அண்ணாவின் தலைமை உரைகள்/கொடிய மதுவை ஒழிப்போம்
17. கொடிய மதுவை ஒழிப்போம்
1
மதுப்பழக்கம் வாழ்க்கை முறைகளை மட்டுமல்ல வாழ்க்கை நெறிகளையும் கெடுக்கிறது. காலங்காலமாக நாம் குடிப் பழக்கத்தை ஒரு தீமையாகவே கருதி வந்திருக்கிறோமே தவிரச் சிக்கலாக மட்டும் எண்ணியதில்லை.
யாராவது தாறுமாறாக நடந்தால், வழக்கத்திற்கு மாறாக நடந்தால் கூட, ‘என்ன குடித்திருக்கிறாயா?’ என்று கேட்பதுதான் நம் வழக்கம்.
நம் திரைப்படங்களில் கூட, ஏன் நாடகங்களில் கூட நீங்கள் கவனித்திருக்கலாம். கதாநாயகர்கள் குடிக்க மாட்டார்கள். கயவனாக வருபவன்தான் குடிப்பதாகக் காட்டப்படுவான். இவ்வகையில், நம் கதை ஆசிரியர்கள் கூடப் பாராட்டப்பட வேண்டியவர்கள். கதைகளில், குடிப்பது தகாத செயலாகவே காட்டப்படுகிறது.
நல்லவர்கள் குடிப்பதில்லை. குடிப்பவர்கள் நல்லவர்கள் அல்லர். நல்லவர்களும் குடிக்கும் போது கெடுகிறார்கள். இந்த உண்மையை அனைவரும் உணர்கிறார்கள். ஆனால், நடைமுறையில்தான் சிலர் தவறுகிறார்கள், உண்மை உணரப்படுகிறது. ஆனால், நடைமுறைக்கு அது வரக் கடினமாக இருக்கிறது.
மனிதருள் பெரியவராக இருந்த காந்தியடிகளே ‘உண்மையிடம் வெற்றி கண்டதாக’க் கூறவில்லை. உண்மையிடம் வாய்மை ஆய்வு நடத்தியதாகத்தான் சொல்லி இருக்கிறார். அந்த மேதைக்கே அப்படி என்றால், சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. எனவேதான், ‘மதுப் பழக்கம் தீது’ என்ற உண்மை தெரிந்திருந்தால் கூட, அதனை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் தேவைப்படுகிறது.
இன்று காலையில் கூட, எனக்கு வந்த கடிதங்களில் ஒன்று, இச்சிக்கல் பற்றி என் நண்பர் ஒருவரால் எழுதப்பட்டதாகும். அவர் குடித்தவர் அல்லர். குடிப்பவரும் அல்லர். இனியும் குடிக்க மாட்டார். ஆனாலும் அவர், “ஏன் ஒவ்வொரு முறையும் நிதி வசதி வேண்டித் தில்லியின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? கள்ளுக் கடைகளைத் திறந்து விடுங்கள். கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும்” என்று எழுதி இருந்தார். மதுவிலக்குக்காக வாதாடுங் குணம் படைத்த அவர், பொருளாதார நிலைமை காரணமாக, எனக்கு இந்தக் கருத்தேற்றத்தை எழுதியிருந்தார். ஆனால், அவரும், அவரைப் போன்றவர்களும் இப்போது வளர்ந்து வரும் இளைய பரம்பரையினரை மறந்து விடுகிறார்கள்.
“மது என்றால் என்ன? மதுக்கடை எப்படி இருக்கும்?” என்று தெரியாமல் இருந்து வருபவர்கள் அவர்கள். அவர்களுக்கு இவை இரண்டும் மீண்டுந் தெரியத்தான் வேண்டுமா? மீண்டும் நம் இல்லங்களில் அழுகுரல் கேட்கத்தான் வேண்டுமா? தாய்மார்கள் வேதனையால் தவிக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்லுங்கள்.
மதுவிலக்கினைச் செயல்படுத்துதில் சில குறைபாடுகள், இயலாமைகள் இருக்கலாம். “தேவாலயத்தினுள் நுழைந்து வருபவர்கள் எல்லாம் பத்து கட்டளைகளின்படி நடப்பவர்கள் அல்லர். அவர்களையும் அறியாமல், வழுவல்கள் இருக்கலாம். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பத்துக் கட்டளைகளின் படி நடப்பேன்” என்று உறுதி மொழி கூறத் தவறுவதில்லை.
நண்பர் செங்கல்வராயன் சொன்னது போல, ஆங்காங்கே சில தவறுகள், குறைகள் உண்டென்றால், அது மது விலக்கின் தோல்வியல்ல. மது விலக்கில், மனிதன் அடைந்த தோல்வியாகும்.
❖
நான் சிறுவனாக இருந்த போது, நடந்தது இது. இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. என் உறவினர் இருவர் குடிப்பழக்கங் கொண்டவர்கள். ஒருவர் நன்றாகக் குடித்து விட்டுத் தெருவையே அதிர வைப்பார். அடிபடுவார், அடி கொடுப்பார். இன்னொருவர் குடிப்பழக்கங் கொண்டவர்தான். ஆனால், இவரோ வேறு வகையானவர். குடித்தவுடன் வீட்டுக்குள் வருவார். வீட்டில் மனைவியை அதிர வைப்பார், அடிப்பார், அழ வைப்பார். அவர் வெளியே நடத்துவதை இவர் உள்ளே நடத்துவார். இதில் உச்ச கட்டம் என்னவென்றால், இவர் அவரை அழைத்து அறிவுரை கூறுவதுதான், “என்னப்பா! குடித்து விட்டு வெளியே போய்ச் சண்டை போடுகிறாய். சமர் கட்டுகிறாய்? வீடு இல்லையா அதற்கு? உள்ளே வா,” என்று அதட்டுவார்.
இங்கே வீற்றிருக்கும் உங்கள் முன், உங்கள் மூலமாக அனைவருக்குஞ் சொல்லிக் கொள்வேன்.
“இந்தச் சம்பவம் என் மனத்திரையிலிருந்து மறையாது இருக்கும் வரை, நான் கேட்ட ஒலி என் காதுகளில் அலை மோதிக் கொண்டு இருக்கும் வரையில், இங்கே ஒரு மதுபானக் கடைகூடத் திறக்கப்பட மாட்டது என்று.
❖
என்னை நீதிக்கட்சியைச் சார்ந்தவன் என்று சொல்லித் தாக்குவதில், காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ஆம்! நான் நீதிக்கட்சிதான். காங்கிரசுக்கு முந்திக் கொண்டு, முதன் முதலில் அது மது விலக்குக் கொள்கை அவசியம் என முடிவு செய்தது. இங்கே இருக்கும் நண்பர் செங்கல்வராயனுக்குச் சொல்லிக் கொள்வேன். “அந்த மதுவிலக்குக் கொள்கையை மேலுந் தீவிரப் படுத்தத்தான் ஆயிரக்கணக்கான எல்லைக் கற்களைக் கடந்து இங்கே வத்திருக்கிறார் அமெரிக்க நண்பர் ஸ்டீட்” என்று.
சிக்கல்களைத் தீர்த்து வைக்காததனால்தான், ஹேம்லட், தோல்வியுற்றான் என்று சேக்குவீயர் கூறுகின்றார். நாட்டின் முன்னோடியான முதல் பெரும் அமைப்பான காங்கிரசுக் கட்சிக்குச் சொல்லிக் கொள்வேன், சேக்குவீயரின் ஹேம்லட் இருப்பதா, இறப்பதா என்று இருந்ததைப் போல், மது விலக்குச் சிக்கலிலும் இப்படியா, அப்படியா என மயங்கி நிற்க வேண்டாம். ஹேம்லட்டுக்கு நேர்ந்த கதி காங்கிரசுக்கு வேண்டாம் என்று.
மதுவிலக்கு பற்றி ஒரு மொத்தமான முடிவுக்கு வாருங்கள். அப்போதுதான் இங்கே அமர்ந்திருக்கும் நண்பர் ஸ்டீட் அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து வரும் போது, '“நாங்கள் எல்லோருமே மது விலக்கினை ஆதரிப்பவர்கள்” என்று பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும்.
இப்போதும் மதுபான வகைகளுக்கு அனுமதி கேட்டு, எங்களிடம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் குறும்புடன் சிரித்து, வேடிக்கையும் விஷமும் கலந்து கேட்கிறார்கள். “மதுவிலக்கா—சென்னையிலா? ஆந்திரத்தில் இல்லையே. மராட்டியத்தில் கிடையாதே, ஏன் இங்கே மட்டும்” எனக் கேட்கிறார்கள்.'
உண்மையாகச் சொல்லுகிறேன். இந்த இடத்தில், என்னால் பதில் அளிக்க முடியவில்லை. எனவேதான், சொல்லுகிறேன். இங்கே மது விலக்கு பற்றி ஆணித்தரமாக, அழகாகப் பேசிய நண்பர் செங்கல்வராயன் தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் அல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கூட அல்ல, ஒரு காங்கிரசுக்காரர் என்ற அடிப்படையில் இச்சிக்கலை அந்த மன்றத்திற்கு எடுத்துச் செல்லட்டும். கிடைக்காத அடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில், “காங்கிரசல்லாத ஒரு மாநில முதலமைச்சர், மது விலக்கில் இப்படிப் பிடியாக இருக்கும் பொழுது, காந்தியவாதிகளாகவும் இருக்கும் காங்கிரசுக்காரர்கள், ஏன் மதுவிலக்கைச் செயற்படுத்தவில்லை” என்று கேட்டுத் தீர்மானங் கொண்டு வந்து கலந்துரையாடட்டும்.
அதில் அவர் வெற்றி பெற்றால், அவரை நாடே பாராட்டும். அவர் அதில் தோல்வியுற்றால் கூட, அவர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகமாகும். வேறு எந்தக் காங்கிரசுக் காரரையும் இதைப் பற்றி அணுகிச் சொல்வதற்கு எனக்கு நெஞ்சுரம் இல்லை. ஏனெனில், அவர்கள் ஒன்று மிகப் பெரியவர்களாக இருக்கிறார்கள் அல்லது மிகச் சிறியவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், என்னைப் போல் சாதாரணமாக இருக்குஞ் செங்கல்வராயனை இத்துறையில் அணுகுகிறேன். எங்கள் நெடுநாளைய நட்பு அத்தகையது.
எந்தெந்தச் சிக்கல்களிலோ தேசியம் பேசுகிறீர்கள், காங்கிரஸ் நண்பர்களே. மது ஒழிப்பை ஒரு தேசியச் சிக்கலாக முதலில் மேற்கொள்ளுங்கள். உங்கள் கட்சியைத் தாக்குவதாகத் தயவு செய்து எண்ண வேண்டாம். என் இதயத்திலிருந்து வருஞ்சொல் அது. வீணான வெறும் பேச்சு என்று நினைக்க வேண்டாம். உள்ளத்து ஆசை அது.
வகைப்பாடு : சமூகவியல்—மதுவிலக்கு
(21-9-67 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் அனைத்துலக மனக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் நடந்த கூட்டத்தில் தலைமை தாங்கித் துவக்கவுரை முடிவுரை ஆகிய இரண்டையும் ஆங்கிலத்தில் நிகழ்த்தியது. இங்கு அளிக்கப் பெற்றிருப்பது மொழி பெயர்ப்பு.)