அண்ணா சில நினைவுகள்/இறால் மீனும் நெத்திலிக் கருவாடும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இறால் மீனும் நெத்திலிக் கருவாடும்

“செம்பொன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி மக்கள் தங்கள் உறுப்பினரான விளநகர் கணேச லுக்குப் புதிதாக ஒரு ஃபியட் கார் வாங்கி வழங்க இருக்கிறார்கள். அண்ணா, நீங்கள் நேரில் வந்து, அந்தக் கார் சாவியை அவரிடம் தரவேண்டுமாம் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் வேண்டினேன்.

அங்கே வர இப்ப ஏதய்யா நேரம்? ரெண்டாவது, இது ஒரு Bad precedent (கெட்ட முன் மாதிரி) ஆகப் போயிடும். நம்ம கணேசன்னு இப்ப வந்தா-அப்புறம் ஒவ்வொரு M. L.A. வும் தன் தொகுதியிலே கார் நிதி வசூல் தொடங்கிடுவாங்க எனத் தயக்கம் தெரிவித்தார் அண்ணா!

தவறான முன்மாதிரியா இருக்கக் கூடாதுதான்! ஆனா, கணேசனெப் பொறுத்தவரைக்கும், ஏற்கனவே ரொம்ப நாளா fiat கார் வச்சிருக்கார். அந்த அளவு தகுதி உள்ள பையன் என்பது உங்களுக்கே தெரியுமே, அண்ணா! எப்படியாவது அந்தப் பகுதியிலே ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரமாட்டீங்களா என்கிறதுதான் உட்காரணம் எங்களுக்கு! நான் கெஞ்சினேன்; வெற்றி!

நான் தேதி கேட்டு அண்ணா மறுத்ததாகச் சரித்திரமே இல்லை! உடனே சென்னையிலிருந்து மாயூரம் விரைந்து, கார் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

முதலமைச்சர் பொறுப்பேற்றதற்குப் பின்னர், அண்ணா மாயூரம் வருவதால், அரசு அதிகாரிகள் தம் வழக்கப்படி பயணியர் விடுதிகளில் இடம் வசதி செய்து, தங்குவதற்கான எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டனர். ரயிலில் வந்து அதிகாலை 2.15 மணிக்கு இறங்கினார்கள். அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர், C. M. எங்கே தங்குவார்கள் என்று. நான் சொன்னேன் இப்போதுள்ள வழக்கப்படி ஜி. ஆர். வீட்டுக்குத்தான் செல்லக்கூடும்: என்பதாக இறங்கியவுடன் கேட்டேன். “எங்கே அண்ணா போகிறோம்?” - “வழக்கப்படிதான்” என்ற பதிலும் புன்னகையும் வெளிவந்தன.

பிரமாதமான பொதுக்கூட்டத்தில் காரின் சாவியை கணேசனிடம் வழங்கினார்கள் அண்ணா. விழா அருமையாக அமைந்திருந்தது.

ஆனால் அடுத்த மாதம் நடந்த நிகழ்ச்சி என் மூக்கை உடைத்து விட்டது!? மாயவரம் தொகுதி மக்கள் தங்கள் எம். எல். ஏ. ஆன கிட்டப்பாவுக்கு ஒரு அம்பாசிடர் கார் வழங்கினார்கள். அதற்கும் அண்ணா அவர்களையே அழைத்தனர். ‘இது ஒரு தீய பழக்கமாகத் தொடரும்’ என அண்ணா தொலை நோக்குடன் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டதே! இருவரும் என் சொந்த உபயோகத்துக்குத் தங்கள் கார்களைத் தந்து உதவினார்கள் என்பது வேறு விஷயம். இருந்தாலும், இவை யாவும் அண்ணாவுக்குத் தர்ம சங்கடமான காரியங் களாகும் அல்லவா? அதற்கு நானும் கருவியாக இருந்தேனே!

இரவு செம்பனார்கோயிலிலேயே விருந்து, கணேசன் சார்பாக சேதுராஜா வீட்டில். இவர்கள் அண்ணாவுக்கும் வேண்டிய குடும்பத்தினர். ஊரிலுள்ள மீன்களையெல்லாம் வலை வீசிப் பிடித்து வந்து விட்டார்கள்! அண்ணாவுக்கு, இடது புறம் தில்லை வில்லாளன், வலது புறம் நான். ஏராளமான (Dishes) வகைகள். இறால் வறுவலின் மணம் மூக்கைத் துளைக்கிறது. வில்லாளனும் என்னைப்போலவே சாப்பாட்டுப்பிரியர்; ரசிகர்! அவர் “இந்த இறாலைவிட, அதில் போட்டிருக்கிற மசாலாதான் ரொம்ப ருசி, அண்ணா!” என்கிறார். நானோ என் இலையிலிருந்த இறால் மசாலாவைச் சாதத்தோடு நன்கு பிசைந்து, அண்ணாவின் இலையில் வைத்துச், ‘சாப்பிடுங்கள்’ என்கிறேன். நான் இறால் சாப்பிட்டால் என் வயிறு கோளாறு செய்யும் என்பதும் ஒரு இரகசியம்!

“சின்னச் சின்னதா இன்னொரு மீன் இருக்குமே முழுசா சாப்பிடற மாதிரி. அது என்ன?” — அண்ணா.

“அது சென்னா குன்னி” -வில்லாளன்.

“அது இல்லேய்யா-வெற ஒண்ணு. அது பேரு...”

“நெத்திலியா? (நெற்றிலியா?)” —இது நான்.

“ஆமா அதேதான்! அது கூட எனக்குப் பிடிக்கும்” என்று அண்ணா சொன்னதும் என் மூளையில் எழுதிக் கொண்டேன். இதை மட்டும்!

“தெற்குச் சீமையில் நல்ல தண்ணிரில் மிகச்சிறிய அம்பிர்ைமீன் கிடைக்கும். அதையும் முழுசாகச் சாப்பிடலாம். கடல் நீரில் நெத்திலி மீன் இருக்கும். பச்சையாக்வும், கருவாடாகவும் சாப்பிடுவார்கள்” என்று என் பரந்த அனுபவத்தைக் காட்டிக் கொண்டேன்.

ஐந்து நாட்களுக்கொரு முறை அலுவல் நிமித்தம் சென்னை செல்பவன் நான். அப்போதெல்லாம் நெத்திலிக் கருவாட்டை ஒரு காகிதப் பையில் நிரப்பி, நாற்றத்தை மறைக்கக் கருவேப்பிலைத் தழைகளை நிறையச் சுற்றி, மேலேயும் தாளைப் போட்டு, நன்கு சிப்பமாகக் கட்டி எடுத்துக் சென்று, அண்ணாவுக்கு அதாவது அண்ணியிடம் தருவேன்.

நெத்திலித் தருவாட்டில் எத்தனையோ ரகம் உண்டு டியூர்தரமான முதல் நிலைக்கருவாடு பொன்னிறமுள்ளது. இதைத் தேர்ந்தெடுத்து எனக்கு வாங்கித் தர இருவரைக் கண்டு பிடித்தேன். விளநகர் கணேசன் ஒருவர்; மற்றொருவர் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக உள்ள ரங்கநாதன். இவர் எனக்கும், என் நண்பர் பயணச்சீட்டுப் பரிசோதகர் குணசேகரனுக்கும், கோடிக் கரையில் பயங்கர மான மீன் விருந்து படைப்பவர்.

ஒரு நாள் ரயில் தாமதமாகி, நான் அண்ணாவீடு சென்றபோது, நள்ளிரவு நேரம். டாக்சியை நிறுத்தி விட்டு மேலே சென்றேன். அண்ணா படுத்திருந்தார்கள். அவர் களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி அண்ணியாரிடம் கருவாடு பார் சலைத் தந்து விட்டுத் திரும் பியபோது, ஆள்அரவங்கேட்டு, “யார்?” என்றார்கள் அண்ணா. “நான்தானண்ணா, கருணானந்தம் கொஞ்சம் நெத்திலிக் கருவாடு கொண்டாந்தேன்.”

“வேண்டாய்யா. என்னாலே சாப்பிடவே முடியலியே. இது எதுக்கு இனிமே?” என்ற குரலில் வேதனை கலந்த சோகம்இழைந்தது. அதற்குப் பிறகு என்னென்ன நிகழ்ந்து விட்டன! நான் நெத்திலிக் கருவாடு வாங்குவதை மட்டு மல்ல-அண்ணாவின நினைவாக நெத்திலி மீனோ, கருவாடோ—சாப்பிடுவதையும் விட்டுவிட்டேன்!