அட்லாண்டிக் பெருங்கடல்/அட்லாண்டிக் ஆராய்ச்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search9. அட்லாண்டிக் ஆராய்ச்சி

அட்லாண்டிக் கடலில் நடைபெற்ற ஆராய்ச்சியினால் பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு:

கனி வளம்

இக்கடலின் செங்களிமண்ணில் 220 டிரில்லியன் அலுமினியமும், 650 டிரில்லியன் டன் இரும்பும், 73 டிரில்லியன் டன் டிட்டானியமும், 15 டிரில்லியன் டன் வெனாடியம், கோபால்ட், நிக்கல், செம்பு, காரியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.

நிலக் காந்தப்புலம்

இக்கடலின் மேற்பரப்பு நிலக் காந்தப்புலத்தை அறிய ஜாரியா (Zarya) என்னும் கப்பல் பயன்பட்டது. நார்வே கடற்கரை, அட்லாண்டிக்கின் வட தென் பகுதிகள் ஆகியவை அருகே காந்தப் பிறழ்ச்சிகள் காணப்படுகின்றன. அவை அட்லாண்டிக் கடல் தரையின் அமைப்பு விந்தைகளுக்குக் காரணமாய் உள்ளன. எனவே, மேற்கூறிய கப்பல் ஆராய்ச்சி நடைபெற்றது.

குடைவும் எரிமலையும்

இக்கடலில் உள்ள பெரிய குடைவுகளில் (Canyons) பிரான்சும், அமெரிக்காவும் ஆராய்ச்சி நடத்தியுள்ளன. அட்லாண்டிக் கடலின் இரு பக்கங்களையும் தள்ளும் எரிமலைச் செயலுக்குச் சான்று தேடவே ஆராய்ச்சி நடைபெற்றது.

தென் அட்லாண்டிக் கடலில் நன்னம்பிக்கை முனைக்கு 550 மைல் தொலைவில் ஒரு பெரிய மலை உள்ளது. கடலின் அடியிலிருந்து இதன் உயரம் 15,980 அடி. இதன் கூம்பு வடிவம், இஃது ஓர் ஓய்ந்தொழிந்த எரிமலை என்பதைக் காட்டுகிறது.

அர்ஜண்டைனா கடற்கரைக்கு அப்பால் தென் அட்லாண்டிக் கடலில் ஒரு பெரிய குடைவு உள்ளது. ஒலிப்பு அளவீடுகளிலிருந்து இதுபற்றித் தெரியும் செய்திகளாவன. கடல் தரையிலுள்ள இக்குடைவு கீழே ½ - 1 மைல் ஆழமும், மேலே 5 - 12 மைல் அகலமும், நீளம் பலநூறு மைல்களும் உள்ளன. அர்ஜண்டைனா வழியாக ஒரு காலத்தில் ஓடிய பனிக் கால ஆற்றிலிருந்து வந்த படிவினால் இக்குடைவு உருவாகியுள்ளது என அறிவியலார் நம்புகின்றனர்.

1965-இல் அமெரிக்காவும், பிரான்சும் அட்லாண்டிக் கடலில் உள்ள பியர்டோ ரிகோ அகழியினை (Puerto Rico Trench) ஆராய்ந்தன. இது 450 மைல் நீளமுள்ளது. அடியிலுள்ள சமவெளி 150 மைல் நீளமும் 27,150 அடி ஆழமும் உள்ளது.

ஐஸ்லாந்து

இது ஒரு நீர் கீழ்ப்பள்ளத்தாக்கு; அட்லாண்டிக் கடலின் மைய மலைத்தொடரின் பகுதியாக உள்ளது. பிளவுப் பள்ளத்தாக்கு இத்தீவின் குறுக்கே நேரடியாகச் செல்கிறது. வெளியே தெரியும் மற்றொரு பகுதி சாக்கடலிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வரை செல்கிறது. இப் பள்ளத்தாக்குகள் இயக்கம் உள்ளவை, இவை அடிக்கடி நில நடுக்கங்களை உண்டாக்குகின்றன. ஐஸ்லாந்து போல், சில இடங்கள் எரிமலை ஆக்கம் கொண்டவை. கடல் தரை விரிந்து செல்லுதல்

அட்லாண்டிக் கடலின் தரை மையத்திலிருந்து அதன் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது. ஐரோப்பாவிற்கு அப்பால் படிப்படியாக வட, தென் அமெரிக்கா நோக்கி அது நகர்கிறது.

எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் ஓரே நிலத் தொகுதியாக இருந்தன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்டு அவை விலகத் தொடங்கின. இது பரவலாக உள்ள கொள்கை. இவ்வாறு தரை நகர்ந்து செல்வது இக் கொள்கைக்கு அரவணைப்பாக உள்ளது.

அட்லாண்டிக் மைய மலைத்தொடர் கடலுக்குக் கீழுள்ள பகுதியாகும். இதிலிருந்து கண்டங்கள் விலகிச் செல்கின்றன. உண்மையில் இந்த மலைத் தொடர் தொகுதி ஒரு பள்ளத்தாக்கினால் பிரிக்கப்பட்ட இரு மலைத்தொடர்கள் ஆகும். இங்கு எரிமலையாக்கமும், நில நடுக்கமும் உண்டு. இம் மலைத் தொடர் தொகுதியிலிருந்து கடல் தரை வெளிப்புறம் நகர்கிறது என்பதற்குச் சான்று கிடைத்துள்ளது.

அட்லாண்டிக் வளையம்

சிறிய வளையங்கள் மைய அட்லாண்டிக் பகுதியிலுள்ளன. இவற்றில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. தவிர இதில் எரிமலைகளும் காணப்படுகின்றன. கிழக்கு இந்தியத் தீவுகள், கிழக்கு அட்லாண்டிக் தீவுகள் ஆகியவை இதில் அடங்கும் எரிமலையாக்கம் உள்ள பகுதிகள்.

.