உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் நாடகங்கள்/ராகவாயணம்

விக்கிமூலம் இலிருந்து

ராகவாயணம்


அபஜெய காண்டம்

ராகவாச்சாரியார்: முதலியாரவாள்! என்ன இருக்கிறது இதிலே எல்லாம்; க்ஷணப்பொழுது நடைபெறும் பொம்மலாட்டம்; வேறே என்ன!

ரங்கநாதர்: ஆமாம் சாமி! சந்தேகமென்ன. ஆனால் எங்கே இந்த ஜனங்களுக்கு இந்த ஞானம் வரப்போகுது. என்னமோ எல்லாவற்றையும் தங்கள் தலைமேலே மூட்டை கட்டிவைத்து தூக்கிக் கொண்டு போகப்போவது போலத்தான் அலைகிறதுகள்.

ராக: ஞானம் இல்லை, முதலியாரவாள்! ஞானம் ஏற்படவில்லை. ஏன் என்கிறீர்? சத்சங்கம் இல்லை. சத்விஷயங்களைப் பத்தின கேள்வி ஞானம், இல்லை!

ரங்: நீங்க ஒரு பைத்யம் சாமி! அவனுங்கதான், நம்மை எல்லாம் ஞான சூன்யங்கள்னு ஏசறானுங்க......நம்ம பேச்சையாவது அவனுங்க கேட்பதாவது......

ராக: ஒரு யோசனை சொல்லட்டுமா?

ரங்: எதுக்கு?

ராக: ஜனங்களோட க்ஷேமத்துக்குத்தான்.

ரங்: என்னது அது.....

ராக: ஸ்ரீமத் ராமாயண காலட்சேபம் ஏற்பாடு செய்துடுவோம்—ஆறு மாதம்—சித்ரகூடப் பாகவதர்னு கேள்வியுண்டோ, மகா சிலாக்யமான உபன்யாசம்......

ரங்: யாரு? யாரோ, உங்க பந்துன்னு சொல்வாங்களே.....

ராக: ஆமாம்......கலெக்டராகப் போயிருக்கவேண்டியவர், எம்.ஏ.பி.எல்............

ரங்: கேள்விதான்.....ரிவின்யூ இலாக்காவிலே இருக்கச்சே என்னமோ இரண்டு மூணாயிரம் கையாண்டதாக......

ராக: பழி சுமத்தினா, மகாபாவிகள்! கேஸ் நடத்தியிருந்தாரானா, ஜெயம்தான், ஆனா, என்ன செய்தார் தெரியுமோ? ராமா! இது உன்னோட சோதனைடாப்பா! இதோ வந்துட்டேன் உன் சேவைக்குன்னு சபதம் செய்துண்டு வாயைத் திறவாமப்படிக்கு மூவாயிரத்தையும் கட்டிவிட்டார். கட்டிவிட்டா விட்டு விடுவாளோ, ஜெயிலுக்குத்தான் அனுப்புவான்னு கண்டவா கண்டபடி பேசினா. ஆனா ராமானுக்ரஹம்னா என்ன சாமான்யமா! மேலதிகாரிகள் வழக்கை வாபஸ் வாங்கிண்டா. பார்த்தீரோ ராம நாம் மகிமையை.....

ரங்: அவருடைய கதா காலட்சேபம் வைத்தா நல்லது என்கிறீரா....

ராக: ஏற்பாடு செய்துவிட்டேன் முதலியாரவாள்! அடுத்த புதன் இங்கே வர்ரார்......

ரங்: அப்படியா......சரி......

ராக: மொத்தமா ஆயிரத்தொண்ணு.......

ரங்: ரூபாயா?

ராக: பவுன்கூடத்தான் தரலாம்.....ஆனா முடியுமோ.....

ரங்: எங்கே முடியுது. நான் பாருங்க நம்ம கிராமத்திலே துரோபதை அம்மன் திருவிழாவிலே பாரதம் படிக்கறதுக்கு, நம்ம படவேட்டராயர் இருக்காரே, அவரை ஏற்பாடு செய்து விட்டு, இப்ப படாதபாடு படறேன். ஒரு பயலும் காசு தர மாட்டேன்கிறான். பூராச் செலவும் நம்ம தலைலேயே விழுந்தது, ரொம்பச் சிரமமாயிட்டது.......

ராக: பாரதம் புண்ய கதைதான்...ஆனாலும்...

ரங்: இராமாயணம்மாதிரி ஆகாது என்கிறீர். ஆமாம், சந்தேகமென்ன, எதோ என் சக்த்தியானுசாரம் நான் பாரதம் ஏற்பாடு செய்தாச்சி, நீங்க உங்க சக்திக்குத் தகுந்தபடி, ராமாயணம் நடத்தி வையுங்கோ. இப்படி நாம், ஆளுக்கு ஒரு காரியமா ஏத்து நடத்தினாத்தான், கட்டிவரும். நான் புறப்படட்டுங்களா, நாளை மறுநாள் தீ மிதிக்கிறது—விறகுக் கடை பக்கம் போகணும்...

ராக: சரி......

அமளிக் காண்டம்

காமாட்சி: காயா பழமா?

ராகவாச்சார்: அவனண்டை போனா பழம்கூட அழுகின்னா போயிடும். கொடாகண்டனாச்சே......

கா: விடியாமுஞ்சி வேலைக்குப் போனா, எப்படி ஜெயம் கிடைக்கும்னேன். உமக்கு எங்கே வரப்போறது, சாமர்த்யம்.

ராக: சும்மா கிடடி! நான் நாலு நாழியாப் பேசி, அதைச் சொல்லி இதைச் சொல்லி, ராமாயணம் வைக்கலாம்னு சொன்னா, அவன், நான் ஏற்கனவே கிராமத்திலே பாரதம் நடத்தறனேன்னு, சொல்லி விரட்டறான்.

கா: இருந்தா என்னடாப்பா! உன்னோட செல்வத்துக்கும் வருமானத்துக்கும் இதெல்லாம் ஒரு பெரிய காரியமா, உன்னைப் போன்ற லட்சுமி புத்ரா இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யாமப் போனா, வேறு யார் முன்வருவா, அப்படி இப்படின்னு, மனசு இளகறமாதிரியாப் பேசணும்.....உமக்கு எங்கிருந்து வரப்போறது...மூஞ்சியையும் முகரக் கட்டையையும் பார்க்கிறபோதே, கதவை இழுத்துத் தாள்போட்டுடறா.......

ராக: போதும் போடி வாயாடினது. டால் அடுக்குதோ உன் முகம்-போய்க் காட்டேன் அவனிடம்...நேக்குச் சாமர்த்யமாகப் பேசத் தெரியல்லே...நோக்குத் தெரியுமேன்னோ, போ, போய்ப் பேசி ஜெயித்துண்டு வாயேன் பார்ப்போம்........

கா: இப்படி வம்பு தும்பும், அடா துடியும் பேசத் தெரியும் உமக்கு, வேறென்ன தெரியும். போன காரியத்தை முடிச்சுண்டு வரச் சாமர்த்தியமில்லேன்னாலும், கோபம் மட்டும் வந்துடறது பொத்துண்டு........

ராக: ராமா! ராமா! ராமா! தலை தலைன்னு அடிச்சிண்டு எங்காவது தேசாந்திரம் போகலாம்டாப்பா, இவளிடம் சிக்கிண்டு பிராணனை விடறதைவிட எவண்டி உன்னோட அண்ணனை அழைச்சி, ராமாயணம் நடத்தச் சொல்லுவன். ஊர் பூரா தெரிஞ்சிருக்கு, இலஞ்சக் கேசிலே அவன் சிக்கிண்டதும், வேலையிலே இருந்து டிஸ்மிஸ் ஆனதும்.

கா: தெரிஞ்சா என்னவாம்! ஏதோ போறாத வேளை—சோதனைக் காலம்....அவர் என்ன ஜெயிலுக்கா போயிட்டு வந்தார்........

உபதேச காண்டம்

கமலா: ஏண்டி அம்மா! ஏன் அப்பா உம்னு இருக்கார்.....

காமாட்சி: உம்னு இருப்பார், உர்னு பாய்வார், வேறே என்ன தெரியும் அவருக்கு.........

க: ஏண்டி சண்டைபோட்டே அப்பாவோட.......

கா: சண்டை போடாமே, உங்க அப்பாவோட இலட்சணத்துக்கு சரசமாடுவாளோ......துப்புக்கெட்ட ஜென்மம்.......என் தலை எழுத்து.........

க: அடுக்கிண்டே போறயே......என்ன விஷயம்னு சொல்லேன்.....

கா: ரொம்ப அவசியமா, தெரிஞ்சுக்கணுமோ......

க: சொல்லுடின்னா.....அம்மா.....சொல்லேன்......

கா: நேத்துப்பூராச் சொன்னேனேல்லோ ராமாயண காலட்சேபம் நடத்தச் சொல்லி அந்த முதலியைப் போயிப் பாருன்னு...

க: ஆமாம் போகலையா......?

கா: போனாரே! போயி, வெறும் கையோடு வீடு திரும்பி வந்தாச்சி. அவன் சம்மதிக்கல்லையாம். நாம்தானே சம்மதிக்க வைக்கணும், அதுக்குச் சாமர்த்யம் இருந்தாத்தானே. எங்க அண்ணன் பேரிலே கேஸ் வந்தப்போ இந்த மாதிரி பித்துக் குளியா நான் இருந்திருந்தேனானா, அண்ணன் இன்னேரம் ஜெயிலிலேதான் இருந்திருப்பார் .......

க: ஆமாம், அடுத்தாத்து பாட்டிகூடச் சொல்றா.....நீதான், கலெக்டரிடம் பேசி, கேசை ஜெயிச்சிண்டு வந்தாயாமே.....

கா: ஜெயிச்சிண்டு வந்தயாமேன்னு, இவ்வளவு சுலபமாச் சொல்விடறயே......அந்த கலெக்டர் கொஞ்சத்திலே மனசு இளகி வழிக்கு வந்தானா. முதல்லே, பொம்மனாட்டிகளைப் பார்க்கற வழக்கமில்லேன்னு, ப்யூனிடம் சொல்லி அனுப்பினான்—நான் வாசற்படியிலே காத்திண்டிருக்கேன்......அம்பா சன்னதிக்குப் போயி, அர்ச்சனை செய்துண்டு பிற்பாடு, போனேன் அவன் பங்களாவுக்கு; ப்யூன் வந்து சொல்றான், தொரை பார்க்க மாட்டாராம், பொம்மனாட்டிகளைப் பார்க்கற வழக்கம் இல்லையாம்னு. அடே அப்பா! நீ போயி தொரையிடம் சொல்லு, எங்களுக்கும் ஆம்பிளைகளைப் பார்க்கற பழக்கம் கிடையாது. ஆனா, இது ஒரு ஆபத்தான விஷயம் அதனாலேதான் வந்திருக்கா ஐயர் வீட்டம்மான்னு சொல்லுடான்னேன், பிற்பாடுதான் உள்ளே போகவே முடிந்தது. நெருப்புப் பொறி போலப் பேசறான். இலஞ்சம் ருஜூ ஆகிவிட்டது. சும்மா விடுவதற்கில்லை, அழுது பிரயோஜனமில்லை, அப்படி இப்படின்னு, தாட் பூட்னு குதித்தான்.......பிற்பாடு அவனோடு இதமாப் பேசி.....

க: தமிழ் தெரியுமோ அவனுக்கு.......

கா: தட்டுத் தடுமாறிப் பேசுவன். ஆசாமிக்கு நல்ல மனசு, முதலிலேதான் கர்ஜித்தான், பிறகு, நான் அவனோடு பக்குவமாப் பேசி, கோபத்தைப் போக்கி, மனசு இளகும்படிச் செய்ததாலே, சரி! உனக்காகச் செய்றேன், என்றான். கேஸ் தள்ளுபடியாச்சு, ஒரு பொம்மனாட்டிக்கு இருக்கற சாமர்த்தியத்திலே நூத்திலே ஒண்ணு இல்லை, உன் தோப்பனாருக்கு.....

க: உன் சாமர்த்தியம் யாருக்கும் வராதுன்னு தான் சகலரும் சொல்றாளே!


பாடாபிஷேக காண்டம்

ரங்கநாதர்: என்னமோ பொழுதுபோக்காப் பேசிகிட்டு இருக்கறானேன்னு பார்த்தா, அந்த ஐயன், தன் வேலையை நம்மிடமே காட்ட ஆரம்பிச்சிவிட்டான் ..........

சங்கரசிவம்: அப்படிங்களா? என்ன கேட்டான், எதாச்சும் கடன், கிடன்.......

ரங்க: அட அது அல்லய்யா. ஊர் ஜனங்க ஞானமில்லாமே கெட்டுப் போறாங்களாம், அதனாலே ஒரு ஆறுமாசம் ராமாயணம் நடத்தணுமாம், செலவுக்கு நான் பணம் தரணும்னு அடிபோட்டான்.

சங்கர: கெட்டிக்காரனாச்சே அந்தப் பாப்பான்......

ரங்க: ஆமாம், நாம என்ன கொக்கா? சரி, சரின்னு கேட்டுகிட்டு, ஆமாம் சாமி! நடத்தவேண்டியதுதான்; ராமாயணம், புண்யம்தான்—நான்கூட எங்க கிராமத்திலே பாரதம் நடத்தி கிட்டு வர்ரேன், எல்லாச் செலவும் நானேதான் செய்யறேன்னு ஒரு போடுபோட்டேன்......

சங்கர: பாரதம் நடக்குதுங்களா........

ரங்க: பாகவதம் நடக்குது......ஆளைப் பாரு! அதான் நமக்கு வேலையா. சும்மா சொல்லி வைச்சேன்யா.....சொல்லவேதான், வாயை மூடிக்கிட்டுப் போனான்; அடே அப்பா! சர்வ ஜாக்ரதையா இல்லையானா நம்ம தலையிலே, மிளகா அரைச்சிட்டுப் போயிடுவானுகளே. தெரியாமலா பெரியவங்க சொன்னாங்க பிராமணா எமகாதகான்னு......

பணாபஹரண காண்டம்

கமலா: இவர்தான் ரங்கநாத முதலியார்—எங்க ஊருக்கே பெரிய சீமான்—பூமான்—தர்மவான்......

ரங்கநாதர்: ஐயயோ, ரொம்ப அடுக்கிக்கிட்டே போறிங்களே......உட்காருங்கோ ரெண்டுபேரும்......ஐயா! கணக்கப் பிள்ளை சங்கரசிவம், ஓடிப்போயி, கலரு வாங்கிட்டு சுருக்கா வா......நீங்க யாரு......

கம: இவ, என் ஸ்நேகிதி, சமூக சேவகி சாருபாலான்னு......

ரங்: தெரியாதுங்களே......சினிமா சினிமா பாக்கற பழக்கம் கிடையாது.....

கம: என்ன முதலியாரவாள்! அவசரப்பட்டுப் பேசலாமா...சாரூபாலா, யார் தெரியுமோ...இன்கம்டாக்ஸ் ஆபீசர் கோதண்டராம ஐயரோட பொண்ணு......

ரங்: அப்படிங்களா......மன்னிச்சுடுங்க......

சாரு: பரவாயில்லடி கமலா! என் டிரசைப் பார்த்து, சினிமா ஸ்டார்னு எண்ணிண்ட்டார்போல இருக்கு.....

ரங்: ஆமாங்க....இல்லிங்க....தப்பு தாங்க.....தோப்பனாரு சௌக்யந்தானுங்களே....இந்த ஊரிலே ரொம்ப நல்ல பேருங்க உங்க அப்பாவுக்கு......

சாரு: இங்கே என்ன! எந்த ஊரிலே அவர் வேலை பார்த்தாலும் அப்படித்தான்.......

ரங்: நெருப்புங்க, தப்புதண்டா செய்கிறவங்களைக் கண்டா....ஆமா.....சில பேர்களுக்கு, அவர் பேரேச் சொன்னாலே, சிம்ம சொப்பனந்தான்......

கம: அப்படித்தான் இருப்பார். ஆனா அவரோட மனசு தங்கம்......அது பழகினாத் தெரியும்......இப்ப, நம்ம சாரு, ஒரு காரியம் ஆரம்பிச்சிருக்கா, சம்பூர்ண ராமாயண காலட்சேபம் நடத்த ஏற்பாடு செய்திருக்கா.......

ரங்: ரொம்ப சந்தோஷம்ங்க.....எந்த இடத்திலே, எப்போ, என்னாலே ஆகவேண்டிய காரியம் என்ன, சொல்லுங்க, சங்கோசப்படாம......

கம: சத் காரியத்துக்குச் சங்கோசப் படுவாளோ! பாருங்கோ, இதிலே நான், என் தோப்பனாருக்கே விரோதமாக் கிளம்பிட்டேன். சாரூபாலா சொன்னா இந்தக் காலட்சேபம் சிலாக்கியமானதா இருக்கவேணும்னா, சித்ரகூட பாகவதர்தான் வரணும்னு எங்க தோப்பனார், இதுக்கு முன்னாலேயே, அவரை இங்கே வர வழைக்க ஏற்பாடு செய்துவிட்டாராம்; பார்த்தேன், சரி அவர் தருகிறதைவிட ஒரு ஐநூறு அதிகம் நாங்க தர்ரோம்னு தந்தி கொடுத்து அவரோட சம்மதத்தை வாங்கியாச்சி....அப்பாவுக்கு முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கறது.....

ரங்: ரொம்ப சாமர்த்தியமாத்தான் வேலை செய்திருக்கறிங்க...ஆமாம், ஐயாவுக்கு அதாவது நம்ம இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு ராமாயணம் ரொம்ப பிடிக்கும்ங்களா.....

கம: சொல்லேண்டி சாரூ! இவ தோப்பனாருக்கு, உயிர், ராமாயணம்னு சொன்னா....வனவாசம் போகிற கட்டத்திலே, கண்ணீர் தாரை தாரையாப் பொழியும்.....

ரங்: எனக்குக் கூடங்க, அந்தக் கட்டத்திலே, கைகேயி மேலே வர்ர கோபம், இவ்வளவு அவ்வளவுன்னு சொல்லி முடியாதுங்க.....ஆபீசரய்யா அடிக்கடி காலட்சேபம் கேட்க வருவாருன்னு சொல்லுங்க......

கம: வருவாராவா! நீங்க ஒரு பைத்தியம் முதலியாரவாள்! ஆரம்ப விழா வைபவமே, அவர்தான் செய்துவைக்கப் போறார்...

ரங்: பேஷாப் போச்சு போங்க.....


கம: சீதா கலியாணத்துக்கு யார் வர்ரா சொல்லுங்க பார்ப்போம்......

ரங்: யாருங்க......?

கம: நம்ம ராஜாஜீ!

ரங்: ஆஹாஹா! சிலாக்கியமான ஏற்பாடு! ராமா! ராமா! உன் பெருமையே பெருமை.

கம: பட்டாபிஷேகத்துக்குத்தான் நாங்க போட்டிருக்கிற பிளான் பலிக்குமோ பலிக்கதோன்னு தெரியல்லே.....உம்மோட சொல்றதிலே என்ன தப்பு, நம்ம கவர்னர் இருக்காரே......

ரங்: நம்ம கவர்னருங்களா, என்னங்க அவருக்கு.....

கம: அடடா! அவருக்கு ஒண்ணுமில்லே முதலியாரவாள்! அவரைத்தான் பட்டாபிஷேகத்துக்கு அழைக்கிறோம்.....

ரங்: அடா அடா! இதைச் செய்துட்டாப் போதுங்க, நம்ம ஊரே பூரிச்சிப்போகும்....

கம: செலவுதான் நிறைய ஆகும்.....பாருங்க, கன்னைய்யா செட்டியாரிடம் கதை கதையா இதைச் சொன்னோம், அந்தக் கர்மி நூறு ரூபா கொடுத்துவிட்டு, இன்னும் தொந்தரவு கொடுக்காதிங்கன்னு சொல்லிவிட்டான். சாரு: ஏண்டி! கமலா! சில பேர் கர்மிகளாத்தான் இருப்பா! ராம காரியத்துக்குத் தர மனசு வராது, இன்கம் டாக்சுக்குக் கொட்டிக் கொடுப்பா......

ரங்: என்னோட மனசு, பெரிசு......இப்ப காலம் கொஞ்சம் கஷ்டமானது.....

கம: எல்லோருடைய கஷ்டமும் போறதுக்குத்தானே ராமாயணமே......

ரங்: ஆமாமாம்!

கம: பகவானோட காரியத்துக்கு தயக்கமே இருக்கப்படாது......

ரங்: சந்தேகமென்னங்க....ஒரு இரநூறு எழுதிடட்டுங்களா.....

கம: உங்க இஷ்டம்......

ரங்: அதிகம் செய்கிறவன்தான் இப்ப கொஞ்சம் தொந்தரவு......எல்லாம் ஆபீசரய்யாவிடம்தான் இருக்கு நம்ம கணக்குப் புத்தகம் ஜாடாவும்......

கம: ராமனிருக்கார் போங்க உங்க பங்கிலே.....ஆபீசர் சத்யசந்தர்......பக்திமான்களிடம் பொகுப் பிரீதி......முன்னூறு எழுதுங்க......

ரங்: சரிங்க......தடை சொல்வேனுங்களா......... கணக்கப் பிள்ளே! மூணு.....ஆமாமாம்.....உள் அலமாரியிலே......கொண்டு வா...... கலர் சாப்பிடுங்க......