உள்ளடக்கத்துக்குச் செல்

அணியும் மணியும்/நிறைவும் குறைவும்

விக்கிமூலம் இலிருந்து

2. நிறைவும் குறைவும்


உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்

உள்ள நிறைவாமோ?

என்று, கவிபாரதி தம் கவிதையில் ஒரு கேள்வியை எழுப்பி விடுகின்றார். உள்ளத் தூய்மை என்பதும், உயர்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு என்பதும் தக்க சூழ்நிலை வரும் பொழுதுதான் வெளிப்படும். அதுவரையிலும் மனத்தின் நிறைவாகக் கருதப்படும் உயர்ந்த பண்புகளெல்லாம் நிலையானவை என்று கூறிவிட முடியாது. இந்த மனிதவியல்பை எடுத்துக் காட்டுவதற்கென்றே கம்பனின் படைப்பில் கையேயி தோன்றினாள் என்று கூறலாம்.

சிறந்த புலவன், தான் இயற்றும் காவியத்தில், மக்களின் பல்வேறு பண்பியல்புகளையும், மனமாறுபாடுகளையும் காட்டுவதற்கென்றே மாந்தர்களைப் படைத்துக் காட்டுகிறான். அவன் படைக்கும் மாந்தர்களின் இயல்பு உலகத்து மக்களின் மனவியல்போடு ஒத்து விளங்குவதால்தான் அவை என்றும் நின்று நிலைபெறுகின்றன. அதனால், புலவன் படைக்கும் மாந்தர்கள் எல்லாம் வெறுங்கற்பனை என்று கூறிவிட முடியாது. வாழ்க்கையோடு தொடர்புடைய கற்பனைதான் நிலைத்த வாழ்வைப் பெறும். அத்தகைய வாழ்வோடு தொடர்புடைய மனவியல்பைக் காட்டும் கற்பனைப் படைப்பே கைகேயி என்று கூறலாம்.

அழகின் உருவமாகவும், பண்பின் புகலிடமாகவும் அன்பின் இருப்பிடமாகவும் விளங்கிய கைகேயி, குறைவற்ற உள்ளத்தோடுதான் வாழ்ந்து வந்தாள் என்பதை முதலில் கம்பர் காட்டுகின்றார். இராமனின் நல்வாழ்வு மந்த்ரையின் உள்ளத்தில் கனலை எழுப்பிவிடுகிறது. அவள் நெஞ்சு துடித்து வெகுளி கொண்டு கண்கள் சிவக்கிறாள். அவள் உள்ளத்தில் எழுந்த அனலை வெளியேயும் மூட்டி விடுவது போலக் கைகேயியின் செவியில் நஞ்சனைய சூழ்ச்சியை மெல்லப் புகுத்துகிறாள். அவள் கைகேயியின் மனத்தை மாற்றுவதற்கு முன்னால் அவள் உள்ளம் எவ்வளவு நிறைவோடு இருந்தது என்பதை அவளை முதன் முதலில் அறிமுகப்படுத்தும் சித்திரத்தில் தீட்டிக் காட்டுகின்றார். ‘கடைக்கண் அளிபொழியப் பொங்கு அணைமேற் கிடந்தாள்’ என்று அறிமுகப்படுத்துகிறார். தூங்கும் போதும் அவள் துயின்ற கண்களில் அளி பொழிகிறது என்று எடுத்துக் காட்டுகிறார். கொண்ட கொழுநன் மீதும், வளர்த்த மக்கள் மீதும் அளவு கடந்த அன்போடு விளங்கினாள் என்பதைக் கடைக்கண் அளிபொழிய உறங்கினாள் என்று கூறி வெளிப்படுத்துகின்றார்.

கணவனிடத்தில் மிக்க மதிப்பும், கற்பும் கொண்ட பொற்பினாள் என்பதை, அவர், ‘தெய்வக் கற்பினாள்’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அதனால், அவள் இயல்பாக மக்களிடத்தில் அன்புக்குறைவோ கணவனிடத்தில் மதிப்புக் குறைவோ கொண்டவள் அல்லள் என்பதைக் காட்டவே, அவள் அளியும், கற்பின் பொற்பும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. இராமன் மீது கொண்ட அன்பின் அளவினை. அவள் ‘புவிக்கெலாம் வேதமே யன விராமனைப் பயந்தவெற்கு இடருண்டோ’ என்று கேட்பதிலிருந்து காட்டுகிறார். அந்த நிலையில் கம்பர் அவளைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘ஆழ்ந்த பேரன்பினாள்’ என்று சுட்டிக் காட்டுகின்றார்.

அவள் நிறைந்த பண்பும், அன்பின் உயர்வும், கற்பின் சிறப்பும் பெற்றவளாக இருந்தபோதும், அவளுடைய நலத்திற்கு இடையூறு உண்டானபோது, ஆழ்ந்த பேரன்பும், கணவன்பாற் கொண்ட பெருமதிப்பும் மிகவிரைவில் மாறிவிடும் இயல்பை அழகாகப் படிப்படியே காட்டிச் செல்கிறார்.

அவள் உள்ளத்தில் மெல்லக் களங்கத்தைப் புகுத்துகிறாள் கூனி.

ஆழ்ந்தபேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்ததீவினைநிகர் கூனி சொல்லுவாள்
வீழ்ந்தது நின்னலந் திருவும் வீழ்ந்தது

வாழ்ந்தனள் கோசலை மதியி னாலென்றாள்

– அயோத்தியா கண்டம், 47

என்று கூனி கூறுமாற்றைக் கம்பர் காட்டுகிறார். எதைச் சொன்னால் மனிதமனம் மிகவிரைவில் மாறிவிடும் என்பதை உணர்ந்த மந்தரை, 'வீழ்ந்தது நின்னலம் திருவும் வீழ்ந்தது' என்று முதலில் மனத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறாள். உலகியல்பையும், மாந்தரின் உள்ளத்தையும் நன்றாக அறிந்த மந்தரை மிக எளிய கருவியைக் கொண்டு அவள் நிறை மனத்தை மிகவிரைவில் குறையுளதாக ஆக்கிவிடுகிறாள்.

'இராமன் கோமுடி சூடுவன் நாளை வாழ்விது' என்று சுட்டிக்காட்டுகின்றாள். அப்பொழுதும் கைகேயியின் மனம் மாறுபடவில்லை. இராமன் வாழ்வு பெறுவதற்கு அவள் அழுக்காறோ அவலமோ கொள்ளவில்லை. அதற்கு மாறாக மனத்தில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறாள். 'நாயக மனையதோர் மாலையை' அவளுக்கு, அச்செய்தியைச் சொன்னதற்காகப் பரிசாக நல்குகிறாள்.

பிறர் நல்வாழ்வு கொள்வதால் அழுக்காறு கொள்பவரும் உலகில் உள்ளனர். அத்தகைய பண்பு கைகேயியினிடத்தில் காணப்படவில்லை என்பதை நன்கு உணருகிறாள் மந்தரை. பிறர்மேல் காட்டும் அன்பு, உலகத்துக்கு நன்மை செய்யவேண்டும் என அவாவும் நல்லுள்ளம், இவையெல்லாம் தன்னலம் என்பவற்றின் முன் நில்லா என்பதை நன்குணர்ந்தவள் மந்தரை. தனக்குக்கேடு வராது என்ற நம்பிக்கையால்தான், பலர் பிறரிடம் அன்பு காட்டுவதும் பிறர்க்கு நன்மை செய்வதுமாக விளங்குகிறார்கள். தம் நலத்திற்குக் கேடு உண்டாகிறதென்றால், அந்நிலையில் அவர்தம் உயர்ந்த பண்புகளெல்லாம் உள்ளத்தை விட்டு நீங்கிவிடும் என்பதை உணர்ந்த மந்தரை, மனித மனத்தின் குறையை அறிந்து அக்குறைபாட்டைத் தூண்டிவிடுகிறாள்.

வேதனைக் கூனிபின் வெகுண்டு நோக்கியே
பேதைநீ பேதின்றிப் பிறந்த சேயோடு
மாதுயர் படுகநான் நெடிதுன் மாற்றவள்
தாதியர்க் காட்செயத் தரிக்கி லேனென்றாள்
- அயோத்தியா காண்டம் 153


என்று அவள் கூறுவதாகக் கம்பர் காட்டுகின்றார். அவள் நலத்தோடு அவளை நம்பி வாழும் அவள் மகனின் வாழ்வும், தன் வாழ்வும் சாய்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறாள். எதிர்காலத்தில் கைகேயி அடையப்போகும் தாழ்வை எடுத்துக்காட்டச் சீதை அடையும் வாழ்வைச் சித்திரித்துக் காட்டுகிறாள்.

சிவந்தவாய்ச் சீதையுங் கரிய செம்மலும்
நிவந்தவா சனத்தினி திருப்ப நின்மகன்
அவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோ
துவந்தவாறென்னிதற் குறுதி யாதென்றாள்
- அயோத்தியா காண்டம், 154


"சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும் சிம்மாதனத்துச் சீரோடு இருக்க, நிலைகெட்டு நலமிழந்துவெறு நிலத்தில் நின் மகன் நின்றுகொன்டிருக்கப் போகின்றான். அவர்கள் இடும் ஏவலைத் தலைமேற்றாங்கி அடிபணிந்து கவலைக்குள் ஆழப்போகின்றான்" என்று கூறி, இருவேறு காட்சிகளை எடுத்துக் காட்டுகின்றாள். "எதற்காக நீ உவப்பது? வாழ்வில் நீ எதை நம்பி உறுதியோடு வாழ்கிறாய்?" என்று கூறி, அவள் உள்ள உறுதியையும் கொள்ளை மகிழ்வையும் மெல்லத் தகர்க்கிறாள்.

கைகேயியின் வருங்கால வாழ்வில் சூழ இருக்கும் இருளைச் சூழ்வினைக் கூனி எடுத்துக் காட்டுகிறாள். "அரசரில்லிற் பிறந்து, அரசரில்லில் வளர்ந்து, அரசரில்லில் வாழ்க்கைப்பட்டுப் பேரரசியாக விளங்கும் நீ கரையில்லாத் துயரக்கடலில் மூழ்கப் போகின்றாய்; சொன்னாலும் நீ கேட்கவில்லை" என்று கூறிப் பேரரசாகிய வாழ்வு ஒழியும் நிலையைக் காட்டித் தூய உள்ளத்தில் மெல்லக் களங்கத்தைப் புகுத்த முனைகிறாள்.

அரசரிற் பிறந்துபின் னரசரில்வளர்ந்
தரசரிற் புகுந்துபே ரரசி யானநீ
கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்
உரைசெயக் கேட்கிலை யுணர்தி யோவென்றாள்

– 160


உள்ளத்தில் தன்னலத்தை மூடியிருந்த திரையை விலக்க முற்படுகிறாள். 'உன் தன்னலம்தான் பெரியது' என்று சுட்டிக் காட்டுகிறாள். 'நீயும் மற்றவர்களைப் போலத் தன்னலத்துக் காகத்தான் வாழ்பவள். அதற்காக எதையுஞ்செய்யத் துணிபவள்' என்று குறிப்பாக உணர்த்துகிறாள். தன்னலம் என்ற விதைக்கு நீர் உளற்றி வளர்க்கத் தொடங்குகிறாள். கைகேயியின் மனத்தில் தன்னலத்துக்கும், அறத்தை அடிப்படையாகக் கொண்ட மனச் சான்றுக்கும் சிறிது போராட்டம் நடக்கிறது. தன்னலம், "ஏன் தான் தலையெடுக்கக் கூடாது?" என்று கேட்கிறது. மனச்சான்று. "அறம் உன்னைத் தலையெடுக்க ஒட்டாது" என்று அறிவுறுத்துகிறது. கூனிக்குச் சொல்லும் மாற்றத்தில் அவள் உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் மெல்ல வெளிப்படுகிறது. நன்மையில் பழகிப்போன அவள் நெஞ்சு திடீரென்று தீமையில் இறங்க மறுக்கிறது. நன்மையழிந்து தீமை வாழ மனச்சான்று இடங்கொடுக்க மறுக்கிறது.

கூனி சொல்வன கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன வேயன்றித் தன்னலத்துக்குப் பயன்படா என்றும், பயன் பட்டாலும் அவற்றைச் செயலில் காணமுடியாது என்றும் தெரிவிக்கின்றாள். மனத்துக்கு நல்லனவெனினும் செயலில் காணமுடியாது என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறாள். அதே சமயத்தில் அறம் நோக்கின் அறத்திற்கும் நல்லவையல்ல என்று கூறும்பொழுது, நன்மையில் பழக்கப்பட் அவள் மனச்சான்று தீமையில் செல்லத் தயங்குவதையும் குறிப்பிடுகிறாள்

எனக்கு நல்லையும் அல்லைநீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லையத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லைவந் தூழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்

-164


என்று அவள் கூறியவை மனத்துக்கு இனியனவேயன்றி நலத்துக்கு இனியன அல்ல என்று கட்டிக் காட்டுகின்றாள். இதை மற்றவர்கள் அறிந்தால் அவர்கள் வாழ்வு என்ன ஆகுமே என்ற அச்சத்தால் நலன் அல்லன அவள் சொல்லுவதாகக் கருதுகிறாள். இது வரையிலும் அவளைப் பழக்கிப் புகழையும் பண்பையும் ஈந்த அறம் அவளை இவ்வாறு பேசவைக்கிறது. இறுதியில், அறமும், அதனால் வளரும் புகழும், பண்பும் தன்னலத்தின் முன்பு தலைசாய்ந்து விடுகின்றன என்பது, இனி அவள் தொடர்ந்து பேசும் பேச்சால் புலப்படுகிறது.

மனச்சான்று சிறிது மங்கிவிடுகிறது; அவள் வளர்த்து வந்த புகழையும் தன்னலத்துக்கு இழந்துவிடத் துணிகிறாள். பண்பும், நெறியும். தவமும், வீரமும் மாறுபட்டாலும் உலக வழக்கத்தை மாற்றமுடியாதே என்று நினைக்கிறது தன்னலப்பட்ட அவள் நெஞ்சம். பண்பு மாறினாலும், நெறி பிறழ்ந்தாலும், தவமும் வீரமும் நெகிழவிட்டாலும், மூத்தோர் ஆளும் வழக்கமுறையை மாற்றுதல் முடியாதே என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் மெல்லக் கிளைக்கிறது. மூத்தவனான இராமன் இருக்க இளையவனான பரதனுக்கு ஆட்சி எவ்வாறு கிடைக்கும் என்று அவள் உள்ளம் நினைக்கிறது. அவளைக் கண்டிப்பது போலத் தன் உள்ளத்தில் தன்னலத்தை மூடியிருந்த திரையை நாகரிகமாக விலக்கிக் காட்டுகிறாள். புகழ்மீது உள்ள ஆவலைக் காட்டுவதைப்போல் பரதனுக்கு ஆட்சி கேட்பது வரன் முறையாகுமா என்ற நாட்டுச் சட்டத்தின் அமைப்பின் சிக்கலைத் தெரிந்துகொள்ள முனைகிறாள். பரதன் ஆட்சிக்கு வருவது அரச நெறியாகுமா, அவ்வாறு வருவதற்கு அரச நீதியிடங்கொடுக்குமா என்று தெரிந்துகொள்ள விழையும் உள்ளத்தைக் கைகேயி மந்தரைக்கு நன்கு காட்டிவிடுகிறாள்.

பிறந்திறந்துபோய்ப் பெறுவதும் இறிப்பதும் புகழேல்
நிறந்தி றம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறந்தி றம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர்தீர்
மறந்தி றம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ

- 165


வரன்முறை திறம்பினால் புகழுக்கு இழுக்கு நிகழாதோ என்று சுட்டிக் காட்டுபவளைப் போலத் தன்னலம் தலையெடுப்பதற்குத் தடையாக உள்ள வரன்முறை பற்றிய நெறியைச் சுட்டிக் காட்டுகின்றாள்.

நீதிக்கும் நெறிமுறைக்கும் மாறுபட்டுப் பேசுவதால் வரும் ஏதம் அவள் நினைவுக்கு வருகிறது. நாட்டின் சட்டம் நெறியலலன பேசுவதற்கும் இடம் கொடாதே என்று கருதுகிறாள்.

"நீ அறிவற்றவள்; நீதியல்லவும் நெறிமுறை அல்லவும் நினைக்கின்றாய்; மற்றவர்கள் அறிந்தால் உன் நிலை என்ன ஆகும்" என்று உணர்த்துகிறாள். "நீ போ. உன் அற்ப நாவைத் துண்டிக்காமல் இதைப் பொறுத்துக் கொண்டேன்" என்று கடிந்து கூறுகிறாள்.

"போதி என்னெதிர் நின்று நின் புன்பொறி நாவைச் சேதியாதிது பொறுத்தனன்" என்று கடிந்து கூறுகிறாள். இங்கே, தன்னலம் ஒருபுறமும் வரன் முறை மற்றொரு புறமும் நின்று அவள் மனத்தை அலைக்கழிக்கின்றன. வரன் முறைக்கு மாறியிருந்தால் இவர்கள் பேசுவதும் தீமையை உண்டாக்குமே என்று எண்ணி அஞ்சுகிறாள். அவ்வச்சத்தால்தான் மந்தரையையும்,

....புறஞ்சிலர் அறியின்
நீதி யல்லவும் நெறிமுறையல்லவும் நினைந்தாய்
ஆதி ஆதலின் அறிவிலி யடங்குதி -166

என்று கடிகிறாள். நீதியல்லவும், நெறிமுறையல்லவும் நினைத்ததே பெருங்குற்றம். அக் குற்றத்திற்கு ஏற்படும் ஒறுத்தலுக்கு ஆளாகவேண்டும் என்று சொல்லி அவளை அடங்குமாறு உணர்த்துமுகத்தான் தன் ஆவலை அடக்கிவைக்க முற்படுகிறாள்.

மந்தரை அப்பொழுதும் அவளைவிட்டு அகலாமல், மேலும் வரன்முறை உண்டு என்று எடுத்துக்காட்டி, அவள உலகத்துக்கு அஞ்சும் அச்சத்தைப் போக்கி, மனச் சான்றை மங்கவைத்துத் தன்னலத்தைத் தழைக்க வைக்கிறாள். கைகேயியின் மனச்சான்றை மங்கவைக்கத் தக்க காரணம் சொல்லிவிட்டால், அவள் தன்வழிப் படுவாள் என்பதை நன்றாக உணர்ந்த மந்தரை, அவளுக்குத் தக்க அமைதி எடுத்துரைக்க முற்படுகிறாள். எடுத்துச் சொல்வதில் தக்க நியாயம் இருக்கிறதா என்பதைப் பற்றி அவள் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. சொல்லுவதைப் பொருந்துமாறு சொல்லி எப்படியாவது நியாயம் உண்டு என்று எடுத்துக் காட்டுவதே அவள் நோக்கமாக அமைகிறது. எவ்வளவு சொன்னால் அவள் மனம் மாறுமோ அவ்வளவும் சொல்லி அவள் மனத்தை அமைதியுறச் செய்வதோடு, அவள் தன்னலத்தைக் கொழுந்துவிட்டு எரியுமாறும் செய்துவிடுகிறாள்.

"மூத்தவனுக்குத்தான் அரசு உரியது என்றால் மன்னன் தசரதன் இருக்கும் பொழுது இளையவனான இராமன் ஆட்சி பெறுவதில் என்ன வரன்முறை இருக்கிறது? என்ன ஒழுங்குமுறை இருக்கிறது?" என்று கேட்கிறாள். "தசரதனை நோக்க இராமன் இளையவன் தானே! அப்படியிருக்க, அவன் அரச முடி புனைந்து கொள்வதற்கு இசைந்தனன் என்றால் பரதனை மட்டும் அந்த அரசமுடி எவ்வாறு விலக்கிவிடும்? அவனுக்கு மட்டும் அதை அடைய உரிமையில்லையா? மூத்தவன் இருக்க இளையவன் ஆட்சிக்கு வருவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்று எடுத்துக் காட்டுகிறாள்.

மனச்சான்றை மயக்க ஏதாவது ஒரு காரணம் போதும் என்பதை நன்றாக உணர்ந்த மந்தரை இவ்வாறு கூறி, அவளை அமைதிப்படுத்துகிறாள்.

மூத்த வற்குரித்தரசெனும் முறைமையின் உலகங்
காத்த மன்னனில் இளையனன் றோகடல் வண்ணன்
ஏத்து நீண்முடி புனைவதற் கிசைந்தன னென்றால்
மீத்தருஞ் செல்வம் பரதனை விலக்குமா றெவனோ?
- 168


என்று கேட்கிறாள்.

இப்பொழுது வரன்முறைக்கு அஞ்சி அடங்கிவிட்டால் எதிர்காலத்தில் எக்காலத்திலும் ஆட்சி வரும் வழியில்லை என்பதைக் காட்டுகிறாள். இந்த வரன்முறை என்ற நியதிக்கு அடங்கிக் கிடந்துவிட்டால் எந்தக் காலத்திலும் அவள் வழி மர்பினர்க்கும் ஆட்சி கிடைக்காது என்றும், இராமனை அடுத்தும் இவன் ஆட்சிக்கு வர இயலாது என்றும் எடுத்துக் கூறுகின்றாள். இப்பொழுது இழக்கும் உரிமையால் இனி அடுத்து இழக்கும் உரிமைகளை அடுக்கிக் கூறுகிறாள்.

இராமன் ஆட்சிக்கு வந்தால் கோசலைக்கு வரும் உயர்வையும், கைகேயி அடையப்போகும் தாழ்வையும் எடுத்துக் கூறுகிறாள். எந்த வரன்முறைக் காரணத்தைக் கூறி அதை மீறினால் புகழ் கெட்டுவிடும் என்று அஞ்சுகிறாளோ, அதே வரன்முறையை மீறாமல் இருப்பதனாலும் புகழுக்கு வரும் கேட்டை உணர்த்துகிறாள். உலகில் நன்மை வாழ்வது மக்களுக்குப் புகழ்மீது உள்ள ஆவலால்தான் என்பதை நன்றாக உணர்ந்தவள்; அதனால் அந்தப் புகழாசையைக் காட்டியே அவள் உள்ளத்தின் நன்மையையும், தூய்மையையும் மாற்ற முனைகிறாள்.

"இன்னலும் வறுமையும் தொடர அதனால் உன்னை அடுத்துவந்து கேட்போர்க்குக் கொடுத்துதவும் ஆற்றலும் உரிமையும் இழந்து கொடுத்துப் புகழ் பெறும் சூழ்நிலையை இழந்து, அதே வருத்தத்தால் உள்ளம் உடைந்து விம்மிப் பொருமி மாண்டுபோக மனம் விரும்புகிறாயா?" என்று. அவள் புகழ் விரும்பும் உள்ளத்தையும் துண்டி விடுகிறாள். அவள் தன்னலத்தின் மற்றொரு வெளிப்பாடு புகழ் வேட்கை என்பதை நன்குணர்ந்த மந்தரை, புறஞ்சுவர்க்கோலஞ் செய்யும் வெளிப்புகழை இழக்கும் நிலையை இழிந்த நிலையாக எடுத்துக் காட்டுகிறாள். தன்னலத்தின் மற்றொரு வெளிப்பாடு பெண்களுக்குப் பிறந்த வீட்டில் கொண்டுள்ள பற்றும் பெருமையும் என்பதை உணர்ந்த மந்தரை, கைகேயி உரிமை இழப்பதால் அவள் தந்தை வலிமை இழந்து பகைவர்க்கு அடங்கி வாழவேண்டிய சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறாள். வரன்முறைக்கு மதிப்புக் கொடுத்து இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பைத் தவற விட்டால் இராமனுக்குப் பிறகும் அவள் மைந்தன் பரதன் ஆட்சிக்கு வரமுடியாது என்பதையும், அவன் மைந்தர்களும் அடுத்த தம்பியாகிய இலக்குவனுமே ஆட்சிக்கு வர இயலும் என்பதையும் காட்டுகிறாள்.

பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும்

அடுத்த தம்பிக்குமாம் பிறர்க் காகுமோ

என்று அவள் என்றும் உரிமை இழக்கும் சிறுமையைக் காட்டுகிறாள்.

இறுதியில், தன்னலம் மனச்சான்றை மங்கவைத்து வெற்றிகொண்டு தன் கொடிய தொழிலைச் செய்ய முற்படுகிறது. நன்மையும், அன்பும், பேரறமும் அவள் உள்ளத்தை விட்டு அகல்கின்றன. அவள் தூய சிந்தையும் திரிந்தது என்று கம்பர் முடிவாகக் கூறிமுடிக்கிறார். நன்மையில் உறுதி கொண்ட அவள் உள்ளம் தீமையில் நிற்கும்பொழுதும் அங்கும் உறுதியோடு விளங்குகின்றது. அவள் உள்ள நிறைவில் ஒரு கள்ளச் சிந்தனை புகுந்துவிடுகிறது. நிறையுள்ளம் குறையுள்ளமாகிறது. அளியும் ஆழ்ந்த அன்பும் நிறைந்த பேருள்ளம் தன்னலமும் கொடுமையும் சூழ இடம் கொடுத்து விடுகிறது. தெய்வக் கற்பினாளும், அருள் உள்ளம் படைத்தவளும், தாயுள்ளம் கொண்டிருந்தவளுமான கைகேயி பேயுள்ளம் பெற்றுவிடுகிறாள்.

மன்னன் தசரதன், “பரதனுக்கு மண்ணைப் பெற்றுக் கொண்டு இராமனைக் காட்டுக்கு அனுப்பும் மற்றைய வரத்தைக் கேளாது விடு” என்று மன்றாடுகிறான். எந்த முறையீடும் அவள் செவி ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது. அவன் பலவாறு கூறி இரந்து மன்றாடியும் அவள் தன் உறுதியில் சிறிதும் குறையவில்லை. அவள் உள்ளம் தீமையில் நிலைத்துவிட்ட நிலையை, ‘தன்னேரில்லாத் தீயவள் உள்ளந் தடுமாறாள்’ என்று கூறிக் கம்பர் காட்டுகிறார்.

தசரதன் அவளை இரந்து கேட்கும் இன்னுரைகளை அவள் செவிகள் கேட்கவும், அவற்றை ஏற்கவும் மறுத்து விட்டன என்பதை, ‘மரந்தான் என்னும் நெஞ்சினள் நானாள் வசைபாராள்’ என்று கூறி விளக்குகிறார்.

இன்றோர் காறும் எல்வளை யார்தம் இறையோரைக்

கொன்றாரில்லை கொல்லுதி யோநீ கொடியாளே

என்று, அவள் கொடுமையைத் தசரதன் காட்டுகிறான். வேறு வழியில்லாமல் ‘ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்’ என்று மனமுடைந்து கூறி, அவள் இனிப் பழிவெள்ளத்தில் மூழ்கித் தவிக்கப்போகும் இழிநிலையை எடுத்துரைக்கின்றான். அவள் இனி அடையப்போகும் அவலநிலை எத்தகையது என்று எடுத்துக் கூறுகிறான். அவன் உலகைவிட்டு அகலுவதால் அவள் அடையப் போகும் தனிமை நிலையாகிய விதவைக் கோலத்தையும், அவள் பொலிவிழந்து வாழ்விழந்து வசை பெற்று இசைகெட்டு அழியப்போகும் அவல வாழ்வையும் எடுத்துக் காட்டுகிறான்.

ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள
மாய்ந்தே நான்போய் வானுல காள்வென் வசைவெள்ளம்

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது

என்று கூறுகிறான்.

மகனைக் காட்டுக்கு ஏக ஒப்புதல் தெரிவித்த சொற்கள் அவன் நெஞ்சை ஈர்த்து அவனை வெந்துயரில் மூழ்க வைக்கின்றன. சிந்தை இழந்து, மனம் நொந்து, கீழே சாய்ந்துவிடுகிறான். இவ்வளவு கொடுமையும் நேர்ந்த பிறகும், அவள் கொடுமையிலிருந்து சிறிதும் சலிப்புக் கொள்ளவில்லை. இரக்கமோ பரிவோ அவள் உள்ளத்தில் புகவில்லை. செய்கை முற்றிய சிந்தனையால் அமைதிகொண்டு அவள் ஆழ்ந்து உறங்கத் தொடங்குகிறாள். ‘செயல் முற்றியூறா நின்ற சிந்தனையினாளும் துயில்வுற்றாள்’ என்று கூறுகிறார்.

தன்னலம் தலையெடுக்கும் பொழுது ஆழ்ந்த பேரன்பும், அளியும், உள்ளத் தூய்மையும் மெல்ல எப்படி மறைந்து விடுகின்றன என்ற இயல்பைக் கைகேயியின் படைப்பில் மிக அழகாகக் கம்பர் காட்டுகிறார். நல்லவர்கள் என்று உலகம் மதிக்கும் சிலரும், உலகுக்கு அவர் செய்யும் நன்மையும் புகழ்ச் செயலும் அருட்செயலும் தன்னலம் என்ற பேயால் மறைக்கப்பெற்று, ஆசை என்னும் சூறாவளியால் அலைக்கப் பெற்று, எவ்வகைக் கொடுமைக்கும் துணிந்து நிற்பார்கள் என்பதைக் கைகேயின் தூயசிந்தை திரிந்த நிலையில், கம்பர் மெல்லமெல்லக் காட்டி நிலைநாட்டுவதைக் காண்கிறோம்.