உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் பொன்மொழிகள்/கலைப் புரட்சி!

விக்கிமூலம் இலிருந்து

கலைப் புரட்சி!


கலை உணர்ச்சி!


கலை, ஓர் இன மக்களின் மனப்பண்பு; அவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம், ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே, கலை இனவளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும், விரிந்தும் வருமென்பதே, நுண்ணறிவின் துணிபு.

🞸🞸🞸

இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்ப வெட்பம் ஆகியவற்றிற்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும்.

🞸🞸🞸

தமிழ் இசை உணர்ச்சி பெருகி, வளர்ச்சியடைந்து வருகிறது. தன்மதிப்புப் பாடல்கள் தமிழகத்தில் பாடப்பட்டு பரவி வருகின்றன.

🞸🞸🞸

நாடகத் துறையிலேயும், நல்லதொரு மாறுதல், மறுமலர்ச்சி தோன்றிவிட்டது. நல்லறிவுப் பாதைக்கான நாடகங்கள், சூழ்நிலையால் பரிதவித்திடும் மனிதரைப் பற்றிய நாடகங்கள் நடிக்கப்படுகின்றன.

🞸🞸🞸

முத்தமிழ், நாடெங்கும் முழங்கப்படுகிறது. முத்தமிழ் தமிழர் வாழ்வும் வளமும் பற்றிய அக்கரை கொண்ட முறையில், துறையில், நல்ல வாழ்வுக்கான கருத்துக்களைப் பரப்பிடும் பணியில் பயன்படுத்தப் படு கின்றன என்ற செய்திகள் ஓரளவுக்கு மனமகிழ்ச்சியைத் தருகின்றன.

🞸🞸🞸

இன்று இசையரங்குகளிலே, தனி அரசு செலுத்திடும் தியாகராஜ கீர்த்தனங்களின் ஆரம்ப நிலை என்ன? எந்த அளவிற்கு அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன என்பதை எண்ணிப்பாருங்கள்.

🞸🞸🞸

தியாகராஜ கீர்த்தனங்கள் ஆரம்பத்தில் பஜனை மடங்களில் பாடப்படும் வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமே மதிக்கப்பட்டன - கையாளப்பட்டன.

நாளடைவில் காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை அவர்கள் அவற்றிற்கு இராகம், தாளம், பல்லவி முதலிய இசை அமைப்புக்களைப் பிரித்துப் பாகுபடுத்திப் பாடிக்காட்டினார் முதலில்.

நயினாப்பிள்ளை அவர்கள் செய்த மாறுதல் இசை துறையிலே மாறுதலை உண்டாக்கிவிட்டது! இதன் பின்னரே தியாகராஜ கீர்த்தனம் இசைவாணர்களின் திறமையை எடுத்துக்காட்டிடும் கருவியாகக் கையாளப்பட்டு வருகிறது.

🞸🞸🞸

இந்த முறையிலேதான், பயன் கருதிச் செய்யப் படும் எந்த மாறுதலும், மறுமலர்ச்சியும், அதற்கான முயற்சியும் ஆரம்பத்திலே தரம் தாழ்ந்தவைகளாகக் கருதப்பட்டாலும், அவை தரும் பயனுள்ள விளைவுகளால் பலவித நன்மைகள் நிச்சயம் ஏற்படுகின்றன.

🞸🞸🞸

இசைத் துறையிலும் பழமையை நீக்கிப் புதுமை எண்ணங்களையும், நல்வாழ்வுக் கருத்துக்களையும் புகுத்திப் பயன்படுத்தவேண்டும்.

🞸🞸🞸

ரேடியோவைத் திருப்பினால் ஏன் பள்ளி கொண்டீரையை ஸ்ரீ ரங்கநாதரே" என்பன போன்ற பாடல்களைக் கேட்கிறோம் அடிக்கடி. என்றோ படுத்து எழுந்திராத--எழுந்திருக்கவும் முடியாதவரைப் பற்றி ஆராய்ச்சியேன்? இதை விட்டு மக்கள் மனவளத்திற்கான பாதையிலே இசை வல்லுனர்கள்--இசை வாணர்கள் தம் திறமையைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.

🞸🞸🞸

நாடகத்தில் மறுமலர்ச்சி மிகமிக முக்கியமானது. நாட்டின் விழிப்புக்கு அது நல்லதோர் அளவுகோல், நாளை நாம் எப்படி இருப்போம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.

🞸🞸🞸

இயலிலும், இசையிலும் கருத்துரைகளைக் கேட்க மட்டுமே முடியும். நாடகத்திலேயோ, கருத்துரையைக் கேட்பதுடன் கருத்து விளக்கக் காட்சிகளைக் காணவும் முடிகிறது. எனவே நாடக மூலம், மனதை அதிகமான அளவுக்கு வசப்படுத்த முடிகிறது.

🞸🞸🞸

மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் போல நல்ல திறமை, நாடகத்தைக் காண்பவர்களை நடிகனின் உணர்ச்சி வயத்தவராக்கிவிடுகிறது.

🞸🞸🞸

அறிவு வளர, ஆர்வம் பிறக்க, மகிழ்ச்சி தோன்ற மக்களை நன்னெறியிலே புகவைக்க, நற்பண்புகள் உள்ளத்திலே குடிபுக--இப்படிப்பட்ட நற்காரியங்களுக்கு, முத்தமிழ் அதிலும் முக்கியமாக நாடகம், பயன் படல் வேண்டும் என்பது அடிப்படை உண்மை.

🞸🞸🞸

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் கையே தலையணையாய், கட்டாந்தரையே படுக்கையாய், காய்ந்த வயிரே தோழனாய்க்கொண்டு கஷ்டப்படும்--பாட்டாளி முன்பு, விறகு வெட்டி வேதனைப்பட்ட சத்தியவான், ராஜ்யமிழந்து சுடலைகாத்த அரிச்சந்திரன், பெற்ற குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள் இவர்களைக் காட்டி, எத்தகைய அறிவை வளர்க்க முடியும்! விதி--விதி என்று அவனை விம்மவைக்கத்தானே முடியும்.

🞸🞸🞸

நாடகம்; இன்று நள்ளிரவுச் சத்தமல்ல--நடையாலும், உடையாலும், விழியாலும், மொழியாலும், அரைத் தூக்கத்திலிருப்பவர்களுக்கு ஆனந்தம் தர முயற்சிக்கும், வெறும் ஆடல் பாடல் அல்ல! நாடகம், இன்று நாட்டுக்கு ஒரு நல்லரசனாக முன்வந்திருக்கிறது--துணிவுடன்.

🞸🞸🞸

இயல், இசை, நாடகம், மக்கட்கு அறிவு வளர ஆர்வமூட்ட அகமகிழ்ச்சி பிறக்க, நன்னெறியைக் காட்டப் பயன்படவேண்டும்.