உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/ஆட்சிப் பொறுப்புக்கு ஆளாகும் நேரமிது

விக்கிமூலம் இலிருந்து


2. ஆட்சிப் பொறுப்புக்கு
ஆளாகும் நேரமிது!


1

இம்முறை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகம் செய்து கொண்டோம். இப்படி நாம் அறிமுகம் செய்து கொள்வதால், நாம் புதிதாக இப்போதுதான் சந்திக்கிறோம் என்று பொருளல்ல.

“தி. மு. க. நகர்ப்புறத்திலேதான் இருக்கிறது கிராமப் பகுதியிலே இல்லை”, என்றார்கள்.

இந்தத் தேர்தலில் கிராமப்புறத்திலேயிருந்து, ஏராளமானவர்கள் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். ஏராளமான உழவர் பெருங்குடி மக்கள், தேர்தலிலே வெற்றி பெற்றுள்ளார்கள். எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்களும், தி. மு. க. வெற்றிக்குப் பாடுபட்டு உள்ளனர்.

எல்லா மக்களும் பரிபூரண நம்பிக்கையுடன், நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். இந்தப் புனிதமான நேரத்தில் நாம் அதிகப் பொறுப்புக்களுக்கு ஆளாகி இருக்கிறோம். நாம் அதிகமாகப் பக்குவப்பட வேண்டிய நேரமிது.

மக்கள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பல காரணங்கள் சொல்லலாம். இஃது அக மகிழ்ச்சிக்குரிய நேரமட்டுமன்று. அடக்கத்திற்குரிய நேரமுமாகும்.

 தமிழக மக்களின் பரிபூசண நம்பிக்கைக்கு ஆளாகி இருக்கிறோம் நாம். சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசுக் கட்சியை மக்கள் எப்படி நம்பினார்களோ, அப்படியே நம்மை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சிலரைத் தவிர, மற்ற அனைவரும் இளைஞர்கள். புதிய தலைமுறையினர் பொறுப்பு ஏற்பதையே இஃது எடுத்துக்காட்டுகிறது.

இங்கே அறிமுகப்படுத்திக் கொண்ட நண்பர்கள், தங்கள் படிப்பு என்ன என்பதைச் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பட்டதாரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆசிரியராக இருந்தவர்கள் இருக்கிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்தவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்களாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். நிர்வாகத் துறையில் நன்கு அனுபவப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பொதுவாகத் தி. மு. க. வைப் பற்றிச் சமுதாயத்தில் ஒரு நிலையில் உள்ளவர்களிடம் தவறாண எண்ணம் இருக்கிறது. தி. மு. க. என்பது வெறிபிடித்து அலையும் படிக்காதவர் கூட்டம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

தி.மு.க. படித்தவர்களின் பாசறை. தி. மு. க. -படிக்காதவர்களுக்கும் அது பாசறை. தி.மு.த.அது பாமரர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் இடம். கற்றறிவாளர்களும் தி. மு. க. வில் உண்டு. சமுதாயத்தின் எல்லாப் பகுதியினரும் இங்குண்டு.  நம்முடைய ஏழ்மைத் தோற்றத்தைக் கண்டு, படிக்காதவர்கள் என்று சிலர் எண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம் மற்றவர்கள் ஒத்துழைப்புடன் ஆளுவோம். எந்தவிதமான தனிப் பட்ட விரோதமும் யாரிடமும் கிடையாது. மற்றவர்களுடன் தோழமையுடன் நடந்து கொள்வோம்.

காங்கிரசு நண்பர்களிடமிருந்தும் நான் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். அதிகாரத்தில் அவர்கள் இல்லாவிட்டாலும் தங்களுடைய ஆலோசனைகளை அளித்தால் ஏற்றுக்கொள்வோம்.

2

1957-ம் ஆண்டில் நான் காஞ்சிபுரம்தொகுதில் தேர்தலில் நின்றபோது, என்னை இராஜாஜி சந்திக்க விரும்பினார். ஒரு நண்பர் வீட்டில் நாங்கள் சந்தித்தோம். "நீங்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரே ஒரு காரியம் செய்ய வேண்டும். எந்த வகுப்பார் மீதும் எனக்குத் துவேஷம் கிடையாது என்றோர் அறிக்கை வெளியிட வேண்டும் ” என்று இராஜாஜி என்னைக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு நான், " என்னால் முடியாது, " என்றேன். என்னை ஆச்சரியத்தோடு இராஜாஜி பார்த்தார். "நான் இப்படி ஓர் அறிக்கையை இப்பொழுது விடுத்தால், இதுவரை நான் வகுப்புத் துவேஷம் பாராட்டியதாகப் பொருள்படும். நான் எப்போதுமே  வகுப்புத் துவேஷத்தோடு இருந்ததில்லை", என்று சொன்னேன்.

நான் சொல்லியதைக் கேட்டு, இராஜாஜி மகிழ்ச்சியடைந்தார். அப்படியானால், "நீங்கள் இந்த நாட்டை ஆளுவீர்கள்,” என்று அப்போதே வாழ்த்தினார்.

நானும் நெடுஞ்செழியனும், நடராசனும் மதியழகனும் திராவிடர் கழகத்தில் இருந்தபோது, அங்கே நாங்கள் வகுப்பு வேற்றுமையை எந்தத் தனிப்பட்டவரிடமும் காட்டவில்லை.

சுயமரியாதை இயக்கத்தின் பழைய இரசீது புத்தகம் யாரிடமாவது இருந்தால், அதைப் பாருங்கள். அதன் பின்பக்கத்தில் உறுப்பினருக்கான விதி முறைகள் என் கையால் எழுதப்பட்டவையாகும்.

“ வகுப்பு வேறுபாடு இல்லாமல், பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் உறுப்பினராகலாம், ” என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நாம் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகுதான், அந்த அமைப்புக்கூடத் தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரைத் தாக்குவதாக அமைந்தது. அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தி. மு. க. வுக்கு எதிர்முகாமில் இருப்பவர்களாக இருந்தால், அவர்களிடம் திராவிடர் கழகத்தினர் பரிவும் காட்டினார்கள்.

தி. மு. க. எந்த வகுப்பாரிடமும் வேற்றுமை காட்டியதில்லை என்பது மட்டுமல்ல தி. மு. க. சமுதாய ஒருமைப்பாட்டை உருவாக்கப் பாடுபடும்.  'நாம் தமிழர்' கட்சித் தலைவராக இருந்த ஆதித்தனார் தி. மு. கவிலே சேர்ந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பே தம் விருப்பத்தை அவர் எனக்குத் தெரிவித்தபோது, தேர்தல் நேரத்தில் வெளியிட்டால், "ஒட்டு வாங்குவதற்காகச் சேருகிறார்.” என்று சொல்வார்கள் என்று நினைத்துத் தான் நான் அப்பொழுது தெரிவிக்கவில்லை.

ஆதித்தனரும் நாம் அனைவரும் தமிழர்கள் என்று நினைத்து நம்முடன் சேர்ந்துவிட்டார்.

3

நான் அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். நிர்வாகத்தில் இல்லாவிட்டாலும் காங்கிரசுக்காரர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வோம். அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்படும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது, மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். என்னைச் சந்தித்த பி. பி. சி. வானொலி நிலையத்தைச் சேர்ந்த நிருபர், வெளிநாட்டு நிருபர்களுக்கே உரிய வாக்குச் சாதுரியத்துடன், "காமராசர் பிரதமர் மந்திரியாகத் தகுதி உண்டா? அதை விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.

“நிச்சயம் தகுதியுண்டு. நான் அதை விரும்புகிறேன்”, என்று பதில் சொன்னேன்.

தில்லியில் நான் பேசும்பொழுதுகூடத், "தென்னாட்டுத்தலைவர்களுக்கு வடநாட்டில்மதிப்புத் தருவதில்லை," என்று குறிப்பிட்டதைக் கேட்டுத், " தியாகராசர் பேரால் மன்றம் வைத்திருக்கிருேம்," என்றார்கள். -

தென்னகத் தலைவர்கள் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை நாம் உணருகிறோம்.

மாற்றுக் கட்சியினராக இருந்தாலும், அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்பட வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.

இந்த நேரத்தில் கழகத் தோழர்களுக்கு மிக முக்கியமானதைக் குறிப்பி ட விரும்புகிறேன். ஆட்சிப் பொறுப்புக்கு நாம் செல்லும் இந்த நேரத்தில் சர்க்கார் வேறு, கட்சி வேறு என்பதை உணர வேண்டும். இதனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறவர்கள் கட்சி வேலையில் ஈடுபடமாட்டார்கள் என்பது பொருளல்ல. ஆட்சிப் பொறுப்பில் அவர்கள் பணியாற்றும்பொழுது, எல்லோருக்கும் பொதுவானவர்கள். கட்சிப் பணியாற்றும்பொழுது அவர்கள் முழுக்க முழுக்கக் கட்சிக்காக வேலை செய்வார்கள்,

சர்க்கார் என்பது வேறு, கட்சி என்பது வேறு. நாடு என்பது நிரந்தரமானது. சர்க்கார் என்பதும் நிரந்தரமானது. ஆளுங்கட்சி மாறிக் கொண்டிருக்கலாம். நாம் கட்சி வேலை செய்ய வேண்டிய இடம் தி.மு.க. தலைமை நிலையங்களான அறிவகம், அன்பகம் ஆகும். சர்க்கார் அலுவலகம் அறிவகமல்ல, அன்பகமுமல்ல. அது அறிவு அகமாகவும் அன்பு அகமாகவும் இருக்கலாம். இந்தியாவிலேயே சிறந்த அதிகாரிகள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன், தி.மு.க. நல்ல முறையில் ஆட்சியை நடத்திச் செல்லப் பாடுபடும். மத்திய அரசாங்கத்தின் நல்ல ஒத்துழைப்புடன், பணியாற்றத் தி.மு.க. விழையும்.

நாம் ஏற்றிருக்கும் பொறுப்பு மிகப் பெரியது. நாம் அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

வகைப்பாடு: ஆட்சி - அறிவுரை.

(26-2-67-இல் சென்னையில் நடந்த சட்டமன்றத் தி.மு.க. உறுப்பினர் கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரை)


பண்பாடு

கருத்து வேறுபாடு இருந்தாலும், பாராட்ட
வேண்டியதைப் பாராட்டுவது என்பது தமிழ்ப்
பண்பாடு

பேரறிஞர் அண்ணா