அசோகனுடைய சாஸனங்கள்/தானப் பிரமாண லிகிதங்கள்

விக்கிமூலம் இலிருந்து

IX தானப்பிரமாண லிகிதங்கள்

நமக்குக் கிடைத்துள்ள அசோகனது தானப்பிரமாணங்கள் மூன்றும் அரசன் ஆஜீவகர்களுக்கென்று செய்த தானங்களைப் பற்றியன. மற்ற மதத்தினருக்குச் செய்த தானங்களின் அறிகுறி நமக்குக் கிடைக்காமலிருப்பதற்குக் காரணம் ஒருவேளை அவை குடைந்த குகைகளாயிராமல் கட்டப்பட்ட வீடுகளாயிருந்தன என்பதாயிருக்கலாம். அதனால் சில நூற்றாண்டுகளுக்குள் அவை இடிந்து முற்றிலும் ஜீரணமாயிருக்கும்.

கயையின் அருகாமையில் பராபர்மலை யென்றும் நாகார்ஜுனி மலை யென்றும் இரண்டு மலைகளுண்டு, இங்கே அசோகனாலும் அவனுக்குப்பின் பாடலிபுரத்தில் ஆண்ட தசரதனாலும் செய்யப்பட்ட ஆறு விசாலமான குகைகள் இருக்கின்றன. இவற்றின் வேலைப்பாட்டில் உறுதியும் வலிமையும் காணப்படுகிறபோதிலும் சிற்ப அலங்காரம் விசேஷமா யொன்றுமில்லை. உட்புறம் கண்ணாடியின் புறம்போல இழைக்கப்பட்டிருக்கிறது.

ஆஜீவகர் அக்காலத்துள்ள பிரபலமான துறவிகள்.பௌத்தக் கிரந்தங்களில் இவரது ஆடையற்ற கோலத்தையும் கோரமான காயக்கிலேசங்களையும் பரிகசித்து எழுதியிருக்கிறது. ஆயினும், அசோகன் சகல மதங்களிலும் “ஒரு விஷயத்தில் அல்லது மற்றொரு விஷயத்தில் மேன்மையுண்டு” என்று நம்பினதினால் அவன் ஆஜீவகர்களையும் காப்பாற்றி வெகுமானஞ் செய்தான்.

மொத்தமாய் ஆறு குகைகள் உள்ளத்தில் மூன்று அசோகனால் குடையப்பட்டவை. அவனுடைய லிகிதங்கள் உட்புறத்துச் சுவரில் எழுதப்பட்டிருக்கின்றன, இக்குகைகளாவன -- I தியக்ரோத அல்லது ஆலமரக்குகை. II கலதிக மலையிலுள்ள விசுவஜோப்ரி குகை, III கலதிக மலையிலுள்ள ஸுபியா குகை.

I. இந்த நியக்ரோத குகை ஆஜீவகர்க்கென்று ராஜனான பியதஸியால் தான் முடிசூடிப் பன்னிரண்டு வருடங்களானபின் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

II. கலதிக மலையிலுள்ள இந்தக் குகை ஆஜீவகர்களுக்கென்று ராஜனான பியதஸியால் தான் முடிசூடிப் பன்னிரண்டு வருடங்களான பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

II. ராஜனான பியதஸி முடிசூடிப் பத்தொன்பது வருடங்களானபின் ஸுபியா குகையை (ஆஜீவகருக்கு) சந்திர சூரியருள்ள வரையிலும் நிலை நிற்கும்படித் தானஞ் செய்திருக்கிறான்.