உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் சொல்லாரம்/தொழிலும் தொழிலாளரும்

விக்கிமூலம் இலிருந்து





தொழிலும்
தொழிலாளரும்



நாம் ஜப்பானையும்
மிஞ்சலாம்

நம் நாடு வெப்பமுள்ள நாடு! இவ்வளவு வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு வேர்வை ஆறாகப் பெருகியோட உழைப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். இயற்கை வளத்தைப் பயன் படுத்தி தொழில் திறனை உண்டாக்குபவர்கள்---தொழிற் சாலையை நடத்துபவர்கள் இருக்கிறார்கள்.

திடீர்ப் புரட்சி செய்ய வேண்டுமென்ற எண்ணமில்லாத நாடு இந்த நாடு! பிறகு ஏன் மந்த நிலையில் தொழில் நடைபெறுகிறது? எந்த விதத்தில் வேலை செய்தால் தொழில் வளருமோ- அப்படியில்லாமல் இருப்பதால் தான் குறை ஏற்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை.

திட்டமிட்டுச் செயலாற்றினால் 15 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டைவிடச் சிறப்பாக நம்நாடு திகழும் என்பதில் யாரும் ஐயப்பட வேண்டாம்!

இப்பொழுது எங்கு பார்த்தாலும் ஆலைகள் எழ ஆரம்பித்து விட்டன. தொழிலாளர்கள் இந்தச் சமுதாயத்திற்குப் புது உருவத்தைக் கொடுக்கிறார்கள்.

பாரதி சொன்னார் தொழிலாளர்கள் பிரம்மாக்கள் என்று? பிரம்மாக்கள் என்றால் தெய்வங்களல்ல. உற்பத்தி செய்பவர்கள். உற்பத்தி செய்வதுதான் - ஆக்குந்தொழில் தான் பிரம்மாவுக்கு உரியது என்று புராணங்கள் கதை சொல்லும்.

அதைப் போல தொழிலாளர்கள் பிரம்மாக்களாகத் தான் இருக்க வேண்டுமென்று நினைத்தால் - தொழில் இருக்கும் ஆனால் வளமிருக்காது.

தொழிலாளர் உரிமைகளையும், அவர்கள் நலனையும் எவ்வளவுக்கெவ்வளவு பாதுகாக்கின்றோமோ அவ்வளவு விரிந்த அளவில் தொழில் வளம் பெருகும். நாட்டுடைமை சேதமாகாமல் செயல் படுமானால் தொழிலைப் பெருக்கலாம், தொழிலாளர் தங்கள் வாழ்வு ஒளிவிடும் அளவு உழைக்க வேண்டும்.

முதலாளிகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்! முன்பு முதலாளிகளைத் தொழிலாளர்கள் பார்க்க முடியாது. கோயில் நந்திபோல எட்டுப் பேர் வெளியே காவற்காரர்கள் என்ற பெயரில் இருப்பார்கள்.

இயந்திரத்தை மட்டும்
பேணினால் போதாது !

ஆனால் இன்றிருக்கும் முதலாளிகள் காலம் போகிற போக்கிற்கு ஏற்றவாறு நடப்பவர்கள். கல்வித்திறன் மிக்கவர்கள். அதனால் தொழிலாளர் உரிமைகளை அவர்களுக்கு. நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தொழிற்சாலையில் ஓடுகின்ற இயந்திரம் நாள்தோறும் எழுப்புகின்ற ஒலிக்கு மாறுபாடாக - பழக்கமில்லாத சத்தத்தை எழுப்பினால் " என்ன இது, என்றுமில்லாமல் இன்று புது விதமாக ஒலி எழுப்புகிறதே" என அதை நிறுத்தி - அதைப் பழுதுபார் என்று முதலாளி சொல்வார். அப்படிப் பழுது பார்த்தால் தான் இயந்திரம் கெடாமல் இருக்கும்; இயந்திரம் கெட்டால் தொழில் கெட்டுவிடும்.

எண்ணெய் விடவேண்டிய இடத்தில் எண்ணெய் விட்டு—மரையை இறுக்க வேண்டிய இடத்தில் இறுக்கி வைத்து—துடைக்க வேண்டிய இடத்தில் துடைத்து இயந்திரங்களைப் பாதுகாப்பதுபோல் முதலாளிமார்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.

தொழிலாளி கண்கலங்கினால் " ஏன் உன் கண்கள் சிவந்திருக்கிறது-ஏன் இறைக்க இறைக்க இப்படிப் பெருமூச்சு விடுகிறாய்?'" என்று கேட்கவேண்டும் — " எவ்வளவோ பெரிய பயங்கரங்களையெல்லாம் தூக்கும்போது 'இல்லாத சோா்வு இப்பொழுது ஏன் வந்தது? என்று அவன் முகம் மலரும் விதத்தில் பரிவோடு கேட்டு ஆவன செய்வதால் தொழில் கெடுமா? இல்லை தொழில் நிறுத்தம் தான் ஏற்படுமா?

நலிந்த தொழிலாளி
மாண்டால்...?

நன்றாக ஓடிய பந்தயக் குதிரை கொஞ்சம் நொண்டியானால் கூட சுட்டு விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதுபோல தொழிலாளர் நலிவடைந்தால் அவர்களை விரட்டிவிடக்கூடாது.

சுடப்பட்ட குதிரை இறந்த பின்பு அதன் குட்டிகளை அடுத்தவர் யாராவது வாங்கி வளர்த்துக் கொள்வார். ஆனால் நலிவடைந்த தொழிலாளி மாள நேர்ந்தால் அவன் குடும்பத்தை யார் காப்பாற்றுவது.?

அமெரிக்காவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இயந்திரம் தருவிக்கலாம். ஆனால் மனித இயந்திரங்களைத் தருவிக்க முடியாது. அந்த இயந்திரத்தையும் மனித இயந்திரம் தான் செய்கிறது. நூற்றில் ஒரு பங்காவது பாட்டாளி நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

தொழிலாளர் கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றையாவது முதலாளி நிறைவேற்ற வேண்டும். அதற்குப் பதில்—கோரிக்கைகளைக் கவனிக்காமல் முடியாது போ என்றால் உழைப்'பாளர்கள் எல்லாமே வேண்டுமென்று தான் சொல்வார்கள்

நீதி இருக்குமிடத்தில்
நானிருப்பேன்

அந்த வேளையில் என்னிடம் வந்தால் நீதி எங்கே இருக்கிறதோ அங்கே நானிருப்பேன். அப்படி நான் நீதி எங்கேயிருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பதற்குள் பலர் வீட்டு அடுப்படியில் பூனைகள் தூங்கிக் கொண்டிருக்கும்.

பார்த்தாலே நோய்தீர்க்கும்
மருத்துவமனை

தொழிலாளர் நலன்பேணும் மருத்துவமனைக் கட்டிடங்களை பார்த்தாலே அதனைத் தேடி வருகிற நோயாளிகளுக்கு பாதி நோய் குறைந்துவிடும். நோயாளிகளுக்கு அத்தகைய நம்பிக்கை தருவதாக கண்கவர் வனப்புடன் அவை நிகழ்கின்றன.

நான் எனது இளவயதில் சில மருத்துவமனைகளைப் பார்த்திருக்கிறேன். அதற்குள் போய்விட்டுத் திரும்பினாலே பழைய நோயுடன் புதிய நோய் வந்துவிடும். அவ்வாறின்றி இந்த மருத்துவமனை பொலிவுடன் இருப்பதற்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு இதுவரை இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தில் பங்கு பெறும் தொழிலாளருக்கு மட்டும் மருத்துவ உதவி தரப்பட்டது. இனி அவர்களின் குடும்பத்தாருக்கும் மருத்துவ உதவி கிடைக்கும் என்பதறிந்து மகிழ்கிறேன். சென்னை சுற்றுப்புறங்களில் இன்று 7 புதிய மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவை மதுரை ஆகிய இடங்களிலும் இத்திட்டம் பயனுற நடைபெற்று வருகிறது.

தொழிலாளர் நலன் பேணிக் காப்பதில் தமிழக அரசுக்கு உள்ள தலையான விருப்பம் இவற்றின் மூலம் விளங்கும். தொழிலாளர்களுக்கும் சமூகத்துக்கும் இத்திட்டம் பெரிய வாய்ப்பாக விளங்கும்.

தொழிலாளர்களுக்கு மட்டும் மருத்துவ உதவி தந்து விட்டு அவர்களது குடும்பத்தின் நலிவு நீங்காதிருந்தால் ஒரு பயனும் கிடைக்காது, இந்தப் புதிய திட்டத்தின் மூலம் இது வரை 1 லட்சம் பேருக்கு கிடைத்து வந்த மருத்துவ உதவி தொழிலாளர் குடும்பத்தினரையும் சேர்த்து இனி 6 லட்சம் பேருக்கு கிடைக்கும்.

தொழிலாளர் சமூகம் நல்ல பலம் பெற்றால் அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகளில் மேலும் தெம்போடு உழைப்பார்கள். மனமும் உடலும் மகிழ்ச்சியாக இருந்தால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும். செல்வம் வளரும்.

எனவே தொழிலாளர் நலனுக்காக எவ்வளவு செலவிட்டாலும் அது சமூகத்துக்கு ஒன்றுக்கு ஒன்பதாகத் திரும்பி வரும். தொழிலாளருக்காகச் செலவிடப்படும் தொகை ஒரு நாளும் நட்டக் கணக்காகி விடுவதில்லை.

இன்று மனிதனைக் காட்டிலும் திறமையாகப் பணியாற்றும் நவீன கருவிகளைப் பற்றி மத்திய அரசினர் கூறுகிறார்கள், அதையும் மனிதன்தான் செய்தான் என்பதை அவர்கள் மறந்து விடலாகாது.

உணர்ச்சியில் உந்தப்படுபவன் மனிதன். அந்த மனிதன் ஒரு அருமையான இயந்திரம். அவனுடைய இதயத்தில் வலி அவனது கண்களில் கண்ணீர் - அவனது நெஞ்சத்தில் வலி - அவனது உடலில் வாட்டம் காணப்பட்டால் அந்த மனிதயந்திரத்திடமிருந்து முழுப்பயனும் பெறமுடியாது.

அந்த மனிதப் பிறவியின் மாண்பினை உணர்ந்து அவனது வலியினையும் வாட்டத்தையும் போக்கிடக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு இது. அந்த மனிதன் இயந்திரத்தை கவனித்தால் அது உற்பத்திப் பெருக்கத்திற்குத் துணை நிற்கும்.

தமிழகத்து மருத்துவர்கள் நல்ல நிபுணர்கள், தமிழக மருத்துவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாட்டிலும் தலைசிறந்த மருத்துவர்கள் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார்கள்.

இந்த மருத்துவமனை பற்றி டாக்டர் குமாரவேல் என்னிடம் விவரம் கூறினார். அழகான கட்டிடம், கருவிகள் உள்ளன, ஆனால் டாக்டர்கள் போதுமான அளவு இல்லை என்றார்.

டாக்டரில்லா மருத்துவமனை
தோகையில்லா மயிலைப் போல

கட்டிடம் என்னதான் அழகாயிருந்தாலும், கருவிகள் எவ்வளவு இருந்தாலும் மருந்துகள் ஏராளமாக இருந்தாலும் டாக்டர்கள் இல்லாத மருத்துவமனை தோகையில்லாத மயிலுக்குச் சமானமாகும்,

இது குறித்து மருத்துவ இலாகா செயலாளர் அனந்தபத்மநாபனிடம் பேசினேன். தேவர்கள்கூட சங்கடம் வரும்போது அனந்த பத்மநாபனிடம்தான் போனதாகச் சொல்வார்கள். அவரிடம் இந்த மருத்துவமனைக்கு மருத்துவ நிபுணர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று சொன்னேன். அவருடைய செயல் திறமையினால் இன்று 25 நிபுணர்கள் இங்கு வர ஏற்பாடு ஆகியுள்ளது.

இங்குள்ள மருத்துவர்களும் மற்றப் பணியாளர்களும் தொழிலாளர் மனம் நோகாது பணியாற்றி வருவார்கள் என்று நான் நம்புகிறேன். மருத்துவமனையில் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுபற்றி டாக்டர் குரோனின் என்பவர் சிடாடல் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அது ஏட்டோடு இருந்துவிட வேண்டும், நாட்டில் இல்லை என்ற அளவு கடமையோடும் திறமையோடும் பணிபுரியவேண்டும்.

வாழ்த்துரை
மட்டும் தானா...?

இத்திட்டத்துக்கு தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் பணம் தருகிறார்கள். இதன் மொத்த செலவில் முக்கால் பங்கை தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட நிறுவனமும் கால் பங்கை மாநில அரசும் வழங்குகிறது, மத்திய அரசு எதையும் வழங்குவதில்லை. இதை ஒரு குறையாகக் கூறவில்லை.

இந்த நல்ல காரியத்தில் அவர்களும் பங்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் நண்பன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கட்டிடத்தை வந்து பார்க்கும்போது 2 வது மாடி, யார் கட்டியது என்றால் மாநில அரசும் இந்த நிறுவனமும் கட்டியது என்று சொல்வார்கள், மத்திய அரசு என்ன செய்தது என்று கேட்டால் வாழ்த்துரை வழங்கியது-நல்லுரை கூறியது- நல்லெண்ணம் தெரிவித்தது என்று சொன்னால் - வேறு எதுவும் கொடுக்கவில்லையா என்று கேட்பார்கள்.

இங்கே வந்துள்ள இத்திட்டத்தின் அகில இந்திய பொறுப்பாளர் மத்திய அரசிடம் சொல்லி 4 வது மாடியைக் கட்டிக்கொடுக்க மத்திய அரசின் உதவியைப் பெற்றுத்தர வேண்டும்.

நாட்டிலுள்ள மருத்துவர்களுக்கு ஒரு சிறிய யோசனை கூறிக்கொள்வேன். இன்று தொழில் பரவி வரும் பகுதிகளில் புதுவகை நோய்கள் ஏற்படுகின்றன; அவற்றைத் தடுக்க கட்டுப்படுத்த அரிய ஆலோசனைகள் கூறவேண்டும்.

இரண்டு மாத காலத்துக்கு முன் ஒரு மாவட்டத்துக்குப் போயிருந்தேன். அந்தப் பிரச்னை இன்னும் முடிவடையாதிருப்பதால் அந்த மாவட்டத்தின் பெயரைச் சொல்லவில்லை, அங்கு துவக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையின் கழிவு நீர், வாய்க்கால் வழியாக ஓடி வழியிலுள்ள பயிர் கருகி விடுகிறது - கழிவு நீரை வேறு வழியாக விடலாமே என்று சொன்னதற்கு வேறு இடமில்லையே என்று தொழிலதிபர்கள் கூறுகிறார்கள். இது போல தொழில்கள் வளர வளர புதிய பிரச்னைகள் புதிய நோய்கள் உருவாகின்றன. அவைகளையெல்லாம் தடுப்பதற்கு நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்.

இன்று பல நோய்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மலேரியா கட்டுக்கடங்கி - களைந்தெறியப்பட்டுவிட்டது என்ற நிலையை அடைந்துவிட்டோம், அதுபோலவே காச நோயும்; முன்பு காச நோய் வந்தவர்களை வீட்டிலிருப்பவர்கள் பார்த்தால் அழுவார்கள். இன்னும் எத்தனை மாதம் எத்தனை வாரம் எத்தனை நாள் உயிர் வாழ்வாரோ என்று அஞ்சுவார்கள். அந்த பயத்தைப் போக்கி இருக்கிறோம்.

இன்னும் மருத்துவர்களே கண்டு பயப்படும் நோயாக புற்று நோய் இருந்து வருகிறது. அதுவுங்கூட ஆரம்ப காலத்திலேயே வந்தால் குணப்படுத்தி விடலாம் என்று கூறுகிறார்கள். மருத்துவ வித்தகர்கள் முறையாக ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த மருத்துவமனை அதிகாரிகள் தொழிலாளர்களின் நலிவு நீங்கும் வகையில் அன்போடு பணிபுரிந்து வெற்றி பெற வேண்டும்.

ஆற்றல்
நம்மிடம் உண்டு

வெற்றிமேல் வெற்றியைக் குவித்துள்ளது சில நிறுவனம். தரம்மிக்க பொருள்களை உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுமளவுக்கு சில தொழில் நிறுவனம் உற்பத்தி செய்தளிக்கிறது. இதிலிருந்து தக்க வசதிகள் அளிக்கப்பட்டால் உலகம் எதிர்நோக்கும் காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் நம்மிடமுண்டு என்பதை இது காட்டுவதோடு, தொழில் முன்னேற்றத்தில் நமக்கு ஒளிமிகுந்த எதிர்காலம் உண்டு என்பதையும் காட்டுவதாக உள்ளது.

ராணுவத்திலே, அரசியலிலே வளர்ந்த இதர நாடுகளின் வரிசையில் நாம் இல்லாதிருக்கலாம். ஆனால் தொழில்களுக்குத் தேவையான அறிவிலோ ஆற்றலிலோ நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

ஆயினும் பொதுத்துறைத் தொழில்கள் ஏன் முன்னேற்றம் காண்பதில்லை என்ற கேள்வி என்னுள் எழுகிறது. அவற்றின் வெற்றிக்கு முதலில் சரியான வகையில் திட்டமிடப்பட வேண்டியது அத்யாவசியமாகும். சில நிறுவனம் பொருள்களை நல்ல தரத்திலும் அளவிலும் உற்பத்தி செய்தளிப்பதோடு அரசு தான் நடத்துகிறதொழில்களைப்பற்றி சிந்தித்திடவும், அதன்மூலம் நற்பலன் காணவும் தகுந்த கருத்தையும் அளித்து சிந்தனையைத் தூண்டியுள்ளன.

கனிவளம்
குறைவல்ல

"நமது நாடு வறுமையும் வாட்டமும் மிகுந்த நாடு-இங்கு கனிவளங்கள், குறைவு. என்றாலும் புதிய தொழில்களைத் துவக்கி வெற்றி ஈட்டும் துணிவுடைய தொழிலறிந்தோர் பலரையும் நாட்டுக்கு இப்பகுதி வழங்கியுள்ளது" என்று திட்ட அமைச்சர் அசோக் மேத்தா அண்மையில் மேட்டூரில் பேசும்போது குறிப்பிட்டார். கனிவளம் குறைவு என்ற அவரது கூற்றை நான் ஏற்க மாட்டேன். சேலத்து இரும்பும் பாக்சைடும் திருச்சியின் ஜிப்சமும் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலும் வருமே-நம்மிடம் தோண்டி எடுக்கப்படாத இன்னும் ஏராளமான கனிவளம் உள்ளது. அரசியலில் நிதானமும், நிலையான நிர்வாக அமைப்பும் கொண்ட பகுதி இது - நம்மைக் காட்டிலும் ஆற்றல் மிகுந்த ஏதேனும் ஒரு சக்தி குறுக்கே வந்தாலொழிய நாம் சிறந்த வெற்றிகளைச் சாதிப்போம் என்பது உறுதி. ஒளி மிகுந்த எதிர்காலம் நம்முன் உள்ளது.

வடக்கே துர்காபூர் என்றும் ரூர்கேலா என்றும் திட்டமிடுமுன் தென்னகத்தில் உள்ள இத்தகைய தொழில்களை மத்திய அரசினர் வந்து பார்க்கட்டும். நாட்டினரிடையே. நிலவுகின்ற வறுமையும் அறியாமையும், அழுக்கும், வேலையின்மையும் அகற்றப்பட இம்மாதிரி இன்னும் பல தொழிற் கூடங்கள் அமைய வேண்டும்.

துறைமுகத் தொழிலாளர் எவ்வளவு கடுமையான வேலை செய்கிறார்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருப்போம். அவர்கள் செய்யும் வேலை மிகவும் முக்கியமானது. நாட்டின் உயிர் நாடி போல விளங்கக் கூடியவை துறைமுகங்கள். அதிலும் சென்னைத் துறைமுகம் முக்கிய பங்கை வகிக்கின்றது.

கடுமையாக உழைக்கும் அத்தொழிலாளிகளுக்கு அவா்களது அடிப்படைத் தேவையான குடியிருப்பு வசதிக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் வீடுகளில் ஒன்றைப் போய்ப் பார்த்தேன். சிறந்த வசதிகளோடு கூடிய அவ் வீடுகள் குறைந்த வாடகைக்கு விடப்படுவது அதன் சிறப்பு! சிறியவர்கள் விளையாடி மகிழவும் இயற்கை அழகைப் பருகவும் பூங்காவை அங்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோன்ற குடியிருப்பு வசதிகள் எல்லாத் தொழிலாளிகளுக்கும் கிடைக்க வேண்டும். பல லட்சம் செலவிட்டு அங்கு நடந்துள்ள வேலைகளை எண்ணிப்பார்க்கும்போது துறைமுகத் தொழிலாளரில் 100 க்கு 11 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வசதி கிடைத்துள்ளதென்று அறிகிறோம். அக்காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று, பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு அவ்வசதி ஏற்பட வேண்டும்.

நிம்மதியான வாழ்வுதான்
நேர்த்தியான தொழிலைப் படைக்கும்

தொழிலாளர் வாழ்வில் நிம்மதி ஏற்பட்டால் தான் தொழில் நேர்த்தியாக இருக்கும். குறைபட்ட மனதோடு அவர்கள் வேலை செய்தால் தொழிலில் நேர்த்தியிருக்காது- தரம் இருக்காது—பயனும் கிடைக்காது.

இயந்திரங்களை எந்த அளவு நேர்த்தியாக வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவு அவற்றிலிருந்து பயன்பெற முடிகிறது.

இதை நல்ல முறையில் துறைமுக டிரஸ்ட் உணர்ந்து செயல்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி. மத்திய சர்க்காரும் இப்பணிக்கு கடனுதவியும் மானியமும் வழங்கியுள்ளது- இது போல இன்னும் கட்டிடங்கள் எழவேண்டும் -- துறைமுக டிரஸ்ட்டின் முயற்சிகளுக்காக நான் அவர்களைப் பாராட்டுகிறேன்.

நமது நாட்டில் தொழில்கள் வளர இயற்கையோடு ஒட்டி வாழுவது குறைக்கப்பட்டு வருகிறது.

காலையில் எழுந்தவுடன் பச்சைப்பசேலென்ற காட்சியும் பூங்காற்றும் வீசுகின்ற இயற்கையோடு ஒட்டிவாழுதலே உடலுக்கு நலன் பயக்கும் என்று உடற்கூறு நிபுணர்கள் கூறுகின்றனர் - ஆனால் நாட்டிலே இப்போது நல்ல வயல்களெல்லாம் பாங்கான கட்டிடங்களாகி விடுகின்றதைப் பார்க்கிறோம். தொழில்கள் அதிகமாகி வரும்போது புதிய நோய்களும் உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் காரணங்களால் நாம் தொழில் வளர்ச்சியை விட்டுவிட முடியாது-தொழில் வளர்ந்தால் தான் பொதுச் செல்வம் ஏற்படும்--அதன் வாயிலாகத் தனிப்பட்ட மனிதன் வாழ்விலும் வளமுண்டாகும்-ஆகவே தொழில்கள் வளருவதால் உண்டாகும் கேடுகளைத் திட்டமிட்டு நீக்கிட வேண்டும்.

இங்கு எவ்வளவு கருத்தோடு இந்தக் குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாழுங்கிணறு இருந்த இடத்தைப் பயனுள்ள தோட்டமாக ஆக்கியிருக்கிறார்கள் - துறை முக டிரஸ்ட்டின் அதிபர் இதை விளக்கினார்.

பூங்காற்று
வீசும் தோட்டம்

தொழிலாளரது வாழ்வானது பாழ்நிலமாக அல்லாமல். பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன்.

செய்த காரியங்கள் கொஞ்சம். செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் ஏராளமாக உள்ளது. அந்த வடிவத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு நாம் மலைத்துத் திகைத்துவிடலாகாது-நம்பிக்கையோடு இயன்றவரை காரியம் செய்வோம்.

தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டுமென்ற என் நல்லெண்ணத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிக்கல் உள்ளது
நூல்!

இந்தக் கைத்தறித் தொழிலில் தொடர்பும் அக்கறையும் (அமைச்சர்) பொறுப்பேற்றுக் கொண்ட இந்த நேரத்தில் மட்டுமல்ல! அதற்கு முன்பிருந்தே எனக்கு இருக்கிறது. இதற்குரிய ஒரு காரணம் - நான் பிறந்து - வளர்ந்து - வாழ்கிற காஞ்சிபுரம் - நெசவாளர்கள் நிறைந்து வாழ்கிற பகுதியாகும்! காஞ்சிபுரம் என்பது நெசவாளர்கள் நிரம்பிய பேட்டைகளும், கடை வீதிகளும் அதை நம்பி வாழும் மக்களும் நிரம்பியதுதான்!

பல ஆண்டுக் காலமாக அவர்களது கஷ்டங்களை நேரடியாக உணர்கிற காரணத்தால் அந்தத் தொழிலில் தொடர்ந்து நான் அக்கறை காட்டுவது இயற்கை. நெசவாளர்களது கஷ்டங்கள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டிருக்கின்றன - என்றும் அதற்கான சரியான பரிகாரங்கள் கிடைக்கவில்லை என்றும் இங்கே கூறினார்கள். நூல் - எப்போதும் சிக்கலுக்கு ஆளாவது. தான்! நூலுடன் தொடர்பு கொண்ட நெசவாளா் வாழ்க்கையும் சிக்கல்கொண்டதுதான். பக்குவமாக அந்தச் சிக்கலை நீக்குவதுதான் மிக முக்கியமான தேவையாகும். மற்ற ஆலைத் தொழிலுக்குக் கிடைக்காத வாய்ப்பும் வசதியும் - விஞ்ஞான கருவிகளின் உதவியும் கிடைக்காதபோதும் கூட - நேர்த்தியான மெச்சத்தக்க துணிகளை கைத்தறியாளர்கள் தயாரித்து வருகிறார்கள்!

ஆலைத் துணியில்தான் கண்ணைக் கவரும் ஆடைகளைத் தயாரிக்க முடியும் என்று நம்பப் பட்டது. ஆனால் இப்போது கைத்தறியில் கண்ணைக் கவரும் ஆடைகள் வேகமாகத் தயாராகின்றன.

நெசவாளர்களது எதிர் காலத்தை கவனித்து - வேறு தொழிலில் அமர்த்த வேண்டும் என்பது கவனிக்கப்பட தக்க பிரச்சினை என்றாலும் -

காலத்தோடு ஒட்டியது
கைத்தறித் தொழில்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் நேர்த்தியான கைத் திறமையை - வெளிச் சந்தையிலிருந்து ஏராளமான பணத்தை ஈட்டித் தந்த கைத் திறமையை விட்டுவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்க கருத்தல்ல.

மக்களின் தேவைகளை அறிந்து ஆடை தினுசுகளை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று சில பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை கண்காட்சியில் மட்டும் ஆடைகளைக் காண்பவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் கைத்தறியாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை சேலை தினுசுகளை மாற்றி வருகிறார்கள்.

ஒரு சினிமா வெற்றிகரமாக ஓடிவிட்டால் போதும் அடுத்த வாரமே அந்தப் பெயரில் ஒரு அழகான சேலை தினுசு தயாரித்து விடுவார்கள் கைத்தறியாளர்கள்.

இத்தனைக்கும் அந்தச் சினிமாவை நான்கு முறை பார்க்கும் வசதி அந்த நெசவாளர்க்கு இல்லை. ஒரே முறைதான் பார்க்கிறார். அந்தப் படத்தில் வரும் கதாநாயகி அணிந்திருக்கும் சேலையைப்போல் - தயாரிக்க நினைக்கிறார். அந்த நினைப்பு நம்பிக்கையாய் மாறி உள்ளத்திலிருந்து கிளம்பி விரல் நுனிக்கு வருகிறது. பிறகு தறியிலமர்ந்து அழகான சேலையைத் தயாரிக்கிறார்.

இப்படி காலத்தோடு ஒட்டி நாளுக்கொரு தினுசாக அவா்கள் சேலையைத் தயாரிக்கிறார்கன்.

இங்கேயுள்ள கடைகளில் எந்தக் கடைக்கு வேண்டுமானாலும் போய்ப் பாருங்கள். எந்தச் சரக்கைப் பார்த்தாலும் வாங்கவேண்டும் - என்ற உணர்வுதான் வரும். அப்படிப்பட்ட அருமையான கைத்திறமை அந்த ஆடைகளில் இருக்கும்.

நெசவாளர்களுக்குள்ள கஷ்டங்கள் (1) நூல்விலை ஏற்றம் (2) சாயங்களின் ஏற்றம் (3) தேவையான முதலீடு தர பாங்குகளின் தயக்கம் (4) நம் நாட்டுக் கைத்தறியை இறக்குமதி செய்த நாடுகள் கதவைச் சாத்திவிட்டன.

இந்தக் காரணங்களால் நேர்த்தியான ஒரு தொழில், கால காலமாக பலர் ஈடுபட்ட தொழில் - ஒரு காலத்தில் ரோமானிய நாடு பாராட்டிய தொழில்-பஞ்சத் தொழிலாக மாறிவிட்டது. வேதனை தருவதாக இருக்கிறது. பத்து பைசா தரலாமா? தோளில் சுமந்து விற்கலாமா? கண்காட்சி ஏற்படுத்தி விற்கலாமா? என்று சந்தை தேடவேண்டியிருக்கிறது!

இதற்குக் காரணம் யார்? - என்பதை இந்தக் கூட்டுறவு சங்கத்தினர் அறிவார்கள்.

வெளிநாடுகளில் நமது தூதுவர்கள் இருக்கிறார்கள். வியாபாரத்தைப் பெருக்குவதற்கென்றே சில அதிகாரிகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அவர்கள் வெளிநாட்டில் கைத்தறியாடைகள் வாங்கவேண்டிய ஆர்வத்தை பிறருக்கு ஊட்டியிருந்தால் நல்ல சந்தை கிடைத்திருக்கும்.

ஆனால் நான் வெளிநாடு சென்றிருந்தபோது சந்தித்த அதிகாரிகள் - மேனாட்டு உடையை அணிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தேசிய உடை என்று கதரை அணிந்துகொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் "காஞ்சிபுரம் சேலை தெரியுமா? திருநெல்வேலி குண்டங்கி தெரியுமா ? புளியங்குடி வேட்டியின் நயம் தெரியுமா? கடையநல்லூர் சரக்கு நல்ல சரக்கு" என்று கூறினால் - அந்தப் பேச்சில் உயிர் இல்லாமல் போய் விடும்!

ஆகவே அவர்களும் கைத்தறியாடைகளை அணிந்து கொண்டு - உலகச் சந்தைகளில் மட்டுமல்ல - ஒவ்வொரு இடத்திலும், கைத்தறிக்குச் சந்தை ஏற்படுத்த வேண்டும்.

தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு மாலையணிவிப்போர் கைத்தறியாடைகளை அணிவித்தால் போதும் என்று கூறினோம். முதலில் அது கேலியாகக் கருதப்பட்டாலும், இன்றைய தினம் பல்வேறு கட்சிகளும் அந்த முறையைப் பின்பற்றுகின்றன. இதனால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பவில்லை; கைத்தறியாளர் பிரச்சினையை நினைவூட்டவே அந்தமுறை மேற்கொள்ளப்படுகிறது,

டில்லி சென்றிருந்தபோது கூட மற்றவர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன, எனக்கு மட்டும் கைத்தறியாடைகள் அணிவிக்கப்பட்டன. ஏன் என்று கேட்டதற்கு 'உங்களுக்கு இந்த ஆடைகள் தானே பிடிக்கும்?'-என்றார்கள்.

ஆனால் இதனால் மட்டும் பிரச்சினைகள் தீராது. நமது மத்திய அரசு உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்தால் நிச்சயம் இதற்கொரு வழி பிறக்கும்.

மத்திய அரசுடன் வம்புக்கு நிற்க நான் விரும்பவில்லை. அதனால்தான் நம்ம மத்திய அரசு' என்று பாத்யதை கொண்டாடிக் கூறுகிறேன்.

மத்திய அரசின்
பொறுப்பு.

கோடிக் கணக்கான மக்கள் இந்தத் தொழிலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - உண்மையைச் சொன்னால் வதை பட் -டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் சந்தை தேடிக் கொடுக்கும் பொறுப்பு மத்திய அரசைச் சார்ந்ததாகும்.

ஆனால் அமைச்சர்கள் கைத்தறித் தொழிலில் எவ்வளவு அக்கறை செலுத்தினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். அமைச்சரின் பெயரைச் சொல்வது அரசியல் நாகரிகம் ஆகாது.

அந்த அமைச்சரிடம் கைத்தறியாளர் பேட்டிகண்டு எண்பதாம் நெம்பர் நூல் வேண்டும் என்று கேட்டதற்கு "எண்பதாம் நெம்பர் நூல் தரச் சொல்ல இயலாது. எண்பதாம் நெம்பர் நூல் 500 பேல் தானே கேட்கிறீர்கள். நாற்பதாம் நெம்பா் நூல் 1000 பேல் தருகிறேன். நாற்பதும் நாற்பதும் எண்பது தானே; ஐநூறும் ஐநூறும் ஆயிரம் தானே!" என்றாராம்.

கேலி புரிவதற்காகக் கூறவில்லை: கைத்தறியாளர் விஷயத்தில் அரசாங்க அக்கறை எப்படியிருந்தது எனக்கூற விரும்புகிறேன்!

இந்த நேரத்தில் மக்களுக்கும் ஒன்று கூறிக்கொள்வேன்

தாய்மாரின் உதவி

.

நெசவுத் தொழில் இது நாள் நசித்துப் போகாமல் இருக்க -நெசவாளர் பாதிவயிறாவது சாப்பிட உதவுபவர்கள் நமது நாட்டுத் தாய்மார்கள்தான்! ஆடவர்கள் எப்படிப்போனாலும் தாய்மார்கள் தான் மறவாமல் கைத்தறியாடைகளை வாங்குபவர்கள்! ஆகவே கைத்தறியாளர்களைக் காப்பாற்றும் தாய்க் குலத்திற்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆடவர்களைப்போல் தாய்மார்களும் ஆமதாபாத்தையும், கட்டாவையும், நம்பத் தொடங்கினார்கள் என்றால் நெசவாளர் -கள் வண்ணாரப்பேட்டையில் தண்டையார்ப்பேட்டையில் வீதியோரங்களிலோ - குடிசைகளிலோ - குடியேற வேண்டிய வேதனையான நிலை ஏற்பட்டிருக்கும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற ஒரு சொல்லைச் சங்கத் தலைவர் நாச்சிமுத்து கூறினார். அந்தக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்படவேண்டிய ஒற்றுமை கைத்தறிக் கொள்கை விஷயத்திலும் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

விசைத்தறியின் போட்டியால் கைத்தறிக்கு ஏற்படும் கஷ்டத்தை நஷ்டத்தை நாங்கள் மட்டுமல்ல - மத்திய அரசும் தாங்க முன்வர வேண்டும்.

விவாதத்திற்கு
அப்பாற்பட்டது தத்துவம்

தத்துவம் எப்போதும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. கூட்டுறவு இயக்கம் தேவை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். நடைமுறையில் எல்லா மக்களுக்கும் பயன் தருவதாக கூட்டுறவு இயக்கம் அமைந்தால் எல்லோரும் வரவேற்பார்கள். நடைமுறை இன்றைய தினம் மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கூட்டு-உறவு என்ற இரண்டு சொல் சேர்ந்து கூட்டுறவு என்று பெயர் பெற்றுள்ளது. கூட்டு மட்டும் என்றால் லரபத்துக்குத்தான். உறவு என்று இருப்பதால், அது லாபம் அற்று இருக்கிற உறவாகத்தான் இருக்கவேண்டும்.


கூட்டுறவு இயக்கம் சரியாக நடக்கவில்லை என்ற எண்ணம் மக்களிடத்தில் இருக்கிறது. அது இல்லை என்று மட்டும் சொல்ல முடியாது. அந்தக் குறையை நீக்க முயற்சித்தால் ஒவ்வொரு குடும்பமும் பங்கு பெற முன் வருவார்கள்.

ஆஸ்பத்திரி, கல்லூரி போன்ற பல நல்ல காரியங்களுக்கு இந்த இயக்கம் உதவியிருப்பது பாராட்டத் தக்கதாகும்.

நான் சிறியவனாக இருந்த பொழுது எங்கள் ஊரில் இருந்த மத்திய பாங்கு இன்னும் ஒரு மாதத்திற்குத்தான் நடக்கும் என்று பேசிக் கொள்வார்கள். இப்படிப் பல முறை பேசிக் கொண்ட பொழுது வேதாசலம் அவர்கள்தான் ஏற்று நடத்த முன் வந்தார். அவர் சுலபத்தில் எதிலும் ஈடு பட மாட்டார். ஈடுபட்டு விட்டால் தொடர்ந்து பணியாற்றி வெற்றி தேடித்தருவார். அதைப்போல இந்தப் பண்டக சாலைக்கும். அவர் முதன் முதலில் பணியாற்றி இருக்கிறார். நடை முறையைப் பொறுத்துத் தான் கூட்டுறவு இயக்கத்தின் சிறப்பு அமையும் - கூட்டுறவு இயக்கம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நடை முறையில் உள்ள சிக்கலை நாம் மறந்து விடுவதற்கு இல்லை.

ஒருவரே தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தலைவராக இருக்கக் கூடாது என்று முன்பு பேசப்பட்டு பின்னர் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் அது கைவிடப்பட்டது. எதற்கும் முதல் அணி - இரண்டாவது அணி- மூன்றாவது அணி என்று படை வரிசை இருக்க வேண்டும் அப்படித் தொடர்ந்து அணி கிடைத்தால்தான் ஒரு இயக்கம் நீடித்து நடக்க முடியும்.

வீட்டிலே இருக்கிற 95 வயதான பெரியவர் மகனிடம் சாவியைக் கொடுக்க விருப்பம் தான். என்றாலும் எப்படி நடப்பானோ என்று பயமாக இருக்கிறது என்று சொல்வது போல இங்கே தலைவராக இருப்பவர்கள் எனக்கு போக விருப்பம்தான் ஆனால் பின்னால் வருபவர்கள் எப்படி நடத்துவார்களோ என்று பயமாக இருக்கிறது என்று சொல்லக் கூடாது. ஒருவர் இருக்கும்போது அதற்குப் பிறகு வரவேண்டியவர்கள் அவர்கள் காலத்திலேயே அதற்குரிய பயிற்சியைப்

பெற்றுக் கொள்ளவேண்டும். யாரும் வரலாம் என்ற அளவுக்குப் பயிற்சி பெற்று விடவேண்டும்.

கூட்டுறவு இயக்கத்திற்கு ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் - டைரக்டராக இருக்கவேண்டும் என்பதை மாற்றி அவர்கள் தங்கள் அனுபவத்தை மற்றவர்களுக்குத் தரவேண்டும்.

கடிகாரம் போன்றது
கூட்டுறவு இயக்கம்

ஒரு பல் தேய்ந்து போனாலும் சக்கரத்தின் ஓட்டம் குறைந்துவிடும். ஒழுங்காக ஓடிக்கொண்டு இருக்கிற கடிகாரம்போன்றது கூட்டுறவு இயக்கம், ஒரு ஆணி கழன்று விட்டாலும் மொத்தத்தில் பாழ்பட்டுப் போய் விடும். அதனால் கூட்டுறவு இயக்கத்துக்குத் தொடர்புள்ள மத்திய பாங்கு- ரிசர்வ்பாங்கு இவைகளுக்குள்ள கூட்டுறவு எப்போதும் சரியாக இருக்கவேண்டும்.

ஜப்பான் நாட்டில் உணவு உற்பத்தியில் முழு அளவு. கூட்டுறவு முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு விவசாயிக்கு நிலம் வாங்கவேண்டும் என்றாலும் நிலத்தில் விளைகிற தானியத்தை விற்பதாக இருந்தாலும் அவர்கள் கூட்டுறவு இயக்கத்தையே நாடுகிறார்கள். அதனால் தான் அந்த நாட்டில் உள்ளவர்கள் இரண்டு மூன்று ஏக்கர் நிலம் உள்ளவர்களாக இருந்தாலும் வளமாக வாழ்கிறார்கள்.

ஜப்பான் நாட்டுக்குப் போயிருந்த போது, அங்குள்ள ஒரு கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். 5 ஏக்கர் நிலம் உள்ள ஒரு விவசாயி வீட்டில் மூன்று மோட்டார்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் நிலத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பொழுது விடிந்ததும் ஜன்னலைத் திறந்து பார்த்தால் அவர்கள் கண்ணில் படுவது காய்கறித் தோட்டம். பல்

துலக்குவதற்குள் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடலாம்.

சிறிய டிராக்டர் வைத்து இருக்கிறார்கள். என்ன விலை என்று கேட்டவுடன் ஒரு புத்தகத்தை திறந்து காட்டி ஒரு பகுதி முன் பணம் கொடுத்து விட்டு மீதியை மாதா மாதம் செலுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். கூட்டுறவு இயக்கத் தில் ஈடுபட்டு இருப்பதால் இவ்வளவு அவர்களுக்கு கிடைக்கிறது. நாம் எல்லாத் துறைக்கும் கூட்டுறவு முறையை பயன்படுத்தலாம். பின்னல் போன்று நமக்கு எல்லா இடத்திலும் அமைப்புகள் இருக்கிறது. ஆனால் அதிலே சிக்கல் இருக்கிறது. அறிவாற்றல் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தை கூட்டுறவு இயக்கத்துக்கு தந்துதவ முன் வரவேண்டும்.

பஸ் தொழில்
நாட்டுடைமை

ஆட்சிப் பொறுப்பில் அமருவதற்கு முன்பே பஸ் தொழிலை நாட்டுடமையாக்குவோம் என்பதை மக்கள் முன் எடுத்துரைத்து வந்திருக்கிறோம்- ஆட்சிக்கு வந்த பின்னர் சட்ட மன்றத்தில் எடுத்துக் கூறி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. யாரிடத்திலும் கசப்புணர்ச்சி கொண்டதால் அரசு இதைச் செய்யவில்லை.

எந்த ஒரு அரசும் தன் வருவாயைப் பெருக்கிட இத்தகைய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது இயற்கை. மக்களின் தேவைகள் வளர்ந்து வருகின்றன. அந்தத் தேவைகளின் வளர்ச்சிக்கேற்ப வரிகளைக் கூட்டிச் செல்லக் கூடாது. அரசு புதிய வருவாய்களைத் தேடவேண்டும். அத்தகைய ஒரு முயற்சியே இது.

ஆரணிக்குப் புதிய பஸ் விடுகிறோம். இதில் ஏற்கனவே பஸ் விட்டுக்கொண்டிருந்த ராஜகோபால் நாயுடு மிகுந்த பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துள்ளார். அரசின் புதிய முயற்சிகள் யாரையும்,எந்தத் தொழிலில் உள்ளவர்களையும் நிலை குலையச் செய்வதற்காக அல்ல. அடிப்படைத் தொழில்கள் நாட்டுடமையாக இருக்கவேண்டுமென்ற பொதுக் கருத்துக் கொப்பவே இவை செய்யப்படுகின்றன.எந்தத் தொழிலையும் நிலைகுலையச் செய்யும்எண்ணம் ஒருதுளியுமில்லை

எங்களைப் பொறுத்த மட்டில் பஸ் தொழிலில் உள்ள பலர் எங்களுக்கு நெருங்கிய நண்பர்கள்- அவர்களது குறையை நாங்கள் அறிவோம். இந்த அரசு அவர்களுக்கு அவசியமானதைச் செய்யும். அவர்களையும் உள்ளடக்கியதே அரசு.

அவர்கள் வேறு துறைகளுக்குச் செல்லும்போது அரசின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும். தேவைப்படுகிற சலுகைகள் அளிப்போம்.

சில வட்டாரங்களில் கூறப்படுவதுபோல பகை உணர்ச்சியால் பஸ்களைப் பறித்து கொள்கிறோம் என்பது அர்த்தமற்றது, இத் தொழிலில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள டி வி எஸ், மகாலிங்கம் போன்றோருக்கு பஸ் தொழில் அவர்கள் நடத்தும் தொழில்களின் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளதேயாகும்.

அரசு ஏற்றிருக்கும் இத்தொழில் சிறக்க நடந்து, வருவாய் தந்து, நாட்டுக்குப் பயனளிக்க வேண்டும். அரசு இதை எப்படிச் செம்மையாக நடத்தலாம் என்பதற்கு தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் தக்க ஆலோசனைகளைக் கூறி உதவ முடியும்.

தனியார் துறையிலுள்ள தொழிலை சர்க்கார் ஏற்று நடத்தத் துவங்கியதும் அதன் லாபம் குறைந்து விடுகின்றதென்று ஆண்டு தோறும் கணக்குக் குழுக்கள் சுட்டிக் காட்டுகின்றன. கூறப்படுகிற குறைகளுக்குக் காரணம் இல்லாமலில்லை.

இங்கிலாந்து
நாட்டில்...

அரசின் இந்தத் துறை மேலும் விரிவடையும் போது தனிப்படட பஸ் முதலாளிகளாக இருந்து திறம்படத் தொழில் நடத்தியவர்களையும் சேர்த்து ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டது. இங்கிலாந்தில் தேசியமயக் கொள்கை அமுலான போது அத்தொழில்கள் சிறப்பாக நடக்க தேசிய முதலாளிகள் குழு அமைக்கப்பட்டது போல இங்கும் அவர்களது திறனைப் பயன் படுத்த அத்தகைய குழுக்களை அமைக்க வேண்டும். இக்கருத்தை முன்பொருமுறை கோவையில் பேசும்போது நான் குறிப்பிட்டேன். இப்படிப்பட்ட நேரத்தில், கைகொடுக்க அவர்கள் முன்வருவார்கள் என்று நம்பலாம்.

இல்லாவிட்டால் தாங்கள் தேடிய பணத்தில் கல்லூரி என்றும் விடுதிகள் என்றும் அறச்சாலைகள் என்றும் நிறுவியிருக்க மாட்டார்கள். அத்தகைய ஒத்துழைப்பின் உச்சக்கட்டமாகவே இப்பணிக்கு அவர்கள் அளிக்கிற உதவியுமாகும்.

ஜாதகம்
சரியில்லையோ

நல்ல பெண் என்று எல்லோராலும் பாராட்டப்படும். பெண்ணுக்கு, நல்ல கணவன் கிடைக்காவிட்டால் அவளுக்கு ஜாதகம் சரியில்லை என்று கூறுவார்கள்.

அதுபோல் சேலத்து இரும்புக்கும் ஜாதகம் சரியில்லை போலிருக்கிறது; எனவே தான் வெளிநாட்டு நிபுணர்களாலும், உள்நாட்டு வல்லுனர்களாலும் பாராட்டப் பெற்ற பிறகும் சேலத்தில் இரும்பு ஆலை அமைக்கப்படாமல் இருக்கிறது.

சேலத்தில் இரும்பாலை அமைக்க கடந்த 15 ஆண்டுகளாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்த ஆலைக்காகவும், தூத்துக்குடி துறைமுகத்துக்காகவும் தி. மு. கழகம் "எழுச்சி நாள்" கொண்டாடியது.

சேலத்து இரும்பு என்ற புத்தகத்தில் உள்ள தகவலைப் படிப்பவர்கள் “சேலம் இரும்பாலைக்காக நாம் இதுவரை பொறுத்துக் கொண்டிருந்ததே தவறு என்று உணர்வார்கள். நான் "சேலம் இரும்பாலை வேண்டும் " என்று கேட்பதை சிலர் தவறாக எண்ணுகிறார்கள். "டெல்லியுடன் மோத வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்ணாதுரை இதைக் கேட்கிறார்" என்று கருதுகிறார்கள்.

இது மிகத் தவறான கருத்தாகும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் சேலம் இரும்பாலைக்கு நாம் இப்போது எடுக்கும் முயற்சியே போதாது என்று துடித்து எழுவார்கள்.

தமிழக அரசு ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் எப்படியும் தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தையும், சேலம் இரும்பாலைத் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தைப்பொறுத்தவரை அந்தத் திட்டம் நிறைவேறுமா என்று இருந்த அச்சம் இப்பொழுது அடங்கி விட்டது, டெல்லி சர்க்காரும் தொடர்ந்து உதவி செய்ய சம்மதித்ததன் காரணமாக அங்கே தொடர்ந்து செம்மையாக வேலை நடந்து வருகிறது. எனவே தூத்துக்குடி துறைமுகத் திட்டம் நிறைவேறும். அது வெற்றி பெற்றே தீரும் என்பதில் சந்தேகமில்லை.

வெளி நாட்டினர் என்னைச் சந்திக்கும்போது சேலம் இரும்பாலையைப்பற்றி ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். இவ்வளவு சிறந்த திட்டத்தை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை" என்று கேட்கிறார்கள்.

அவர்களிடம் இந்த ஆலையை நடத்தும் அதிகாரம் டெல்லியில் தான் இருக்கிறது என்று சொல்ல எனக்கே கூச்சமாக இருக்கிறது. எனவே அவர்களிடம் "இன்னும் சில காலத்தில் நாங்கள் அதை நடத்துவோம்" என்று பதில் கூறி வருகிறேன்.

சேலம் இரும்பாலையை டெல்லி தொடங்க முடியாது என்று அறிவித்து விட்டால் தமிழக அரசே இங்குள்ள தொழிலதிபர்கள், போன்றோர் உதவியுடன் ஒரு தொழிலமைப்பைத் தொடங்கி அதன் மூலம் அந்த ஆலையை நடத்தலாம். என்று திட்டமிட்டிருக்கிறது. இதையே நான் சமீபத்தில் கூட டெல்லிக்கு எடுத்துக் கூறினேன்.

ஜப்பான் நிபுணர்களும் ஒரு தடவைக்கு நான்கு தடவையாக "சேலம் இரும்பாலையை உருவாக்கித் தருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

மத்திய அரசின்
முட்டுக் கட்டை

ஆனால் இந்த முயற்சிக்குக் குறுக்கே நின்று முட்டுக்கட்டை போடுவது டெல்லி தான். அவர்கள் சேலம் இரும்பாலையை அமைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறவும் மறுக்கிறார்கள்.

டெல்லியில் இருந்து இதுகுறித்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. சேலம் இரும்பாலை நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் வரும் என்கிறார் ஒரு அமைச்சர். ஆனால் இன்னொரு அமைச்சரோ நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் உண்டா என்றே முடிவு செய்யவில்லை என்கிறார்.

இன்னொருவர் "நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இரும்புக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்று பார்த்து விட்டு சேலம் இரும்பாலையைப் பற்றி யோசிப்போம்!"

இப்படி டெல்லியில் உள்ளவர்களிடையே சேலம் இரும்பாலை குறித்து தடுமாற்றங்கள் இருக்கின்றன. இந்தத் தடுமாற்றம் அவர்கள் அறிந்தே ஏற்பட்டிருந்தால் அதுகண்டிக் -கத்தக்கது. அறியாமல் ஏற்பட்டு இருந்தால் பரிதாபத்திற்குரியது.

எப்படி இருந்தாலும் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டது வருந்தத்தக்கது. சேலம் இரும்பாலை ஜப்பான் உதவியுடன் அமைப்பது இயலாத காரியமல்ல.

விவசாயத் துறைக்கு
ஓர் நிறுவனம்

கிர்லோஸ்கர் நீண்ட பல ஆண்டுகளாக மிகுந்த சகிப்புத் தன்மையோடு அயரா உழைப்புடனும் இந்த நாட்டின் விவசாயத்தை ஒரு முற்போக்கான தொழிலாக ஆக்கிட பாடுபட்டிருக்கிறார்கள்.

வேளாண்மைத் துறை அமைச்சர் அயல்நாடுகளில் தயாரான என்ஜின்களையே நம்மவர்கள் விரும்புகிறார்கள் என்று சொன்னார். இதற்குக் காரணம் பழக்கமோ அல்லது மக்களிடையே வளர்ந்து விட்ட மனப்போக்கோ அல்ல; அந்த அன்னிய இயந்திரங்கள் நன்றாகவே பணியாற்றும் என்று அவற்றினிடத்தில் ஏற்பட்டு விட்ட நம்பிக்கையேயாகும். உள்நாட்டுப் பொருள்கள் நூற்றுக்கு நூறு தரமானவை - நன்றாக வேலை செய்யும் என்று மக்கள் அவற்றை நம்பும்படிச் செய்வதொன்றே சிறந்த வழி.

உள்நாட்டில் நம்மவர் பெற்றுள்ள தொழில் நுணுக்க - நிர்வாக - விஞ்ஞான அறிவும் திறனும் நம்மவர் எந்த நாட்டாருடனும் போட்டியிடக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியான இந்த என்ஜின்களில் 99 சதவீதம் இந்தியப் பொருள்களே என்பதையும் அதில் 70 சதவீதம். தென்னகத்தில் சிறு தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன், இம்மாதிரி உள்நாட்டுப் பொருள்களுக்கு. மதிப்பளித்து அவற்றைப் பயன்படுத்தினால் நாட்டில் சிறு தொழில்கள் பெருகி நாட்டின் உருவையே மேம்பாடுறச் செய்திடலாம்.

தமிழ் நாட்டின் இன்றைய விவசாயி புதிய முறைகளைக் கையாண்டு விவசாயத்தில் வளம் காணத் துடிக்கிறான் எந்த முறையானாலும் முதலில் மற்றவர் செய்து பார்க்கட்டும் - அப்புறம் நாம் செய்யலாம் என்ற அளவில்தான் அவனது பழமைப் போக்கு உள்ளது.

ஜீவ நதிகள் இல்லாத தமிழ் நாட்டில் நாம் பயிர் பாசனத்துக்கு நிலத்தின் அடியில் உள்ள நீரையே பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் - நிலத்தினடி நீரைப் பொறுத்தமட்டில் நாம் மிக நல்ல நிலையில் வளமுடன் இருக்கிறோம். இந்த வளத்தைப் பயன்படுத்த இத்தகு இறவைப் பொறிகள் - வலுவுள்ள - உறுதியும் பாதுகாப்புமுள்ள - விலை மலிவாகவுள்ளவை நிறையத்தேவை.

இயந்திர உற்பத்தியாளருக்கு
இனிய வேண்டு கோள்

நாட்டுப் புறங்களில் நிலவும் வறுமையை உணர்ந்தவனென்கிற முறையில் இறவைப் பொறிகளை உற்பத்தி செய்வோருக்கு நான் முக்கிய வேண்டுகோள் விடுக்கிறேன் உங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்திடுங்கள். சில ஆண்டுகளேனும் லாபத்தின் ஒரு பகுதியை இழந்தாயினும் விலை குறைக்க உற்பத்தியாளர்கள் தயங்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறேன்.

உற்பத்தி செய்துவிட்டு விலையைக் கூட்டி விட்டால்: அவை வெறும் காட்சிப் பொருள்களாகவே இருக்கும். அப்படியில்லாமல் இத்தகைய தொழில் உற்பத்திப் பொருள்கள் பட்டிகள்தோறும் பரவி விவசாயப் பெருங்குடி மக்களுக்கு அவர்கள் ஆற்றும் உணவு உற்பத்தியிப் பணியில் பலனளிக்கவேண்டும்.

இவ்வாறான நிலைமை உருவாகிடவும், தமிழ் நாட்டில் தொழில் முன்னேற்றம் தங்கு தடையின்றி ஏற்படவும் --உற்பத்தி அதிகரித்திடவும் தொழில் துறையில் குறைந்தது பத்தாண்டு காலத்துக்கேனும் சச்சரவுகள் இல்லாது தொழில் அமைதி நிலவவேண்டும். தொழில் சச்சரவுகள் கதவடைப்பு என்ற பெயராலோ வேறு எந்த ரூபத்திலோ ஏற்பட்டாலும் அது தொழிலுக்குக் குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதால் தொழில் சச்சரவுகளை பத்தாண்டுகளுக்காயினும் ஒதுக்கிவைக்கவேண்டும்.

தொழில் வளத்தை எடுத்துக் காட்டும்
எண்ணெய் நிறுவனம்

நமது நாட்டின் தொழில் வளத்தையும், போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் வகையில் இண்டியன் ஆயில் கார்ப்பரேசன் என்னும் நிலையம் அமைந்திருக்கிறது.

போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் விமானப் போக்கு வரத்து முக்கியம் இடம் பெறுகின்றது. அதன் வளா்ச்சிக்கு உறுதுணையாக இந்த நிலையம் இருக்கின்றது - சுத்தமான எண்ணெய், விமானத்தில் நிரப்பப்படுகிறது வண்டிக்குப் போடுகின்ற எண்ணெயின் சுத்தம் கெட்டால் வண்டி தட்டுப்பட்டுப் போயிடும் - அந்தத் தகவலை வந்து சொல்ல ஆள் இருப்பார் -

விமானத்துக்குப் போடும் எண்ணெய் சுத்தம் கெட்டால் வந்து சொல்ல ஆள் கிடைப்பதரிது. விமானத்துக்குப் போடப்படும் எண்ணெயின் சுத்தமும், அளவும், தரமும் பாதுகாக்கப்படவேண்டும். இது நீண்ட நெடுங்காலமாக வளர்ந்துவரும் மனிதாபிமானத்தினடிப்படையிலும், விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் அவசியமானதாகிறது.

விஞ்ஞானம் மனித வாழ்க்கையில் நாள்தோறும் புதிய கட்டத்தை அடைந்து வருகின்றது.

இத்தகைய அமைப்புகளில் பணியாற்றுகின்றவர்கள் பிற நாட்டார் கண்டு பாராட்டும் வகையில் தங்கள் தொழில் நுட்பத்திறமையை அளித்து வருகிறார்கள்.

போக்கு வரத்துத் துறை நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாகும் - மின்சாரம் எண்ணெய் இரண்டு துறைகளிலும் நல்ல வேகத்தைப் பெற்றிருக்கிறோம்-நாட்டைத் தொழில் வளமுடையதாக்க நாம் தேர்ந்தெடுத்துள்ள வழியும், நடை போடும் வேகமும் நல்ல திருப்தி அளிக்கத்தவையாக இருக்கின்றன.

நாட்டுச் சுதந்திரம் உறுதிப் பட இப்படிப்பட்ட அடிப்படைத் தொழில்கள் அரசுக்குரிய பொதுத் துறையில் இருக்க வேண்டும்.

சென்னை கண்ட
சிறப்பு

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தொழில்களை நிறுவி நடத்தும் பெருமக்கள் பலர். ஆயிரக் கணக்கில் வந்து குழுமியுள்ள வர்த்தகப் பொருட்காட்சி போல் இதற்குமுன் சென்னையில் நாம் கண்டதில்லை. இனி ஒருநாள் பார்ப்போமா என்பதும் சந்தேகமே.

அண்மையில் சென்னை மாநகரில் அடுத்தடுத்து சிறப்புக்குரிய மாநாடுகள் நடந்துள்ளன. உலகத் தமிழ் மாநாடு நடந்தது; அதை அடுத்து தேசிய ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மகத்தான பொருட்காட்சி ஏற்பாடாகியுள்ளது,

இதன் பொலிவை முழுமையுடையதாக ஆக்கிட தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மனிதகுலமே

இன்னும் முழு நிறைவை நாடித்தானே பாடுபட்டு வருகின்றது. உலக முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் இன்னும் நிறைவை எட்டாமல்தான் உள்ளது.

இப்பொருட்காட்சியின் அமைப்பாளர்கள் எத்தனை வசதிக் குறைவுக்கிடையே இம்மாபெரும் முயற்சியில் செயலாற்ற வேண்டியிருந்த தென்பதை நான் நேரில் அறிவேன்.

உலக வர்த்தகப் பொருட்காட்சி,
உயர்சாதனைகளின் தொகுப்பு!

இப்பொருட் காட்சி நம் சாதனைகளின் ஒரு தொகுப்பென்றே சொல்லலாம். நம் ஆவலின் அளவு சாதனைகளின் அளவை மீறியதாகும்.

நாம் காணுகிற இந்த வளமையும் செழிப்பும் கோடிக்கணக்கான நம் மக்களுக்கானதாக இருக்கவேண்டும், அல்லாமல் இச்செல்வச் செழிப்பெல்லாம் ஒரு சிலரின் சுயநல மேம்பாட்டுக்குத் தானென்றால் ஒரு பயனுமேற்படாது. இந்த வளமை மக்கள் வாழ்வை, உாிமை வாழ்வாக - புதுமை வாழ்வாக - முழுமை வாழ்வாக - ஆக்கிட வேண்டும்.

செயலாற்றல் மிக்கவர்கள் நம் தொழிலதிபர்கள், இவர்களைச் செங்கற்கள் என்றால் இவர்களைக் கொண்டு கட்டிடம் உருவாக்கப் பயன்படுகிற சிமிண்டாக உலக நாட்டார் விளங்கிட வேண்டும். சிமிண்ட் என்றுதான் சொன்னேன், உதவி, கடன் என்றெல்லாம் அதை நான் அழைக்கவில்லை.

உலகில் எல்லோரும் வளமைபெற உதவிட வேண்டியது மேம்பாடு அடைந்த நாடுகளின் கடமையாகும். நாடுகள் பல வளர்ச்சி அடையாத ஒரு நிலையில் பொருள்களை ஏராளமாக மேம்பாடு அடைந்த நாடுகள் உற்பத்தி செய்து குவிக்குமானால் அவற்றை வாங்குபவர் யார்?

இந்தியா போன்ற நாடுகள் வளம்பெற கை கொடுத்து உதவ வேண்டும். வெண்டல் வில்கி என்ற அமெரிக்கப் பெருமகன் ஓருலகம் என்று சிந்தித்துக் கருத்தை எடுத்துரைக்கிறார். இதை மனதில் கொள்ளவேண்டும், உலகில் உள்ள இயற்கைவளமனைத்தும் மனித இன முழுமைக்கும் பயனளிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.

செல்வமோ செழிப்போ அவை மக்களால் உணரப்பட வேண்டும், உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கினை அளித்திடவேண்டும். இவை மறுக்கப்படுகிற எந்த ஒரு அமைப்பையும் முறையையும் உலகம் வரவேற்காது என்பதோடு சகித்துக் கொள்ளவும் மாட்டாது. அத்தோடு அம் மாதிரி ஒரு முறையை இன்று நம்மால் தாங்கிடவும் முடியாது. அத்தகைய முறை நிலவுமானால் தொழில் உலகம் துருப்பிடித்து, கேட்பாரற்று ஒதுக்கப்படும் உழைக்கும் தொழிலாளருக்கு உரியதை வழங்கிடுங்கள். அவ்வாறு செய்வதன் வாயிலாக எம்போன்ற எளியோருக்கு ஏற்படுகிற சங்கடத்திலிருந்து எங்களுக்கு விடுதலை கொடுங்கள்.

கட்டைவண்டி நிலையிலிருந்து
ஜீப் நிலைக்கு முன்னேற வேண்டும்.

இந்நாட்டைத் தொழில் வளமுடையதாக ஆக்கும் முயற்சியில் தவறுகளைச் செய்திருக்கிறோம். அவற்றைத் திருத்திக் கொண்டு செயல்படுவோம், கட்டை வண்டி நிலையிலிருந்து ஜீப் நிலைக்கு நாம் முன்னேற வேண்டும் என்று ஒருமுறை நேரு சொன்னார். மக்கள் அந்த நிலையை அடைந்தார்களோ இல்லையோ அதிகாரிகள் ஜீப்புகளைப் பிடித்துக் கொண்டார்கள்.

வேளாண்மைத் துறையை வலிவடையச் செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும், தளராது உழைத்து அதை வலிவுடையதாக ஆக்கிவிட்டோமானால் நம் தொழில்களுக்குத் தேவையான மூலதனத்துக்கு எவரிடமும் உதவி நாடி நிற்கத் தேவையில்லை. வேளாண்மை மக்களே உதவிட முன்வருவார்கள். தொழில் முயற்சிகளில் பங்குதாரர்களாகச் சேர்ந்து ஊக்குவிப்பார்கள். இதற்குத் துணை செய்யும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேளாண்மை மக்கள் மீது வரி எதுவும் விதிக்காது விடவேண்டும். ஏனெனில் கிராமப் புறங்களில் விவசாயிகளின் கைகளில் காசு புழங்கத் துவங்கியுள்ளது. பணத்தின் ஓசை கேட்கத் துவங்கியுள்ளது.

இப்பொருட் காட்சியைத் தொடர்ந்து உலக வேளாண்மை பொருட் காட்சியை நடத்திட வேண்டும்.தொழிலும், வேளாண்மையும் கைகோர்த்து முன்னேறச் செய்வோம் அதற்கு உலக வேளாண்மைப் பொருட் காட்சியை நடத்துவது உதவும். ஏனைய நாட்டவரெல்லாம் கையாண்ட முறைகளென்ன? எப்படி முன்னேறி வேளாண்மைத் துறையில் வெற்றிகளை ஈட்டினார்கள் என்பதையெல்லாம் நம்மவர்கள் உணர்ந்திடச் செய்வோம்.


இதேபோல நீண்ட கடற்கரையைக் கொண்டது இந்நாடு. டில்லியில் இருப்பவர்கள் கடலைக் காண ஆயிரம் மைல் பயணம் சென்றால்தான் முடியும். இங்கே அப்படியல்ல. எப்பக்கம் சென்றாலும் கடல் அலை உங்கள் கால்களைக் கழுவும். இத்தகைய கடல் வளமுண்டு. எனவே மீன்பிடித் தொழிலும் அபிவிருத்தியடையச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் உலகில் பல நாடுகளுக்கு மீன் பதப்படுத்தி அனுப்பும் வாய்ப்பு நமக்கு உண்டு.

இங்கே முன்னாள் அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் இருக்கிருக்கிறார். சேலம் இரும்பைப்பற்றி அவரும் சொல்லுவார், ஆனால் வருத்தத்தோடு சொல்லுவார். நாங்கள் இந்த சேலம் இரும்பைக் குறித்து ஆராய்ந்து அனுப்பினோம். சேலத்துக்கு, ஒரு உருக்காலையை அவர்கள் ஏன் வழங்க மறுக்கிறார்கள் என்பதுபற்றி கருத்தைக் கூறும்படி நான் கேட்கமாட்டேன் ஏனெனில் அது அரசியல், அவருக்கானதல்ல, தொழில் உற் பத்தியில் ஈடுபாடுடைய நீங்கள் சேலம் இரும்பைப் பற்றிய எங்களது அறிக்கையை ஆராய்ந்து நல்லது கெட்டதை அதன் தொழில்-விஞ்ஞான் பலாபலன்களைத் தயங்காது விருப்புவெறுப்புக் கிடமளிக்காது சொல்லுங்கள். இதுவே என் வேண்டுகோள்.

இந்தியப் பொருளாதாரம்
விவசாயத்தின் அடிப்படை

இந்தியப் பொருளாதாரமே விவசாயத்தை அடிப்படையாகவே கொண்டுதான் கட்டப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நம்முடைய நாட்டு அமைச்சர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை வருகிறதா என்று கடலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலமை இருக்கிறது.

உணவுக்காக வெளிநாட்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்திருக்கிறோம். அன்னிய நாட்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தவர்கள் ஒரு ஆயிரம் கோடி ரூபாயாவது நம்முடைய நாட்டு விவசாயிக்கு கொடுத்திருந்தால் இப்படி உலகமெல்லாம் பிச்சையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது!

இந்த உணவுக்காக அன்னிய நாடுகளிடம் கையேந்தும் நிலையைவிட அவமானம் வேறு உண்டா? என்று பண்டித நேருவைக் கேட்டபோது அவரே "ஆமாம் அவமானம்தான் " என்றார். விவசாயநாடு இந்தியா ! அப்படிப்பட்ட நாட்டினர் உலகத்திடம் உணவு கேட்பதைவிடக் கேவலம் வேறில்லை!

இந்தியாவுக்கு ஆகாய விமானம் வேண்டுமென்று கேட்கலாம்; அதிலே நியாயமிருக்கிறது! கப்பல்கள் வேண்டுமென்று கேட்கலாம் அந்த துறையிலே இன்னும் நாம் "தேர்ச்சி பெறவில்லை என்பதால்! ஆனால் சோறு போடு என்றா அன்னியரிடம் கேட்பது?

அவல நிலை
நீடிக்கக் கூடாது!

தஞ்சையில் மூன்றுமைல் தூரத்துக்கொரு சத்திரம் இருக்கிறது. காணுமிடமெல்லாம் கோவில்கள் இருக்கின்றன -- காதில் விழுவதெல்லாம் மந்திர ஒலியாக விழுகிறது. தெருவுக்கு தெரு - திருவிழாக்கோலமிருக்கும் இப்படிப்பட்ட வளம் நிறைந்த நாட்டில் சோறு இல்லை.

அமெரிக்காவிலேயிருந்து ஒரு நிபுணர் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அவர் அங்கே என்ன சொல்லிவிட்டு வருவார்; "ஐயோ பாவம் தஞ்சையிலே இருக்கிறவர்களுக்கு உணவுக் கஷ்டம்; அதைத் தீர்த்துக் கொள்ள வழி தெரியவில்லையாம் என்றுதான் சொல்லிவிட்டு வருவார், இப்படிப்பட்ட அவல நிலை இன்னும் நான்கு அல்லது ஐந்தாண்டுகளில் அடியோடு நின்றுவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

விவசாயிக்களுக்குத் திருப்தி ஏற்பட்டாலொழிய அவர்கள் வாழ்வில் நிம்மதி யேற்பட்டாலொழிய அவர்களின் உழைப்பு வயிற்றுப் பாட்டுக்கு வழி செய்தாலொழிய முன்னேற்றம் அடைந்ததாகக் கூறி விட முடியாது!

மனித சக்திக்குத்தான் முதலிடம் தர வேண்டும். மனித சக்தியை வீணாக்கப்படாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழைப்பாளர்கள் நொந்த நிலையேற்படாமல் பார்த்துக் கொள்வதோடு அவர்களுக்கு நிலச் சொந்தக்காரர்கள் முதலாளிகள் ஊதியத்தைத் தாராளமாகக் கொடுக்க முன் வரவேண்டும்.

சமூக விரோதச்
செயல்

சமுதாய ஒழுக்கம் காப்பாற்றப்படவேண்டும். பதுக்கல் என்பது தவறான காரியம். அதை சர்க்காரின் நடவடிக்கை -யினால் மட்டுமே தீர்த்து விட முடியுமென்று கருதக் கூடாது" பதுக்கல் சமூக விரோதச் செயல் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் எழவேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் இரண்டாவது உலகப் போரின் போது சட்டைக்கு துணி தரப்பட்டதில் சட்டைக்குப் போக மிச்சத்துணி இருக்குமானால் அதை மற்றவர்களுக்குக் கொடுத்துதவினார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக இங்கே நடக்கிறது.

லண்டனில், சண்டை நடக்கும்போது நகரத்துக்காரர்களுக்கு முட்டையே தருவதில்லை. கிராமத்திற்கு மட்டும் தான் தந்து வந்தார்கள். நகரத்திலுள்ளவர்களால் சத்தான வேறு பொருள்களையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் கிராமத்திலுள்ளவர்கள் குறைந்த விலையில் நிறைய பலன், தருவதற்கு ஏற்ற முறையில் முட்டை தரப்படவேண்டும். எனவே நகரத்திற்கு முட்டை இல்லை என்று தெரிவித்தார்கள்

இன்னபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது என்றால் வசதியுள்ளவர்கள் தங்களிடமிருப்பதை மற்றவர்களுக்குத் தர முன் வர வேண்டும். ஆனால் அதற்குமாறாக இப்போது அவர்களிடம்தான் அவை அதிக அளவில் இருக்கிறது.

"உனக்கும் வேண்டுமா? ஆளை அனுப்பு" என்று சொல்லத்தக்க விதத்திலே நிலைமை இருக்கிறது. இதற்கும் தனித் திறமை வேண்டும். இந்தத் திறமையை விடப் பொதுமக்கள் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

எந்தப் பொருளுக்கு பற்றாக் குறை ஏற்பட்டு பங்கீடு முறை இருக்கிறதோ அந்தப் பொருள்களால் கள்ள வாணிகமும் பதுக்கலும் ஏற்படுகிறது--இதைத் தடுக்க வேண்டும்.

உழைப்புக்கு
மதிப்புத் தரவேண்டும்

தஞ்சைத் தரணியில் பெரிய கோபுரம் கட்டப்பட்டடிருக்கிறது. இதற்குப் பணம் உதவியிருக்கிறவர்கள் உயரமான வீட்டிலா குடி இருக்கிறவர்கள்?

கோயிலுக்கு மதில் சுவர் கட்டப்பட்டிருக்கிறது; அதற்கு உதவியிருப்பவர்களின் வீடுகளில் சுற்றுச் சுவரா இருக்கிறது?

தேவன் தேவியாருக்கு நகைகளைப் பூட்டி வைக்க உதவுகிறவர்களின் வீட்டில் அதைவிட நகைகளா இருக்கின்றன? இல்லை தான்; ஆனாலும் பொதுக் காரியங்களுக்கென்று தர்ம சிந்தனையோடு தரப்படுகிறது. இங்கே, கொடுத்தால் அது தமக்குத் திரும்பி வரும். இம்மையில் செய்தது மறுமைக்குப் பயன்படும் என்பார்கள்.

உதாரணமாக உழைப்பாளி நிலத்திலே உழுது கொண்டிருக்கும்போது நிலத்துக்குச் சொந்தக்காரர் வந்தால் "அங்கே. வேல முள் இருக்கிறது வராதீர்கள்!" என்று முன்பெல்லாம் எச்சரிக்கை செய்வார்கள்.

இப்போது சொல்லுவானா? மாட்டான். முள் குத்தட்டுமே--எரியட்டுமே என்று நினைத்துச் சும்மா இருப்பான். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை; இந்த நிலை இனி இருக்காது. அதனால் தான் விவசாயிகளைத் திருப்தியோடு வைத்துக்கொள்ள வேண்டும்; உரம் போட்டால் விளையாத நிலம் கூட அவன் உடலிலிருந்து விழும் வியர்வையால் விளையும்!

உழைப்புக்கு மதிப்பளித்து வந்தால் தான் உற்பத்தி பெருகும். வீட்டுத் தோட்டத்தில் "மாட்டுக் கொட்டகை போடு என்று தொழிலாளிக்குச் சொன்னால் அவன் முணுமுணுத்துக் கொண்டே போவான்; ஆனால் மகளுக்குக் கல்யாணம் மணப்பந்தல் போடவேண்டும் என்றால் அவனே முன் வந்து போடுவான்.

'விவசாயக் கூலி பசியோடு போராடுகிறான்' என்று நில உடமையாளர்கள் எழுதி வைத்துப் படித்துப் படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆத்திரத்திற்குச் சாத்திரமில்லை: பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆகவே உழவர்களைப் பசியின்றிச் செய்து விட்டுப் பாருங்கள், உற்பத்தி பெருகும்.

டில்லியிடம்
போராடுவேன்

உரத்தின் அளவு அதிகமாக - பெருமளவு தரப்பட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறோம். உழவர்களுக்காக மத்திய அரசாங்கத்திடம் நான் போராடுவேன்.

அவர்களும் அரசு நானும் அரசைச் சார்ந்தவன் என்ற அரச பரம்பரை எண்ணத்தில் இதைச் சொல்லவில்லை. உரத்தின் விலையைக் குறைப்பதால் மிகுந்த நன்மை ஏற்படுமென்று தெரிவித்திருக்கிறேன்.

'பாதைகள் இல்லாமல் திண்டாடுகிறோம்' என்றார்கள். நிலம் பயிரானாலும் பாதை நன்றாக இருந்தால்தான் உற்பத்தியானதை வேறிடங்களுக்குக் கொண்டு செல்லமுடியும். சில நில உடமையாளர்கள் பாதைக்கு விடப்பட்ட நிலத்தையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்கிறார்கள் - அதிகாரிகளும் இதை விட்டுவிடுவதற்குக் காரணம்; பாதையிலே நெல் போட்டால் விளையாது நிலத்தோடு சேர்ந்து விவசாயமானாலும் லாபம் கிடைக்குமென்று விட்டுவிட்டார்கள் என்று கருதுகிறேன்.

பாதைகளை அமைக்க, அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்கள் பயிர்களை அழிக்கும் சிறவை யெனும் பறவையைப்பற்றிக் கூறினார்கள். காட்டிலாகா அதிகாரிகளோடு கலந்து பேசி அப்பறவைகளை அழிக்கலாமா வேண்டாமா என்பதுபற்றிக் கேட்டறிய விரும்புகிறேன்.

அது ஒரு அபூர்வமான பறவை அழிக்கக் கூடாது என்பார்களேயானால் இருக்கின்ற உயிர்களிலேயே மனிதர்கள்தான் அபூர்வப் பிறவிகள் அவர்கள் வாழ வேண்டும்; சிறவை இல்லாவிட்டால் பரவாயில்லை என்றுதான் கூறுவேன். வேறு நல்ல காரணமிருந்தால் அதைப்பற்றி நான் ஆலோசிப்பேன்.

பூச்சித் தடுப்பு முறைபற்றி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தனித்தனியாக முயன்று பண்ணைகளில் பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருப்பதை விட நிலப்பரப்பு முழுவதிலும் பூச்சித் தடுப்பு மருந்து தெளிக்க சர்க்கார் தொடங்க வேண்டும் என்று கூறப்படுகிற யோசனை மிகவும் பிடித்திருக்கிறது.

இதற்காக சில எலிகாப்டர்களோ-விமானங்களோ வாங்க வேண்டியிருக்கலாம்.

அமெரிக்காவில் பூச்சித்தடுப்பு மருந்தை தனியொரு நிறுவனத்தினரே தெளிக்கின்றனர் என்று நான் அறிந்தேன்.

சாகுபடி குறைவு ஏற்பட்டிருப்பதை நீக்க அடிப்படையாக இத்திட்டம் இருந்தே தீரவேண்டும் இதை உடனடியாகக் கொண்டு வரவேண்ம் மென்பது எனது விருப்பம்!

பூச்சிகளாலும் -- இயற்கையாலும் ஏற்படுகின்ற கோளாறுகளால் அழிவேற்படுவதைத் தடுப்பது விவசாயத்திற்குத் தேவையானது என்பதால் தமிழக சர்க்கார் இம்முயற்சியில் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பஞ்சாயத்துக்களிடம் நிரம்பப் பணமிருந்து விவசாயக் கருவிகள், டிராக்டர்கள் வாங்கிக்கொள்ள முடியாமல் சட்டம் குறுக்கிடுகிறது என்று சொன்னார்கள். அப்படி அதற்கெல்லாம் சட்டம் குறுக்கிடுமானால் அதற்கு சட்ட அந்தஸ்தே இருக் காது! பணத்தைச் செலவு செய்வதை முடக்கும் முறையில் சட்டம் இருக்காது.

டிராக்டர்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாமா? என்று என்மனம் துடித்தது. என்றாலும் சட்டத்தைக் கவனிக்க வேண்டியவனாக இருக்கிறேன். 67 மார்ச் 6-ஆம் தேதிக்குப் பிறகு சட்ட திட்டங்களுக்கு மேலும் அடக்கமானவனாக இருக்கிறேன்.

இவையெல்லாம் நமக்கு நடத்த முடியும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

பம்பிங்ஸ்கீம் சரிவர நடைபெறவில்லையென்கிறார்கள் இதற்கான முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கருதுகிறேன்.

காவேரி நம் நாட்டில் பாய்கிறது-ஆனால் உற்பத்தியாவது இங்கில்லை.

துள்ளி ஓடும் அழகு நம்மிடம்தான், ஆனால் பொங்கிப் புறப்பட்டு வருவது நம்மிடமிருந்தல்ல. மைசூர் மாநிலம் நாம் தண்ணீர் எடுத்து வருவதற்கு மறுக்கும் என்று நான் கருதவில்லை.

தமிழகம் - இப்போது கேரளம் கருநாடகம் - ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களும் ஒன்றுபட்டு இயற்கை வளங்களைப் பங்கிட்டுக் கொள்ளுவதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்தங்களில் தகராறுகள் இருக்காதென்றும் நம்புகிறேன்.

கேரளம் - தமிழ்நாட்டுக்கு மிடையே, ஆனை மலையாறு நம் பகுதியில் பாய்ந்து வருகிறது. ஆனால் கேரளத்தில்தான் தேக்கம் இருக்கிறது. ஆனை மலை நீரை எங்களுக்கு விட்டுவிடுங்கள் என்று நம்முடைய இஞ்சினீயர்கள் கேட்கிறார்கள். உடனே கேரளத்து சீப் இஞ்சினீயர் எங்களுக்கு வேண்டும் என்கிறார். நம்முடைய மாநிலத்து சீப் இஞ்சினீயரின் கீழிருந்து பணியாற்றியவர் தான் அவர்.

ஆனால் மாநிலங்களின் முதலமைச்சர் நமக்கு நன்மை செய்வதில் நல்ல கருத்தோடு இருக்கிறார்கள்.

கேரளத்து முதலமைச்சரைச் சந்தித்தபோது நான் அவரிடம் "அரிசி கேட்கிறீர்கள் தருகிறோம்; ஆனால் கடலில்போய் வீணாகும் கேரளத்துத் தண்ணீரை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். கேரளா அமைச்சர் தருகிறேன் என்று கூறியதாகப் பத்திரிகைச் செய்தியொன்றைப் பார்த்தேன்.

அந்தச் செய்தி, செய்தியாளரின் ஆர்வத்தால் வெளியிட் டதாக இல்லாமல் உண்மையானதாக-ஆதார பூர்வமாக அமையுமானால் - தண்ணீரைப் பெற்றுக் கொண்டு அரிசியை தருவதற்கான பிரச்சினையில் நான் அக்கரை காட்டுவேன்.

தமிழகத்தில் கேரளத்து மக்கள் லட்சத்துக்குமேல் இருக்கிறார்கள். ஆனால் கேரளத்தில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் தான் இருக்கின்றனர். கேரள மக்களுக்கு நாங்கள் இப்போதும் சோறுபோட்டுக்கொண்டிருக்கிறோம் என்று நான் நம்பூதிரிபாட்டிடம் சொன்னேன்.

அரிசிக்கு தண்ணீர்
பண்டமாற்று.

நான் கேரளத்துக்கு அரிசி உதவத் தயக்கம் காட்ட மாட்டேன். அதேபோல் தமிழகத்துக்குத் தண்ணீர் தர கேரளம் தயக்கம் காட்டக்கூடாது.

கிருஷ்ணா-பெண்ணாறு திட்டம் உடனடியாக முடிந்தால் காவேரித் திட்டமே தேவையில்லை. ஆனால் அது உடனடியாக முடிவதாகத் தெரியவில்லை. இதிலே சில சிக்கல்கள் இருப்பதால் தான் வீராணம் ஏரியிலிருந்தே தண்ணீர் கொண்டு வர இருக்கிறோம்.

தஞ்சை மாவட்டமும் சிதம்பரமும் வீராணத்திலிருந்து. நீர் எடுப்பதன் மூலம் பாதிக்கப்படும் என்றார்கள். சிதம்பரம் பகுதியிலேயுள்ள பெரிய மிராசுதார்கள் எல்லாம் சென்னையில் என்னுடன் கலந்து பேசினர் --என்ஜினியர்களுடனும் பேசியதற்குப் பிறகு அவர்கள் திருப்தியோடு தான் சென்றிருக்கிறார்கள்.

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கிறோம் என்றால் வீராணத்துக்கு என்று தண்ணீர் கிடையாது. வீராணம் ஒரு பாத்திரம் போன்றதே தவிர அதிலே ஊற்றல்ல! அதிலே தண்ணீர் விட்டுத் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறோம். சென்னைக்குக் குழாய்கள் மூலம் எடுத்து சென்னை மக்களுக்குப் பயன் தரச் செய்ய விரும்புகிறோம்.

சென்னை மக்களுக்கு என்றால் அவர்கள் வேறு என்று எண்ணம் எழக்கூடாது. சொல்லப்போனால் சென்னையில் இப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்குகிறார்கன். அண்ணன் இங்கே இருந்தால் தம்பி அங்கே இருக்கிறான். சென்னையின் மூன்றில் இரண்டு பங்கு தஞ்சாவூர்க்காரர்கள் தான் இருக்கிறார்கள்.

நான் காவேரித் தண்ணீரை இப்போது தான் குடித்தேன்... இங்கு வரும்போது மட்டும் குடிக்கிறேன். ஆனால் மன்னை தாராயணசாமி அவர்கள் குடிக்கும் தண்ணீரில் முக்கால் பகுதி சென்னைத் தண்ணீராகத்தானே இருக்கிறது.

விவசாயத்துக்குத் துளியும் பாதகமில்லாமல்; தஞ்சை சிதம்பரத்திற்குப் பாதகம் ஏற்படாமல் வீராணம் ஏரித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரையும்
கெடுக்க மாட்டேன்

ஒருவரைக் கெடுத்து இன்னொருவரை வாழ வைக்க நானென்ன அவ்வளவு பைத்தியக்காரனா? யாரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. ஒருவரின் தேவைக்குப் போக மீதமுள்ளதை மற்றவர்களுக்குத் தந்துதவும் திட்டம் தான் இது!

கருத்தரங்கிலே எடுத்துரைக்கப்படுகிற கருத்துக்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்.

விவசாயச் செலவு இப்போதிருப்பதைவிடக் குறைய வேண்டும். தேவையான உரமோ, பணமோ தேவையான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். இவை இயற்கையாக எந்த விவசாயியிடத்திலும் எழக்கூடிய கருத்துக்களே.

இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு தக்க பரிகாரம் காணப்படுமென்று உறுதி கூறுகிறேன். இதை எக்காலத்தில் - எந்த அளவில் வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை எனக்கு வழங்குங்கள். விவசாயிகள் விசாரப் படாதிருக்கும்படியாக அவர்கள் உற்சாகத்துடன் இருக்கும்படிச் செய்வதற்கு நானும் என்னைச் சார்ந்த நண்பர்களும் தயாராக இருக்கிறோம்.

நெல்லின் விலையை உயர்த்தி உதவவேண்டுமென்று கூறப்பட்டது. உதவி என்பது பல உருவிலும் கிடைத்திடலாம். நெல் விலையை உயர்த்துவதொன்றே உதவியாகி விடாது--விவசாயிகள் விவசாயத்துக்காக வாங்கி உபயோகிக்கும் பண்டங்களின் விலை குறையச் செய்வதால் அந்த உதவியை அளித்திட முடியும். அதை எப்படிச் செய்வதென்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. அதை நடை முறையில் கொண்டுவர அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

ஆந்திராவும்
நாமும்

நெல்லுக்கு விலை உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று சிலர் கோரினர்.

மத்திய உணவமைச்சர் சகசீவன்ராமே சொல்லிவிட்டாரே இனி ஏன் கேட்கிறீர்கள் என்று நான் சொல்லமாட்டேன். அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும் வேறு சில மாநிலங்கள் நெல்லுக்கான விலையை உயர்த்தி உள்ளன.

ஆந்திரா அப்படி உயர்த்தியுள்ளது. தான் கொள்முதல் செய்யும் அரிசியை கேரளத்துக்கும், மேற்கு வங்காளத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் லாபத்துக்கு ஆந்திரம் விற்கிறது. நாம் அப்படி வெளியில் விற்பதில்லை. நம்முடைய மக்களில் நலிந்த பகுதியினரது தேவைகருதி, அவர்களுக்கு விநியோகிக்கவே நாம் கொள்முதல் செய்கிறோம்.

அதிலும் நாம் எந்த அளவு கொள்முதல் செய்கிறோம். நூற்றுக்கு இருபது பங்கு நெல்லை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள எண்பது சத விகிதம் உற்பத்தியாளர்களிடமும் அவர்களிடமிருந்து வாங்கிடும் வணிகர்களிடமும் விடப்படுகின்றது. அவை இன்ன விலைக்குத்தான் விற்க வேண்டுமென்று கட்டாயமில்லை.

ரூபாய்க்குப் படி அரிசி என்று திட்டம் போட்டு அதன் படி போடுவதில் இப்போது நெல்லுக்குக் கொடுக்கும் விலையினால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8 கோடி செலவாகுமென்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் குறுவை நெல் நடுத்தர நெல்லென்று நிர்ணயிக்கப்படாமல் சட்டத்தில் இந்த நெல்லை முதல் தர நெல் என்று சொல்லி எழுதி வைத்திருக்கிறார்கள். இதனால் அதிக விலை கொடுக்க நேரிடுகிறது. இப்படி அதிக விலை கொடுப்பதால் நட்டம் ரூ. 17 கோடிவரை வளருமோ என்ற ஒரு அச்சமும் உள்ளது.

குறைவாக அளந்தால்
தலைதப்பாது!

நெல் விலையை அதிகரித்தால் இவர்களால் படி அரிசித் திட்டத்தை தொடர முடியாது -- இவ்வளவு நாள் போட்டோம் -- இதற்குமேல் முடியவில்லை என்று நாங்கள் (தி.மு.க.) ஆட்சியை விட்டுப் போய்விடுவோம் -- அரசியல் லாபம் பெறலாம் என்று நினைப்பவர்கள் இருக்கக் கூடும். அந்த லாபம் நிரந்தரமானதல்ல - சாதாரணமானதல்ல.

படி அரிசி என்பது எங்களோடு போய்விடாது. யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் அந்தஅளவு போடாவிட்டால் அவர்கள் தலைதப்பாது. நெல்லின் விலை அதிகரித்தால் படி அரிசி திட்டத்துக்கு ஆகின்ற செலவு மேலும் அதிகரிக்கும். இப்போது அரசாங்கம் 8 கோடி அளவுக்கு கிராக்கிப்படி உயர்வு அளித்தது. இப்படி அதிகரித்துக்கொண்டே போவதால் நாட்டில் - பணவீக்கம் தான் அதிகரிக்கும். அப்படி மக்கள் கைக்கு வரும் பணமும் தங்காது.

ஆகையினால் விலைவாசிகள் இறக்கப்படுவதொன்றே உண்மையான வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழிகோலும் என்பதை உணர்ந்து அரசு எடுக்கும் நற்காரியங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தடுத்து
நிறுத்தப்பட வேண்டும்

விலைவாசிகள் குறையாதவரை வேறு எந்தச் சீர்திருத்தம் செய்தாலும் அது நிலைக்காது. இதை எல்லாம் கருதியே கொள்முதல் நெல்லுக்குப் போன வருடம் கொடுத்ததைக் காட்டிலும் அதிகமாக இந்த ஆண்டு கொடுக்க வேண்டாம் என்ற தீர்மா -னத்துக்கு வந்தோம். பரந்த பொருள் மிகுந்த இந்த நோக்கத்தை அருள் கூர்ந்து உணரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயச் செலவுகளைப் பற்றி இங்கு கூறப்பட்டது. இந்த ஆண்டு செலவு சென்ற ஆண்டு ஆன செலவைவிட எந்த அளவுக்கு எதனால் அதிகரித்துள்ளது என்று பார்க்கவேண்டும்.

உரவிலை உயர்ந்ததால் செலவு. கூடியுள்ளதென்பது உண்மையே. இதர எல்லா அம்சங்களிலும் சென்ற ஆண்டு இருந்ததுபோலவே இவ்வாண்டும் உள்ளது. உரவிலை உயர்வு - நான் மட்டுமே காரணமல்ல - நண்பர் விநாயகமும் ஓரளவு பொறுப்பாளி. விவசாயச் செலவையும் புதிய ரக நெல் விளைச்சலால் ஏற்பட்டுள்ள நல்ல பலனையும் ஒப்பு நோக்கிச் சொல்லுங்கள் - 10 மூட்டை விளைந்த நிலத்தில் இப்போது 30 மூட்டை விளைகிறதல்லவா? எனவே வரவேண்டிய ஆதாயம் வருகிறதா இல்லையா? சொல்லுங்கள் - ஆதாயத்தில் வேண்டுமானால் துண்டு விழலாம் - ஆதாயமே இல்லையென்று உங்களில் யாரும் சொல்லமாட்டீர்கள்.

இந்த ஒரு வாரத்தில் மத்திய அரசு 90 கோடி ரூபாய்க்கு நோட்டுகள் அச்சிட்டுள்ளது. நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன் - நாட்டு வாட்டம் போக்கிட நோட்டடித்தால் போதாது - என்று சொல்லி வந்திருக்கிறேன். பணம் வட்ட வடிவமானது - உருண்டோடி கீழே விழுகிறவரை ஓடிக்கொண்டே இருக்கும் - காகிதத்தலான நோட்டும் தங்காது - பறந்துகொண்டேயிருக்கும். எங்கேனும் ஒரு இடத்தில் இதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களும் - நிலச் சொந்தக்காரர்களும் தனிக் கவனம் செலுத்தி உணவு உற்பத்திப் பிரச்சனையில் முதலிடம் தந்து உணவு நெருக்கடியைத் தீர்க்க உதவிடவேண்டும். பசிப்பிணி என்ற சொல்லையே தமிழர்கள்தான் கண்டுபிடித்தனர் - பயன்படுத்தினர். எத்தனையோ பிணிகள் இருப்பினும் - தமிழிலக்கியத் -தில் பசியைத்தான் பிணிகளில் கொடியது என்றார்கள், அது மட்டுமல்ல; பசிப்பிணி மருத்துவர்கள் என்று மன்னர்களை அவர்கள் அழைத்திருக்கிறார்கள். பசியைத்தீர்க்கின்ற காரணத்தால் மன்னர்களை பசிப்பிணி தீர்க்கும் மருத்துவர்கள் என்றனர். ஆகவே அப்படிப்பட்ட பசிப்பிணியைத் தீர்க்கின்ற மருத்துவர்களாக உங்களை நீங்கள் கருதிக்கொள்ள வேண்டும். ஆகவே எல்லாவற்றையும் விட சிறந்த தொண்டு பசிப்பிணியைத் தீர்த்து வைப்பது.

பசிப்பிணியைத் தீர்க்கும் பிரச்சினைக்கு வேறெந்தப் பிரச்சினையும் ஈடாக முடியாது. உணவு உற்பத்தியைப் பெருக்க சர்க்கார் பண உதவி செய்திட வேண்டும் என்று கேட்கலாம். சர்க்கார் பணத்தை உண்டுபண்ணும் இயந்திரமல்ல. பணத்தை உண்டு பண்ணுவதுகூட வடநாட்டிலே உள்ள அரசினர்தானே தவிர தமிழகம் இல்லை.

சலுகைகளைத் தரவேண்டும் என்று கேட்கின்ற நேரத்தில் அப்படிப்பட்ட சலுகைகளை எந்தெந்த வகையில் பெறலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

கருத்தரங்கிலே கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். அதில் எவற்றையுமே நான் மறுத்துச் சொல்லவில்லை. சொல்லப்பட்டக் கருத்துக்களெல்லாம் நியாயமானவை. எல்லாம் உண்மை நிரம்பியனவாகவே இருக்கின்றன. இதனை நான் மறுக்கவோ - மறைக்கவோ போவதில்லை.

நியாயத்தை நிறைவேற்றித் தர இயலும். அப்படி நிறைவேற்றுவதற்குக் கொஞ்சம் காலம் தேவை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கலந்து பேசி இவற்றைத் தீர்ப்பதில் நான் பெருமளவுக்கு அக்கரை காட்டுவேன். சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களைப்பற்றிக் குறிப்பிடும்போது தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துச் சொன்னார்கள். நான் அவற்றை மெத்தக் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். உள்ளபடியே. அவைகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப் பட வேண்டியது தான்.

காமராசர் கூறிய
உறுதிமொழி!

முன்னாள் முதலமைச்சர் காமராசர் பாகல்மேட்டிலே மாநாடு கூட்டி. பாகல்மேடு சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தைத் தந்தேன் - தந்து விட்டேன் என்று உறுதி கூறினார். ஆனால் சட்ட மன்றத்திலே நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது அத்திட்டம் குறிப்பிடப் படவில்லை. "என்ன, திட்டத்தை தந்து விட்டதாகச் சொன்னீர்களே நிதி நிலை அறிக்கையில் அதற்கான குறிப்பையே காணோமே" என்று கேட்டபோது. 'அது நிறுத்தி வைக்கப்பட்டது” என்றார்.

இப்படிப்பட்ட கசப்பான அனுபவத்தைத் தெரிந்துவைத்திருக்கிற காரணத்தால் கூறுகிறேன். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து வேளாண்மைத்துறை அமைச்சரையும் - பொதுப்பணி அமைச்சரையும் உணவு அமைச்சரையும் கலந்து பேசி எவ்வளவுவிரைவாகத் தீர்த்து வைக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தீர்க்கிறேன் என்று நிதியமைச்சர் என்ற முறையிலும் முதலமைச்சர் என்ற முறையிலும் இதற்கான வழிவகைகளை ஒரு துளியும் தயக்கம் காட்டாது கண்டுபிடிக்கிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடிய ஒன்று உரவிநியோகத்திலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பது. உர விற்பனை தனியார்களாலும் கூட்டுறவாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக நான் கவனம் செலுத்திக் கூட்டுறவாளர்களைக் கலந்து பேசினேன். ஆதாயக் குறைவு வந்தாலும் குறைந்த விலைக்கு உரத்தைத் தரவேண்டும் என நான் கேட்டுக் கொண்டதை அவர்கள் ஏற்றுக்கொண்டு குறைந்த விலையில் கூட்டுறவு மூலம் உரம் தருவதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள். என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள நிலச் சொந்தக்காரர்களும். பெருங்குடி மக்களும், தொழிற் சங்கச் செயலாளர்களும் இணைந்து செயலாற்றி உற்பத்தியைப் பெருக்கித்தர ஏற்பாடு செய்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கவேண்டும்.

நஞ்சைத் தஞ்சைநல்வழி காட்டும்

சிற்பத்துறையிலும் - சங்கீதத் துறையிலும் முன்னோடியாக விளங்குவது போல - விவசாயத் துறையிலும் முன்னோடியாக விளங்கி இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும்.

தரிசு நிலமும்
விளை நிலமாகலாம்

அரசே தரிசு நிலங்களைத் தன் செலவில் பண்படுத்திய பிறகு அந்நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு 10,15 ஆண்டுக் குத்தகையில் விடும். அந்நிலத்தைப் பண்படுத்திட ஆன செலவை ஒவ்வோர் அறுவடையின் போதும் சிறிது சிறிதாக அரசுக்கு அந்த விவசாயி செலுத்தி வர வேண்டும். முழுத் தொகையும் செலுத்தியான பிறகு அந்நிலத்தை விவசாயிக்கே சொந்தமாக்கிவிடும். இவ்வாறு ஒரு திட்டமிட்டுச் செயலாற்ற இருக்கிறது தமிழக அரசு!

புதுக்கோட்டை. அருகே குடுமியாமலைப் பகுதியில் சீரணியினரால் பயிரிடத்தக்க நிலமாக மீட்கப்பட்டு வரும் நிலத்தில் முதல் ஆயிரம் ஏக்கரில் குத்தகைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைக் குடியேற்றலாமா என்றும் யோசித்து வருகிறேன்.

மத்திய உணவமைச்சர் சகசீவன்ராமிடம் இது பற்றி பேசினேன். எதெற்கெடுத்தாலும் டில்லியிலா கேட்பது என்கிற காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள், முடிந்தால் சொல்லட்டும் - டில்லியிடம் கொடுக்க வேண்டாமென்று அவர்கள் சொல்லியும் - அதையும் மீறி கிடைக்க வேண்டியது எனக்குக் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது.

பாடுபடுகிற உழவனுக்கு நிலம் சொந்தமானால் அவன் நிமிர்ந்து நடப்பான். அவன் நெஞ்சத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எனவே பண்படுத்திய பின் ஒப்படைக்கும் இத்திட்டத்தை வகுத்துச் செயலாற்றவிருக்கிறோம். இன்னும் 10, 15 ஆண்டுகளில் பி.ஏ. பட்டதாரி டிராக்டர் ஓட்டுவதையும் எம்.ஏ பட்டதாரி அறுவடை செய்வதையும் பார்க்கலாம்.

"நான் உழைக்கிறேன் அதிலிருந்து பலன் பெறுகிறேன்." என்று சொல்லத்தக்க விதத்தில் படித்த பட்டதாரிகளும் உழைப்பார்கள்.

படித்தவர்களும் விவசாயத்தில்
ஈடு படவேண்டும் !

நூற்றுக்கு நூறு பேர் படிக்க வேண்டும் - படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் கிடைக்கின்றபலன் மிக அதிகமாக இருக்கும். படிப்பறியாத விவசாயி உரம் கேட்டால் அதிகாரிகளிடமிருந்து வருகின்ற பதில் வேறாக இருக்கும். போய் முத்துசாமியை அழைத்துவா என்பார்கள். அதையே ஒரு பி.ஏ. பட்டதாரி! கேட்டால் - கேட்கும் குரல் மட்டுமல்ல; கிடைக்கும் பலனும் வேறாக இருக்கும்.

படித்தவன் உழவேண்டும் - உழுபவன் படிக்கவேண்டும். படிப்பான்; அறிவுப்பசியைத் தீர்க்க - உழுவான் உற்பத்தியைப் பெருக்க என்ற நிலை ஏற்பட வேண்டும்.

நமக்கு நல்ல ஆறுகள் இல்லை என்றார்கள். உண்மை தான். பாலைவனமாக உள்ள இஸ்ரேல் நாட்டில் தண்ணீரையும் உரத்தையும் பயிர் செய்வோரையும் தாங்கிக் கொள்கிற அளவுக்கு நிலம் இருந்தால் போதுமென்று பயிர் செய்கிறார்கள்.

தஞ்சையிலே வயலா - குளமா என்று எண்ணும்படியாக நீர் பாய்ச்சப் படுகின்றது. கோவையிலே தண்ணீரைத் தெளித்தது போல தெளித்தே விவசாயம் செய்கிறார்கள். தஞ்சையைக் காட்டிலும் கோவையிலே கண்டு முதல் அதிகமாகிறது. இவைகளெல்லாம் கருத்தரங்கில் ஆராயப்பட வேண்டும்.

கருத்தரங்குகளில் பெரும் பேராசிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து உரையாற்றச் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால் தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவர வேண்டும். பாசன வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இனி நாம் புதிதாக அணை கட்டுவதற்கும் இடமில்லை.

பூமிக்கடியில் இருக்கும் நீரை வெளிக்கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும். சர்க்கார் வருமானத்தில் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செலவையும் செய்வோம். ஆனால் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒதுக்கும் பணத்தைக் கொண்டு மட்டும் இது போன்ற சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை நிறை வேற்றிவிட முடியாது.

தமிழ் நாட்டில் 13 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. சோழா் காலத்திலும் - பல்லவர் காலத்திலும் வெள்ளைக்காரர்கள் காலத்திலும் வெட்டப்பட்ட ஏரிகள் 18 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன.

வட ஆற்காடு - செங்கற்பட்டு மாவட்டங்கள் ஏரிப்பாசனத்தையே பெரிதும் நம்பி இருக்கின்றன.

இந்த ஏரிகளையெல்லாம் ஆழப்படுத்தினால்-அகலப்படுத்தினால் தான் ஏழைகளின் வீட்டில் பால் பொங்கும்.

ஏழை முகத்துப்
புன்னகை...

வெளியுலக விளம்பரத்தை விட ஏழை முகத்தில் புன்னகை வெளிப்படுவதைத் தான் இந்த சர்க்கார் பெரிதும் விரும்புகிறது !

மக்கள் இது கேட்டால் ஆச்சரியப் படுவார்கள். பக்தவத்சலம் அறிந்தால் வருத்தப்படுவார். இந்த ஏரிகளில் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் பழுது பார்க்கப் பட்ட ஏரிகளின் எண்ணிக்கை 1500 தான்! மிச்சம் 12 ஆயிரத்து 500 ஏரிகள் பழுதுபார்க்கப் படாமலிருக்கின்றன. இவற்றையெல்லாம் பழுது பார்ப்பதற்குள் - பழுது பார்க்கப்பட்டவை சீர் குலைந்து விடும்.

நாங்கள் பதவிக்கு வந்த பிறகு இந்த ஐந்தாண்டுக் காலத்திற்குள் பெரும்பாலான ஏரிகளையும் புயலால் உடைபட்டுள்ள மதகுகளையும் பழுது பார்க்க இருக்கிறோம்.

ஆகவே இதற்கெல்லாம் சேர்த்து 10 கோடி ரூபாய் மத்திய சர்க்கார் நிதிதர வேண்டும் என்று முதலமைச்சர்கள் மாநாட்டிலேயே நான் கேட்டுக் கொண்டேன்.

இந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு 10 கோடி ரூபாய் ஐந்தாண்டுத் திட்டத்திற்குத் தரப்படும் தொகை நீங்கலாகத் தரப்படுமானால் - சில ஆண்டுகளுக்கு உர விலையை ஏற்றாமலிருப்பார்களானால் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவதால் ஏற்படும் நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்.

அரிசி விலை குறைக்கப்பட்டால் - மற்ற மற்றப் பொருள்களின் விலைவாசி குறைந்தால் பஞ்சப்படி குறையுமே என்று சொல்லுகிறார்கள் அப்படிப்பட்டவர்களைக் கேட்கிறேன்.

"எங்களுக்கு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வேண்டாம் - பழைய விலைக்கே வாங்கிக் கொள்கிறோம்" என்று எழுதிக் கொடுக்கட்டுமே - தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன்.

ரூபாய்க்கு ஒரு - படி அரிசி போடுவதற்கு சர்க்கார்‌ பல்‌வேறு சங்கடங்களைத்‌ தாங்கிக்‌ கொள்வதற்குக்‌ காரணம்‌ - அரிசி விலை குறையுமானால்‌ மற்ற பொருள்களின் விலைவாசியும் குறையும்‌ என்று நம்புகிறேன்‌.

மற்ற பண்டங்களின்‌ விலைகளும்‌ ஏழை மக்களின்‌ வாழ்க்கைக்‌ கேற்ற வண்ணம்‌ கட்டுக்குள்‌ அடங்கும்‌. - இது சமூகம்‌ முழுவதற்கும்‌ பலனளிக்கும்‌!

அப்படி ரூபாய்க்குப்‌ படி அரிசி என்று போடுவதால் சர்க்காருக்கு ஏற்படும்‌ நஷ்டம்‌ 8, 9 கோடியிலிருந்து 10 கோடிவரை ஆகலாம்‌ என்று அதிகாரிகள்‌ புள்ளி விவரம் தருகிறாா்கள்.

விவரம் தெரியாதவர்களல்ல
நாங்கள்‌

சங்கடங்களையெல்லாம்‌ தாங்கிக்‌ கொண்டாகிலும்‌ மக்களுக்குள்ள கஷ்டங்களைப்‌ போக்கவேண்டும்‌ - அவர்களுக்கு உணவளிக்கவேண்டு மென்றுதான்‌ தாங்கள்‌ விரும்புகிறோம்‌.

நீந்தக்‌ கற்றுக்‌ கொள்வதென்றால்‌ தண்ணீரில்‌ தான்‌ முடியும்‌! நீந்தக்‌ கற்றுக்கொள்கிறேன்‌ என்று வெற்றுத்‌ தரையில்‌ விழுந்து முயற்சி செய்தால்‌ எப்படி முடியும்‌?

நீந்தக்கற்றுக்‌ கொள்ள தண்ணீரில்‌ இறங்கித்தான்‌ ஆக வேண்டும்‌! இதனால்‌ சிரமங்கள்‌ ஏற்படத்தான்‌ செய்யும்‌ - மூச்சுத்‌ திணறும்‌ - மூக்கிலும்‌ வாயிலும்‌ தண்ணீர்‌ புகுந்து விடும்‌! சுழலில்‌. சிக்கிக்கொள்ளாமலும்‌ இருக்கவேண்டும்‌ என்ற பாதுகாப்போடும்தான்‌ இடுப்பிலே கயிற்றைக்‌ கட்டிக்‌ கொண்டு கரையிலே ஒரு ஆளையும்‌ நிறுத்திவைத்து விட்டுத்‌ தான் தண்ணீரிலே இறங்கியிருக்கிறோம்‌ - இத்தனை சங்கடங்களையும் ஏற்றுக்‌ கொண்டதால்தான் நீந்தக் கற்றுக் கொள்ள முடியும் !

மூழ்கிப் போகும் அளவுக்கு விவரம் தெரியாதவர்கள் இன்றையதினம் ஆட்சிக்கு வந்து விடவில்லை!

விவசாயிகள்
முற்போக்கானவர்

தமிழகத்தில் விவசாயிகள் முற்போக்கானவர்கள். நாம் கணக்கைப் போட்டு முடிப்பதற்குள் அவர்கள் கணக்கைப் போட்டு நமக்கு சொல்லுகிறார்கள். எத்தகைய நவீனவிவசாய முறையானாலும் அவற்றை ஏற்று செயல்படுத்திட அவர்கள் தயங்குவதில்லை. 'மாறிய நிலைக்கேற்ப வசதிகளைக் கொடுத்திடுக என்று நம்மை அவர்கள் கேட்டபடி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள நாம் தடைகள் எல்லாவற்றையும் மீறி முன்னேறிவிட்டோம் என்றும் தமிழ் நாடு உணவு உற்பத்தியில் உபரி மாநிலமென்றும் ஓர் நினைப்பு பரவியுள்ளது. இத்தகைய நினைப்பு ஏற்பட ஒருவகையில் நாமும் காரணம். எனினும் இது சரியல்ல. இது நீக்கப்படவேண்டும்.

நாம் முன்னேற்றப் பாதையில் செல்கிறோம். ஆனால் முன்னேறிவிடவில்லை, கடந்த ஆண்டு நாம் பெற்ற நல்ல விளைச்சல் தொடர்ந்து இருக்குமா என்பதை நாம் பொறுத்துப் பார்க்க வேண்டும். ஆக நமக்கு அவகாசம் அளித்து மத்திய அரசும் மற்றவர்களும் நம்மோடு துணைநிற்பார்களானால் விவசாயத்துறையில் சிறப்பான வெற்றிகளை நாம் தேடிட முடியும்.

தஞ்சை, திருச்சி, வடஆற்காடு, செங்கல்பட்டு, நெல்லையில் கணிசமான பகுதி ஆகியவற்றில் நெல்விளைச்சல் முழு அளவுக்கு நடைபெறுமானால் தமிழகத்தின் இதர மாவட்டங்களை பருத்தி, கரும்பு, நவதானியங்கள் ஆகியவற்றின். சாகுபடிக்கென ஒதுக்கிடலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக நிலைமை அவ்வாறில்லை ஒரு சில இடங்களில் ஒரு ஏக்கருக் -கும் பாசனத்தை ஏற்படுத்த ரூ.8 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியிருந்ததாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள். இவ்வளவு நிறைய செலவழித்து அதற்கேற்ப வரியைப் போட்டால் அதை நம் விவசாயிகள் தாங்குவார்களா? எனவே அரசு தன்னாலானதைச் செய்கிற அதேநேரத்தில் - பூமிக்கடியில் கிடைக்கும் நீரை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் படி ஊக்கு விக்கவேண்டும்.

பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் நீர் தாதுச்சத்துக்கள் குறைந்தது என்று விவசாயிகளிடத்தில் நிலவுகின்ற அவ நம்பிக்கையைப் போக்க வேண்டும்.

ஒருகாலத்தில் இரசாயன உரத்தைப் பற்றிக்கூட இப்படித்தான் கருதப்பட்டது. இன்று அந்த நிலைமையில்லை. கலப்பு உரமா அதை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம், தேவையானதைமட்டும் எங்களுக்குக் கொடுத்துதவுங்கள் என்ற அளவுக்கு விவசாயிகளிடம் உரத்தைப் பற்றிய அறிவு வளர்ந்துள்ளது.

தீவிர சாகுபடித் திட்டமென்பது தஞ்சைமாவட்டத்துக்கு மட்டும் உரியதாக இருந்தால் போதாது. மாநில முழுவதும் தஞ்சையை எதிர்பார்ப்பதென்பதும் இயலாது. எனவே படிப்படியாகத் தீவிர சாகுபடித் திட்டம் மற்ற மாவட்டங்களுக்குப் பரவ வேண்டும். இம்மாநிலம் உபரிமாநிலமாக வேண்டுமென்றால் அது ஒன்றே வழி!

தமிழ்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க சிறிய நீர்ப்பாசனத்திற்கு ரூ.20 கோடி செலவிட வேண்டுமென்று கூறி அதற்கான திட்டம் முழுவதையும் அழகுபட அச்சேற்றி புத்தகவடிவில் கொண்டு போய் நான் டெல்லியில் கொடுத்து வந்தேன். ஆனால் இன்று வரை அதற்கான பதிலே வரவில்லை. எந்தத் திட்டமானாலும் அதைச் சிறப்புற ஆற்றிக் கொடுக்கும் அதிகாரிகள் இங்கே இருக்கிறார்கள். தேவையானதைக் கொடுத்தால் உற்பத்திசெய்து குவிக்கும் உழைப்பாளர்களாக நமது உழவர்கள் இருக்கிறார்கள்.

மத்திய அரசு தான் நடத்திப்பார்க்க விரும்பும் எத்தகைய மேம்பாடானதிட்டமாயினும் தமிழகத்தில் வத்து நடத்தட்டும். வெளிமாநிலங்களில் ஒரு காரியத்தைச் செய்ய 100 ரூபாய் செலவாகுமானால் இங்கே அதே காரியத்தைச் செய்ய 80 ரூபாய் தான் செலவாகும்.

முன்னாள்
முதல்வரின் முறையீடு

முன்னாள் தமிழக முதலமைச்சர் குமாரசாமிராஜா இதை அப்போதே வலியுறுத்தினார். வடக்கே கொட்டும் பணத்தில் ஒரு பகுதியைத் தமிழகத்திற்குக் கொடுங்கள், உணவு உற்பத்தியைக் குவித்துக் காட்டுகிறோம் என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்பட்ட புதிய ஆட்சி அதன் முதல் ஆண்டிலேயே இரண்டு புதிய வரிகளின் மூலம் இந்த பத்து மாதங்களில் ரூ. 6 கோடி அளவுக்கு அதிக வருவாயைத் தேடியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன, இன்னும் இரண்டு கோடி ரூபாய் சேரும்.

இந்த அளவுக்கு ஈடாக வேனும் மத்திய அரசு மானியம் கொடுத்து உதவக் கூடாதா ? இந்த நாட்டிற்கு ஒருங்கிணைந்த தேசிய தண்ணீர்த் திட்டம் தேவை என்று இங்கு பேசப்பட்டது. இதே கருத்தை நீண்ட நெடுநாட்களுக்கு முன்பாகவே டாக்டர் சி. பி. ராமசாமி ஐயர் தெரிவித்தார். நாள் தவறினாலும் ஒருமைப்பாட்டைப் பற்றிய பேச்சு தவறுவதில்லை, ஆனால் நதிகளின் நீரை இணைப்பது பற்றி இதுவரை யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

கிருஷ்ணா கோதாவரியைப் பெண்ணாற்றுடன் இணைத்தால் வரண்டு கிடக்கும் தமிழ் நாட்டுப் பகுதிகள் பலமடையும். மேற்கே ஓடி கடலில் விழுந்து வீணாவதாகச் சொல்லப்படும் ஆறுகளின் நீரும் தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிடப்பட்

-டால் நல்ல பலனையளிக்கும். ஒருமைப்பாடு பற்றி பேசும் மத்திய அரசு இதை கவனத்தில் வைக்க வேண்டும்.

விவசாயிகள் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறி விட்டு அவர்களுக்குத் தேவையானதைத் தராவிட்டால் அது பசியைக் கிளறிவிட்டு விட்டு சோறு போடாமல் பட்டினி போடுவதற்கு ஒப்பாகும்.

வர்த்தக. பாங்குகள் விவசாயக் காரியங்களுக்காக கடன் வசதியளிக்க முன்வர வேண்டும். விவசாயக் காரியங்களுக்குக் கடன் கொடுக்கிறோம் என்று வர்த்தக பாங்கி ஒன்றின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். முதலில் செங்கற்பட்டு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். ஐந்தாண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கடனாக எட்டரை விகித வட்டியின் பேரில் நிதியுதவி செய்யலாம் என்று அவர்கள் சொன்னார்கள். இதை நமது விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்களா?

குறைந்த வட்டிக்கு 15, அல்லது 20 ஆண்டுகள் தவணை கொடுத்தும் கடன் வசூலாவதில்லையே, வர்த்தக பாங்கியினருடைய நிபந்தனைக்கா உட்படப் போகிறார்கள்? என்றாலும் இவையெல்லாம் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.

எப்படியேனும் விவசாயிகளுக்குத் தேவையான கடன் - சிக்கலில்லாமல் கிடைக்க வேண்டுமென்பதற்காகச் சில திட்டங்களைத் தயாரித்து வருகிறோம். சர்க்கார் மட்டுமே அல்லாமல் வேறு நிதி உதவி நிறுவனங்களும் விவசாயக் காரியங்களுக்காக கடன் வழங்க வகை செய்து சில விதிகளைச் செய்ய இருக்கிறோம்.

உதவிகிடைத்தால் அயல் நாட்டுக்கும்
அரிசி அனுப்பலாம்

தமிழக விவசாயத்துக்கு அவசியமான நிதி உதவிகளை மத்திய அரசு அளித்திடுமானால் இன்னும் இரண்டு ஆண்டு -களில் அரிசி உற்பத்தியை உபரியாக்குவதோடு நேர்த்தியான சிலரக அரிசி வகைகளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்.

விவசாயத்துறையில் நாம் பெற்றுள்ள வெற்றி எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கை யூட்டுவதாக இருக்கிறது. அதிக விளைச்சல் தரும் ரக நெல், நெல் விளைச்சல் பெரிதும் உர விநியோகத்தைப் பொறுத்தது, நமக்கு உரப் பற்றாக்குறையாக இருக்கிறது. இங்கு அதிக அளவில் உரத் தொழிற்சாலைகள் துவக்கப்படுமானால் - தேவைக் கேற்றபடி உரம் வழங்கப்பட்டால் - இந்த முன்னேற்றம் நீடிக்குமாறு செய்யமுடியும். இந்த முன்னேற்றத்தை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு நீடிக்கச் செய்தால் - இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை தமிழ்நாடு உபரி மாநிலமாக விளங்கும். நமது நாடு முழுவதுமே உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக ஆகும் நிலைவருமென்றே நான் எதிர்பார்க்கிறேன்.

இயற்கை மாறுபாடுகள் இருக்கவே இருக்கின்றன. இதனை இரைப்பு இயந்திரங்கள் மூலமாக பாசன வசதிகளைச் செய்வதன் மூலம் சமாளித்திடாமல் பூமிக்கடியில் நமது நாட்டில் பெருத்த நீரோட்டம் இருக்கிறது. இந்த நீரோட்டத்தை யந்திர இரவை மூலம் குழாய்க் கிணறுகள் மூலம் வெளிக் கொணர்ந்தால் - இயற்கையின் பாதக விளைவுகளைக் கூட சமாளிக்கலாம் - உண்மையில் விவசாய விளை பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவே நமது நாடு ஆக முடியும். ஏனெனில் நது நாடு விவசாய நாடு. நாம் இதனையே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.