அசோகனுடைய சாஸனங்கள்/அசோகன் அரசாட்சி

விக்கிமூலம் இலிருந்து

IV. அசோகன் அரசாட்சி

நாம் மௌரிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிமுறையைப் 
அசோகன்
துரைத்தனம்
முன்னிருந்ததன்
தொடர்ச்சியே

பற்றி விரிவாக எழுதக்கூடும். சந்திர குப்தனுடைய காலத்தில் அவனுடைய ராஜதானியில் பல வருஷங்களாக வசித்துவந்த யவன தூதன் மெகாஸ்தனிஸ் தன் சுதேசம் சென்றதும் தான் கண்டனவும் கேட்டனவுமான செய்திகளைத்திரட்டி, இந்திய விவரணம், என்ற புஸ்தகத்தை அமைத்தான். இதன் சில பாகங்களே இப்போது, நமக்கு அகப்படுகின்றன ; ஆயினும், மோரிய அரசாட்சியின் தன்மை, இந்திய ஜனங்களின் ஒழுக்க வழக்கங்கள் நாட்டின் நீர் நிலவளம் முதலிய பல விஷயங்களை நாம் அவற்றிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். கௌடல்யன், சாணக்கியன், விஷ்ணுகுப்தன் என்று பலவாறு பெயர் கூறப்படும் ராஜதந்திர நிபுணன் சந்திர குப்தனுடைய மந்திரியாயிருந்தானென்றும், அவனது சகாயத்தாலேயே சந்திரகுப்தன் சிங்காதனத்தைக் கைப்பற்றினானென்றும், கௌடல்யனால் இயற்றப்பட்டதென்று மதிக்கப்படும் அர்த்தசாஸ்திரம் என்ற ஒரு நூல் உண்டென்றும் நாம் முன்னே கூறினோம். பிற்காலங்களில் இந்நூல் தர்ம விரோதமென்று கருதப்பட்டதால் வித்வான்கள் இதன் ஆராய்ச்சியைப் பல நூற்றாண்டுகளாக அசட்டைசெய்தனர். ஆயினும் சிலவருஷங்களுக்குமுன் தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து இப்புஸ்தகத்தின் பிரதி கிடைத்திருக்கின்றது. இப்பிரதி கிடைத்தது முதல் இந்த அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியன், காலம், இதன் முதல் நூல்கள், இதிலுள்ள விஷயங்கள் முதலியன பலவித ஆராய்ச்சிகளுக்குக் காரணமாயிருக்கின்றன. கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திலிருந்து தெரியவரும் விவரங்களை ஏறக்குறைய சந்திரகுப்தனுடைய ஏகாதிபத்தியத்தின் தன்மையாகக் கொள்ளலாமென்று அறிஞர் ஒப்புக்கொள்ளுகின்றனர்.

மெகாஸ்தனிஸ் எழுதியுள்ள புஸ்தகத்தின் பாகங்களையும் கௌடல்யனுடைய் அர்த்தசாஸ்திரத்தையும் இசைத்து நோக்குமிடத்து மோரிய அரசாட்சி, தொடக்கத்தில் எவ்விதம் நடைபெற்றது என்பது விளங்குகின்றது. பூர்வ இந்திய சரித்திரத்தில் வேறு எக்காலத்திற்கும் இத்தகைய நுட்பமான விவரணம் கிடைப்பதில்லை. அது மட்டுமல்ல, இதற்கு ஒப்பான விவரணத்தைக் காண்பதற்கு நாம் கி. பி. பதினாறாம் நூற்றாண்டுவரையும் பிரயாணஞ் செய்யவேண்டும். அக்பர் காலத்ததான ‘ஆயின்-இ-அக்பரீ’, என்ற துரைத்தனவிளக்கத்தில் மட்டுமே நாம் இத்தகைய விவரங்களைக் காணலாம்.

ஆயினும் சந்திரகுப்தனுடைய துரைத்தனத்தை விவரிப்பது இவ்வியாசத்திற்குப் புறம்பானது. அசோகனுடைய புதிதான ராஜீய நோக்கங்களை விளக்குவதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவே இவற்றைப்பற்றி இங்குக் கூறுவது சாத்தியம். அசோகனுடைய காலத்தில் ஏகாதிபத்தியத்தின் பெருமை ஒருவிதத்திலும் குன்றவில்லை. ராணுவ பலத்திலும், நிர்வாக அதிகாரிகளின் திறமையிலும், தேசத்தில் வசித்துவந்த அந்நியநாட்டாரை ஆதரித்துப் போற்றும் நாகரிகத்திலும், வியாபார அபிவிர்த்தியிலும், கைத்தொழிற்பெருக்கத்திலும் அசோகனது ஆளுகை முன்னிருந்ததை விடக் கொஞ்சமுங் குறைவடையவில்லை. பாடலிபுரத்தைச் சுற்றிய மத்தியப்பிரதேசத்தைத் தவிர்த்து மற்றப் பாகங்கள் நான்கு மாகாணங்களாய்ப் பிரிக்கப்பட்டு இளவரசர் பலரால் காப்பாற்றப்பட்டுவந்தன. அசோகனுடைய காலத்தில் இம்மாகாணங்களாவன -1. தக்ஷசிலா அல்லது தக்கசிலையைத் தலைநகராகவுடைய வடமேற்கு மாகாணம். 2. உஜ்ஜெயினியைத் தலைநகரமாகவுடைய மாளவதேசம் 3. தொஸாலியைத் தலைநகரமாகக்கொண்ட கலிங்கம். 4. சுவர்ணகிரியைத் தலைநகராகக்கொண்ட தக்கணமாகாணம். இம்மாகாணங்களில் காரிய நிர்வாகத்திற்குப் பல மந்திரிகளும் படிப்படியாகப் பலவித அதிகாரிகளும் இருந்தனர். மெகாஸ்தனிஸ் சொல்லியிருப்பதுபோல, முக்கியமான நகரங்களிலும் ராணுவத்திலும் ஐந்துமெம்பர்கள் அடங்கிய கமிட்டியார் வேலை செய்து வந்தனர். ஏகாதிபத்தியத்தின் துரைத்தனமானது பல சக்கரங்களையுடைய பெரிய இயந்திரத்தை யொத்திருந்தது.

அசோகனுடைய துரைத்தனம் மேற்கூறியபடி பல 
அரசனது புது
நோக்கங்கள்

விதத்தில், முன்னே ராஜ்யத்தில் ஏற்பட்டிருந்த துரைத்தனத்தின் தொடர்ச்சியாயிருந்தபோதிலும் அரசியலில் அவனுக்குப் புதிய நோக்கங்கள் இருந்தன. அவன் துரைத்தனம் என்ற இயந்திரத்தில் அனாவசியமாய்க்கையிட்டுக் கஷ்டங்களில் சிக்கிக்கொள்ளவில்லை யாயினும் துரைத்தனம் என்பது உயிர் உணர்வு, கண்ணோட்டம் முதலிய மானிடகுணங்களின் வலிக்குட்படாத வெறும் இயந்திரமாயிருப்பது நன்றல்ல வென்று கருதினான். அவனுடைய சுயவாக்கியங்களில் இருந்தே அரசன் நோக்கங்களை நாம் தீர்மானிக்கலாம். ‘தர்மத்தினாலேதான் பரிபாலனம் உண்டு ; தர்மத்தினாலே தான் ஒழுங்குண்டு; தர்மத்தினாலே தான் சௌக்கியமடையலாம்’ (முதல் ஸ்தம்பசாஸனம்). தனது அரசியல் தர்மம் என்ற அடிவாரத்தின்மேல் கட்டப்படவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டதாக இவ்வாசகம் நமக்கு அறிவிக்கின்றது. ‘எல்லா மனிதரும் எனது மக்கள்; எனது குழந்தைகுட்டிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித சந்தோஷ சௌபாக்கியங்களும் உண்டாகவேண்டுமென்று நான் ஆசைப்படுவது போலவே எல்லா மனிதருக்கும் அனுக்கிரகங்களைக் விரும்புகிறேன்” “ எவருக்கும் என்னைப்பற்றிக் கொஞ்சமும் அச்சம்வேண்டாம் ; நிச்சயமாய் என்னால் அவர்களுக்கு வியசனம் உண்டாகாது. சந்தோஷம் மட்டுமே உண்டாகும். அரசன் எதையும் கூடுமானவரையில் க்ஷமையுடன் பொறுத்துக்கொள்ளும் சுபாவமுடையவன்” (கலிங்க சாஸனம்). இவ்வாக்கியங்களும் அசோகனுடைய ஆட்சியின் தன்மையை விளக்க எற்றதாயிருக்கின்றன. தினமும் ஆகாயத்தை நோக்கி வசித்துவரும் நம் நாட்டு ஜனங்களைப்போல மன்னவன் கோலை முற்றிலும் நம்பி அக்காலத்துக்குடிகளும் வாழ்ந்து வந்தனர். அசோகன் மகிமை என்னவென்றால், அவன் குடிகளின் க்ஷேமத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பை நன்கு உணர்ந்தான் என்பதே.

நினைத்த காரியங்களில் ஜயம் ஒன்றே அரசர் கவனிக்க வேண்டுவது, பொய்மையும் சூதும் பேராசையும் அரசியலுக்கு இயல்பு என்பது கௌடல்யனுடைய கொள்கைபோலும். அவன் அரசர்களை தேவர்களுக்குச் சமானமாக உயர்த்தி அவர்களுக்குச் சாதாரண மனிதர்க்குரிய தர்மநியாயங்கள் அமையா என்று உரைத்தான். அசோக சாஸனங்களிலுள்ள பல வாக்கியங்கள் இக்கொள்கையை மறுத்துரைப்பதற்கு எழுதப்பட்டவை போல் ஒலிக்கின்றன. ஜனங்களின் நடத்தைக்கு மாதிரியாக வாழவேண்டுவது அரசன் கடமை என்று பல இடங்களில் கூறப்படுகின்றன (உதாரணம் ; இரண்டாம் ஸ்தம்ப சாஸனம், ஏழாம் ஸ்தம்ப சாஸனம்.) “முன்னே மனிதர் தேவர்களை அனுசரித்து ஒழுகவில்லை, இப்பொழுது ஜம்பூத் தீபத்தில் மனிதர் தேவர்களை அனுசரித்து ஒழுகுகின்றனர். இது என்னுடைய உழைப்பின் பயன்...... சிறியோரும் பெரியோரும் (நல்வழியில்) உழைத்து வரவேண்டும்" என்று அசோகன் தனது பிரஜைகளுக்கு வற்புறுத்துகிறான் (முதல் உபசாஸனம்).

பதினான்கு முக்கிய சாஸனங்களில் பன்னிரண்டாம் சாஸனம் 
சமரஸபாவம்

பாவத்தின் லக்ஷணத்தையும் அதன் அவசியத்தையும் அதற்கு விரோதமான மனப்பாங்கையும் நன்றாக விளக்குகிறது. எல்லாச் சமயங்களிலும் உயர்ந்த கொள்கைகளும் உயர்நன்னெறியில் ஒழுகும் மானிடர்களுமுண்டென்று மற்றச் சாஸனங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, பன்னிரண்டாம் சாஸனம் பொன்னெழுத்திற் பொறிக்கும் தகைமைத்து. அசோகன் எல்லா மதங்களையும் வெகுமதித்து, பல மதத்தினரையும் ஒன்றுபோல் காப்பாற்றிவந்தான். ஜனங்களிடையில் பரஸ்பர சினேகமும் ஒற்றுமையும் வளர்ந்துவந்தன. தன் அயலான் எம்மதத்தானாயினும்சரி அவனுடன் கூடிவாழலாம் என்னும் உண்மையும், மதக்கொள்கைகள் பற்றி ஒருவனுடைய நன்னடக்கை போய்விடாதென்ற உண்மையும், பலகாலம்வரையும் ஐரோப்பாவிலுள்ள ஜனங்களால் உணரப்படவில்லை. வாள் முனையைக்காட்டி மனிதரைப் பயமுறுத்தி மதக்கொள்கைகள் பிரசாரம் செய்யப்பட்டிருக்கின்றன. கொள்கை வேறுபாடுகளுக்காகப் பலர் உயிருடன் நெருப்பிலிடப்பட்டு பொசுக்கப்பட்டனர். நாட்டில் ஒரேவிதமான மதக்கொள்கைகளே நடமாடவேண்டுமென்ற ஆசை பல அரசரையும் மத குருமார்களையும் அநியாயச் செய்கைகளுக்கும் அக்கிரமங்களுக்கும் தூண்டுகோலாயிருந்திருக்கிறது. அதனால், இரண்டாரயிரம் வருஷங்களுக்கு முன்னிருந்த ஓர் இந்திய அரசன், ஜனங்கள் மதக்கொள்கைகளுக்காகச் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாதென்றும், நானாவிதமதத்தினர் பாஸ்பர வெகு மதிப்புடனும் அன்புடனும் அடுத்தடுத்து வாழ்ந்து வரலாமென்றும், எல்லாமதங்களிலும் சிரேஷ்டமான தத்துவங்கள் உண்டென்றும் கூறியிருப்பது ஆச்சரியமல்லவா? மதங்கள் விஷயத்தில் அசோகன் காட்டிய சமதிருஷ்டி ராஜதந்திரத்தின் அம்சமென்று நாம் நினைக்க இடமில்லை. இது அசோகனுடைய உயர்ந்த மனோபாவத்தையே குறிப்பிடுகின்றது. அக்காலத்து இந்திய ஜனங்களும் ஸமயச்சண்டைகளைக்கொள்ளாது சமரஸபாவத்தை ஆதரித்தனர் எனலாம். “ஓர் ஜாதியாரின் நாகரிகத்தை மதிப்பதற்கு அவர் விஞ்ஞானசாஸ்திரங்களில் அடைந்திருக்கும் தேர்ச்சியும் நீர் நெருப்பு காற்று முதலிய இயற்கைச் சக்திகளை அடக்கியாளும் திறமையும் அல்ல அளவுகருவிகள், சமஸரபாவத்தின் முதிர்ச்சியே சரியான அளவுகருவி.” என்று ஓர் சரித்திர ஆசிரியர் கூறுகிறார். இவ்வபிப்பிராயம் சரியெனின், இருநூறு வருஷங்களுக்கு முன்கூட ஐரோப்பிய தேசங்களில் ஏற்படாத உயர்ந்த நாகரிகத்தை கி. மு மூன்றாம் நூற்றாண்டிலேயே நம் தேசத்து ஜனங்கள் அடைந்திருந்தனர்.

ராஜ்யத்திற் சுபிக்ஷத்தைப்பெருக்கவும் ஜனங்களின் 
க்ஷேமாபி
விர்த்திக்கான
ஏற்பாடுகள்

க்ஷேமத்தின் பொருட்டும் பல ஏற்பாடுகள் அசோகனாற் செய்யப்பட்டன. அரசன் கூறியுள்ள வாக்கியங்களாலேயே இவற்றை நாம் உரைக்கலாம், “தேவர் பிரியனான பியதஸி ராஜனால் ஆளப்பட்ட எல்லாப் பாகங்களிலும் ........ அதுமட்டுமன்று ...... அயல் அரசர் நாட்டிலும் எல்லா இடங்களிலும் அரசன் சிகித்ஸைக்காக இருவித ஏற்பாடுகள் செய்திருக்கிறான். அஃதாவது, மனிதருக்கு வைத்தியசாலை, மிருகங்களுக்கு வைத்தியசாலை என்பனவே. மேலும், மனிதருக்கு உபயோகமானதும் மிருகங்களுக்கு உபயோகமானதுமான மருந்து மூலிகைகள் எவையோ, அவை கிடைக்கும் இடங்களிலிருந்து கிடைக்கா இடங்களுக்கு கொண்டுவரப்பட்டுப் பயிராக்கப்படுகின்றன, கனி, காய் கிழங்குகளும் வரவழைக்கப்பட்டுப் பயிர் செய்யப் படுகின்றன........... பாதைகளில் கிணறுகள் வெட்டவும் நிழல் தரும் மரங்கள் வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன” (இரண்டாம் சாஸனம்). “நான் மாந்தோப்புக்களை வளர்க்கப்பண்ணியிருக்கிறேன். அரைக்குரோசத்துக்கு ஒரு தடவை கேணிகள் வெட்டிச் சாவடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்களுக்கும் மனிதருக்கும் சுகத்தைக் கொடுக்கும் பொருட்டு நான் பல தண்ணீர்ப் பந்தல்களை ஏற்படுத்தியிருக்கிறேன்” (ஏழாம் ஸ்தம்பசாஸனம்). இவ்வித ஏற்பாடுகள் அசோகனுக்கு முன்னிருந்த அரசர்களாலும் செய்யப்பட்டிருக்கலாமாயினும் இவ்விவரம் அசோகன் புகழைக் குறைக்காது .

அசோகனால் ஜனங்களுக்கு நியாயம் கிடைக்குமென்று உறுதிமொழி கூறப்பட்டது.

“அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” - (56-5)

என்ற திருவள்ளுவர் வசனத்தின் உண்மையை அசோகன் உணர்ந்தான் போலும். அநியாயமான, சிக்ஷை, சிறைசெய்தல் முதலிய குற்றங்கள் அரசாட்சி செய்வோருக்கு இயல்பே. இவ்வித குற்றங்களை நிவிர்த்திசெய்யும். கடமையை அசோகன் தான் புதிதாக நியமித்த தர்ம மகாமாத்திரர் என்ற அதிசாரிகளிடம் ஒப்பித்தான் : ராஜ்யத்தில் வேலைபார்த்து வந்த பலவித அதிகாரிகளுடைய கடமையில் கவனமின்மை அல்லது கள்ளம் நேருமாயின் அது சக்கரவர்த்திக்குச் செய்யப்படும் பெருந்துரோகமென்று அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். அவர்கள் தம் நிலைமை தவறி நடக்கிறார்களாவென்று தெரிந்து கொள்ள ரகசியமாக ஒற்றர்கள் பலர் அனுப்பப்பட்டனர். சக்கரவர்த்தி ஜனங்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்களும் பிரதிக்ஞைகளும் அடிக்கடி உரக்கப் படிக்கப்பட்டன ; கற்களில் எழுதி விளம்பரம் செய்யப்பட்டன (கலிங்கசாஸனம்). “நகர அதிகாரிகள் அகாரணமாய் மனிதரைச் சிறைசெய்தல் இம்சித்தல் முதலிய தீய வழக்கங்களைத் தவிர்ப்பதற்காக இச்சாஸனம் வரையப்பட்டது”. இப்படிக்கு ஒரு சாஸனத்தின் முடிவில் வரைந்திருப்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

தற்காலத்திலும் முற்காலங்களிலும் மண்ணை உழுது


விவசாயம்

பயிரிட்டு ஜீவனஞ் செய்வோரே தேசத்தின் க்ஷேமத்திற்கு அஸ்திவாரம் போன்றவர். அசோகன் வேளாண்மக்களின் வேண்டுதல்களை மறக்கவில்லை யென்பதற்கு அவனுடைய மொழியிலிருந்தே நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லையாயினும் வேறொருவழியாக வெகு இன்பகரமான ஆதாரம் அகப்பட்டிருக்கின்றது. கத்தியவாட் அல்லது குஜராத் எனப்படும் தீபகற்பத்தின் நடுவில் கிர்நார் என்ற ஒரு மலை உண்டு, அங்குள்ள பாறையில் அசோகனுடைய பதினான்கு சிலாசாஸனங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. முன் அப்பாகத்தை ஆண்டுவந்த வேறு பல அரசரின் லிகிதங்களும் அங்கிருக்கின்றன. கி.பி. 150-ம் ௵ல் அங்கே அரசாட்சி செய்த ருத்ரதாமன் என்ற க்ஷத்ரப அரசன் எழுதியுள்ள லிகிதத்தில் அசோகனது பெயரும் அவன் விவசாயத்திற்காகச்செய்த வேலையொன்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சுதர்சன ஏரி என்ற பெரிய ஏரி ஒன்று பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. ருத்ரதாமன் காலத்தில் அவ்வேரி பல விதமான சீர்கேடுற்று விவசாயிகளுக்கு உதவாதிருந்தது. அவன் சுதர்சன ஏரியைச் சீர்திருத்தி அதற்குப் புதிய கால்வாய்களும் சீப்புக்களும் அமைத்த விவரங்களே அவனுடைய கல்வெட்டின் விஷயம். ஆயினும் அந்த லிகிதத்தில் ருத்ரதாமன் சுதர்சன ஏரியின் பூர்வ சரித்திரத்தையும் குறிப்பிடுகிறான், அது சந்திரகுப்தன் காலத்தில் முதலில் வெட்டப்பட்டதென்றும், ஆனால் - அப்போது ஜலத்தைப் பாய்ச்ச அவசியமான கால்வாய்கள் யாவும் பூர்த்தியாக வெட்டப்படவில்லையென்றும், அசோகன் கால்வாய்களை வெட்டிச் சில சீப்புகளையும் அமைத்தானென்றும் இங்குக் கூறப்படுகின்றன. அசோகன் இப்பிரதேசத்தில் துஷாஸ்பன் என்ற யவன அரசனைத் தனது பிரதிநிதியாக வைத்து இக்காரியங்களைச் செய்து முடித்தானாம்.[1]

அசோகனால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயங்களும் மடங்களும் 
கட்டிடங்கள்

கி. பி நான்காம் நூற்றாண்டில் பாஹியன் என்ற சீன யாத்திரிகன் இங்கு வந்த காலத்திலேயே எண்ணிறந்தனவென்று கருதப்பட்டன. பௌத்த மதத்தாருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிரயோஜனப் படுகின்ற பல கட்டிடங்களும் ஸ்தாபனங்களும் அசோகனாற் செய்யப் பட்டன, பாடலிபுரத்தில் ஏறக்குறைய ஆயிரம் பிக்ஷுக்களுக்கு அன்ன வஸ்திரங்கள் அளித்து அவரைக் காப்பாற்றி வந்த அசோகாராமம் என்ற பௌத்த மடம் ஏற்பட்டிருந்தது. அதன் அருகிலுள்ள நாலந்தா என்ற ஊர் பல சாஸ்திரங்களும் கலை ஞானங்களும் தழைத்த பெரிய வித்தியாபீடமாய் விளங்கிற்று, தக்ஷசிலையின் கல்விப் புகழும் குன்றாது பெருகியது. ஜனங்களுக்கு இடையில் எழுதி வாசிக்கக் கூடிய திறமை அபூர்வமாயிருக்கவில்லை யென்பதற்கு அசோக சாஸனங்களே சான்றாகும்.

அசோகசாஸனங்களிற் பலவகை அதிகாரிகளின் 
சாஸனங்களிற்
கூறப்படும்
அதிகாரிகள்

பெயர் கூறப்படுகின்றது. அதிகாரிகளின் பெயர் எவ்விதங்களில் வருகின்றது என்பதை ஓர் பட்டிகையில் எழுதி விளக்கலாம்.



சாஸனங்களிற் கூறப்படும்
ராஜ அதிகாரிகள்,
 இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள்,

1. தர்மமகாமாத்திரர்.  5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம்.
2. ரஜூகர்  3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா.
3. ப்ராதேசிகர்  3-ம் சாஸனம்.
4. மகாமாத்திரர்.  ஸார்நாத் சா. இராணிகாருவாகியின்
 லிகிதம். கலிங்க சாஸனங்கள்.
 6-ம் சாஸனம். முதல் உப சா.
 7-ம் ஸ்தம்பசாஸனம்.
5. அந்தமகாமாத்திரர்  முதல் ஸ்தம்பசாஸனம்
6. புலிஸர்  1, 4, 7-ம் ஸ்தம்பசாஸனங்கள்
7. விருசபூமிகர்  12-ம் சா.
8. ஸ்திரீ மகாமாத்திரர்.  12-ம் சா.
8. தூதர்.  13-ம் சாஸனம்.
8. யுக்தர்.  3-ம் சா.
8. ஆயுக்தர்.  இரண்டாம் கலிங்க சா.
8. வியோஹாலகர்.  முதல் கலிங்க சா..
8. வ்யூதர்.  முதல் உபசா, 7 ம் ஸ்தம்பசா
8. பதிவேதகர்  6-ம் சாஸனம்.

இவ்வதிகாரிகளுடைய ஸ்தானங்களையும் வேலைகளையும் பற்றி, சாஸனங்களிலிருந்து மட்டும் நாம் அறிந்து கொள்வன சிலவே. கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்தையும் அக்காலத்ததான வேறு நூல்களையும் ஆழ்ந்து ஆராய்வோமெனில் இவ்விஷயம் இன்னும் நன்கு விளங்கலாம்,

அசோகன் முடிசூடிய பதினான்காவது பட்டபிஷேக வருஷத்தில் தர்மமகாமாத்திரர் என்ற புது உத்தியோகம் சிருஷ்டிக்கப்பட்டது (ஐந்தாம் ஸ்தம்ப சாஸனம்). இவர்கள் வேலை தர்மத்தைப் பிரசாரம் செய்வதும் காப்பாற்றுவதும் ஜனங்களுக்கு உபகாரம் செய்வதும் தான தர்மங்களை நடத்தி வைப்பதுமே. இவ்வதிகாரிகளுக்குத் தனிப் பிரதேசம் கொடுக்கப்படவில்லையென்று தோன்றுகிறது. எப்போதும் பிரயாணஞ் செய்து, ஸர்வ வியாபகமாயிருந்து, எல்லோருக்கும் நன்மைகளைச் செய்து, அனாதைகளுக்கு அன்னவஸ்திரங்கள் அளித்துக் காப்பாற்றி காட்டுஜாதியாருக்கும் குறவரைப் போல அலைந்து திரிந்து வாழ்கின்ற ஜனங்களுக்கும் தர்மத்தைப் போதித்து வர வேண்டுவதே தர்மமகாமாத்திரரின் அலுவல் என்று கூறப்படுகிறது.

ரஜூகர் என்பவர் மாகாணங்களின் தலைவராயிருந்தனர். அர்த்தசாஸ்திரத்தில் இவர்களை ஸ்தானிகர் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்களின் ஆளுகையில் அடங்கிய பிரதேசத்திற்குச் சாஸனங்களில் “ஜனபதம்“ என்று பெயர் கூறப்படுகின்றது. இதன் ஜனத்தொகை அனேகலக்ஷம் என்று சொல்லப்படுகின்றது. ஜனபதத்தின் துரைத்தனத்தில் ரஜூகருக்கு முன்னிலும் அதிக சுதந்திரத்தை அசோகன் அளித்ததாக நான்காம் ஸ்தம்பசா ஸனம் கூறுகின்றது. ப்ராதேசிகர் என்பவர் ரஜூகரின் கீழுள்ள நிர்வாக அதிகாரிகளாம். மகாமாத்திரர் என்ற பதம் இவ்விருவகை அதிகாரிகளுக்கும் மற்றும் பலருக்கும் பொருந்தும் பொதுப் பெயர். புலிஸர் அல்லது புருஷர் எனப்படுபவர் அரசன் காரிய தரிசிகள் போலும். மற்ற அதிகாரிகளின் வேலையை மேல்நோக்கி அவரைச் சோதனை செய்வது இவர் வேலையென்று நாம் ஊகிக்கலாம். அந்தமகாமாத்திரர் என்ற அதிகாரிகள் காட்டுஜாதியாரையும் எல்லைப்பிரதேசங்களிலுள்ள அநாகரிக ஜனங்களையும் கவனித்து வந்தனர். அரசனுடைய பொறுமையைச் சோதிக்கக் கூடிய தொந்தரவுகள் இந்த ஜனங்களிடமிருந்து வந்து கொண்டிருந்தனவென்று பதின் மூன்றாம் சிலாசாஸனத்தில் குறிப்பிடப்படுகின்றது. பதிவேதகர் என்பவர் அரசனுடைய அரண்மனையில் விசாரணைக்காக வரும் வழக்குக்களைக் கவனிக்கவேண்டிய அதிகாரிகளாம். விஷயத்தை உடனுடன் அரசனுக்குத் தெரிவித்து நியாய விசாரணையை நடத்தி, வழக்குகளைத்தீர்ப்புச்செய்வது இவர்களுடைய அலுவல் எனலாம்.

விருசபூமிகர் என்றும் ஸ்திரீமகாமாத்திரர் என்றும் பெயர்பெற்ற அதிகாரிகள் பன்னிரண்டாம் சாஸனத்திற் கூறப்படுகின்றனர். ஆனால் பெயர் கூறப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்திலிருந்து அவர்களுடைய அலுவல் ஊகிக்கக் கூடவில்லை. வியோஹாலகர் என்பவர் நகர அதிகாரிகள் போலும், யுக்தர் ஆயுக்தர் என்பவர் கீழ்த்தர அதிகாரிகள். வ்யூதர் என்பவர் துறவிகளாகிய தர்மப் பிரசாரர்கள் போலும். சாஸனங்களில் வருகின்ற சொற்களுள் வ்யூதர் என்ற பதத்தைவிட அதிகமாகப் பண்டிதர்களுக்கு இடையில் பலவித வாதப்பிரதிவாதங்களுக்குக் காரணமாயிருக்கும் பதம் வேறு இல்லையென்று சொல்லலாம்.

அனுஸம்யானம் என்ற ராஜீய ஸ்தாபனத்தைப்பற்றி 
அனுஸம்யானம்

மூன்றாம் சாஸனத்திலும் கலிங்க சாஸனத்திலும் கூறப்படுகின்றது, இதன் கருத்தென்னவென்பதை வித்வான்கள் இன்னும் நிச்சயித்துக் கூறவில்லை. அதிகாரிகள் ஸ்தல மாறுதல், சுற்றுப்பிரயாணம் செய்துவருதல் என்ற பொருள் இங்குப் பொருத்தமுள்ளதாக நமக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு பிரதேசத்தினுடையவும் முக்கியமான காரியங்களைத் தீர்மானஞ்செய்ய அதிகாரிகள் ஜனங்களை அல்லது ஜனத்தலைவர்களை ஓரிடத்தில் வரவழைத்து அவருடன் ராஜீய விஷயங்களைப்பற்றிப் பேசுவதே அனுஸம்யானம் என்று சில வித்வான்கள் கூறுவது பொருந்துமென்று தோன்றுகிறது. மூன்றாம் சாஸனத்தின்படி அனுஸம்யானத்தின் நோக்கமாவது, “அதிகாரிகள் தங்கள் வேலையைச் சரிவர முடிப்பதும் தர்மத்தை எல்லோருக்கும் போதிப்பதுமே”. பாடலிபுரத்தைச் சுற்றி அனுஸம்யானமானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், உஜ்ஜயினி - தக்ஷசிலா மாகாணங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், தொஸாலி மாகாணத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடந்து வந்ததென்று சொல்லப்படுகிறது. இச்சொல்லுக்கு நாம் கொள்ளும் கருத்து சரியாயின், அசோகன் ஆளுகை முற்றிலும் ஏக சக்கராதிபத்தியமா யிருக்கவில்லையென்றும் ஜனங்களுடைய சம்மதத்துடன் பல காரியங்கள் நடந்தனவென்றும் ஊகிக்கலாம்.

துரைத்தனத்தில் மெகாஸ்தெனிஸ் கூறியிருப்பது போன்ற கமிட்டிகள் அமைந்திருந்தனவென்றும் சாஸனங்கள் அறிவிக்கின்றன. கணனா, பரிஷத், நிகாயா முதலிய நிர்வாக சபைகள் மூன்றாம் சாஸனத்திலும், பன்னிரண்டாம் சாஸனத்திலும், வேறிடங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் அமைப்பும் கடமைகளும் என்னவென்று விளங்கவில்லை.

அசோகனுடைய பெருமை அவனுடைய ராஜீய நோக்கங்களிற் பிரதிபலிக்கின்றது, அவ்வரசனுடைய புதிய ராஜீய நோக்கங்களும், அவனால் துரைத்தனத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களும் அவனுக்குப் பின் நிலை நின்றதாகத் தோன்றவில்லை. அசோகனுடைய சந்ததியார் அவனுடைய உற்சாகத்தையும் உயர்நோக்கங்களையும் உரிமையாகக் கொள்ளவில்லை. ஆயினும் அசோகனின் அரசாட்சி எக்காலமும் உலகசரித்திரத்தில் முக்கிய இலக்கியமாயிருக்கும் என்பது தெளிவு.

அசோகக் கல்வெட்டுகள் அகப்படும் இடங்களை 
அசோக
ஏகாதிபத்தியத்
தின் விரிவு

ஆதாரமாக வைத்துக்கொண்டு அசோகனுடைய ஏகாதிபத்தியத்தின் விரிவை நாம் ஏறக்குறையத் தீர்மானிக்கலாம். மேலும், சந்திரகுப்தனுடையகாலத்தில் ஏகாதிபத்தியம் அடைந்திருந்த விரிவிலிருந்து அசோகன் காலத்தில் ஏகாதிபத்தியத்தின் விரிவு குறைவுபடவில்லை. பர்மாவைத் தவிர்த்துள்ள இந்திய ராஜ்யத்தைவிட அசோகன்ராஜ்யம் அதிக விரிவாயிருந்தது. அதில் தென் கோடியிலுள்ள தமிழ்நாட்டு மூவேந்தரும் அங்குள்ள வேறு அரசரும் உட்படவில்லை ; ஆயினும் தற்காலத்தில் இந்தியாவுக்குப் புறமாயிருக்கும் பலூச்சிஸ்தானம், அப்கானிஸ்தானம் அதற்கு அப்பாலுள்ள ஹிந்துக்குஷ் மலைத்தொடர்வரையுமுள்ள பிரதேசம் இவை அசோகன் ஸாம்ராஜ்யத்தில் அகப்பட்டிருந்தன. வடக்கே காச்மீரமும் நேப்பாளமும் கிழக்கே அஸ்ஸாம் வரையுமுள்ள நாடுகளும், தெற்கே மைசூர் வரையுமுள்ள தக்கணமும் அந்த ஸாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்தன. ராஷ்டிரிகர், பிதேனிகர், புலிந்தர், ஆந்த்ரர் முதலிய ஜனங்கள் அசோகனுடைய ஆதிபத்தியத்துக்கு உட்பட்டவர்களாயிருந்தாலும் அவர்கள் அதிக சுதந்திரத்தைப் பெற்றிருந்தனர். இந்தியாவின் புறமே மத்திய ஆசியாவிலுள்ள கோபிப்பாலை வனப்பிரதேசத்துள்ள கோட்டான் அல்லது சீன துர்க்கிஸ்தானம் அக்காலத்தில் வளமும் நாகரிகமும் தழைத்த தேசமாயிருந்தது. இப்பிரதேசம் அசோகன் ஆளுகைக்கு உட்பட்டிருக்கவில்லையாயினும் எக்காரணத்தாலோ அசோகனுடைய செல்வாக்கு அங்கு அதிக வலிமையுடைய தாயிருந்தது. அதற்கு அசோகனுடைய தர்மப் பிரசாரம் அல்லாமல் வேறு காரணங்களும் இருக்கலாம். வியாபாரப் போக்குவரவு முற்காலங்களிலேயே ஏற்பட்டிருந்தது. அசோகன் காலமுதல், கல்வி கேள்விகள் விஷயமாகவும் அதிகமான போக்குவரவு ஏற்பட்டன. அசோகன் மகனான குனாலன் கோட்டான் ஜனங்களால் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டானென்றும் பௌத்த மதம் அவன் மூலமாக அப்பக்கங்களில் பரந்ததென்றும் திவ்யாவதானத்தில் கூறப்பட்டிருக்கிறது. இப்பிரதேசம் அக்காலத்தில் செழித்தோங்கிய பல ஸ்தூபங்களாலும் விஹாரங்களாலும் விளங்கியதாக யுவன்சுவங் கூறுகிறான்.

குறிப்புகள்[தொகு]

  1. * எபிக்ராபியா இந்திக்கா (Epigraphia Indica) - Vol. viii. பக்கம், 36.