அணியும் மணியும்/அவல ஓவியங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9. அவல ஓவியங்கள்

புலவர்கள் எடுத்துச் சொல்லும் பொருள் இன்பப் பொருளாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. துன்பப் பொருளையும் தம் கவிதைப் பொருளாக்கிச் சுவையூட்டும் இயல்பினர் புலவர். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சொல்லும்பொழுது அவலச்சுவை தோன்றுமாறு செய்து, அந்த நிகழ்ச்சிகளில் பரிவு உணர்ச்சி உண்டாக்கிவிடுகின்றனர்.

இன்ப வேட்கையில் கொண்டுள்ள ஆர்வத்தைப் போலவே பிறர் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற ஆர்வமும் மனிதன்பால் இயல்பாக உள்ளது. அதனால்தான் இலக்கியச் செய்திகளில் துன்பத்தைப் பற்றிச் சொல்லும்பொழுது அத் துன்பத்தில் பங்கு கொண்டு பரிவும் இரக்கமும் பெறுகிருேம். அந்த இரக்க உணர்வு அந்தக் காவிய மாந்தர்களின் வாழ்வோடு ஒன்று படச் செய்து இலக்கியச் சுவையில் ஆழ்த்திவிடுகிறது. இன்பம் ஒரு சிலருக்கே தனியுரிமையாகவும் ஆகலாம். எனினும் துன்பம் உலகத்தின் பொது உடைமையேயாகும். வாழ்க்கையில் துன்பமுறாதவர் இரார் என்பது வாழ்வில் காணும் உண்மையாகும்.

பொதுவாக இன்பம் வரும்பொழுது அதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் ஒன்று சேர்வதில்லை. மெல்ல மெல்ல மனம் அதற்கு வேண்டிய அடிப்படைகளைப் பெற்றுத் தன்னைச் சூழ்நிலைக்கேற்றவாறு சரிப்படுத்திக் கொள்கிறது. துன்பம் எதிர்பாராமல் சில சமயங்களில் ஏற்பட்டுவிடுவதால் அவ்வுணர்வு ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும் இன்பம் இல்லையென்றாலும் துன்பம் வந்தால் அதனை அமைதியாக ஏற்றுக்கொண்டிருக்க வியலாது. அதனை ஒழிக்கப் பெருமுயற்சி நடைபெறுவது இயல்பாகிறது. அதனால் இன்ப உணர்வை விடத் துன்ப உணர்வு யாவர்க்கும் பொதுமையாகிறது; ஆழமாகப் பதிகிறது; மக்கள் உள்ளத்தைத் தாக்க வல்லதாகிறது. காவியத்திலும்; மற்றைய கலைத்துறையிலும் மாந்தர் உள்ளத்தைக் கவரக்கூடிய உணர்வுகளில் அவலச்சுவையே ஆழ்ந்த உணர்வைத் தெரிவிப்பதாக அமைகிறது. கோவலனின் திருமணச் செய்தியைவிட அவன் கொலையுண்ட செய்தியே அக் காவியத்தின் அடிப்படை உணர்வு என்று கூறலாம். கோவலன் காதலில் பாராட்டும் பாராட்டுரையைவிட அவன் சாதலுக்காக அவள் அழும் அழுகை உரையே ஆழ்ந்த உணர்வு பெற்றுள்ளது.

அன்பனை இழந்தேன் யான் அவலங் கொண்டு அழிவலோ

என்று கேட்பது உள்ளத்தைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது.

இன்ப வாழ்வில் தொடங்கி இன்பத்தில் முடியும் இன்பியல் கதைகள் பொதுவாக இடையில் துன்பம் நிறைந்த காட்சிகளைப் பெற்று அவற்றைப் போக்கும் நிகழ்ச்சிகளைப் பெரும் பகுதியாகக் கொண்டு விளங்குகின்றன. துன்பியல் கதைகள் இறுதியில் துன்பத்தில் முடிந்து துயரத்தில் ஆழ்த்திவிடுகின்றன. நாடகங்களின் போராட்டப் பகுதிகளும் துன்பத்தைப் போக்கும் பகுதியையே கொண்டு விளங்குகின்றன. துன்பம் வாழ்க்கையைப் பாழ்படுத்துகிறது; அஃது இலக்கியத்தில் சுவையும் ஆழமும் தந்து அதனை அழகு செய்கிறது.

இந்த அழுகை உணர்வு தோன்றுவதற்கு வாழ்வில் ஏற்படும் துன்ப நிகழ்ச்சிகளே காரணமாகின்றன. வாழ்க்கை சுமையாக ஆகும்பொழுது அழுகை வெளிப்பட்டு அதனை ஆற்ற முற்படுகிறது. இத்துன்ப நிகழ்ச்சிகளுள் வாழ்க்கைக்குத் துணையாக உள்ளவரைப் பிரிதல் பெரிதாகும். உயர்ந்த நிலையினின்று வாழ்வில் தாழ்வு அடைவதும் துன்பத்திற்குக் காரணம் ஆகின்றது. இவையேயன்றி வறுமையால் வாடும் துன்பமும் அதனால் அடையும் இழிநிலையும் மக்களுக்கு ஏற்படுகின்ற பொதுத் துன்பங்கள் எனலாம். இவற்றால் தான் பொதுவாக அவல நிலை ஏற்படுகின்றது என்று கூறுவர்.

இவ்வாறு வரும் துன்ப நிகழ்ச்சிகளை இலக்கியம் ஓவியமாகத் தீட்டும்பொழுது அவலச்சுவை பிறக்கின்றது. இந்த அவல ஓவியங்கள், இவ்விலக்கியப் பகுதிகளைக் கற்பார் உள்ளத்தில் அழியா இடம் பெறுகின்றன.

நாட்டைவிட்டு இராமன் காட்டுக்குச் செல்கிறான் என்ற செய்தியைக் கேட்டுத் தசரதன் மட்டும் துன்பப்படவில்லை. அந்த நாட்டில் உள்ள மக்களும் பிற உயிர்களும் அழுதன என்று கம்பர் இராம காதையில் கூறும்பொழுது அக்காட்சி சிறந்த அவல ஓவியமாக அமைகிறது. இராமனது பிரிவால் அந்த நாட்டில் உள்ள ஆவும் அழுதன; அவற்றின் கன்றுகளும் அழுதன; அன்றலர்ந்த பூவும் அழுதன; பிள்ளையழுதன; கிள்ளை அழுதன என்று அந்தத் துன்ப உணர்வை எல்லா உயிர்கட்கும் ஏற்றிக் காட்டிப் படிப்பார் உள்ளத்தில் அவலச்சுவையை அவர் உண்டாக்கிவிடுகின்றார். மேலும், அதே தொடர்ச்சியில் பிற உயிர்களும் உயிரற்ற சோலை நீர் முதலியனவும் இராமன் பிரிந்தான் என்ற செய்தியால் அழுது கலங்கின என்று கூறுகின்றார்,

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்

- நகர் நீங்கு. 100

ஆவும் அழுத; அதன் கன்றழுத; அன்றலர்ந்த
பூவும் அழுத; புனற் புள்ளழுத; கள்ளொழுகுங்

காவும் அழுத; களிறழுத; கால்வயப்போர்
மாவும் அழுத; அம் மன்னவனை மானவே

- நகர் நீங்கு. 102

என்று அவர்களின் அழுகையைத் தனித் தனியே கூறி அவலத்தை மிகுவிக்கின்றார்.

இவ்வாறு சேண்தூரம் சென்று பிரிந்து வாழ்வதால் அவரைப் பிரிந்தவர் அடையும் துன்பத்தைவிட, உயிர் துறந்தவரைப் பிரிந்து வாழ்வது கொடுமையினும் கொடுமையாகும். அவர்களுள்ளும் நெருங்கிய உறவினருள் செறிந்த நட்பாலும், அன்பாலும், ஆழ்ந்த உணர்வாலும் உள்ளம் ஒன்றுபட்டவர்களுள் ஒருவர் பிரிந்தாலும் மற்றவருக்கு அத்துன்பம் மாறா வடுவாக நின்றுவிடுகின்றது. புறநானூற்றில், நட்பும் பெட்பும் கொண்டு நெல்லிக்கனியை அதன் பெருமையைச் சொல்லாது அவ்வைக்குக் கொடுத்த வள்ளலாக விளங்கிய அதியர்கோன் ஆருயிர் துறந்தபோது, அந்த அவலத்தைத் தாங்காமல் அரற்றிய அவ்வையாரின் கையறுநிலைப் பாடல், அவன் பேணிவந்த பாணரும் பாவலரும் சுற்றமும் பற்றுக்கோடு இன்றிச் செயலற்றுச் சோர்வுற்ற செய்தியைக் கூறுகின்றது. பாணர்பால் கொண்டிருந்த நட்பால், அவன் பெட்புடன் பெருவளம் நல்கி அவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்துண்ட மாண்பையும், நாவலர் நாவன்மை இழக்கும் நிலையையும், சுற்றத்தினர் சோர்வால் சிந்தும் கண்ணீரையும் தம் கண்ணீரைக் கொண்டு ஓவியமாகத் தீட்டக் காண்கிறாம்.

“அதியமான் தான் வாழுங் காலத்தில் சிறிய அளவுள்ள கள் கிடைத்தால் அதனை எங்களுக்குக் கொடுத்து அவன் மனமகிழ்வு கொள்வான்; மிகுந்த அளவுள்ள கள் கிடைத்தால் நாங்கள் பாட அவன் மகிழ்ந்து உண்பான். சிறு அளவு உணவு இருந்தாலும் அதனைப் பல கலத்திற் பகிர்ந்து பலரும் உண்ணத் தருவான். பெருஞ்சோருக இருந்தாலும் அதனைப் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்களோடு உடனிருந்து மகிழ்ந்து உண்பான். அந்த உணவில் கொழுவிய இறைச்சிப் பகுதிகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி எடுத்து அவற்றை யாம் உண்ணக் கொடுப்பான். அம்பும் வேலும் நிரம்பும் அமர்க்களங்களில் எல்லாம் தான் மட்டும் தனித்துச் செல்வான். உணவு எனில் எங்களைத் துணையாகக் கொள்வான்; போரெனில் துணை வேண்டாது தனித்துச் செல்வான். நரந்த மலரின் நறுமணம் வீசும் தன் கையால் புலவு நாறும் என் தலையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவான். அத்தகைய புரவலன் எங்களைவிட்டு அகன்று விட்டானே” என்று அவன் வாழ்ந்த கதையை ஆழ்ந்த உணர்வோடு எடுத்துக் கூறுவது உள்ளம் உருக்கும் காட்சியாக விளங்குகிறது.

சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாந் தானிற்கும் மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்

புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
- புறம். 235

என்று கடந்தகால நிகழச்சிகளைக் கிடந்தவாறு விளக்குகிறார்.

இனி அவன் மறைந்துவிட்டதால் புலவர்களுக்கும் மற்றையோருக்கும் ஏற்படும் இழவு எத்தகையது என்று எடுத்துக் கூறுவது அதைவிட உருக்கமாக அமைந்துள்ளது.

“அவன் மார்பிற் பாய்ந்த வேல் மார்பில் மட்டும் பாய்ந்து அவன் உயிரைச் செகுக்கவில்லை. அஃது இசை பாடும் பாணரின் கைப் பாத்திரத்தினைத் துளைத்து, இரப்போர் கையுள்ளும் பாய்ந்து, அவன் புகழ்பாடும் பாவலரின் நாவில் சென்று வீழ்ந்து” என்று கூறுகின்றார்.

அருந்தலை யிரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந்தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே - புறம். 235

என்று தொடர்ந்து கூறுகின்றார். அவன் அரிய மார்பைப் பிளந்த வேல் பலரின் இதயத்தையும் பிளந்து விட்டது என்று கூறுவார் போல இக் கூற்றினை அமைக்கிறார். அவனால் புரக்கப்படும் சுற்றத்தினர் வாழ்விற் பொலிவிழந்து பையுள் எய்தும் காட்சியைப் ‘புரப்போர் புன்கண் பாவை சோர’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றார்.

உற்றவரை இழப்பதால் வரும் துன்பம் எதிர்பாராமல வருவதாகும். அதைப் போலவே பொருளாலும் வாழ்வு நிலையாலும் தாழ்வு உற்று நிலைகெடுவதும் எதிர்பாராமல் நிகழ்வதாகும். இத்தகைய நிலை பெரும்பாலும் உற்றவரையோ உறவினரையோ இழப்பதால் அதனை அடுத்து வரும் தொடர் நிகழ்ச்சியாக அமைகிறது. சீவக சிந்தாமணியில் இத்தகைய காட்சி ஒன்று புலவரால் காட்டப்படுகிறது. நாடிழந்தும், கணவனை இழந்தும் காடு சென்று தனித்து மகவைப் பெற்ற சச்சந்தனின் மனைவியான விசயமாதேவியின் நிலை இத்தாழ்வுநிலையைக் காட்டுகிறது. தன் கணவனை சச்சந்தன் கட்டியங்காரனின் சூழ்ச்சிக்கு ஆளாகி அதனால் வீழ்ச்சிக்கு இரையாகிறான். கட்டியங்காரன் தன் மீது போர் தொடுக்கிறான் என்ற செய்தியை உணர்ந்த சச்சந்தன் அதற்கு முன்னரே மயிற்பொறி ஒன்றில் அவளை ஏற்றி அனுப்பிவிடுகிறான். விண்ணளாவி விரைந்து செல்லும் மயிற்பொறியில் இருந்த விசயமாதேவி கட்டியங்காரனின் வெற்றி முழக்கம் கேட்டு மன்னவன் மாண்டு விட்டதை உணர்கிறாள். உடனே மயங்கி விசையை முடுக்க மாட்டாமல் செயலறுகிறாள்; விண்ணில் ஊரும் ஊர்தி தானே மண்ணில் இறங்கி விடுகிறது. அவள் மூர்ச்சித்துச் செயலற்றுவிட்டதால் அவ்வூர்தியும் பறத்தல் அற்றுத் தானே கீழே இறங்கிவிடுகிறது. இறங்கிய அந்த இடம் இடுகாடாக இருக்கிறது.

கருவுற்றிருந்த விசயமாதேவி அந்த இடுகாட்டில் நடுஇரவில் நன்மகனைப் பெறுகிறாள். அந்த நிலையில் தான் முன்னிருந்த உயர்நிலையையும் அப்பொழுது இருக்கும் தனிமை நிலையையும் எண்ணிப் பார்த்து வேறுபாட்டைக் காண்கிறாள். இந்த மாற்றம் அவளுக்கு ஆற்றொணாத் துன்பத்தை அளிக்கிறது. கண் திறந்து பாராத அப் பச்சிளங் குழவியைப் பார்த்து, “இந்தச் சூழ்நிலையிலா நீ பிறக்க வேண்டும்?” என்று கூறும் அவள் சொற்கள் நெஞ்சுருகச் செய்கின்றன. “நீ பிறக்க வேண்டிய இடமா இது?” என்று கேட்கிறாள். “தாதியர் சூழ மங்கலம் முழங்க மன்னவனின் அரண்மனையில் பிறக்கவேண்டிய நீ, பேய்கள் சூழ நரிகள் ஊளை இடும் இடுகாட்டிலா பிறக்க வேண்டும்?” என்று கேட்கிறாள். “மன்னனின் அரண்மனையாக இச் சுடுகாடு அமைந்துவிட்டது. முழவுக்கு மாருக நரிகளின் ஊளையிடும் ஒலி முழங்குகிறது. ஈம நெருப்பின் ஒளியே விளக்காகவும் இடுகாடே உயர் அரங்காகவும் அமையப்பேய் அசைந்து ஆடக் கோட்டான் குழறிப் பாராட்ட, இத்தகைய சூழலிலேயா நீ பிறக்க வேண்டும்?” என்று மனமுருகக் கூறுகிறான். “அரங்கிலே மகளிர் ஆட அருகிருந்து தாதியர் தாலாட்டுப் பாட மகவு பிறந்த மகிழ்ச்சியில் மன்னவன் மகிழப் பிறக்க வேண்டிய நீ இங்கு இடுகாட்டில் நடு இரவில் நரியின் ஊளையிடும் ஓலத்தையும் பேயாட்டத்தையும் கோட்டானின் கூக்குரலையும் கேட்கும் பயங்கரமான இடத்தில் இனிமை இழந்த தனிமையிலா பிறக்க வேண்டும்?” என்று கேட்பது, வாழ்வில் ஏற்பட்ட தாழ்வை எண்ணிப்பார்த்து நிலை கெட்டமைக்கு அலைவுறும் நிலையைக் காட்டுகிறது.

வெவ்வாய் ஒரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கில் நிழல்போல் நுடங்கிப் பேயாட

எவ்வாய் மருங்கிம் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வாருகிப் பிறப்பதோ இதுவோ மன்னாக் கியல்வேந்தே

என்று “மன்னவர்க்குக் கிடைக்கும் வாழ்வா இது?” என்று கேட்கிறாள்.

இதைப் போலவே தந்தை மறைய, நாடு பிறர் கைப்பற்ற, அதனால் வாடிய உள்ளத்தோடு நாட்டைவிட்டுச் சென்ற பாரிமகளிர், தாம் தந்தையோடு இருந்த நாளில் இருந்த முந்தைய வாழ்வையும், நாடிழந்து சிறுமையுற்றுப் பெருமை யிழந்த அப்பொழுதைய தாழ்வையும் எண்ணிப் பார்த்து வருந்தி ஒப்பிட்டுக் கூறுவது சிறந்த அவல ஓவியமாக விளங்குகிறது.

“மூவேந்தர் முற்றுகையிட்டு நாட்டைப் பற்றிக் கொள்வதற்கு முன் எம் தந்தை எங்களோடு இருந்தார். அன்றைய திங்களில் அவ்வெண்ணிலவில் எம் குன்றையும் பிறர் அடையவில்லை. இஃது அப்பொழுதைய நிலை. இப்பொழுதைய நிலை அதற்கு முற்றிலும் மாறிக் கிடக்கிறது. இன்றைய திங்களில் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றையும் கொண்டார்; எம் தந்தையும் எம்மோடு இல்லை” என்று இரண்டு நிலவுக்காட்சிகளில் அவர்கள் கொண்ட இனிமையையும் தனிமையையும் ஒரு சேரக் கூறி, முன் இருந்த வாழ்வின் உயர்வையும் பின் அடைந்த தாழ்வின் இழிவையும் எடுத்துக் கூறுகின்றனர்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி ழுரசின் வேந்தர்எம்
குன்றுங் கொண்டார்யாம் எந்தையும் இலமே - புறம். 112

என்று அவர்கள் தந்தையைப் பெற்றிருந்த காட்சியையும், அவர்

மறைந்ததால் ஆட்சியிழந்து பெருமை குன்றிவிட்ட நிலையையும் ஒருசேரக் கூறி அவல உணர்வை உண்டாக்குகின்றனர்.

இவ்வாறு, இழவாலும் வாழ்க்கைநிலை மாறுவதாலும் துன்பம் பிறத்தல் இயல்பாகும். இத்தகைய துன்ப வாழ்வு எதிர்பாராமல் நிகழ்வதாகும். இவ்வாறு இல்லாமல் பலருடைய துயரத்திற்குக் காரணமாக அமைவது வறுமையாகும். இல்லை என்பதால் வரும் தொல்லைகள் மனிதருடைய வாழ்வில் இன்பமும் மதிப்பும் இல்லாமல் செய்து விடுகின்றன.

இத்தகைய வறுமையால் உண்டாகும் துயரம் நாள்தோறும் வளர்ந்து நலிவையும் மெலிவையும் ஈந்து வாழ்வில் தலையெடுக்க ஒட்டாமற் செய்துவிடுகிறது. அத் துன்பம் புலவர்களின் வாழ்விலே சொந்த அனுபவமாகவும் அமைந்துவிடுகின்ற காரணத்தால், அஃது இன்னும் சிறப்பாகக் கூறப்படுகிறது.

சில புலவர்களின் வாழ்வில் இவ்வறுமை குடி புகுந்து அவர்கள் குடும்பத்தைச் சுவை பார்த்து அவர்கள் வாழ்வைச் சுவையற்றதாக ஆக்கிவிட்டது. வறுமையின் கொடுமையை நன்குணர்ந்த பெருஞ்சித்திரனார் தீட்டிக் காட்டும் அவர் வீட்டுவாழ்வு புறநானூற்றில் ஒரு பெருஞ் சித்திரமாகவே அமைந்து விடுகிறது.

அடுப்பில் அடுதல் செய்து பலநாள் ஆகின்றன. சாம்பல் விழாத காரணத்தால் அடுப்பு ஆழமாகத் தோன்றுகிறது. அதன் பக்கங்கள் உயர்ந்து விளங்குகின்றன. சூடு படாததால் அடுப்புக் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. அக்குளிர்ச்சியால் காளான் பூத்துக் குலுங்குகிறது. அவர்கள் வாழ்வு மட்டிலா வறுமையால் கலங்குகிறது. கைக்குழந்தையோ பால் குடிக்க அவாவுகிறது. பசியால் அலந்து மெலிந்து கிடப்பதால் தாய் குழந்தைக்குப் பால் ஊட்ட முடியவில்லை. பாலின்மையால் சுவைத்துப் பார்த்துச் சலித்துவிட்ட குழந்தை அழத் தொடங்குகிறது. அழும் குழந்தையை ஆற்ற ஆற்றலிழந்தவளாய்க் கண் நிறைய நீர் கொண்டு அவள் கலங்கி நிற்கிறாள். புலவர் உள்ளம் மிகவும் மென்மையானது என்பதை நன்குணர்ந்த அவள் தன் கணவனைக் கடிந்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை. சொல்லும் சொற்களைவிடக் கலுழும் கண்ணீருக்கு ஆற்றல் மிகுதியாகிறது; அழகிய பாடல் எழக் காரணமாகிறது. அக்கண்ணீர் அக்கலைஞரின் இதயத்தைக் கலக்கி, ஒரு சித்திரமாக வடித்துக் காட்டக்காரணமாக அமைகிறது.

ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்
ஆமபி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்ல வறுமுலை
சுவைத்தொறு அழுஉந்தன மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என்

மனையோள் எவ்வம்
- புறம். 164-1-7

என்று அவள் உழந்த துன்பத்தை எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் இத் துன்பக் காட்சி அவர் பாடும் மற்றொரு பாடலால் செறிவு பெறுகிறது. பசியின் கொடுமையால் எதையாவது உண்டுதானே ஆக வேண்டும். குப்பைக் கீரை கொய்து கொய்து அவையும் தட்டையாகிவிடுகின்றன. அவை மீண்டும் முளைக்கும் தோறும் களைந்து கொண்டுவந்து உப்பும் இல்லாமல் நீரில் வேகவைத்து மோரும் இன்றிக்கீரைமட்டும் உண்டு சோறு மறந்த வாழும் வாழ்வைக் காட்டுகிறார்.

குப்பைக் கீரை கொய்துகண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்றுமிசைந்து
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் - புறம். 159

என்று இப்பாடலில் அவள் உண்ட எளிய உணவையும், கொண்ட மாசு படிந்த உடையையும் காட்டுகின்றார். அந்த நிலையிலும் அவள் அறத்தைப் பழிக்காமல் தன் கணவனை விரும்பும் உயரிய நிலையை, ‘அறம் பழியாத் துவ்வாளாகிய என் வெய்யோள்’ என்று கூறிச் சிறப்பிக்கின்றார்.

வாழ்க்கையில் மற்றைய குறைகளை வாய்விட்டுக் கூறமுடிகிறது. ஆனால் வறுமையைப் பற்றி மட்டும் வாய்விட்டுக் கூற முடியாமல் உள்ளுக்குள்ளே விழுங்கி வாடுவது இயல்பாக உள்ளது. வறுமையால் வாடும் நிலையை வாய்விட்டுச் சொன்னால் மனிதரின் மானம் குறைகிறது. அதனால் வயிற்றுக்கு உணவு இல்லையென்றாலும் வாய்விட்டுக் கூற மானமுள்ள மக்களால் இயல்வதில்லை.

கிணைமகள் ஒருத்தியின் பசியைக் காட்டும் சிறுபாணாற்றுப்படை, எளிய உணவை உண்டால் பிறர் எள்ளி நகையாடும் மடமை உலகில் உள்ளது என்பதால், அவள் அட்ட எளிய உணவைக் கதவையடைத்துப் பிறர் காணாதவாறு சுற்றத்திற்குப் படைத்துத் தானும் உண்ணும் காட்சியைக் காட்டுகிறது.

ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்

அழிபசி வருத்தம் வீட
-சிறுபாண்; 135-140
என்று அவள் பசியை வீழ்த்தும் அழகிய காட்சியைக் காட்டுகின்றது. எளிய உணவை உண்பதை இகழும் அறியாமை உலகில் உள்ளது என்பதை உணர்ந்த இணைமகள் கதவை அடைந்து உணவு பரிமாறி உண்கின்றாள். வறுமையை வாழ்வின் குறையாக எண்ணி ஏழைகளை மதிக்காதவர்களைக் குறிப்பாக ‘மடவோர்’ என்று பாடல் குறிப்பிடுகின்றது.

வறுமையில்வாடுவோர் குப்பையில் முளைக்கும் கீரையை உப்பில்லாமல் உண்ணும் காட்சியைக் காட்டுவதில் சிறுபாணாற்றுப் படைப்பாடலும் புறநானூற்றுப்பாடலும் ஒத்து இருப்பது அக்கால நிலையைக் காட்டுகின்றது எனலாம்.

இந்த வறுமைச் சித்திரங்களைத் தீட்டும் புறநானூற்றுப் பாடலுக்கும் சிறுபாணாற்றுப்படைப் பாடலுக்கும் மற்றோர் ஒற்றுமை நிலவுகிறது. புறநானூற்றுப்பாடல் பாலின்மையால் சுவைத்துச் சலித்துத் தாய் முகம் நோக்கி அழும் குழநீதையின் துன்பத்தைக் தண்டு தாயின் கண்களில் நீர் கலங்கும் காட்சியைக் காட்டுகிறது. சிறுபாணாற்றுப்படை அதைப் போன்ற துன்பக் காட்சியை நாயின் வாழ்க்கையில் வைத்துக் காட்டுகின்றது. நாய்க்குட்டி பிறந்து இன்னும் கண்களைத் திறக்கவில்லை; பசியால் தாயின் பாலைச் சுவைத்துப் பார்க்கின்றது. அதற்குப் பால் கிடைக்கவில்லை. அந்த வீட்டிலேயே உணவு இல்லை என்றால் நாய்க்கு எங்கிருந்து உணவு கிடைக்கும்? பசியால் மெலிந்து இருக்கும் அந்தப் புனிற்று நாய் என் செய்யும்? மடியிலோ பால் இல்லை, அதன் குட்டி படுத்தும் பாடு தொல்லையாக முடிகிறது. மடியைக் கவர்ந்து இழுத்துத் துன்புறுத்தும் அந் நோயை அதனால் பொறுக்கமுடியாமல் குரைக்கிறது. அத்தகைய நாய் குரைக்கும் அடுதல் மறந்த அட்டில் என்று அச் சமையலறையைக் குறிப்பிடுகின்றார்.

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

-சிறுபாண். 130-133

என்று அந்த அட்டில் வருணிக்கப்படுகிறல்து.

குழந்தையின் பசியைக் கண்டு வருந்தும் தாயும் குட்டியின் தொல்லையைப் பொறுக்க முடியாத நாயும் பசியின் கொடுமையைக் காட்டும் சித்திரங்களாக அமைகின்றனர். அந்த அளவில் இரண்டு பாடல்களிலும் கருத்து ஒற்றுமை காணப்படுகின்றது. பசி என்றால் அது குழந்தையைத் தாக்கும் பொழுதுதான் மிகுதியாக உணரப்படுகிறது என்பதை இப்புலவர்கள் காட்டியுள்ளனர்.

வாழ்வில் நெருங்கிய உறவினரையும் நண்பினரையும் இழப்பதாலும், உயரிய வாழ்வு தீர்ந்து நலிவு அடைவதாலும், வறுமை வந்து அடைகிறது. அவ் வறுமையால் வாழ்க்கையில் மற்றவர்களின் மதிப்பை இழக்கக் கூடிய தாழ்வு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய தாழ்வினை ‘இளிவு’ என்பர். இந்த இளிவுக்கு அஞ்சித்தான் கிணைமகள் மடவோர் காட்சிக்கு நாணிக் கதவடைத்து உணவு உண்டதாகக் கூறப்படுகிறது.

வாழ்வில் அவலம் ஏற்படுவதற்கு இழவு, நிலை கெடல், வறுமை, இளிவு ஆகிய இந் நான்கே பொதுவாகக் காரணமாகின்றன. நிலைகெடல் என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார் ‘அசைவு’ என்று குறிப்பிடுவர். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் மெய்ப்பாடுகளைப் பற்றி விளக்கும் ஆசிரியர் தொல்காப்பியனார்,

இளிவே இழவே அசைவே வறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே - சூ. 253

என்று அழுகை தோன்றுவதற்கு இந் நான்கு காரணங்களைக் கூறுகின்றார். இந் நான்கு பொருள்பற்றி அழுகை பிறப்பதைத் தமிழிலக்கியம் பல ஓவியங்களாகக் காட்டியுள்ளது.

இந்த அழுகைச்சுவையை ஓவியமாகத் தீட்டும் பொழுது அஃது அழகுணர்ச்சியையும் தருகிறது. இலக்கியத்தில் அழகுணர்வு தரும் இந் நிகழ்ச்சிகள் வாழ்க்கையில் அழுகையை உண்டாக்கி விடுகின்றன. வாழ்க்கையின் அழுகை ஓலங்களை இலக்கியத்தில் அவல ஓவியங்களாகப் புலவர்கள் தீட்டிவிடு கின்றனர். புலவர்கள் இந்த அழுகை உணர்வை அவல ஓவியங்களாகத் தீட்டி அழகுணர்வை உண்டாக்கி, உலகத்தின் பொதுத் துன்பத்தைப் பற்றியும் அதன் நீக்கத்தைப் பற்றியும் மக்களைச் சிந்தனை செய்யுமாறு தூண்டி வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றனர் என்று கூறலாம்.