அணியும் மணியும்/உறவும் துறவும்
தமிழ் நூல்கள் பல, சமயத்தின் அடிப்படையில் எழுந்துள்ளன. பல புலவர்கள் சமயம் வளரவும் பரவவும் இலக்கியத்தைத் தக்க கருவியாகப் பயன்படுத்தினர். அவ்வாறு சமயத்தின் அடிப்படையில் எழுந்தனவே மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெரியபுராணம முதலிய நூல்கள் எனலாம். இலக்கியத்தின் நோக்கம் சிறந்த கொள்கைகளையும் கருத்துக்களையும் உணர்த்தி அவற்றைப் பரப்புவதே என்பர். பொதுவாக உலக இலக்கியங்கள் பலவும் கொள்கைகளைப் பரப்பவே எழுந்தன எனலாம். சமய இலக்கியங்கள் எழுங்காலத்தில், அவை சமயத்தின் அடிப்படையில் எழுந்தாலும், மனித மனத்தின் அடிப்படை இயல்பையும் ஆவல்களையும் உணர்த்திச் சிறந்த கொள்கைகளை நிலைநிறுத்துவதாலேயே அவை என்றும் நின்று நிலவுகின்றன.
சாத்தனார் இயற்றிய மணிமேகலை புத்தசமயக் கோட்பாடுகளை உணர்த்த எழுந்ததாயினும் அது மனித இயல்புகளையும், மாந்தர் போற்றத்தக்க சிறந்த பண்புகளையும் உணர்த்துவதால்தான் அது நின்று நிலைத்து விளங்கும் இலக்கியமாக அமைந்தள்ளது. நாட்டிலும் தான் பிறந்த வீட்டிலும் குழப்பமும் அமைதியின்மையும் குழுங்கால் துறவு உள்ளம் வளர்தல் இயல்பு என்பதையும், உறவு அறுத்துத் துறவுவளர்ப்பது எளியது அன்று என்பதையும்; அவ்வாறு துறவுள்ளம் பெற்ற பிறகு அம்மனம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டை அடையும் என்பதையும் மெல்ல மெல்ல விளக்குகிறது.
எல்லோரும் திருமணம் செய்துகொண்டு இன்ப அன்பு வாழ்வைக் காண முடியும் என்று உறுதியாகக் கூறவியலாது. இன்பத்தைத் தேட, அவ்வின்பம் கானல்நீர் போல் அமைந்து எட்டாத கனியாக விளங்கி வாழ்க்கை ஒருசிலருக்குக் கசந்து விடுகிறது. பொருந்தாத மனங்கள் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடும்பொழுது, மனக்கசப்பும் வாழ்க்கையில் வெறுப்பும் பெறாமல் இல்லை. பலருடைய திருமண ஒப்பந்தம் முறிந்து, இன்பம் அன்பு இல்லறம் என்பவை எல்லாம் பாழாகிவிடுகின்றன. அதனால் திருமண வாழ்வுதான் இன்பத்தையும் அன்பையும் பெற முடிந்த வழி என்றும் முடிவாகக் கூற ஒல்லாது. வாழ்க்கையில் நேரும் இன்னல்களைப் போக்க மெல்ல மெல்லப் பற்றுகளை நீக்கினால்தான் விடுதலையையும் மன அமைதியையும் கொள்ள முடியும் என்பது நம் நாட்டுப் பெரியோர்கள் கொள்ளும் கருத்தாகும். தனிப்பட்ட துன்பம் சமுதாயத் துன்பத்தோடு கலந்து ஒன்றிவிடுகின்றது. சமுதாய வாழ்வின் பொதுநன்மை தனிப்பட்டவரின் நன்மையாக முடிகிறது.
மணிமேகலை துறவுள்ளம் வளர்வதற்கு அவள் வீட்டின் சூழ்நிலையும், அவளைச் சுற்றியிருந்த நாட்டின் சூழ்நிலையும் காரணம் என்பதை ஆசிரியர் சாத்தனார் தெளிவாகக் காட்டுகின்றார். நான் எனது என்ற பற்றின் காரணமாகவும், சாதி குலம் உறவு என்ற கட்டுப்பாட்டாலும் சமுதாயம் பொது நன்மை செய்வதில் பின்தங்கிவிடுகிறது. சமுதாயம் திருந்த வேண்டுமென்றால் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பற்றற்ற உள்ளம் வேண்டும் என்பதையே மணிமேகலையின் துறவு உணர்த்துகிறது.பற்றற்று வாழ்வது என்பது ஆண்களுக்கு மட்டும் உணர்த்தும் நீதியன்று என்பதை உணர்த்தத் தான் பெண்ணொருத்தியின் வாழ்வில் துறவுள்ளம் வளருமாற்றைக் காட்டி, அச் செய்தியையே ஒரு பெருங்காப்பியமாக அமைத்திருக்கக் காண்கிறோம்.
வாழ்க்கையில் மிகவும் நொந்துவிட்டாலும், தான் வாழும் சூழ்நிலை கெட்டுவிட்டாலும், பற்றற்ற உள்ளம் தான் அவற்றைச் சீர்திருத்த முடியும்; பற்றற்ற உள்ளத்தில் வாழ்வின் உண்மைகள் தெளிவாக விளங்கும் எனக் கூறலாம். மனித சமுதாயமே திருந்தவேண்டுமென்றால் ஆளுக்கு ஒரு நீதி, சமயத்துக்கு ஏற்ற செயல், இனத்துக்கு எனத் தனி நன்மை, இவை நீங்க வேண்டும்; அவ்வாறு நீங்கத் துறவுள்ளம் தவிரத் தூயமருந்து இல்லை என்று கூறிவிடலாம். துறவு என்றால் வாழ்க்கையை வெறுப்பது அன்று என்பதையும், அருளுணர்வோடு உலகத்து வாழ்வை நடத்துவது என்பதையும் காட்டவே இந்நூல் எழுந்தது எனக் கூறலாம்.
மணிமேகலை பிறந்த குலம் மிக இழிந்த ஒன்றாகக் கருதப்பட்டது. உயிரின் சிறந்த பண்பாகிய அன்பு செய்தல் என்ற தன்மையை இழப்பதுவே அவர்கள் வாழ்வின் நெறியாக அமைந்திருந்தது என்று தெரிகிறது. உலகத்து உயிர்களின் செயலெல்லாம் அன்பு செய்தல் என்றிருக்க, இவர்கள் ஒழுக்கம் மட்டும் அன்பு இன்றி வாழ்வது என்ற அளவுக்கு அவர்கள் உள்ளம் மிகவும் தாழ்ந்து விட்டது என்று கூறலாம். மணிமேகலையின் பாட்டியாகிய சித்திராபதி அக்காலத்துப் பரத்தையரின் பொதுநெறியையும் மனவியல்பையும் வெளிப்படுத்துவதிலிருந்து அவர்கள் பசையற்ற நெஞ்சை அறிய முடிகிறது. மலரில் உள்ள மனத்தை நுகர்ந்து மணம் இழந்த மலரை விட்டு நீங்கும் வண்டைப் போலப் பொருளுள்வழிப் பிறரோடு பொருந்திப் பொருளற்றால் தொடர்பும் அற்று வேறொருவரை நோக்கி வாழ்வது அவர்கள் வாழ்வியில் என்பதாக உணர்த்துகிறாள்.நறுந்தா துண்டு நயனில் காலை
என்று அவர்கள் வாழ்க்கை நெறியை உணர்த்துகிறாள்.
அன்பை அறியாத இனத்தில் அன்பைக் காண முயன்ற மாதவியும் பெருந்தோல்வியையே அடைந்தாள் என்று கூறமுடியும். கற்பிற்சிறந்து, கோவலனின் அன்பைப் பெற்ற அவளும், இறுதியில் அவன் மதிப்பைப் பெற முடியாத நிலையையே அடைந்தாள். ‘மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்’ என்று அவனால் இழித்துரைக்கப்பட்ட நிலையையே அடைந்தாள்; அதனால் மாதவி அத்தொழில் முறையையும் வாழ்வு நெறியையும் வெறுத்தாள். ‘திருந்தாச் செய்கை’ என்று உணர்ந்து தன் மகளைத் திருந்கிய செயலில் ஈடுபடுத்த முனைந்தாள்.
மாபெரும் பத்தினி மகள்மணிமேகலை
அருந்தவப் படுத்த லல்ல தியாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்
ஊரலர் 55-58
என்று உறுதி கொண்டாள்.
அவள் கொண்ட உறுதியோடு மணிமேகலையின் மனமும் துன்பச்சூழலில் சுழன்று இத்துன்பங்கட்குக் கரை காண முடியாமல் தவிக்கிறது; தன் தந்தையும் தாயுமான கோவலனும் கண்ணகியும் உழந்த வெந்துயர் இடும்பை அவள் நெஞ்சைக் கலக்கிவிடுகிறது.
தந்தையும் தாயும் தாம்நனி உழந்த
வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக்
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
- மலர்வனம். 5-7
இருந்த செய்தி கூறப்படுகிறது. இவை எல்லாம் துறவு கொள்வதற்குத் தக்க சூழ்நிலையாக அமைந்துவிடுகின்றன.
மணிமேகலை துறவுள்ளம் கொள்வதற்குக் காரணமான சூழ்நிலைகளை விளக்கிய சாத்தனார், உறவை அறுத்துத் துறவில் கால்கொள்ளும் அரியசெயலையும் உடன்விளக்கிச் செல்கிறார். அவள் அழகிலோ பிறரைக் கவரும் கவர்ச்சியிலோ உள்ளத்தைக் கவரும் வனப்பிலோ எந்த வகையிலும் குறைந்தவள் அல்லள் என்பதையும், அவள் அழகில் நாட்டுக் காவலன் மகன் மயங்கி, அவளை வாழ்க்கையில் திருப்ப முயலும் முயற்சியையும், அவற்றை எதிர்த்து அவள் வெற்றிபெறும் சீரிய திறத்தையும் சிறப்பாகக் காட்டிச் செல்கின்றார். மணிமேகலை, தந்தையும் தாயும் தாம் நனி உழந்த வெந்துயர் இடும்பையைக் கேட்டு, உள்ளம் நொந்து உகுத்த கண்ணிர்த் துளிகள் தன் கன்னங்களை நனைத்த நிலையில், அவள் அழகோடு திகழ்ந்தாள் என்பதை அவள் தோழி சுதமதி வாயில் வைத்துக் கூறுகிறார்:
மணிமேகலைதன் மதிமுகந் தன்னுள்
அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஒட்டிய
கடைமணி யுகுநீர் கண்டனன் ஆயின்
படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
- மலர்வனம் 20-24
என்று, அவள் அழகினையும் அதனால் பிறர் கவரப்படும் நிலையினையும் எடுத்துக் காட்டுகின்றார்.
அழகும் இளமையும் பெற்ற அவள், வாழ்வில் விழைவும் விருப்பும் நீங்கி, அருளறத்தை வளர்க்க உறவை நெகிழ்த்துத் துறவை வளர்க்கும் உள்ள நிகழ்ச்சியும், சூழ்நிலையைத் திருத்தும் நோக்கில் அவள் ஈடுபடும் அறச் செயலும் ஆங்காங்கே கூறப்படுகின்றன. தனிப்பட்டவரிடத்துச் செலுத்தும் அன்பைக் குறைத்துத் துறவைப் பெருக்கி அருளறத்தை வளர்க்கும் நிலைமையைப் படிப்படியே காட்டிச் செல்கின்றார்.
கண்கள் சிந்திய நீர் அவள் தொடுத்துக்கொண்டிருந்த மாலையைத் தூயதற்றதாக ஆக்குகிறது. மது மலர்க் குழலினாளைப் புதுமலர் கொய்துவருமாறு மாதவி சுதமதியோடு அனுப்ப, அவளும் பூமலர்ச் சோலை நோக்கிப் போகிறாள். நாட்டு மன்னனின் மகனான அரசிளங்குமரன் அவளை அடையும் ஆவலால் உந்தப்பட்டுச் சோலைநோக்கி அதேவேளை செல்கிறான். அவன் தேரேறி வந்ததால் எழுந்த தேரொலி மணி மேகலையின் செவியில் கேட்கிறது. அப்பொழுதே, வந்தவன் யாவன் என்பதை மணிமேகலை உணர்ந்து, உதயகுமாரன் தன் மேல் கொண்டுள்ள உள்ளத்தை மாதவிக்கு அவள் தோழியாகிய வயந்தமாலை முன்னரே கிளந்துளள் ஆதலின், உதயகுமரனின் தேரொலி அஃது என்பதைச் சுதமதிக்கு உணர்த்துகிறாள்.
ஆங்கவன் தேரொலி போலும் ஆயிழை
ஈங்கென் செவிமுதல் இசைத்ததுஎன் செய்கேன்
- பளிக். 83-84
என அமுதுறு தீஞ்சொல்லால் அவள் உணர்த்துகிறாள். உடனே, சுதமதி பளிக்கறை மண்டபத்துள் அப்பாவையைப் புகும்படி அறிவுறுத்தி அவளை அங்கே இருக்குமாறு செய்கிறாள். அரசிளங்குமரன் அவள் இளமையையும் அழகையும் பாராட்டி,
விளையா மழலை விளைந்து மெல்லியல்
முளையெயிறு அரும்பி முத்துநிரைத் தனகொல்
செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி
வெங்கணை நெடுவேள் வியப்புரைக் குங்கொல்
- பளிக். 99-102
என்று மணிமேகலையின் நலத்தைப் பாராட்டிய வண்ணம் மணிமேகலை மாதவர் உறைவிடம் நீங்கித் தானே தனியளாக இங்கு வந்தது எதற்கு என்று, இளமையின் காரணமாக வளமான சொற்களால் அவள் அழகை அளக்கத் தொடங்குகிறான்.
மணிமேகலை ஊழ்தரு தவத்தள் எனவும், காமனை வெல்லும் வாய்மையள் எனவும் சுதமதி எடுத்துக் கூறிய போதினும், அவன் அவளிடம் கொண்ட காதலை விடாதவனாகி, ‘வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச் சித்திரா பதியாற் சேர்தலும் கூடும்’ என்று, ஆங்கு அப் பொழிலைத் தவிர்ந்து நீங்குகிறான்.
அதுவரையிலும் அவன் கூறிய சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலையின் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். துறவை நாடும் அவள் உள்ளத்திற்கும் உறவை அறுப்பது எவ்வளவு அரிது என்பதை அவள் வாய்ச் சொற்கள் உணர்த்துகின்றன.
கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலையாட்டியென்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போன்தென் நெஞ்சம்
- காதை 5, 86-89
என்று கூறுகிறாள். அவ்வுள்ளத்துணர்வு அவளுக்கே புதுமையாக இருக்கிறது:
என்று மேலும் தொடர்ந்து கேட்கிறாள்.
அரசிளங்குமரன்பால் அவள் நெஞ்சம் நெகிழ்கிறது; அதனால்தான் அவள்:புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
- காதை. 5,89-90
என்று உள்ள நெகிழ்ச்சியால் தோன்றிய உணர்வை எடுத்து இயம்புகின்றாள்:
மறுபடியும் அவள் உள்ளம் திண்மை பெறுகிறது. அதனால்,
என்று கூறுகின்றாள். அவள் துறவு வாழ்க்கை புத்த சமயக் கோட்பாடுகளால் வலிமை பெறுகிறது. உதயகுமரனின் நெஞ்சு மட்டும் அவளைச் சுற்றியே வட்டமிடுகின்றது. அவளை எப்படியும் அடைய வேண்டும் என்ற ஆவல் அவள் இருக்கும் உலகவறவியாகிய அம்பலத்துள் கொண்டு செலுத்துகிறது. மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் அவளைப் பற்றிக் கொணர்ந்து, தன் தேரில் ஏற்றிக் கொணரும் எண்ணத்தோடு எழுந்து, உலகவறவியின் ஊடு சென்று அம்பலத்தை அடைகிறான். அவளும் அவன் அறியாவண்ணம் மறைந்து வதியும் நோக்கோடு காயசண்டிகை என்னும் வித்தியாதர மங்கையின் வடிவில் திகழ்கிறாள். உதயகுமரனுக்கு இளமையின் நிலையாமையைத் தக்க சான்றுகள் காட்டி உணர்த்துகிறாள். நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி,
தண்ணறல் வண்ணம் திரிந்துவே றாகி
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய்
—காதை 20, 41-42
என்று பலபடக் கூறி, இளமை நிலையாது என்று எடுத்துக் காட்டுகிறாள், அதே சமயத்தில், அவளைக் காயசண்டிகையே எனத் தவறாக உணர்ந்த அவள் காதலனான வித்தியாதரன் பழமைக் கட்டுரை பலகூறிப் பாராட்டவும், அவனோடு விழையா உள்ளமோடு உதயகுமரன்பால் திரும்பித் தொடர்ந்து அறிவுரைகள் சொல்லத் தொடங்குகிறாள்.
உதயகுமரனோடு பேசிய மணிமேகலையைக் காயசண்டிகை எனத் தவறாக உணர்ந்த வித்தியாதரன், அவள் உதயகுமரனைக் காதலித்துவிட்டாள் எனவும், அதனால்தான் வித்தியாதர நகருக்குத் திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டாள் எனவும் நினைத்துப் புற்றில் அடங்கும் அரவைப்போல அவ்வம்பலத்துள் புகுந்து அவளின் நடத்தையை உற்று அறிய ஒளித்திருக்கிறான். உதயகுமரனோ அன்று இரவு மணிமேகலையை எப்படியும் சந்தித்துத் தன் விருப்பைத் தெரிவிக்க எண்ணங் கொண்டவனாய், ‘வேழம் வேட்டெழும் வெம்புலி போல, ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து, நாகம் கிடந்த புற்றில் நுழைவதைப் போல அவ்வம்பலத்துள் புக, ஆங்கு முன்னிருந்த விஞ்சையன், “ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்” என்று கருதியவனாய், வெஞ்சினத்தோடு அவன் பின் சென்று அவன் மணித்தோள் துணிய வாள் கொண்டு வீசி வீழ்த்துகிறான்.
குடவயின் அமைந்த நெடுநிலை வாயிலின்கண் சம்பாபதிக் கோட்டத்தில் கிடந்த மதுமலர்க்குழலி மணிமேகலை மயங்கி எழுந்து, விஞ்சையன் செய்தியையும் உதயகுமரனுக்குற்ற அழிவையும் உணர்ந்தவளாகித் தன் சொந்த உருவில் அவன் முன்வந்து தோன்றி, அவனுடைய கேளாத செவிகளில் துன்ப வேதனையால் எழுந்த வேதனைக் குரலைக் காட்டுகிறாள்.
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யானினக் குரைத்துநின் னிடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன் காதல
—காதை 21, 20-23
என்று மிக உருக்கமாகச் சொல்லி,
வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனையோ
—காதை 21, 24-25
எனப் பலபடச் சொல்லி வெய்துயிர்த்துப் புலம்புகிறாள்.
வாழ்க்கையில் இறுதியாகச் சிறிது ஒட்டிக்கொண்டிருந்த உறவும் அறுந்துவிடுகிறது: வாழ்க்கையைப் பற்றற்ற உள்ளத்தோடு நோக்கும் அவளது தூய உள்ளத்தில் துன்பத்தின் பெற்றியை அளந்து பார்க்கும் இயல்பு தானே அமைந்து விடுகிறது. உற்றார் உறவினர் என்ற நிலையெல்லாம் கடந்து, உலகத்து உயிர்கள் எல்லாம் ஒன்று என்ற பரந்த உள்ளம் அவளை அடைகிறது.
உதயகுமரனை இழந்த துன்பத்தால், மனமழிந்து மயங்கிப் புலம்பிய அவன் தாயாகிய இராசமாதேவிக்கு ஆறுதல் கூறும் அறிவுரையில், உலகத்து உயிர்களோடு ஒன்றிய அவள் தூய உள்ளமும், உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவை ஆராயும் மனவியல்பும் விளங்குகின்றன. “உதயகுமரன் உயிர் துறந்துவிட்டானே என்றா அழுகின்றாய்? அவன் உடலுக்காக அழுகின்றாயா? உயிருக்காக அழுகின்றாயா? உடற்கழுதனை யேல் உன் மகனை எடுத்துப் புறங்காட்டில் இட்டது யார்? நீங்கள்தாமே அவனை இடுகாட்டில் இட்டீர்கள்; உயிருக்கு அழுதால், உயிர் தம் வினையின் இயல்பால் எங்கே போகிறது என்று நம்மால் கூறமுடியாது. அவ்வுயிரிடம் அன்புசெலுத்தும் உள்ளம் இருந்தால் உலகத்து உயிர்கள் எல்லாம் ஒன்றாகலின், அவ்வுயிர்களிடம் அன்பு செலுத்தலாமே” என்று ஆறுதல் கூறுகிறாள்.
யாங்கிருந் தழுதனை இளங்கோன் தனக்குப்
பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ
உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை
உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது
அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்
—காதை 21, 71-79
என்று கூறும் உரையில், தன் காதலன் இறந்தும், தன் அறிவை இழக்காமல் அருளுள்ளம் படைத்து, உலகத்து உயிர்களுள் ஒன்றாக அவன் வாழ்வையும் மதிக்கும் சிறப்புள்ளம் பெற்றுத் துறவில் மேம்படுதலைக் காண்கிறோம்.
துறவே வாழ்வின் அறம் என்று சாத்தனார் வற்புறுத்துவதாகக் கூறவியலாது. நாட்டின் சூழ்நிலை கெட்டுவிட்டால் அவற்றைத் திருத்த வாயுரைகள் மட்டும் போதா என்பதும், துறவுள்ளம் கொள்வது சூழ்நிலையில் உள்ள தாழ்வைப் போக்கவே என்பதும் அவர் உணர்த்துகின்றார் என்று கூறலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயர்ந்த நோக்கம் விளங்க வேண்டுமெனில், யாவரும் பசியற்று வாழ வேண்டுவது அடிப்படை என்பதை விளக்குகின்றார். நீரில் விளையும் உணவு நாட்டில் உள்ளார் அனைவர்க்கும் வேறுபாடில்லாமல் கிடைக்கவேண்டும் என்ற கருத்தை உணர்த்தவே அமுத சுரபி என்னும் பாத்திரத்தைத் தம் கற்பனைத் திறத்தால் படைத்து அவள் கையில் சேருமாறு அமைக்கிறார். உலகத்தில் ஏதாவது ஒரு நன்னெறி தோன்றி, அதனால் எல்லார்க்கும் உணவு கிடைத்து வாழ்வு செழிக்க வேண்டும் என்ற கருத்தையும்,அத்தகைய நன்னெறியைச் செயற்படுத்தத் தக்கவர் பற்றற்ற துறவுள்ளம் கொண்டவரே என்பதையும் உணர்த்த அமுதசுரபியைப் படைத்து அது மணிமேகலையின் கையில் வருவதாக நிகழ்ச்சியை அமைத்திருக்கிறார் என்று கூறலாம்.
துறவின் பயன் நாட்டுக்குச் செய்யும் நல்ல தொண்டாகும் என்பதைக் காடடவே மணிமேகலையின் வாழ்வில் ‘காணார் கேளார் கான்முடப்பட்டோர் பேணுநரில்லோர் பிணி நடுக்குற்றோர் முதலியவர்கட்கு உணவு கொடுக்கும் தொண்டினையும், சிறைச்சாலையை ஒழித்து அறச்சாலையை நிறுவும் தொண்டினையும் செய்வதாகக் கூறுகிறார். நாட்டில் அறம் நிறைந்தால் சிறைச்சாலைக்ட்கு இடம் இல்லை என்ற கருத்தையும் நுட்பமாகப் புகுத்துகின்றார். மணிமேகலையின் தொண்டினைச் சிறப்பிப்பதன் வாயிலாகத் துறவில் நிலைபெறுவதற்குத் தொண்டுதான் சிறந்த வழியென்பதையும், துறவின் பயனும் தொண்டு செய்தலே என்பதையும் உணர்த்துகிறார்.
உதயகுமரன்பால் இருந்த உறவு அறுவதற்கு நாட்டுக்குச் செய்யும் பொதுத்தொண்டும் நல்லோர் அறிவுரைகளும் காரணமாக விளங்குகின்றன. கணிகையர் குலத்தில் பிறந்து, தீத்தொழிலில் ஈடுபட்டு வாழ்வைப் பொதுமையாக்காமல் உலகத்தின் உயர் அறவியாகி நல்லோர் பலரும் நானிலமும் போற்றத்தக்க வகையில் அறிவுசால் தவத்தளாகி, ஆன்ற கேள்வியும் சான்றோர் தொடர்பும் பெற்று, உலகம் மதிக்கத்தக்க பேருள்ளம் படைத்தவளாகித் தனிப்பட்டவரிடம் கொண்ட உறவைக் களைந்து, உலகத்து உயிர்களோடு ஒன்றும் துறவுள்ளம் பெற்றுக் காவியத்தின் தலைவியாகவும், சமயத்தின் தலைவியாகவும் விளங்க, ஆசிரியர் அவளைப் படைத்துப் பெண்டிருள் பெருவிள்க்காகக் காட்டியுள்ளார்.
அமைதியற்ற சூழலில் துறவு உள்ளம் பெற்றுத் தொண்டாலும் தூய சிந்தையாலும் உறவு பற்று இவற்றை அறுத்து உலகத்துக்குத் தொண்டு செய்யத் துறவு உள்ளம் தேவை என்பது இக் காவியப் பண்பாக விளங்குவதால்தான், மணிமேகலை என்னும் நூல் வெறுஞ் சமய நூலாக விளங்காமல் மக்கள் மதிக்கும் மாண்புகளைப் புகட்டும் அறிவுரை பொருந்திய இலக்கியமாக வாழ்கிறது. சமயச் சார்பு மறைந்தாலும், மாந்தரின் மனவியல்பை உணர்த்துவதில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதியாகும்.