அண்ணா சில நினைவுகள்/முதலமைச்சர் சினிமா பார்க்கலாமா?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
முதலமைச்சர் சினிமா பார்க்கலாமா?

ன்னை நாராயணசாமி மாமாவின் தம்பி நடன சிகாமணியின் மகள் கண்ணகி திருமணம் மன்னார்குடியில், அண்ணா தலைமையில். அப்போதுதான் முதலமைச்சர் பொறுப்பேற்றுச் சில வாரங்கள் ஆகியிருந்தன. திருமணத்துக்கு முதல் நாள் மதுரையில் ஏதோ ஒர் அரசு நிகழ்ச்சி. அங்கு சென்றிருந்து, அண்ணாவை அழைத்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் மன்னார் குடி வந்து சேர வேண்டிய பெருங்கடமை என் தலையில் சூட்டப்பட்டது. எனக்குத் துணையாகத் தஞ்சை நண்பர் வழக்கறிஞர் சாமிநாதன், அவருடைய பியட் காரில்.

இருவரும் சாவதானமாகப் புறப்பட்டு மதுரை போய்ச் சேர்ந்தோம். அண்ணா முற்பகலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது சந்தித்தேன். வந்த வேலை யைச் சொன்னேன். “சரி சரி, வா. இங்கே மாலையில் ஒன்றும் function இல்லை. அதனால் இப்போது சாப்பிட்டதும் புறப்பட்டு, நாம் திருச்சி போய் ஒய்வெடுத் துக் கொள்ளலாம். நாளை அதிகாலை புறப்பட்டால், மன்னை திருமணத்துக்கு நேரத் தோட போயிடலாம்” என்று திட்டம் தந்தார்கள் அண்ணா. “எல்லாம் சரி யண்ணா! திருச்சியில் ஒய்வெடுக்கலாம். ஆனால் எந்நேர மானாலும், இரவு தங்குவதற்கு மன்னார்குடிக்கு வந்து விடச் சொன்னார்கள்!” என்றேன். இந்தத் தந்திரம் அண்ணாவிடம் பலிக்குமா? “நீ பேசாமே எங்கூட வாய்யா, பாத்துக்கலாம்” எனக் கூறி என் வாயை அடைத்து விட்டார்கள்.

திருச்சி சென்றடைந்தபோது மாலை 5 மணியிருக்கும், சர்க்கியூட் அவுசில் தங்கவில்லை. பொதுப்பணித்துறையின் பயணியர் விடுதியில் தங்கினார்கள். தயாராக அங்கிருந்த அன்பிலைத் தனியே கூப்பிட்டு “பிளாசா தியேட்டரில் என்ன படம்? போய்ப்பார்த்துத் தெரிந்துகொண்டு, டிக்கட் வாங்கி வா, மாலைக் காட்சியே பார்க்கலாம்” என்று ரகசியமாகச் சொன்னார்கள். மகிழ்வோடு விரைந்து சென்று அதைவிட மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். “இப்போதே போனால் சரியாயிருக்கும் அண்ணா” என்று அவசரப்படுத்தினார். “இப்ப வேணாய்யா, வெளிச்சமா யிருக்கு. லைட்டெல்லாம் ஆஃப் செஞ்சி, படம் ஆரம்பிச்சப்புறம் போகலாம்” என்று சொல்லி விட்டார்கள்.

அதேபோலக் காவலர் பரிவாரங்கள் இல்லாமல், மிக அமைதியாகத்தான் இருளில் உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். இடைவேளைவிட்டு, விளக்குகள் எரியத் தொடங்கின. எப்படித்தான் மக்கள் தெரிந்துகொண்டார் களோ? இங்கே வந்து குழுமிவிட்டனர் எல்லாரும்! வணக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. வசதிக்காக இடைவேளை நேரம் அதிகரிக்கப்பட்டும், மக்கள் திரும்பி அவரவர் இருக்கைக்குச் செல்வதாகத் தெரியவில்லை. அன்பில் வெளியே சென்று தியேட்டர் மானேஜரைப் பார்த்துப் படத்தைத் தொடரச் செய்தார். ஒருவழியாக அமைதி வந்தது.

நான் அண்ணாவைப் பார்த்து ஒரேயடியாகச் சிரித்தேன். “என்னய்யா இப்படிச் சிரிக்கிறே!” என்று கேட்டார்கள். “பின்னே என்னண்ணா? ஒரு முதலமைச்சர் இப்படித் தியேட்டரில் சினிமா பார்க்க வந்துவிட்டாரே! என்று மக்கள் உங்களைப் பற்றித் தவறாக நினைக்க மாட்டார்களா?” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு. “நீ அப்படி ஏன்யா நெனக்கிறே? நம்ம அண்ணா, என்னதான் முதலமைச்சரானாலும், பந்தா இல்லாமே, நம்மோட வந்து உக்காந்து தியேட்டரில் சினிமா பாக்கிறாரேண்ணு நம்மைப் பத்தி உயர்வா தான்யா நெனப்பாங்க. என் சுபாவமும் நான் நிறையச் சினிமா பாக்கிற வழக்கமும், எல்லாருக்கும் தெரிஞ்சது தானேய்யா!” என்றார் அண்ணா.

“ஆமாண்ணா. நீங்க சொன்னதும் சரிதான், யாரும் ..உங்களெப் பார்த்து அருவருப்பு அடையலெ. எவ்வளவு எளிமையா, நம்ம உட்காரக்கூடிய அதே வகுப்பிலே உக்காந்து, முதலமைச்சர் என்பதை மறந்துட்டு, மக்க ளோட மக்களா இருக்காரேங்குற மகிழ்ச்சிதான் இவுங்க முகத்திலே தெரியுது! ஆனா, இதுக்காக நீங்க பழைய மாதிரியே அடிக்கடி படம் பாக்கப் போயிடாதீங்க!” என்ற வேண்டுகோளுடன் பேச்சை நிறுத்திக் கொண்டேன்.

மக்கள் கூட்டத்தைச் சமாளிக்கும் எண்ண்த்தில், படம் முடிவதற்கு முன்பே தியேட்டரை விட்டு வெளியேறி னோம். நேரம் நின்றய இருந்ததால் அண்ணாவுடன் பல்வேறு செய்திகளை ஓய்வாகப் பேசக்கூடிய நல்வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது இரவில்.

‘இரவு திருச்சியில் தங்கியுள்ளோம். காலையில் சீக்கிரம் அண்ணா அவர்களைப் பயணப்படுத்தி அழைத்துக் கொண்டு, கட்டாயம் திருமணத்துக்காகக் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு முன்னதாக வந்து விடுகிறேன்’ — என்று மன்னார்குடிக்குச் செய்தி அனுப்பிவிட்டு, நிம்மதியாக உறங்கினேன்.

வார்த்தையைக் காப்பாற்றினார்கள் அண்ணா! அப்போதெல்லாம் காலையில் விரைவாக எழுந்திருப்பது, தினமும் முகச்சவரம் செய்து கொள்வது, குளிப்பது, சல்வை உடைகளை அன்றாடம் தரிப்பது, தலைவாரிக் கொள்வது போன்ற புதிய பழக்கங்கள் அண்ணாவிடம் ஏற்பட்டிருந்தன. இவ்வளவையும் ஒழுங்குற நிறைவேற்றிய பின்ன்ர், காலத்தைத் தவறாமல், மன்னார்குடி போய்ச் சேர்ந்து, அனைவ்ரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினோம்.