அண்ணா சில நினைவுகள்/ஆண் நடிகை தேர்வு
“மாயவரத்தில் நீங்கள் ஒரு நாடகக் குழு அமைத்து, இயக்க நாடகங்கள் நடத்தி வருவதாகவும், அதில் பெண் வேடமிட்டு நடிக்கும் இரண்டு மூன்று நடிகர்களுக்கு நல்ல வேடப் பொருத்தமும் நடிப்புத் திறமையும் இருப்பதாகவும் அண்ணாஅவர்களுக்குச் செய்தி வந்திருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு காஞ்சிக்கு வருமாறு, அண்ணா உங்களுக்கு எழுதச் சொன்னார்கள். எப்போது வருகிறிர்கள்?”
இப்படி ஒரு கடிதம் எனக்கு வந்தது. நான் எப்போது நாடகம் எழுதினேன்? நடத்தினேன்? இரண்டுமே தவறு: அப்படியானால் அண்ணா சொன்னது தவறா? அதுவும் தவறில்லை! என்ன இது குழப்பம்?
மாயவரத்தில் தீ. ப. நாதன் என்று ஒரு தோழர், திராவிடர் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இன்றுள்ள பல தோழர்களுக்கு அவர் முன்னோடி. அவர் ‘பசி’ என்று ஒருநாடகம் எழுதி, இயக்கி, நடத்தினார். கழகத் தோழர்கள் பலர் நடித்தனர். நாடக அமைப்பில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. என்னிடம் வந்தார். நான் சில திருத்தங்கள் செய்து, கழகக் கருத்துகள் நிறைய இடம் பெறச் செய்தேன். சில பாடல்கள் எழுதினேன். மாயூரம் சவுந்தர் (மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு நிர்வாகியாகப் பின்னாளில் இருந்தவர்) இசையமைத்தார். நடிகர்கள் சொந்தக் குரவில் பாடினர். நண்பர் E. V. K. சம்பத் அவர்கள் தலைமையில் முதல் நாளும், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் இரண்டாம் நாளும் நாடகங்கள் நடத்தி, வெற்றியுடன் முடித்தோம்.
ஓ! இப்போது புரிகிறது! நண்பர் சம்பத் அவர்கள்தான் அண்ணாவிடம் இதுபற்றிக் கூறியிருக்கிறார். உடனே, ‘ஸ்திரிபார்ட்’ (பெண் வேடம்) நடிகர்கள் இருவர், வில்லன் நடிகர் ஒருவர், ஆக மூவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சி புறப்பட்டேன்.
தம்பி அரங்கண்ணல் அவர்களும், நண்பர் தில்லை வில்லாளன் அவர்களும், காஞ்சியில் அண்ணா வீட்டில் தங்கி, “திராவிடநாடு” இதழின் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றிய தருணம் அது. அண்ணா, வில்லாளனிடம் சொல்லி, எனக்குக் கடிதம் எழுதப் பணித்திருக்கிறார்கள்.
நேரே “திராவிட நாடு” அலுவலகம் சென்றோம். “வாங்கண்ணே! இவர்கள் மூன்றுபேரும் இங்கே தங்கட்டும். சாப்பாடு நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க வில்லை அழைத்துக்கொண்டு அண்ணா வீட்டுக்குப் போங்க!” என்றார் அரங்கண்ணல், ஈரோட்டிலிருந்து புறப்பட்டு ரயிலில் வந்து, விடியற்காலை அரக்கோணத்தில் இறங்குவதாக, சம்பத் அண்ணாவுக்குத் தந்தி கொடுத்திருந்தார். “இந்தாய்யா வில்லாளனும் நீயும் அதிகாலையில் நம் சுந்த்ர்வை எழுப்பிக் காரை எடுத்துக்கொண்டு, அரக்கோணம்போய், சம்பத் வருகிறான்; அழைத்து வாருங்கள். நான்ஸ் உன் நடிகர்களை ரிகர்சல் பார்ப்போம். சாப்பிடு!” என்றார்கள் அண்ணா.
சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) நாடகத்து உரையாடல் பகுதிகள் சில்வ்ற்றை அந்த நடிகர்களிட்ம் தந்து, மனப்பாடம் செய்து வைத்திருக்கச் சொன்னோம்.
அரக்கோணத்துக்குக் காலை 3 மணிக்கே சென்றுது; சம்பத்தை அழைத்துவந்தோம். “என்ன சம்பத்து, இது உங்கள் வேலையா? என்னை அசல் நாடகக் காரனாகவே ஆக்கிவிட்டிங்களா?” என்றேன் அன்புடன்,
“இல்லிங்க. அவுங்க ரெண்டுபேர் வேஷப்பொருத்தமும் நடிப்பும் உண்மையிலேயே பெண்கள் போலவே இருந்தது. அதைத்தான் அண்ணாவிடம் சொன்னேன்;” என்றார் சம்பத்.
மறுநாள் ஒத்திகை பார்க்கப்பட்டதும், “அவர்களை அனுப்பிவிட்டு நீ இரய்யா சம்பத்தும் வந்திருக்கிறானே!” என்றார்கள் அண்ணா. “இல்லேண்ணா லீவு இல்லை. நானும் போகிறேன்” என்று புறப்பட்டேன் அவர்களுடன்.
அந்த நடிகர்களைத் தம்முடைய நாடகங்களில் பயன் படுத்திக்கொள்ள எண்ணினார்கள் அண்ணா. ஆனால் நேரமின்மையால் அது நிறைவேறவில்லை. வில்லனாக நடித்த தோழர் கே. எம். ஷெரீப்-பின்னர் நண்பர் சம்பத் அவர்களிடமே கார் ஒட்டுநராக ஈரோட்டுக்குச் சென்றார். பெண்வேடம் (கதாநாயகி) தாங்கியவர் O. A. I. K. பாலு. இப்போதும் தஞ்சை மாவட்டம் ஆலத்தம்பாடி கிளையின் தி.மு.க. செயலாளர். வில்லியாகப் (Wamp) பெண்வேடம் புனைந்து, அருமையாக பாடி, நடித்தவர் யார் தெரியுமா? அப்போது அவர் பெயர் K.S. O. துரைராஜன். இப்போது புலவர் அறிவுடை நம்பி!