உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கும் இங்கும்/விஞ்ஞான விவசாயம்

விக்கிமூலம் இலிருந்து


1. விஞ்ஞான விவசாயம்
நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் "புதிய ருஷியா" என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது.



"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்
றுலகறியக் கூறி விட்டார் ;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போ
தடிமையில்லை அறிக என்றார்;"

என்னும் அடிகள் எப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. பின்னர், லெனின் எழுதிய நூல்களைக் கற்றபோது, என்றைக்காவது ஒரு நாள், அடிமைத்தளைகளை அறித்தெறிந்து, புரட்சி நடைபோடும், சோவியத் ஒன்றியத்தைக் காண வேண்டுமென்னும் அவா பிறந்தது. 1961 ஆம் ஆண்டின் இந்திய-சோவியத் கலாசார பரிமாற்றத்திட்டம், என் அவா நிறைவேற வழி வகுத்தது.

1961 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் சோவியத் ஒன்றியம் செல்லும் பேறு பெற்றேன். சோவியத் ஒன்றியத்தில் நான் பார்த்த முதல் நகரம் தாஷ்கண்ட். உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைநகராகிய இந்நகரையும் இதைச் சுற்றி யுள்ள சில இடங்களையும் எனக்கும் என்னுடன் வந்த கல்வியாளர் இருவர்க்கும் காட்டினர்.

அரசினருக்குச் சொந்தமான கூட்டுப்பண்ணை ஒன்றை நாங்கள் பார்த்தோம். அது நகருக்கு வெளியே சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்பண்ணை பல ஆயிரம் ஏக்கர் பரப்பை உடையது. ஒரு பக்கத்தில் கண்ணுக்கெட்டும் தூரம் பருத்தி நிலம்; மற்றொரு பக்கம் தானியம் விளைந்த பூமி, வேறொரு பக்கம் பார்த்தால், காய்கறித் தோட்டம் நீண்டு அகன்று கிடந்தது. பழத்தோட்டமும் பரந்து கிடந்தது ஒருபுறம்.

தொலைவிலே மலையொன்று தென்பட்டது. அதன் மேலிருந்து ஓடிக்கொண்டிருந்த காட்டாறுகளை அணைகட்டி, தேக்கமாக்கி. (வாய்க்கால்கள் வெட்டி, இப்பண்ணையைப் போல்) நூற்றுக்கணக்கான பண்ணைகளுக்குப்-பெரும் பண்ணைகளுக்குப் பாசன வசதி செய்யப்பட்டிருப்பதாக எங்கள் வழிகாட்டி விளக்கினார். இரஷியப் புரட்சிக்கு முன்பு, இப்பண்ணைகளிலே பல, வானம் பார்த்த பூமியாக இருந்தனவாம். விளைச்சல் ’பட்டா பாக்கிய’ மாக இருந்தது மாறி இன்று நிச்சயமானதாகிவிட்டது; நிறைந்ததுமாகிவிட்டது.

ஆண்டுக்கு ஒரு முறை, ஊர்கள் பலவற்றை மூழ்கடித்து விட்டு, புரண்டோடும் இந்தியப் பேராறுகளையும் பல இடங்களில் அணையிட்டுத் தேக்கினால், வறண்ட பகுதிகளையும் வளமான பகுதிகளாக்க முடியாதா ? மின்சார உற்பத்தியை பல மடங்கு பெருக்கிச், சிற்றுார் தோறும் இப்புத்தொளியையும் புத்தாற்றலையும் கொடுத்து, மக்களைச் சிறு தொழில்களில் (குடிசைத்தொழில் என்ற வழக்கை விட்டுவிடுவது நல்லது) ஈடுபடுத்தி விட்டால், திட்டங்களின் பலன் பரவலாகி விடாதா ? இப்படி எண்ணி ஏங்கின எங்கள் உள்ளங்கள்.

பங்குச் சண்டையால் குடும்பப் பங்காளிகள் பாழாவதை போல், இராச்சியங்களுக்கிடையில் நிலவும் தண்ணிர் பங்குத் தகராறினால், நாட்டின் நீர்வளத்தில் பெரும் பகுதி வீணாக ஒடி, கடலில் கலப்பதா ? இன்னும் எத்தனை காலத்திற்கு "வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும்" போக்கு என்று பதறினோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் கோழி கூவி பொழுது விடியுமா ?’ என்பது பழ மொழி. அரசினர், ஊழியர் ஏங்கிப், பதறிப் பயன் என்ன ? அரசியல் பெரியவர்கள், பெரிய விவகாரங்களைத் தீர்த்து வைக்க வேண்டும்.

சோவியத் ஒன்றியம் அமைந்த பிறகு, அங்குப் பெரும் அளவில் அணைகட்டுதலும், தேக்கம் அமைத்தலும், நீர் மின்சார உற்பததி செய்தலும் நடந்திருப்பதாகப் பின்னர் படித்தறிந்தோம், கூட்டுப் பண்ணைகளில் இயந்திரக் கலப்பைகளைக்கொண்டு உழுகிறார்கள். இயந்திர உதவியால் தூற்றித் தானியங்களைப் பிரித்து எடுக்கிறார்கள். இப்படிப்பட்ட நவீன விஞ்ஞான விவசாயப் பன்னையைக் கண்ட நாங்கள் வியந்தோம். நீங்கள் கண்டாலும் வியப்படைவீர்கள்.

சில நாள்களுக்குப் பின், தாஷ்கண்டிலிருந்து மாஸ்கோ போய்ச் சேர்ந்தோம். தாஷ்கண்டில் நாங்கள் கவனிக்காத ஒன்றை மாஸ்கோவில் கவனிக்தோம். மாஸ்கோவில் கல்விக் கூடம் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக பரந்த விளையாட்டு மைதானம் கிடையாது. பெரு நகரமாகையால் இட நெருக்கடி அதிகம். ஆகவே அநேகமாக, கல்விக்கூடத்தோடு இணைந்த விளையாடுமிடம் சிறிதாக இருக்கும். இந்நிலைக்கு என்ன மாற்று ? பல கல்விக்கூடங்களுக்கும் பொதுவாக, இங்கும் அங்கும், பரந்த விளையாட்டு மைதானங்களை வைத்திருக்கிறார்கள். இம்முறையை விளக்கியபோது, இடநெருக்கடியின் வலிமையைத் தெளிவாக உணர்ந்தோம்.

இத்தகைய இட நெருக்கடியிலும் தொடக்க நிலைப் பள்ளியில் கூட, ஒரு பக்கம் மலர்ப் பூங்காவும், வேறொரு பக்கம் காய்கறித் தோட்டமும் காட்சியளித்தன. பள்ளிக் கூடம் கவர்ச்சிக் கூடமாகவும் விளங்க வேண்டுமென்பது சோவியத் மக்களின் கொள்கை. எனவே, அழகிய மலர்கள் திறைந்த தோட்டம் பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி.

இடநெருக்கடியான நகரங்களில் இருக்கும் கல்விக்கூடங்களில் காய்கறித் தோட்டத்திற்கு இடம் ஒதுக்கியிருப்பது சரியா ? வேறு வகையாக அவ்விடங்களைப் பயன்படுத்துவது நல்லதல்லவா? காய்கறிகளைக் கூட்டுப் பண்ணைகளில் எளிதாகவும் ஏராளமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாமே. நகரப் பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டா பசியாறப் போகிறது ? இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. இரண்டொரு நாள்களுக்குப்பின் பல பள்ளிகளிலும் இந்நிலையைக் கண்ட பின், மெல்ல எங்கள் ஐயங்களை வெளியிட்டோம். அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற விளக்கத்தின் சாரம் வருமாறு :-

படிப்பாளி பாட்டாளியாகவும் வளரவேண்டும் ; தொடக்கப்பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்கும், உயர்நிலைப்பள்ளி இளைஞர்களுக்கும் காளையர்களுக்கும் ஆக்கப் பணியும் கொடுக்கவேண்டும். அவர்களுக்குப் படிக்க நூல்களையும், கேட்கப் பாடங்களையும், போடக் கணக்குகளையும் மட்டும்; கொடுப்பது முழுமை பெற்ற கல்வியாகாது. நல்ல முழுக் கல்வியானது. வளரும் பருவத்தினர், ஏற்ற கைத்தொழில்களில், செயல் திட்டங்களில், முறையாக ஈடுபடவும் வாய்ப்பளிக்கி வேண்டும்.

தோட்டப் பயிர், பிற கை வேலைகளைவிட அதி திருப்தியைக் கொடுக்கக்கூடியது ; சிறுபிள்ளைகள்கூட எளிதாக ஈடுபடக்கூடியது; எளிதாக வெற்றி காணக்கூடியது. ஆகவே, தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்குக்கூட இது ஏற்றது. எனவே, பரவலாக ஊக்கக்கூடியது. மேல் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு, புதுப் புது வேலைகளி அக்கறையேற்படும் . அந்நிலைகளில், மாணவர்களுக்குப் பல்வேறு வேலைகளைக் கற்க வாய்ப்பளிக்கலாம். எல்லா நிலைகளிலும் முதல் செயல் திட்டமாக, கட்டாயமாகத் தோட்டப் பயிர் இருப்பது ஏற்றது.

காய்கறித் தோட்டம் போடுவதில் வகுப்புக்கு வகுப்பு போட்டியும், சில இடங்களில் பிரிவிற்குப் பிரிவு போட்டியும் வைத்து, கண்டுமுதலை அதிகப்படுத்த ஊக்குவிக்கின்றன. சோவியத் நாட்டுப் பள்ளிகள் பதினாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெருங்கூட்டுப் பண்னைகளில் உணவுப் பொருள்களைப் பயிரிடுவே காடு நின்று விடாமல், பள்ளிக்கூடத் தோட்டங்களிலும் காய்கறிகளைப் பயிரிடும் சோவியத்மக்களின் தொலை நோக்கைப் பாராட்டாமலிருக்க முடியுமா ? இம்முறையால் உழைப்பின் உயர்வை எல்லோரும் உணர்வதோடு, செயலின் பயனைக் கண்ணாரக் கண்டு நிறைவு கொள்வதோடு. இலட்சாதி இலட்சம் கல்விக்கூடங்களில் கல்வியோடுகூட, கோடிகோடி கூடை காய்கறிகனைப் பெற்று மகிழும் வாய்ப்பும் கிடைக்கிறது.

சில நாள்கள் சென்றன. தாங்கள் கீவ் என்னும் நகரைச் சேர்ந்தோம். அது உக்ரைன் குடியரசின் தலைநகரம். இயந்திரத் தொழிற் கூடங்களுக்குப் பெயர் போனது கீவ். அந்நகரிலும், இடம் பொன்னினும் மணியினும் விலை யுயர்ந்தது. அத்தகைய நகரின் நகரின் நடுவில் - ஒரத்தில் அல்ல-ஐம்பது ஏக்கர் நிலத்தை ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.

அங்கு ஆராய்ச்சி செய்பவர்கள் யார்? விஞ்ஞான விற்பன்னர்களா? அல்லர். உழவுத்துறை மேதைகளா ? அல்லர். பின் யார், அந்த ஆராய்ச்சியாளர்கள் ?

உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அங்கு ஆராய்ச்சி நடத்தினர். இன்றும் நடத்துவர். அந்த 'இரண்டுங்கெட் டான்கள்’, சிறுபிள்ளைகளிட்ட வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததா?

தொட்டால் தங்கமாகக் கொட்டக்கூடிய தொழிற்கூடங் களுக்கு ஒதுக்க வேண்டிய விலையுயர்ந்த நிலத்தை, பள்ளிக் கூட இளைஞர்களுக்கே ஒதுக்கியிருப்பது அறிவுடைமையா என்ற ஐயத்தோடு அப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணை முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். மெதுவாகவே, மிகக் கவனமாகவே பார்த்து வந்தோம்.

ஒருபுறம் தானியப் பயிர் தரமாக இருந்தது. மற்றொரு புறம் காய்கறிகள் நன்றாகப் பயிராகியிருந்தன. இன்னொரு புறம் பழத்தோட்டத்தைப் பார்த்தோம். ஆப்பிளும், 'பீச்' பழங்களும் கணக்கின்றிக் காய்த்துக் குலுங்கின.

ஆராய்ச்சிப் பண்ணையின் உயர்ந்த விளைச்சலை வியத்துகொண்டே, பண்ணை இயக்குநரின் அறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கண்டது என்ன ?

இரண்டொரு தட்டுகளில் பலகாரங்கள் இருந்தன. காப்பி ஒரு பக்கம் மணம் வீசிக் கொண்டிருந்தது. பல தட்டுகளில் ஆப்பிள்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டி ருந்தன. காப்பி சாப்பிட, நாங்களும் இயக்குநரும் உட்கார்ந்தோம்.

"நாங்கள், எங்கள் இடைவிடாத ஆராய்ச்சியால் பயிரிட்டுள்ள பத்துப் புதுவகை ஆப்பிள்கள் உங்கள் முன் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு வகை ஆப்பிள் இவ்வகைகளில் எவ்வகையையும் நீங்கள் வெளியில் சந்தையில் வாங்கமுடியாது. தயவு செய்து பத்துவகை ஆப்பிள் களையும் சாப்பிட்டுப் பாருங்கள். எப்படி இருக்கிறதென்று கூறுங்கள்’’ என்று வேண்டினார்கள், பண்ணையைக் காட்டி விட்டு அழைத்து வந்த மாணவிகள். பத்திலே சிறந்த இரண்டொரு வகை ஆப்பிள்களை மட்டும் நறுக்கிப் பரிமாறும்படி வேண்டினோம். அவர்கள் ஒப்பவில்லை. பத்தும் புதுவகை மட்டுமல்ல, சிறந்த வகையுமாகும் என்று அழுத்திக் கூறினார்கள். பத்துவகையிலும் ஒவ்வொன்று எடுத்து, துண்டு போட்டு, நால்வர்க்கும் மிகுந்த உற்சாகத்துடன் பரிமாறினார்கள்.

அத்தனையையும் உண்டோம். அத்தனையும் இனிப்பாக இருந்தன, மெதுவாக இருந்தன. அது வரையில் உணராத சுவையோடு இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் கூற்று முற்றிலும் உண்மை.