலே நூற்றுக்கு எண்பது விழுக்காடு 'சீரியஸ்' நூல்கள். அதாவது ஊன்றிப் படிக்க வேண்டியவை' என்று அவ்வெளியீட்டுக் கழக அதிகாரி ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டோம்.

விகடத்துக்கு அப்பால் விரியாத நம் படிப்பும் கிளு கிளுப்பிற்கு மேல் தெரியாத நம் காவியமும் என்றைக்கு மாறுமோ என்று ஏங்குகிறீர்களா ? ஏங்கிப் பயன் என்ன ? விழுங்குணவை விழுங்குவதற்கும் உணர்ச்சியற்ற சுகவாசிகளாயிற்றே நாம். துரங்கி முன்னேற முடியாது ஐயா, முடியாது !

மாஸ்கோ நகரத்திலே ஒரு பெரிய நூலகம் உள்ளது, அதன் பெயர் லெனின் நூலகம். உலகப் புகழ் பெற்ற, உலகத்தின் மிகப்பெரிய நூலகங்கள் மூன்று அவையாவன : இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூசிய நூலகம், வாஷிங்டனிலுள்ன காங்கிரஸ் நூலகம், மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம், முதல் இடத்திற்காக இம்மூன்றிற்கும் பலத்த போட்டி என்று கேள்விப்பட்டோம். ஆகவே, மாஸ்கோ லெனின் நூலகத்தைக் காண விழைந்தோம். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாள் முற்பகல் முழுவதும் அங்கு இருந்தோம்.

லெனின் நூலகம் பல அடுக்குக் சட்டிடத்தில் உள்ளது. இது பொது நூலகம். பொது மக்கள் அனைவரும் இதை பயன்படுத்தலாம். நூல்களை மட்டுமா படிக்கலாம் ? நூல் களோடு பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் படிக்கலாம். வீட்டிற்கும் நூல்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிக்கலாம்.

நூல்கள், பல மாடிகளில், பல பகுதிகளில், ஒழுங்குபடுக்தி, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூல் ஒன்றை வேண்டுவோர், தாமோ, துலகப் பணியாளரோ, அதைத் தேடிச் சென்று எடுத்து வருவதென்றால், காலதாமதமாகும். அதற்குப் பரிகாரம் கண்டுள்ளனர்; நூல் விரும்பி, தாம் விரும்பும் நூலைப் பற்றிய தகவலை மைய இடத்திலுள்ள பணியாளர்களில் ஒருவரிடம் அறிவிப்பார். அப்பணியாளர் அதற்கான குறிப்பை எழுதி, சுழலும் தொட்டில் ஒன்றில் வைப்பார். அத்தொட்டில் கீத் மாடத்திலிருந்து, உச்சி மாடம் வரை சுழன்று கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாடத்திலும் தொட்டில் நிற்க இடமொன்று இருக்கிறது. தொட்டில் சில வினாடி நிற்கும் அங்கே ஒரு பணியாளர் இருப்பார். அப்பணியாள், வருகிற குறிப்புகளில் தன் மாடிக் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.

தொட்டில் அடுத்த மாடிக்குச் சென்றுவிடும், உச்சிவரை சென்று திரும்பும் ; திரும்பும்போது ஒவ்வொரு மாடத்திலும் நிற்கும். மேற்சென்று திரும்புவதற்கு இடையில் குறிப்புகளின்படி கிடைத்த நூல்களைத் தொட்டிலில் இடுவார்கள், அலை கீழ் மாடத்திற்குச் செல்லும் ; அங்கு அவற்றை எடுத்துக் கேட்பவர்களுக்குக் கொடுப்பார்கள்.

அங்கு வரும் படிப்போர் கூட்டத்தையும் பல மாடிகளில் எத்தனையோ பெரும் பரப்புகளில் பல இலட்சக்கணக்கான நூல்கள் பகுத்து, ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதையும் நேரில் கண்டோரே, லெனின் நூலகத்தில் அன்றாடம் நடக்கும் நூல் வழங்கு வேலையை, இயந்திர இயக்கமின்றிச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

லெனின் நூலகத்தில், எத்தனை மொழிகளில் நூல்களும் வெளியீடுகளும் உள்ளனவென்று வினவினோம், நூற்று அறுபது மொழிகளில் உள்ளனவென்றார் நூலகத்தைச் சேர்ந்தவர். பளிச்சென்று கொடுக்கும் இப்பதிலில், உண்மை எவ்வளவோ, 'திறமை' எவ்வளவோ என்ற ஐயப்பாடு மின்னிற்று. எனவே என்னென்ன மொழிகளில் என்று மேலும் சோதித்தோம். அந்த நூற்று அறுபது மொழிகளின் பட்டியலையே எடுத்துக் கொடுத்துவிட்டார்.

தமிழ் மொழி இடம் பெற்றுள்ளதா என்று துழாவினேன்; நம் தமிழ் மொழியும் பட்டியலில் இருந்தது. அங்குள்ள தமிழ் நூல்களும் சஞ்சிகைகளும் நம்முடைய அன்பளிப்பல்ல. விலை கொடுத்து வாங்கியவை என்று அறிந்து மகிழ்ந்தேன்.

லெனின் நூலகம், வெறும் நூலகமாக மட்டும் பணியாற்ற வில்லை. பத்திரிகைப் படிப்பகமாகவும் பணியாற்றுகிறது என்று தெரிந்து கொண்டோம்.

அங்குப் பல மொழிச் செய்தித்தாள்களும், வார இதழ்களும், மாத மலர்களும் இருந்தன. பொது நூலகத்தில் பத்திரிகைப் படிப்பகமும் இருக்க வேண்டுமா என்ற என் கேள்விக்கு, 'பொது நூலகத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவை அல்ல, செய்தித்தாள்களும் சஞ்சிகைகளும்' என்று பதில் கிடைத்தது இத்தகைய பொது நூலக வசதி, மாஸ்கோவில் மட்டுமா ? பிற பகுதிகளில் உண்டா ? பொதுநூலக வசதி, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உண்டு. நான்கு இலட்சம் பொது நூலகங்கள் அன்று இருந்தன.

லெனின் நூலகத்தில் தமிழ் சஞ்சிசைகள் இருக்கும் பகுதியைக் காண விழைந்தேன். அங்கு அழைத்துச் சென்றார்: மேசைகளின் மேல், சில தமிழ்ச் சஞ்சிகைகள் இருந்தன. அவை ஏற்கனவே, அறிமுகமானவை. அவை, பொது உடைமைக் கொள்கைச் சார்புடையனவல்ல. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நம் நாட்டு முதலாளித்துவ சஞ்சிகைகளே அவை.