அடிமனம்/அடிமனம் வகுத்த வாய்க்கால்
சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிகமாக அன்புகாட்டுவதில்லை. குழந்தைகளிடம் அன்பிருந்தாலும் சாதாரணமாக அதை வெளிக்குக் காட்டுவதில்லை. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப் பட்டால் அப்பொழுது அவற்றினிடம் விசேஷமான அன்பும் கவனமும் செலுத்துவார்கள். நோய் வந்துவிட்டதே என்று பெரிதும் கவலைப் படுவார்கள். இதைக் கண்டு ஒரு சில குழந்தைகள் அந்த அன்பையும் கவனத்தையும் பெறுவதற்காகவே நோயாகப் படுத்து விடுவதுண்டு. குழந்தை தெரிந்தே அவ்வாறு செய்வதாகக் கருத வேண்டியதில்லை. எப்படியோ அந்த நிலைமை உண்டாகுமாறு இந்த மாய மனம் செய்து விடுகிறது.
சிலருக்கு எதிர்பாராத ஒரு துரதிஷ்டம் அல்லது துன்பம் வந்துவிடுகிறது. அவர்களில் ஒரு சிலர் ஏதாவது ஒரு துறையில் தங்கள் மனத்தை முழுவதும் செலுத்தி அந்தத் துன்பத்தை மெதுவாக மறக்கிறார்கள். ஒருவர் சமூக சேவையிலே ஈடுபடலாம்; ஒருவர் கலைத் துறையிலே இறங்கலாம்; ஒருவர் ஒரு பெரிய தொழில் முறையிலே செல்லலாம். இவ்வாறு ஏதாவது ஒரு துறையில் சென்று தங்கள் துன்பத்தை மறக்கிறார்கள். மற்றும் சிலருக்கு இவ்வாறு ஒன்றும் செய்ய முடிகிறதில்லை. துன்பத்தை மறக்கவும் முடியாமல் அதை எதிர்த்துப் போராடி உண்மையை உணர்ந்து துணிவோடு நிற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள். இப்படிப் பட்டவர்களிடந்தான் மனக்கோளாறுகள் தோன்றுகின்றன.
வேறொரு வகையில் மனக் கோளாறுகள் தோன்றுவதையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மனத்திலே ஏதாவதொரு இச்சை தோன்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது இழிந்ததாக இருக்கலாம் அல்லது சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதே சமயத்தில் அந்த இச்சையை எதிர்த்து வேறொரு சக்தி மனத்தில் தோன்றுகிறது. இரண்டிற்கும் நனவு மனத்திலேயே போராட்டம் நடைபெறுகிறது. “அந்த இச்சைப்படி நடக்கக் கூடாது; அது இழிந்தது” என்கிற சக்தி வலுவடைந்து விடுகிறதென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்த இச்சையின் வலுக் குறைந்து மறைந்து போகிறது. இவ்விதம்தான் சாதாரணமாக வாழ்க்கையில் பெரும்பாலும் நடைபெறுகிறது.
இந்தச் சமயத்திலே பிராய்டு மனத்தை எவ்வாறு பகுத்து நோக்குகிறார் என்பதைச் சற்று விரிவாக நாம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நனவு மனம், நனவடி மனம், நனவிலிமனம் என்று மனத்தைப் பிரிப்பது ஒருவகை. இன்னொருவகையான பிரிவினையை அடுத்த பக்கத்தில் காட்டியுள்ள படம் விளக்குகிறது.
குழந்தை பிறக்கின்றபோது அதற்கு இயல்பூக்கமாக அமைந்துள்ள சில உந்தல்களும் ஆசைகளுமே இருக்கின்றன. இவைகளெல்லாம் குழந்தைக்கு ஏதாவது ஒருவகையில் இன்பங் கொடுக்கக்கூடியனவாகவே அமைந்தவை. அதாவது குழந்தையின் மனம் பெரும்பாலும் இன்பம் தரும் செயல்களைத் தூண்டும் உந்தல்களைக் கொண்டதாகவே முதலில் அமைந்திருக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். இதற்கு இத் (Id) என்று பெயர். இது நனவிலி மனப்பாகமுமாகும். இதுதான் லிபிடோவின்மனமும் அதன் பகுதிகளும்
(கற்பனையான பிரிவினை)
தொடர்புடையது என்றும் கூறலாம். இதிலிருந்துதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் செல்கின்றன. இச்சையானது தூய்மையடைந்து சமூகத்திற்கு ஏற்றதான உந்தலாக மாறுவதும் இங்கேதான். இவ்வாறு இழிந்த இச்சைகள் தூய்மையடைவதை உயர்மடை மாற்றம் என்று கூறுவார்கள். இயல்பான உந்தல்கள் அதாவது இயல்பூக்கங்கள் இத்திலிருந்து முக்கியமாக வேலை செய்வதுபோல புலக்காட்சி (Perception) அல்லது புலன் உணர்வு அகத்திலிருந்து முக்கியமான வேலை செய்கிறது. இது நன்னெறியைப் பின்பற்ற முயல்கிறது என்று கூறலாம். ஆனால் தூங்கிப் போவதும் உண்டு. அகம் மூன்று விதமான சக்திகளால் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. வெளியுலகம் அல்லது சமுதாயத்திற்கு அது கட்டுப் படவேண்டும். அதீத அகத்தின் (Super Ego) ஆணையையும் கவனிக்க வேண்டும்; அதே சமயத்தில் இத்திலிருந்து கூத்தாடும் லிபிடோவின் ஆதிக்கத்திற்கும் உட்பட வேண்டும்.
இத்திலிருந்து கிளம்பும் உந்தல்களையும் இச்சைகளையும் திருப்திப் படுத்த இந்த அகம் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கும்; தீமையேற்படாத முறையிலே இந்தத் திருப்தியுண்டாக்குவதற்கு அது முயலும். அப்படிச் செய்யாமல் வேறு சில சமயங்களிலே இத்தின் இச்சைகளை விட்டொழிக்கும் படியோ அல்லது அவற்றை மாற்றியமைத்துக் கொள்ளும்படியோ தூண்டும்; அல்லது அந்த இச்சைகளைத் திருப்தி செய்யும் காலத்தைத் தள்ளிப் போடவாவது முயலும்.
இத்துக்கும் அகத்திற்கும் இடையே போராட்டம் நிகழும். அகத்தால் அடக்கப்பட்ட இச்சை இத்தில் அமிழும்போதுதான் சிக்கலும் மனக் கோளாறும் ஏற்படக் காரணமாகின்றது.
அதீத அகம் என்பது அகத்தினின்று தோன்றியதாகும். இது பெரும்பாலும் நனவிலி நிலையிலிருந்து வேலை செய்கிறது. இதற்கு அகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையுண்டு. இது அவ்வப்போது அகத்தினிடமுள்ள குறைகளைக் கண்டு இடித்துக் கூறுகிறது. அதீத அகத்தை மனச்சான்று என்று கூறலாம். இது சமூகம் வகுக்கின்ற ஒழுக்க முறையை ஏற்றுக் கொண்டு அகத்தை அதற் கேற்றவாறு நன்னெறியில் நிறுத்த முயல்கின்றது. அகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற போதுதான் அடக்கப் பட்ட இச்சைகள் இத்துக்குச் சென்று பலவித மனக் கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.
இங்கு நாம் அடக்கலுக்கும் ஒடுக்கலுக்கும் (Suppression) உள்ள வித்தியாசத்தை நன்கு மனத்திற் கொள்ள வேண்டும். அடக்கல் என்பது நனவிலி நிலையில் நடப்பது; அடக்கப்பட்ட இச்சை இத்துக்குச் சென்று கோளாறுகளை உண்டாக்கக் காரணமாக இருக்கும். ஆனால் ஒடுக்கல் என்பது நனவு நிலையில் நடப்பது. என்னென்னவோ ஆசைகள் நம்மை அடிக்கடி பீடிக்கத் தொடங்குகின்றன; அவற்றை நாம் ஒடுக்க வேண்டியிருக்கிறது. இது நியாயமானதும் இயல்பானதுமான செயலாகும். இப்படி ஒடுக்குவதால் எவ்விதத் தீங்கும் விளைவதில்லை. நாகரிகமான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவனுக்கு இது அவசியமுமாகும்; இதனால் அவன் நன்மையே அடைகிறான்; சமூகமும் அமைதியோடு இருக்கின்றது.