அண்ணா சில நினைவுகள்/மூன்று சொற்கள்-இரண்டு மணி நேரம்

விக்கிமூலம் இலிருந்து
மூன்று சொற்கள்—இரண்டு மணி நேரம்!

‘மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, மணிப்பூ ஆடை போர்த்திக் கருங்கயல் கண்விழித்து, ஒல்கிக் காவிரி நடந்து வரும் மயிலாடுதுறை நகராட்சி மன்றம் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. மாநிலத்தி லேயே இவை மேனிலையிலிருந்த காலமும் உண்டு. கிட்டப்பா இங்குதான் படிப்பை முடித்தார். என் பிள்ளைகள் எல்லாருமே இங்கே பயின்றனர். தமிழாசிரியர் சிவானந்தம் எனக்கு நண்பர்.

அவருடைய ஆர்வத்தால் அண்ணா அவர்கள் அந்தப் பள்ளியின் இலக்கிய மன்றத்தில் ஒருநாள் சிறப்புச் சொற்பொழிவாற்றிட ஏற்பாடு செய்தோம். மாலை நேரம். மாணவர் தவிர பொதுமக்கள் கூட்டம் ஏராள மாக இருக்கு மென எதிர்பார்த்து வெளியேயும் ஒலி பெருக்கிக் குழாய்களை அமைத்திருந்தனர். நான்கூட வெளியில் நின்றே கேட்டேன்; இலக்கியக் கூட்டந்தானே. எல்வளவு நேரம் அண்ணா பேசப்போகிறார்—என்று எண்ணி,

“கல்லூரியிலோ பள்ளியிலோ கற்கும் மாணவர்கள் நேரிடையான அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசியலைப் பாடமாகக் கற்கலாம். இளமையில் கல் என்று சொன்னது, கற்கச் சொன்னதே தவிரக் கல் எடுக்கச் சொன்னது அல்ல! அந்தக் “கல்” என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த ஒரு குறளைப்பற்றி இன்று பேச எண்ணுகிறேன்” என்று தொடக்கத்திலேயே பேச்சில் கனமும் கம்பீரமும் குடும் சுவையும் பிசைந்துதரவே, நீண்டநேரக் கையொலிக் குப் பின் ஊசி விழுந்தால் கேட்குமளவு மவுன நிலை. கூட்டமும் எள் போட்டால் கீழே விழாத அளவு நெருக்கம்.

“மாணவர்கள் திருக்குறளைக் கற்கவேண்டும். அதில் என்ன இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதை விடத் திருக்குறளில் இல்லாதது ஏதுமில்லை என்று சொல்வது தான் எளிது. அப்படிப்பட்ட ஒர் ஒப்பற்ற-அப்பழுக்கற்ற -முழுமை பொருந்திய அறநூல் அது. இலக்கியத்திலும், அது ஈடும் எடுப்பும் இல்லாத பேரிலக்கியம். இவ்வளவு சிறந்த நூலை எளிதாக நாம் கற்கவேண்டும் என்பதற் காகவே இரண்டு அடிகளிலே இயற்றிச் சென்றார் திருவள்ளுவர். இரண்டு அடிகளுங்கூட, முழுமையான அடிகளல்ல! ஒண்ணே முக்கால் அடியில் அடங்கும் ஏழே ஏழு சீர்கள்—ஏழு சுரங்களைப் போல!

குறளின் மேன்மையை ஒவ்வொரு பாடலுமே தனித் தனியே விளக்கிக் காட்டும் என்றாலும், இப்போது உங்களிடத்திலே நான் ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்துக் காட்டிட எண்ணுகிறேன்.

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இதிலே, கற்க என்கிறார். அதாவது கல்வியைக் கற்க வேண்டும். சரி, கல்வியைக் கற்கிறோம். எப்படிக் கற்க வேண்டும்? கசடறக் கற்க, என்கிறார். கசடு என்றால் என்ன? குற்றம், பிழை. சரி, கசடு அறக் கற்கிறோம். எதைக் கற்க வேண்டும்? கற்பவை கற்கவேண்டும். கற்கத் தக்கவை.கற்கத் தகாதவை என்று நூல்களை இரண்டாகப் பகுத்துக்கொண்டு கற்கத் தக்கவற்றை மட்டும் கற்க வேண்டும். அதிலும் கசடு அறக் கற்கவேண்டும்.”

அண்ணா இந்த இடம் வருவதற்குள் ஒருமணி நேர்ம் கடந்துவிட்டது. அடுத்து அண்ணா தேரழுந்தூர் பொதுக் கூட்டத்துக்குப் போயாக என்ற தவிப்பு எங்களுக்கு. ஆனால் அண்ண்ாவின் சொன் மாரி தொடர்ந்து பொழிகிறது!

கற்க
கற்பவை கற்க
கசடறக் கற்க
கற்பவை கசடறக் கற்க

அடுத்த ஒரு மணி நேரத்திலும் கற்க—கசடற—கற்பவை— இந்த மூன்றே மூன்று சொற்களுக்கு மட்டுந் தான் விளக்கம் தர அண்ணாவால் முடிகிறது; அதுவும் ஒரளவு! “மீதியிருக்கும் நான்கு சொற்களுக்கும் இன்னொரு தடவை வரும் போது விளக்கம் சொல்வேன்” என்று, அண்ணா தம் பேருரையை முடித்து, வெளியில் வந்தார்கள்.

பெரிய வாடகைக் கார் ஒன்று அப்போது அமர்த்தி யிருந்தார் கிட்டப்பா, நாங்கள் அதைத் தேர் என்போம். அதில் ஏறிப் புறப்பட்டதும்-“நீங்க யாரிடத்தில் அண்ணா தமிழ் தனியாகப் படிச்சிங்க?” என்றேன்.

“நீ ஒண்ணு! எனக்குத் தனியாத் தமிழ் படிக்க எங்கேய்யா வசதியிருந்தது? நானே படிச்சி நானே சிந்திச்சுப் பார்க்கத்தான் நேரமிருந்தது. ஆழமா, அகலமாப் படிச்சா, எல்லா இலக்கியத்தையும் நாமே புரிஞ்சுக்கலாமே! ஆனா, இந்தத் திருக்குறளே தனி! திருவள்ளுவர் எவ்வளவு வருடம் கஷ்டப்பட்டிருப்பாரோ, தெரியல்லே? ஒவ்வொண்ணையும் எழுத, அல்லது ஒவ் வொரு சொல்லையும் அந்த இடத்திலே பொருத்த, அவர் நாள் கணக்கிலே சிந்திச்சிருக்கோணும்! எழுதினவர் பட்ட பாட்டை நினைக்கும்போது, அதை எடுத்துச் சொல்ற நமக்கு ஏது இதில் தொல்லை?” என்றார் அண்ணா.

இவற்றையெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்தேன். உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்குத் திரு கி. வேங்கடசுப்பிரமணியன் என்னிடம் கவிதை கேட்டார். திருக்குறளின் துணையால், சொற்பப் படிப்புள்ள நாட்டுப்புறத்தான் ஒருவன், எல்லா வகையான பிரச்னைகளுக்கும், நன்முறையில் அனைவரும் ஏற்றுப் பாராட்டத்தக்க தீர்வு வழங்கினான் என்பதாக—ஒரு மர்மக் கதைபோல எழுதியிருந்தேன்.

கருத்து நன்கொடை அண்ணாவின் இந்தச் சொற்பொழிவுதான்!