அசோகனுடைய சாஸனங்கள்/பௌத்தமறை நூல்கள்

விக்கிமூலம் இலிருந்து

II

பௌத்தமறை நூல்கள்

அசோக சாஸனங்களிலும் இப் புஸ்தகத்தின் அவதாரிகையிலும் கூறப்பெற்ற பௌத்த நூல்களைப் பற்றிச் சுருங்க விளக்குவது இவ்வனுபந்தத்தின் நோக்கமாகும். பௌத்த சமயத்தைச் சேர்ந்த நூல்கள் எண்ணிறந்தன என்று கூறுவது மிகையல்ல. பௌத்தமதமானது கால அளவில் செழித்தோங்கிப் பல கப்பும் கவறுகளுமுடைய அரும்பெரும் விருக்ஷமாக வளர, அதன் சமய நூல்களும் அவ்விதமே பலவாறாகவும் பற்பல பாஷைகளிலும் தோன்றின. ஸம்ஸ்கிருத மொழியில் பல பௌத்த நூல்கள் உண்டு. திபெத், சீனா, இலங்கை முதலிய தேச பாஷைகளிலும் பல உள. அவற்றில் சில நூல்கள் பகவத்கீதை, கடோபனிஷத்து முதலிய நூல்களைப்போல உலகத்தின் மதிப்புக்கும் சாசுவதமான புகழுக்கும் உரியவை, ஆனால் நாம் இங்குக் கூறப்போவது அந்நூல்களைப்பற்றி அல்ல ; பௌத்த சமயத்தின் மூல நூல்கள் என்று கணிக்கக் கூடியவை த்ரிபிடக என்று சொல்லப்படுகிற கிரந்தங்களாம். இங்கு அவற்றில் அடங்கினவும் ‘பௌத்தர்கள் திருமறை’ என்று சொல்லத்தகுந்தனவுமான நூல்களை விவரிப்போம்.

கௌதம புத்தரும் அவருடைய சீஷர்களும் தங்களுடைய மதவிஷயமான சம்பாஷணைகளுக்கு அவ்வப்போது வட இந்தியாவில் வழங்கிவந்த பிராகிருத மொழிகளையே உபயோகித்தனர். அதனால் ஆதி பௌத்த நூல்களின் பாஷை பிராகிருதமொழியாயிருந்தது. இப்பாஷை தற்காலம் பாலி என்று கூறப்படுகிறது. இலங்கை, பர்மா முதலிய தென் நாடுகளில் பாலி புண்ணியபாஷை எனக் கருதப்பட்டு அந்நாட்டுப் பண்டிதர்களால் போற்றப்பட்டு வருகிறது. மூன்று பிடகங்களில் அடங்கிய கிரந்தங்களுக்கு உரையாகவும் வியாக்கியானங்களாகவும் வேறு பல நூல்கள் பாலியில் எழுதப்பட்டிருக்கின்றன.

பிடகம் என்ற சொல் கூடை என்னும் பொருளுடையது, த்ரிபிடக என்றால் மூன்று முக்கியமான பௌத்தப் பிரபந்தத் திரட்டுகளாம். இது பாலியில் எழுதப்பட்டுள்ளது. இஃது அச்சில் இந்நூலின் பக்கங்களைப்போல பதினாயிரம் பக்கங்களுக்கு மேற்படும்; ‘பைபிள்' என்ற கிறிஸ்துவர்களுடைய சத்தியவேதப் புத்தகத்தை விட மும்மடங்கு விரிவானது. இதில் அடங்கிய கிரந் தங்கள் இருபத்தொன்பது என்று சொல்லலாம். இந்த இருபத்தொன்பதில் பல கிரந்தங்கள் சிறு உரைகளின் தொகுதியேயாம்.

மூன்று பிடகங்களில் அடங்கிய இருபத்தொன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனலாம். அவற்றிற் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் (ஸம்ஸ்கிருதம்: ஸ்தவிர வாதம்) அல்லது பெரியோரின் மதம் என்று கருதப்படுபவை. கௌதம புத்தர் நிர்வாணத்தை அடைந்த சிறிது காலத்திற்குள்ளேயே பௌத்த ஸங்கத்தின் கொள்கையில் வேறுபாடுகள் பல உண்டாயின. சிலர் தேரவாதக் கக்ஷிக்கு எதிராக நின்றனர். அசோகசக்கரவர்த்தியின் காலம்வரையும், பௌத்தர்களுக்கிடையில் எந்தச் சமய நூல்கள் தமது மறைக்குப் புறம் என்றும், எவை உட்பட்டவை என்றும் தீர்மானம் பெறா மல் வாதங்கள் நடந்து வந்தன. மூன்றாவது பௌத்த மகாஸபையில் இவ்விஷயம் ஒருவாறு முடிவு செய்யப்பட்டது. சமய நூல்கள் திரட்டப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டன. இவ்விவரங்களை - அவதாரிகையில் 37-ம் பக்கத்தில் கூறியுள்ளோம்.

அனேக பௌத்தர்கள் அம் மகாஸபையில் தேர்தெடுக்கப்பட்ட எல்லாச் சமய நூல்களையும் ஒப்புக் கொள்ளவில்லையாயினும் பொதுவாக அவை சாக்கிய முனிவருடைய தர்மோபதேசங்களை விளக்குகின்றவையே என்பது மட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது, இவ்வபிப்பிராயத்தை உறுதிப்படுத்த புராதன வஸ்து ஆராய்ச்சி அத்தாட்சியைத் தருகின்றது. கி. மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவும் பர்ஹுத் என்ற விடத்திலிருந்து அகப்பட்டுள்ளனவுமான சில கல்வெட்டு களில் 'பஞ்சநிகாயிகன்' (ஐந்து நிகாயங்களையும் கற்றுத் தேர்ந்தவன்), பேடகி (பிடகங்களைக் கற்ற வித்துவான்) என்ற பட்டங்கள் பௌத்த பிக்ஷுக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிடகம் என்ற பதம் சமய நூல்களைத் தொகுப்பதற்குமுன் ஏற்பட்டிருக்க முடியாது, புத்தருடைய வாக்கியங்களை ஐந்து நிகாயங்களாக வகுத்ததும் ஆதியில் ஏற்பட்டதன்று. மூன்றாவது மகாஸபையில் மறைநூல்கள் நிச்சயிக்கப்பட்ட பின்பே இச்சொற்கள் வழக்கில் வந்திருக்க இடமுண்டு, ஆதலால், இம்மகாஸபையில் நிர்ணயிக்கப்பட்ட நூல்கள் அக்காலம் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டவை என்பது தெளிவாகும். தென் பௌத்தமதம், வட பௌத்தமதம் என்ற வித்தியாசங்கள் அப்போது பிரபலமாகவில்லை.

மூன்று பிடகங்களில் அடங்கிய பௌத்தப் பிரபந்தங்களை வேதத்தின் ஞானகாண்டத்திற்கு ஒப்பிடலாமாயினும் அவை இரண்டிற்கும் நிரம்ப வேறுபாடுகளும் உள. ஆரண்யகங்கள் உபநிஷத்துகள் முதலிய மறைநூல்கள் வெவ்வேறு காலத்தவை; பற்பல ரிஷிகளின் மதங்கள் அடங்கியவை; பலவிதக் கொள்கைகளைப் பிரதிபாதிப்பவை. பிடகங்களில் அடங்கிய ' நூல்களோ, கௌதம புத்தர் கொள்கைகளை மட்டில் விளக்குவனவாகும்.

இவற்றை, விசேஷமாக இரண்டாவது பிடகத்திலடங்கிய நூல்களை, கிறிஸ்தவர்களின் சத்தியவேதத்தில் அடங்கிய புஸ்தகங்களுக்கு ஒப்பிடுவது சற்று பொருந்தும். பைபிளின் ‘ புது ஏற்பாடு' என்ற பகுதியில் கிறிஸ்து முனிவரின் வரலாறும் அவர் உபதேசங்களும் இருக்கின்றன. இவை யாவும் - கிறிஸ்து முனிவர் காலஞ்சென்ற பிறகு அவருடைய சீஷர்கள் தம் ஞாபகத்திலிருந்து திரட்டியவையே. அதுபோலவே சாக்கிய முனிவருடைய உபதேச மொழிகளும் பிற்காலத்தில் திரட்டப்பட்டவையே. பௌத்தரின் மறை நூல்களைப் போலவே கிறிஸ்தவரின் மறைநூல்களும் ஒரே மதசித்தாந்தத்தை வற்புறுத்துவது. இரண்டு மதங்களும் ஒரு மகா புருஷனை கடவுளாகக் கொள்கின்றது. ஆயினும், பௌத்த மறை நூல்களில் கௌதம சாக்கியமுனிவரைவிட அவர் போதித்த தர்மமே முனைத்திருக்கிறது; கிறிஸ்தவ மறைநூல்களிலோ கிறிஸ்துவே முனைத்திருக்கிறார். உதாரணமாக, புது ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் சரிதை நான்கு ஞானிகளால் உரைக்கப்படுகிறது. பிடகங்களில் ஓரிடத்திலும் சாக்கிய முனிவருடைய சரிதை தொடர்ச்சியாக உரைக்கப்படவில்லை. ஆனால் பல இடங்களில் அவருக்குப் பூர்ண ஞானோதயம் உண்டாவதற்கு முன்னும் பின்னுமுள்ள பல செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து நாம் கௌதம புத்தருடைய ஜீவ சரித்திரத்தை உணர்ந்துகொள்ளலாமாயினும் புத்தருடைய வரலாற்றை உரைப்பதை விட அவருடைய தர்மோபதேசங்களை விளக்குவதே பிடகங்களின் உத்தேசம்.

தர்மத்தின் கொள்கைகளை விளக்கும் உரைகளுக்கு ஸுத்த அல்லது சூத்திரங்கள் என்று பெயர். இந்த சூத்திரங்களின் நடையைப்பற்றிப் பொதுவாக ஒரு அபிப்பிராயம் கூறலாம். சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற மேன்மை இவற்றின் நடையில் காணமுடியாது, இதற்கு எதிராக, ஒரே அடுக்கான வாசகங்களும் சொற்றொடர்களும் திரும்பத் திரும்ப வருவது இச்சூத்திரங்களுக்கு இயல்பாயிருக்கிறது. முன் 75-ம் பக்கத்தில் கூறியுள்ள படி அசோக சாஸனங்களின் நடையும் ஏறக்குறைய இப்படியே இருக்கின்றது. சூத்திரங்கள் புத்தருடைய ஜீவகாலத்தில் தோன்றிய முதலுரைக்கு உண்மையான பிரதியாயிருக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதப்பட்டமையே இவ்வித நடைக்கு காரணமாதல் வேண்டும்.

அனேகசூத்திரங்கள் புத்தருக்கும் அவரைத் தரிசிக்க வந்தோருக்கும் ஏற்பட்ட வினா விடை ரூபமாக இருக்கின்றன. இப்பகுதியை ஐரோப்பாவில் பெயர்போன "ப்ளேட்டோ"வின் சம்பாஷணைகளுக்கு ஒப்பாகக் கூறலாம். தம்மைக் கேள்விகள் கேட்கவந்தோனுடைய வாக்கியங்களையே பெரும்பாலும் உபயோகித்து பதில் உரைப்பதும், எதிர்வினாவுவதும் இயற்கையல்லவா? இப்பகுதிகளுக்கு சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற சிரேஷ்ட குணம் அமையாதெனினும் இவற்றில் சொல்வன்மையும் அணியழகும் மிகுதியாய்க் காணப்படுகின்றன. இயற்கையின் தோற்றங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உருவங்களும் உபமானங்களும், சமயோசிதமான மேற்கோள்களும், கதைகளும், வரிசையான நியாய வாதங்களும், கேட்போர் மனத்தைப் பல சந்தர்ப்பங்களில் கவரக் கூடியனவாயிருக்கின்றன. ஒரே தர்மபோதனை சொற்பமாறுதலுடன். த்ரிபிடகத்தின் - வேறொரு பாகத்தில் வருதலும் உண்டு.

மூன்று பிடகங்களாவன :- 1 வினய பிடகம்', 2 ஸுத்தபிடகம். 3 அபிதர்ம பிடகம்.
'

1. வினய பிடகம்

பௌத்த பிக்ஷுக்களுடைய ஒழுக்க முறையையும் நித்திய நியமங்களையும் உரைக்கும் கிரந்தங்களின் தொகுதியாம். இப்பிடகத்தில் அடங்கிய நூல்கள் பின்வருமாறு:-


வினயத்தல் அடங்கிய  விவரங்கள்
நூல்களின் பெயர்

1. பாடிமோக்கம் பிக்ஷுக்கள் அனுஸரிக்க வேண்டிய 227
 விதிகள் கூறப்படுகின்றன,
 ஸுத்த விபங்க  பாடிமோக்கம் என்ற ஸுத்திரத்தின்
 ஒரு பழைய வியாக்கியானம். இஃது
 இருவகைப்படும்.
 A. பாராஜிக.  உரையின் முதற்பாகம், ஸங்கத்திலிருந்து
 விலக்குதலுக் குற்ற குற்றங்களைப்
 பற்றிக் கூறுவது.
 B. பாசித்திய  இரண்டாம்பாகம் பிராயச்சித்த நோன்பு
 களால் தீர்க்கக்கூடிய குற்றங்களைப்
 பற்றிக் கூறுவது.
2. கந்தக ஸங்கத்தில் பிரவேசித்தல், பிக்ஷுக்களின்
 ஊண், உடை முதலியவற்றைப் பற்றிக்
 கூறுவது.
 A. மஹாவர்கம்  இதன் பெரும்பகுதி 20.அத்
 B. சுல்லவர்கம்  இதன் சிறுபகுதி 12. அத்.
3. பரிவாரபாத அனுபந்தங்களும் சுருக்கமும், 25 அத்.

வினய பிடகத்தில் சாதாரணமாகத் தர்மபோதனைகள் இல்லாவிடினும் கௌதமர் போதிவிருக்ஷத்தின் அடியில் பலகாலம் வீற்றிருந்து தவஞ்செய்து, கடைசியில் பூர்ண ஞானத்தை அடைந்து, தமக்குக் கிடைத்த மிக அரிதான உண்மையை உலகத்துக்கு உரைத்து யாவரையும் ஈடேற்ற வேண்டுமென்ற எண்ணங் கொண்டு, காசியை நோக்கிச் சென்று, அங்கே முன்னொருகால் தமது சீடராயிருந்த ஐந்து துறவிகளைக் கண்டு, அவர்களுக்கு முதன் முதலாகத் தாம் கண்டெடுத்த தர்மத்தைப் போதித்த விவரங்கள் மஹாவர்கத்தில் கூறப்படுகின்றன. புத்தர் உலகத்தாருக்கு முதலிற் செய்த பிரசங்கமும் இப் பாகத்தில் சேர்க்கப்பட் டிருக்கிறது, தர்ம சக்கரப் பிரவர்த்தன சூத்திரம் (மஹாவர்கம் 6-ம், அத்.) என்னும் நூலில் இந்த முதல் உபதேசம் செய்யப்பட்ட வரலாறும் அதன் கருத்தும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. புத்தருடைய தர்மத்தை நன்கு உணர அவரது முதல் உபதேசமாகிய ‘தர்ம சக்கரப் பிரவர்த்தன சூத்திரம்’ மிகவும் ஏற்ற ஆதாரமாம். அசோகனும் இவ்விதமே கூறுகிறான் போலும். அவன் தனது பாப்ரு சாஸனத்தில் எல்லோரும் அவசியம் மனனம் செய்யவேண்டிய ஏழு சூத்திரங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றில் முதலாவதாகக் கூறப்படுவது ‘வினய ஸமுத்கர்ஷம்’ என்பது. இது, தர்மசக்கரப் பிரவர்த்தன சூத்திரத்தின் மறுபெயரேயென்று சில வித்வான்கள் சொல்லுகின்றனர். இது, திரும்பவும் இரண்டு முறை ஸுத்தபிடகத்தில் வெவ்வேறு தொகுதிகளில் வருகின்றது.

2. ஸுத்த பிடகம்

ஸுத்த பிடகம் அல்லது சூத்திர பிடகம், தர்மத்தை விளக்குவதற்கான சம்பாஷணைகளும் வாதங்களும் பிரசங்கங்களும் அடங்கியதாகும். இதுவே பௌத்த மறைத் தொகுதியில் மிகவும் முக்கியமான பாகம். இதில் ‘ஐந்து நிகாயங்கள்' என்ற பிரிவுகள் உண்டு. இவ்வைந்து நிகாயங்களாவன. :--

1. தீர்க நிகாய ... 34 நீண்ட சூத்திரங்கள்.
II. மஜ்ஜிம நிகாய ... 152 நடுத்தரமான சூத்திரங்கள்.
TII. ஸம்யுத்த நிகாய ... 55 “ஸம்யுத்தங்கள் கொண்டது.
IV. அங்குத்தர நிகாய .. 11 பிரிவுகளாகத் தொகுக்கப் பட்ட சூத்திரங்கள். V. குத்தக நிகாய ... பின் வரும் பதினைந்து நூல்

களின் தொகுதி.

A. குத்தக பத ... இதில் பல கதைகளும் நீதி

வாக்கியங்களும் கீதங்களும்
உள்ளன.

B. தம்மபத ... விவரம் கீழே காண்க.

C. உதான ... புத்தருடைய சில சந்தோஷ

வசனங்கள்.

D. இதிவுத்தக ... புத்தருடைய சில உரைகள்.

E. ஸுத்தரிபாத... விவரம் கீழே காண்க

F. விமானவஸ்து, ... சுவர்க்க நிலையங்களைப்பற்றி.

G. ப்ரேதவஸ்து ... மரணத்துக்குப்பின் உள்ள நிலைகளைப்பற்றி.

H. தேரகாதா ... விவரம் கீழே காண்க.

I. தேரிகாதா .... ௸

J . ஜாதக .... ௸

K. நித்தேஸ ... சில சூத்திரங்களுக்கு ஸாரி

புத்திரனால் செய்யப்பட்ட
வியாக்கியானங்கள்.

L. படிஸ்மபிதா

மார்க ... விவேகம் அடையும் வழி.

M. அபதான ... புண்ணிய கதைகள்.

N. புத்தவம்ச - ... பூர்வ புத்தர்களைப்பற்றிய கதைகள்.

0. சரிய பிடக .... முன் ஜன்மங்களில் புத்தருடைய

அபூர்வச் செயல்கள்.

i. தீர்க நிகாயத்தில் அடங்கியவற்றுள் மிகக் கியாதி பெற்ற சூத்திரங்களைச் சுட்டிக் காட்டுவோம். புத்தருடைய அந்திய காலத்தைப்பற்றிய விவரங்களும் அவர் சீஷர்களுக்குச் செய்த சரமோபதேசமும் அடங்கியது மஹா பரிநிர்வாண சூத்திரம். இதுவே பௌத்த மறைத் தொகுதியில் மிகவும் தொன்மையுடையது எனலாம்.

பிரம்மம், ஆன்மா, ஈசுவரன் முதலிய கொள்கைகளை ஆராய்ச்சி செய்யும் பிரஹ்ம ஜால சூத்திரம் ; இல்வாழ்பவரின் கடமைகளைக் கூறுவது ஸ்ருகால வாத சூத்திரம் ; துறவறத்தின் பெருமையை விளக்குவன ஸமண்ண பல சூத்திரமும், பப்பஜ்ஜ சூத்திரமும் ; நான்கு பாவனைகளைக் கூறும் தெவிஜ்ஜ சூத்திரம்.

ii. மஜ்ஜிம அல்லது மத்தியம் நிகாயம் தீர்க நிகாயத்தில் உட்பட்ட சூத்திரங்களை விடக் குறுகிய சூத்திரங்களின் தொகுதியாம். சில உரைகள் ஸுத்தாந்தம் என்றும் வாதம் என்றும் பெயருடையனவாயிருக்கின்றன. அசோகனுடைய உள்ளம் திடீரென மாறினதற்குக் காரணத்தை ரட்டபால சூத்திரம் என்பது விளக்குகிறது என்று சொல்லலாம். அயல் நாடுகளைக் கைப்பற்ற வேண்டுமென்ற அரசருக்குரிய பேராசை மற்றப் பேராசைகளைப் போலவே இழிவு என்று இங்கு விளக்கப்படுகிறது.

iii. விஷயத்தின் ஒற்றுமைபற்றித் தொகுக்கப்பட்டது ஸம்யுக்த நிகாயம் என்பது, ஒரே விஷயத்தைப் பற்றிய பல உரைகளுக்கு அல்லது ஒரே ஒருவனுக்காகச் செய்யப்பட்ட பல உபதேசங்களுக்கு ஸம்யுக்தம் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் இந்த நிகாயத்தில் ஐம்பத்தைந்து ஸம்யுத்தங்கள் உண்டு, உதாரணமாக, இந்த நிகாயத்தில் நான்காவது ஸம்யுத்தத் திற்கு மாரஸம்யுத்தம் என்று பெயர். அஃதாவது, மாரனைப் பற்றிக் கூறும் சூத்திரங்கள். இவ்விதமே ஐந்தாவது பிக்குணி ஸம்யுத்தம் ; பிக்குணிகளை அஃதாவது பெண் - துறவியரைப்பற்றிக் கூறுவது.

iv. அங்குத்தர நிகாயம் த்ரிபிடகத்துள் மிகவும் விரிந்த பாகம், இதில் 2308 சூத்திரங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நிகாயம் பதினொரு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. பௌத்தர்களுடைய தத்துவஞானத்தின் படி எல்லாப் பொருள்களும் விஷயங்களும் ஒவ்வொரு எண்களால் குறிக்கப்படும். புத்தர்கள் இரண்டுவகைப்படுவர். பிரத்தியேக புத்தர்கள், ஸம்யக் ஸம் புத்தர்கள். இதுபோலவே, மூன்றுவகைத் துறவிகள், நான்குவகை நன் முயற்சிகள், ஐந்து வகைப் பாவனைகள் (அல்லது தியானங்கள்) ஆறுவித வித்திகள், உண்மை ஞானத்தைத் தரும் ஏழுவிதக் கருவிகள், நிர்வாணத்தை அடைவதற்கான எட்டு வித படிகள், பாரமிதை எனப்படும் புத்தரது பத்து அரும்பெரும் குணங்கள் இவ்வாறு பல சங்கதிகளும் எண்களைக்கொண்டு குறிப்பிடப்படுகின்றன. ஆதலால் சூத்திரங்களும் இம்முறைப்படி அங்குத்தர நிகாயத்தில் அடுக்கப்படுகின்றன. முதலாவது அத்தியாயத்தில் ஒருமைத் தன்மையுடைய விஷயங்களையும், இரண்டாவது அத்தியாயத்தில் இரட்டைத் தன்மையுடையனவற்றையும், மூன்றாவது அத்தியாயத்தில் முத்தன்மையுடையனவற்றையும், இங்கனமே மற்ற அத்தியாயங்களில் அவ்வவ்வத்தியாயங்களின் எண்ணால் குறிப்பிடப்படும் விஷயங்களையும் இம்மறைத் தொகுதியின் ஆசிரியர் கூறுகின்றார்.

அசோகனுடைய பாட்ருசாஸனத்தில் வரும் அலியவ ஸானி (= ஆரியரின் ஸித்திகள்), அனாக தபயானி (= வரப் போவதைப்பற்றிய அச்சம்) என்ற இரண்டும் இந்த நிகாயத்தில் வரும் சூத்திரங்களேயாம்.

V. குத்தக நிகாயம் என்பது பதினைந்து பிரத்தியேகமான நூல்கள் அடங்கிய தொகுதி. இதில் அடங்கிய சில நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை ; சில மிகவும் பழமையானவை. சில மிக அழகிய இலக்கியங்களென மதிக்கத்தக் கலை. ஆயினும், ஸகல பௌத்தர்களும் ஒப்புக்கொள்ளாதனவும் பிற்காலத்தில் தோன்றியனவுமாகிய நூல்களும் இத்தொகுதியில் இருக்கின்றன. இதில் அடங்கிய பதினைந்து நூல்களையும் ஒன்றுபோல விவரிக்கவேண்டியது அவசியமில்லை. முக்கியமானவற்றைக் கீழே குறிப்பிடுவோம்.

B. தம்மபத. இந்நூல் ஐரோப்பாவிலுள்ள பல பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதிலுள்ள 423 நீதிவாக்கியங்கள் திருவள்ளுவர் செய்த குறட்பாக்களைப்போலவும் பர்த்ருஹரியின் நீதிசுலோகங்களைப் போலவும் மிக இனிமையாகவும் அழகாகவும் திகழ்கின்றன.

E. ஸூத்த நிபாத. இதில் 71 சிறு சூத்திரங்கள் இருக்கின்றன. இதில் அடங்கிய சூத்திரங்கள் மிகப் புராதனமானவை யென்று அறிஞர்களால் கருதப்படுகிறது, அசோகனுடைய பாப்ரு சாஸனத்தில் சொல்லப்படும் “ உபதிஷ்யன் கேள்விகள்" என்ற உரை இந்நூல் 54-வ தாகிய சாரிபுத்திர சூத்திரம் என்று கருதப்படுகிறது. மோனேய ஸூத்திரமும் இந்நூலில் உள்ளதே. அது 12-வது உரை. ராஹுல சூத்திரம் என்ற பெயருடைய உரை ஒன்றும் இந்நூலில் காணப்படுகிறது (23-வது சூத்). இது பாப்ரு சாஸனத்தில் குறிப்பிடப்படும் உப தேசமே என்று நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை. மஜ்ஜிம நிகாயத்திலும் ராஹுல வாதம் என்ற ஒரு சூத்திரம் இருக்கிறது.

H & I. தேரகாதை, தேரிகாதை. பாப்ரு சாஸனத்தில் முனிகாதா அல்லது முனிகளின் கீதங்கள் என்று கூறப்பட்ட உரை தேரகாதை என்று நமக்குத் தோன்றுகிறது. பௌத்த மதத்தின் அறிவு வளரவளர தேரகாதை, தேரிகாதை என்ற நூல்கள் அதிகமாகப் புகழ்பெறும். ஏனென்றால் இந்நூல்களில் அடங்கிய பாடல்களில் எல்லோருடைய இதயத்தையும் உருக்கக்கூடிய மனோபாவங்கள் காணப்படுகின்றன. தேரகாதை என்பது தமது வாழ் நாட்களிலேயே விடுதலைப் பதவியை அடைந்த மஹான்களுடைய கீதங்களாம். தேரிகாதை என்பது முன்கூறிய உயர் நிலையை அடைந்த ஸ்திரீகளால் இசைக்கப்பட்ட பாடல்கள். இவ்விரு புஸ்தகங்களிலுள்ள கீதங்களில் துறவறத்தில் திருப்தியும், மகிழ்ச்சியும், சாந்தமும், அமைதியும், சுற்றத்தாரிடம் அன்பும் அனுதாபமும், உயிர்ப் பிராணிகளிடம் ஈவும், இரக்கமும், இயற்கை வனப்பில் ஈடுபடும் பரிசுத்த மனமும் மிக மேன்மையாக விளங்குகின்றன.

J. ஜாதக. இக்கதைகளைப்பற்றி அவதாரிகையில் 62-ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம், புத்தர் போதி விருக்ஷத்தின் அடியில் பூர்ண ஞானத்தை அடைந்ததும் அவருக்குப் பூர்வ ஜன்மங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் யரவும் அகக்கண்ணில் விளங்கினவாம். அவருடைய . தர்மோபதேசங்களில் அவர் - தம்மையே திருஷ்டாந்தமாகக் கூறுவது வழக்கம், தாம் முன்னொரு காலம் புலியாயிருந்ததாகவும், யானையாயிருந்ததாகவும், ஓர் ஏழை விறகுவெட்டியாயிருந்ததாகவும் கூறி, ஓர் ரசமான கதையைச் சொல்லி அவர் தாம் வற்புறுத்த எண்ணங்கொண்ட நீதியை விளக்குவார். இம்முறை அவருடைய தர்ம போதனைக்கு ஏற்றதாயிருந்தது. பிற்காலங்களில் புத்தர் தமது பூர்வ ஜன்ம நிகழ்ச்சிகள் என்று கூறிய கதைகள் திரட்டப்பட்டன. ஜாதக என்ற நூல் இக்கதைகளே, இங்கு 449 ஜாதகக்கதைகள் அடங்கியிருக்கின்றன. "சிங்கத்தின் தோலைப் போர்த்துத் திரிந்த கழுதை" போன்ற கதைகள் பல ஜாதகங்களில் உண்டு. இக் கதைகளின் உரையில் பல வித்தியாசங்களையும் நாம் காணலாம்.

குத்தக நிகாயத்தில் அடங்கிய மற்ற நூல்களைப்பற்றி அந்நூல்களின் பெயருக்கு எதிராகவே சிறு குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளவும்.

3. அபிதர்மபிடகம்

ஸூத்த பிடகத்தில் பிரதிபாதிக்கப்படும் தர்மங்களும் தத்துவங்களும் இன்னும் விரிவாக இங்குக் கூறப்படுகின்றனவேயன்றி புது விஷயங்கள் கிடையா. பெரும்பாலும் இப் பிடகத்தில் அடங்கிய நூல்கள் பிற்காலங்களில் எழுதப்பட்டனவும் ஒரு சாராரின் தத்துவ ஞானத்தை மாத்திரம் விளக்குவனவுமான கிரந்தங்களாம். இவற்றை இங்கு விவரித்துக் கூறுவது அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை.

1. தர்மஸங்கானி ஜீவிதத்தின் நிலைமைகளைப்பற்றி.
2. விபங்க சம்பாஷணைகள்.
3. கதாவஸ்துப் பிரகரண 1000 தவறான கொள்கைகளுக்கு மறுப்புரை.
4. புத்கல ப்ரக்ஞத்தி ஆன்மாவைப் பற்றிய அறிவு.
5. தாது கதா மானிட குணங்களின் விவரம்.
6. யமக பத்து இரட்டைகள்.
7. ப்ரஸ் தானப் பிரகரண காரிய காரணங்களின் விளக்கம்.

கதாவஸ்து என்ற நூல் இயற்றப்பட்ட அவசரத்தைப்பற்றி முன்னே 37-ம் பக்கத்தில் கூறியுள்ளோம். வினய பிடகத்தில் அடங்கிய மூன்று கிரந்தங்களும் ஸுத்த பிடகத்தில் அடங்கிய முதல் நான்கு நிகாயங்களும், குத்தக நிகாயத்தில் அடங்கிய பதினைந்து நூல்களும், அபிதர்ம பிடகத்தில் அடங்கிய ஏழு நூல்களும் சேர்ந்து இருபத்தொன்பது கிரந்தங்களாகின்றன. இவற்றைத் தென் பௌத்தர்களுடைய திருமறை என்று கூறுதல் தகும். வடக்கிலுள்ள பௌத்தர்களிடத்தில் இந் நூல்கள் யாவும் கிடையா. இங்குக் காணப்படாத வேறு பல நூல்களும் அவர்களிடம் இருக்கின்றன. இவை பல வெகு மேன்மையானவை யென்றாலும் அசோகனுக்குப் பிற்காலத்தில் உண்டானவை. இலங்கை, பர்மா முதலிய தென் பௌத்த நாடுகளிலும் பிடகங்களில் அடங்கிய நூல்களுக்கு உரையாகவும் வியாக்கியானமாகவும் சங்கிரகமாகவும் மற்றும் பல நூல்கள் பாலிபாஷையில் ஏற்பட்டன. மொத்தமாக பௌத்தமத நூல்கள் எவ்வளவு என்பதைக் கூறுதலும் எளிதல்ல.

அசோகனுடைய சகோதரனான மஹேந்திரனும் சகோதரி சங்கமித்திரையும் சேர்ந்து போதி விருக்ஷத்தின் கிளையை சிங்களத்திற் கொண்டுபோய் நாட்டியதை விட முக்கியமான செய்தி உலகசரித்திரத்தில் இல்லை. இதுவே, தற்காலத்தோருக்கும் எதிர்காலத்தோருக்கும் உபயோகப்படுமாறு முற்காலத்திய பௌத்த சமய நூல்கள் ஏடுகளிற் பதிந்து காப்பாற்றப்பட்டதற்கு ஏதுவாயிற்று, பலகாரணங்களால் இந்துஸ்தானத்தின் போதி விருக்ஷம் செழித்து வளரவில்லை. உபநிஷத்துகள் என்ற உயர் மரங்களின் அடர்ந்த நிழலானது அவற்றின் அடியில் தோன்றிய போதிமரத்தைச் செழித்து வளரவிடவில்லைபோலும், தென் தீவில் நாட்டப்பெற்ற விருக்ஷமோ, தழைத்து ஓங்கி வளர்ந்து தனது தாயாகிய இந்துஸ்தானத்துப் போதி விருக்ஷம் க்ஷணதசை அடைந்த காலத்தில் அவளுக்குப் பக்கபலமாயிருந்து, இன்னும் பல விதத்தில் உதவி, தற்காலத்தில் தனது கன்றை உலகத்தில எல்லோருக்கும் நிழல்கொடுத்து உதவத்தக்க விருக்ஷமாக வளரச் செய்திருக்கிறது. ஏனென்றால், இன்னும் ஐரோப்பாவிலுள்ள பல தத்துவஞானிகள் க்ஷணிகவாதம் முதலிய பழைய பௌத்தக் கொள்கைகளைப் புதிய விதத்தில் உரைத்து வருகின்றார்கள். பண்டைத் தமிழர் பலரும் பௌத்தசமயமானது மேன்மையான சத்தியமென்றும், எல்லோருக்கும் பொதுவென்றும் நம்பினவராவர் என்பதும் நாம் உணரத்தக்கது. அது கீழ்வரும் மேற்கோள்களால் விளங்கும்,

“ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி,
‘விலங்கும் தம்முள் வெரூஉம்பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க’ என்று உள்ளம் கசிந்துக,
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்றம்; மருங்கில் குற்றங் கெடுக்கும்
பாதபங்கயம்.”

மணிமேகலை. IC-61-66.

திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக உருமேவி அவதரித்த உயிரனைத்தும் உயக்கொள்வான், இவ்வுலகும் கீழுலகும் இசை உலகும் இருள் நீங்க, எவ்வுலகும் தொழுதேத்த, எழுந்த செழும் சுடரென்ன இலங்குகதிர் ஓரிரண்டும் விலங்கிவலம் கொண்டுலவ, வலங்குசினைப் போதியின் கீழ் அறம் அமர்ந்த பெரியோய் நீ.

வீரசோழியம் (மணிமேகலை, பக்கம், 306ல் வரும் மேற்கோள்.)