அசோகனுடைய சாஸனங்கள்/பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்

விக்கிமூலம் இலிருந்து

VII. பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்

அசோகன் நாளில் நடந்த சம்பவங்களைத் தீர்மானிக்கவும் 
இவற்றின்
பாகுபாடு

அரசன் காலத்தை நிர்ணயிக்கவும் அசோக சாஸனங்கள் எவ்வளவு முக்கிய ஆதாரங்களாயிருக்கின்றன வென்று நாம் நிரூபித்தாய்விட்டது. இனி இச் சாஸனங்களையே நோக்கவேண்டும். நமக்கு இதுவரையும் கிடைத்துள்ள அசோக லிகிதங்கள் முப்பத்து மூன்று. இவற்றில் பன்னிரண்டு லிகிதங்களில் அரசன் பட்டாபிஷேக வருஷம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இஃதன்றி வேறு சில லிகிதங்களிலும் கால நிர்ணயம் செய்வதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சாஸனங்கள் யாவும் ராஜீய அதிகாரிகளுடையவோ மந்திரிகளுடையவோ வாக்கியங்களாயிராமல் அரசன் நாவிலிருந்து வந்த வாக்கியங்கள் என்பதில் ஐயமில்லை; ஏனென்றால் அரசனன்றி வேறெவரும், எவ்வளவு சுதந்திரமுடையவராயினும், எழுதத் துணியாத வாக்கியங்கள் பலவற்றை நாம் சாஸனங்களிற் காணலாம். பல லிகிதங்களும் “தேவர்களுக்குப் பிரியனான பியதவஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான்” தேவானாம் பியோ பிய தஸி லாஜா ஏவம் ஆஹா என்றோ, அல்லது இவ்வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றியோ தொடங்குகின்றன.

அசோகனுடைய சாஸனங்கள் மிகப் புதுமையான 
இவற்றின்
தன்மை

தஸ்தாவேஜுகளாம். இந்தியாவிலுள்ள வேறு ஒரு அரசனும் இப்படிப்பட்ட சாஸனங்களை எழுதிவைத்திலன். இச் சாஸனங்களும் பலவகைப்பட்டன. சில, அரசன் தன் அதிகாரிகளுக்கு அனுப்பிய கட்டளைகளின் பிரதிகள் போலிருக்கின்றன. மற்றவை அரசன் ஜனங்களுக்கு அனுப்பும் விளம்பரங்களென்று தோன்றும். தர்மப் பிரசாரத்தில் அரசன் கொண்ட மிகுதியான உற்சாகத்தினால் பலசாஸனங்களில் அரசன் ஜனங்களுக்குத் தர்மத்தைப் போதிக்கிறான். இவற்றை அரசன் சட்டங்கள் என்று கொள்ளக்கூடாது. இப்போதனைகளைப் பிரஜைகள் மீறி நடக்கிறதைப்பற்றி அரசன் வியசனமடைந்தாலும் ஜனங்களைக் கட்டாயப்படுத்தவோ மீறுதலுக்குச் சிக்ஷைகள் விதிக்கவோ விரும்பினதாக நாம் எண்ண இடமில்லை.

இந்த லிகி தங்களுடைய வாசகரீதி சிற்சில இடங்களிற் சுருக் 
வாசகரீதி

சுருக்கமாக அமைந்திருக்கிறதென்றும் மற்ற இடங்களில் விரிவாயிருக்கிறதென்றும் அசோகன் கூறுகிறான் (பதினான்காம் சாஸனம்). சுருக்கமாக அமைந்திருக்கிற பாகங்கள் இல்லையென்றே சொல்லலாம். மிக விரிந்து தளர்ந்த வாசகரீதியே இவற்றின் விசேஷகுணம். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலுக்கும் இந்த லிகிதங்களுக்கும் வெகு தூரமுண்டு. ஆயினும் அசோகன், விஷயத்தினுடைய தேன் போன்ற மாதுரியத்தாலேயே இவ்விதம் விவரிக்கவும் திருப்பிச் சொல்லவும் தூண்டப்பட்டதாகச் சொல்வது நாமும் ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஸமரஸ பாவத்தைப்பற்றிய பன்னிரண்டாம் சாஸனம், தர்மத்தின் வெற்றியைப் பற்றிய பதின்மூன்றாம் சாஸனம், அரசன் நற்செய்கைகள் பலவற்றை எடுத்துக் கூறும் ஏழாம் ஸ்தம்ப சாஸனம், இவற்றை நாம் வாசிக்கும் போது அரசனுடைய உயர் நோக்கங்களையே நாம் குறிப்பிடுகிறோம். இவைகளின் ஏற்றமானது வாசகரீதியின் குற்றங்களை மறக்கச் செய்கின்றது.

அசோகனால் எழுதப்பட்டவை யெல்லாம் சாஸனங்கள் அல்ல. 
சாஸனங்கள்
அல்லாத லிகிதங்
கள்

உதாரணமாக, ரும்மின் தேயீயிலுள்ள கல்வெட்டுக்களும் குகைகளிலுள்ள கல்வெட்டுக்களும் சாஸனங்கள். என்ற பெயருக்கு உரியவையல்ல; அவற்றை லிகிதங்கள் என்று மட்டுமே சொல்லமுடியும்.

அசோக லிகிதங்கள் எல்லா வகையும் எல்லாப் பிரதிகளும் 
லிகிதங்களின்
பிரிவு

சேர்ந்து 140 என்று கணக்கிடலாம். ஒவ்வொரு லிகிதத்துக்குமுள்ள பல பிரதிகளை வெவ்வேறாக எண்ணினால் இக்கணக்கு ஏற்படுகிறது. பிரத்தியேகமான தஸ்தாவேஜுகள் முப்பத்து மூன்று; அவற்றை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

I. உப சாஸனங்கள். 2
இவை அரசன் பௌத்தமதத்தில் சேர்ந்ததன்
பின் முதலில் பிரசுரம் செய்யப்பட்டவை.
அகப்பட்டுள்ள அசோகக் கல்வெட்டுக்
களுள் இவையே முந்தியவை போலும்.
II. பாப்ரு சாஸனம். 1
பௌத்த ஸங்கத்திலுள்ள தலைவருக்கு அசோகன்
எழுதிய கடிதம். பாப்ருவில் அகப்பட்டிருப்பதால்
பாப்ரு சாஸனம் என்று இதற்கு ஸ்ரீ வின்ஸென்ட்
ஸ்மித் பெயர் வழங்குகின்றார்.
III. பதினான்கு முக்கிய சாஸனங்கள். 14
இவை அசோகன் தர்மத்தையும் அவனுடைய
நோக்கங்களையும் விவரிக்கின்றன.
IV. கலிங்க சாஸனங்கள். 2
புதிதாகப் பிடிக்கப்பட்ட கலிங்க தேசத்து
ஜனங்களுக்கும் அதன் பக்கத்திலுள்ள
காட்டு ஜாதியாருக்கும் அபய தானம்
செய்யும் சாஸனங்கள்.
V. ஸ்தம்ப சாஸனங்கள். 7
அரசனது அரசாட்சியின் தன்மையைப் பற்றி
யும் கொள்கைகளைப் பற்றியும் கடைசி
முறையாக பிரசுரம் செய்யப்பட்டவை.
VI. ஸார்காத் சாஸனம். 1
பௌத்த ஸங்கத்தை உட்பகைகளிலிருந்து
காப்பாற்றுவதற்கு இடப்பட்ட கட்டளை.
ஸாஞ்சி ஸ்தம்பத்திலும் பிரயாகை ஸ்தம்
பத்திலும் இச்சாஸனத்தின் சில வாக்கியங்
கள் எழுதப்பட்டிருக்கின்றன.
ரும்மின்தேயீயிலும் நிக்லீவாவிலும் அசோக
னது தீர்த்தயாத்திரையின் ஞாபகக்குறிப்பாக
எழுதப்பட்டவை.
VIII.. ராணி காருவாகியின் லிகிதம்.  1
இங்கு அசோகன் ராணி காருவாகி, தனது
தானங்களை விசேஷமாய்க் கவனிக்க
வேண்டு மென்கிறாள்.
IX. தானப்பிரமாண லிகிதங்கள்.  3
இவை ஆஜீவகர் வாசம் செய்வதற்கு என்று
குடையப்பட்ட குகைகளில் உள்ளவை.

மொத்தம் ...
 33

இந்த லிகிதங்கள் தற்காலம் எவ்வளவு தூரம் கேடில்லாமல் இருக்கின்றன என்றும், எவ்விடங்களில் காணப்படுகின்றன என்றும், அவற்றின் காலம் இன்னதென்றும் காட்டும் குறிப்புக்கள் அந்தந்த லிகிதங்களின் தமிழ் மொழிபெயர்ப்புடன் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்க்கப்பட்ட பதத்திற்கு மூலத்தில் உள்ள சொல் இன்னதென்று அந்த லிகிதத்தின் முடிவில் வரும் குறிப்புக்களில் எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் மூலத்தில் வரும் சொல்லையே பெயர்ப்பிலும் எழுதி அதன் கருத்தைப் பற்றிய அபிப்பிராயங்கள் கீழுள்ள குறிப்புக்களில் எழுதப்பட்டிருக்கின்றன. சாஸனங்களுடைய பிரதிகள் யாவும் ஒன்று போல் இருக்க மாட்டா. பாஷை மட்டுமன்று, வேறு வித்தியாசங்களும் காணப்படும். இம்மொழி பெயர்ப்பில் அவ்வித்தியாசங்களை நாம் அதிகமாகப் பொருட்படுத்த வில்லை, ஸார்நாத் சாஸனத்திலும் வேறு சில லிகிதங்களிலும் சில வரிகள் அழிந்திருக்கின்றன ; அந்த வரிகளிலுள்ள சொற்கள் இன்னவை யென்று வித்வான்கள் அனுமானித்திருக்கின்றனர். இவையன்றி சாஸனங்களின் கருத்தை விளக்க உபயோகமென்று நினைத்துச் சில சொற்கள் மூலத்தில் இல்லாவிடினும் மொழி பெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இவை ( ) இவ் வடையாளத்துக்குள் அடக்கப்பட்டிருக்கின்றன.

அசோகன் காலத்திலிருந்த இந்துஸ்தானத்து ஜனங்கள் தங்கள் 
அசோக
லிகிதங்களின்
பாஷை

வீட்டிலும் ராஜ்யகாரியங்களிலும் உபயோகித்துவந்த பாஷையை நாம் அசோகனுடைய சாஸனங்களிலும் பார்க்கிறோம். தற்காலத்தில் ஹிந்துஸ்தானத்திற் பேசப்படும் பாஷைகள் இந்தச் சாஸனங்களின் பாஷையிலிருந்து உண்டானவையே. அசோக சாஸனங்களின் பாஷையை ஒருமையில் குறிப்பிடுவதா பன்மையில் குறிப்பிடுவதா என்பது எளிதில் தீர்மானிக்கக் கூடியதன்று. சாஸனங்களின் மொழி, இடத்துக்கிடம் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருக்கிறது. இப்படி வித்தியாசப்பட்ட மொழிகள் மூன்று வகைப்படுமென்று சொல்லலாம். அவையாவன: கிர்நார் சாஸனத்தில் காணப்படும் மேற்குமொழி; தவுளியில் காணப்படும் கிழக்கு மொழி; ஷாபாஸ்கர்ஹியில் காணப்படும் வடமேற்கு மொழி. அக்காலத்திலேயே சம்ஸ்கிருதம் பேச்சுவழக்கில் இல்லாமல் இதிகாஸம், காவியம், நாடகம், வியாகரணம் முதலிய விஷயங்களைத் தெரிவிப்பதற்கும் நூல்கள் இயற்றுவதற்கும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. பேச்சுவழக்கிலுள்ள மொழிகளைப் பிராகிருதம் என்று நாம் சொல்லுவோம். பௌத்தமதம் பிரபலமான போது புத்தரின் வாக்கியங்களையும் கொள்கைகளையும் பிரதிபாதிப்பதற்கு அவர் சீஷர் ஸம்ஸ்கிருதத்தை உபயோகிக்கவில்லை. பாமரஜனங்கள் புத்தரின் உபதேசங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் கோசலதேசத்தில் அப்போது பேசப்பட்டுவந்த பிராகிருதத்தையே அவர் எல்லாக் காரியங்களுக்கும் உபயோகித்தனர். அதனால் பௌத்தமதக்கிரந்தங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டன. விரைவில் இம் மொழி இலக்கிய இலக்கணமுடைய ஒரு புதுப்பாஷையாயிற்று. இதை நாம் பாலி என்று சொல்லுவோம். இந்தப் பாலி பாஷை இப்போது இலங்கை பர்மா முதலிய பௌத்த தேசங்களில் தெய்வ பாஷையாகப் போற்றப்பட்டு வருகிறது. பாலி, ஸம்ஸ்கிருதத்துக்கு நெருங்கிய சம்பந்தமுடையது ; ஆனால் அசோக சாஸனங்களின் பாஷை ஸம்ஸ்கிருதத்துக்குப் பாலியைவிட நெருங்கிய சம்பந்தமுடைத்தா யிருக்கிறது. தமிழ் மொழியில் பிராகிருத மூலமாக வந்துள்ள சொற்கள் பல உண்டு.

அசோக லிகிதங்களின் பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்து 
இலக்கணக்
குறிப்பு

எவ்வித வேறுபாடு உடையது என்பதை விளக்குவது மிக உபயோகமா யிருப்பினும் இவ்விவரணம் ஒரு இலக்கண நூலாக முடியுமென்று அஞ்சி இக்குறிப்பைச் சுருக்கி எழுதுகிறோம்: சமீபத்தில் காலஞ்சென்ற ஸ்ரீபாண்டுரங்க தாமோதர குணே அவர்களால் எழுதப்பட்ட Introduction to Comparative Philology, (Poona, 1918) என்ற புஸ்தகத்தில் இவ்விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸம்ஸ்கிருதத்துக்கும் அசோக லிகிதங்களின் பாஷைக்கு முள்ள ஒற்றுமை வேற்றுமைகள் மூன்று வகையாகப் பிரித்துக் சாட்டப்பட்டிருக்கின்றன. I. சொற்களின் உச்சரிப்பில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்கள். அஃதாவது, சொற்களில் ஒலிகள் நீட்டப்பட்டிருத்தல், அல்லது சுருக்கப்பட்டிருத்தல், அல்லது மெய் எழுத்துக்களில் மாறுதல் முதலியன. II. வேற்றுமை உருபுகளிற் காணப்படும் வேறுபாடுகள். III. காலம் செயல் முதலியவற்றைக் காட்டும் பொருட்டு வினைசொற்களில் ஏற்படும் வித்தியாசங்கள். இவற்றிற்கு உதாரணங்கள் குறிப்புரைகளில் காணலாம்.

பாலிபாஷையைப் போலவே இந்த லிகிதங்களின் பாஷையிலும் ந, லு, ஐ, ஒள என்ற உயிர் ஒலிகள் கிடையா. ஐயும், ஔவும், ஏயும், ஓவாக மாறுகின்றன. ரு, லு க்கள் மழுங்கிப்போகின்றன. தமிழில், மோக்ஷம் என்ற சொல்லை மோக்கம் என்று எழுதுவதும் கிருஷ்ணன் என்பதை, கண்ணன் என்று எழுதுவதும் பிராகிருத மொழியின் உறவினால் ஏற்பட்டதே.

இடத்துக்கு இடம் அசோக லிகிதங்களின் பாஷை எவ்வித வேறுபாடுகளுடையது என்பது பதினான்கு முக்கிய சாஸனங்களின் ஆறு பாடங்களையும் ஒப்பிட்டு நோக்குமிடத்து விளங்கும். ஸம்ஸ்கிருதமே என்று சொல்லக் கூடிய சொற்களும் இலக்கண ரூபங்களும் எல்லா இடங்களிலுள்ள லிகிசங்களிலும் காணப்படுகின்றனவென்றாலும் ஷாபாஸ்கர் ஹியில் காணப்படும் லிகிதங்கள் பாஷையில் ஸம்ஸ்கிருதத்துக்கு மிகவும் அடுத்ததா யிருக்கின்றன. ஆனால் இங்குள்ள லிபியில் பல குறைவுகள் உள. உதாரணமாக குறில் நெடில் என்ற வித்தியாசங்களே இங்கு காணப்படவில்லை ஆதலால் கிர்நார் பிரதியே வடமொழிப்பயிற்சி யுள்ளோருக்கு எளிதில் விளங்கக் கூடியதாயிருக்கிறது.

கிர்நாரிலும் ஷாபாஸ்கர்ஹியிலும் தவிர மற்றிடங்களில் ங, ஞ, ன, ந என்ற மூர்த்தன்னிய ஒலிகளைக் குறிப்பிடத் தனியான எழுத்துக்கள் கிடையா; எல்லாம் ந வாலேயே குறிப்பிடப்படுகின்றன. வடமேற்குப் பிரதிகளிற்போல கிர்நாரிலும் ர, ல என்ற இரு எழுத்துக்களும் உள; அதனால் இங்கு ராஜா என்ற சொல் லாஜா என்று எழுதப்படுவதில்லை. ஆயினும் கிர்நார் பிரதி வேறு அம்சங்களில் கீழ்த் திசை லிகிதங்களையும் தென் திசை லிகிதங்களையும் ஒத்திருக்கின்றது. உதாரணமாக, இவ் விடங்களிலுள்ள லிகிதங்களில் ச, ஷ, ஸ என்ற ஒலி வித்தியாசங்கள் கிடையா. வடக்குள்ள பாடங்களில் இவ்வுயிர்மெய்கள் உச்சரிக்கப்பட்டு பிரத்தியேகமாக எழுதப்பட்டிருக்கின்றன. இவைபோன்ற வேறுபாடுகளும், இலக்கண ரூபங்களில் சில வேறுபாடுகளும் இடத்துக்கு இடம் விகிதங்களிற் காணப்படுகின்றன.
 

பிராம்மி எழுத்து

கரோஷ்டி எழுத்து

தேவர்களுக்குப் பிரியனான
பியதஸி அரசன்
இவ்வாறு கூறுகிறான்.