உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து

அணிந்துரை

அண்ணன் அ. கி. மூர்த்தி அவர்களை நான் நெடுங்காலமாக அறிவேன். என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்துகளையும், பேச்சுகளையும் முறையாகத் தொகுத்து வெளியிடுந் திட்டத்தில் தம்மை முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். அண்ணா அடிச் சுவட்டில் வழுவாது நிற்பவர் அண்ணாவின் அருமைத் தொண்டர். அவர் ஆங்கிலத்தில் ஆறு தொகுதிகளாக வெளியிட்ட அண்ணாவின் பேச்சு வரிசை ஆராய்ச்சி நூல்கள் சாகா இலக்கியங்கள். அவை அண்ணாவின் அருமை பெருமைகளை உலகிற்கு என்றும் பறைசாற்றுபவை.

அண்ணன் அவர்கள் தஞ்சை மாவட்ட அண்ணா இலக்கியப் பேரவையின் செயலருமாவார். அப்பேரவை எடுத்த முடிவிற்கேற்ப 25–9–91 அன்று தஞ்சையில் அண்ணா பேரவை துவக்க விழாவில் அண்ணாவின் ஆங்கிலப் பட்டமளிப்பு விழா உரைகள் நான்காம் பதிப்பு, பேரவைச் சார்பாக வெளியிடப் பெற்றது. அதைத் தொடர்ந்து, இப்பொழுது இது வரை கோவையாக வெளி வராத அண்ணாவின் தலைமைஉரைகள் 28 வெளி வருகின்றன.

இந்நூலை அரிதின் முயன்று வெளியிட்ட அண்ணன் அவர்கட்கும், அவர்தம் பேரவை நண்பர்களுக்கும் எனது உளங்கனிந்த பாராட்டுகள். இது போன்று, பல நூல்கள் வெளி வர அண்ணா பால் ஈடுபாடு கொண்ட அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறேன். சிறப்பாக அண்ணா பேரவை அன்பர்களும், நண்பர்களும் இதில் தனி நாட்டம் செலுத்தவும் அன்புடன் வேண்டுகிறேன்.

தொலைபேசி : 478570
7-ஆவது நிழல் சாலை,
அண்ணா இல்லம்,
சென்னை-34
1–7–95.

சி. என். ஏ. பரிமளம்,
மாநிலத் தலைவர்,
பேரறிஞர் அண்ணா இலக்கியப்
பேரவை.