உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா சில நினைவுகள்/எழும்பாத மதிற்கவர்

விக்கிமூலம் இலிருந்து
எழும்பாத மதிற்சுவர்!

1956-ல் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக இரண்டாவது மாநில மாநாடு பல வகையிலும் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். தி.மு.க. தேர்தலில் நிற்கும் முடிவு அங்குதானே மேற்கொள்ளப் பட்டது. அதனால் மட்டுமல்ல. பந்தலை இரு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியில் பகல் நிகழ்ச்சிகள்; மேடையின் மறுபுறம் இரவில் நாடகங்கள். இவ்வளவு வசதியான பெரிய இடம் வேறெங்கும் கிடைத்ததில்லை.

திருவாவடுதுறை நாதசுரச் சக்கரவர்த்தி டி. என். ராஜரத்தினம் அவர்களின் நாயன இசையும், சிதம்பரம் இசைச்சித்தர் சி. எஸ். ஜெயராமன் அவர்களின் தமிழிசை யும் வேறெங்கும் நமது மாநாட்டில் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. கலைவாணரின் வில்லிசையும் இங்கு இருந்தது. ஆனால் அவர் நம்முடைய வேறு சில மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். நான்கு நாட்களும் பெரு விழாக்களே.

ஈ. வெ. கி. சம்பத் திராவிட முன்னேற்றக் கழத்தி விருந்து விலகப் போவதாக (அப்போதே) ஒரு வதந்தி பரவியிருந்தது. அத்தருணத்தில், அவரது அத்யந்த நண்பரான கவிஞர் கண்ணதாசன், திருச்சிக்கு வலிய வந்து, அண்ணாவிடம், தன்னைக் கழகத்துக்கு அழைத்து வந்த கலைஞரைப் பற்றி ஏதோ கோள் மூட்டிவிட்டு, உடனே காரைக்குடி போய்விட்டார். அதை நம்பியதாலோ என்னவோ, அண்ணா சில நாட்கள் திருச்சியில் கலைஞரிடம் பேசாமல் இருந்து வந்தார். ஆனால் இது வேறு யார்க்கும் தெரியாது. காரணம் திருச்சி மாநாட்டுப் பணிகளைக் கவனிக்கக் கலைஞரும் முன்கூட்டியே வந்து தங்கி யிருந்து, தினமும் அண்ணா இருக்கும் பங்களாவுக்கு வருவார். தான் பொறுப்பேற்று ஆலோசனை வழங்கிய கண்காட்சிக்கான அலுவல்களைப் பார்த்து, ஒவியர்களிடம் வேலை வாங்குவார்.

அண்ணா எப்போதும் அறிவியலின் அடிப்படைகளிலே அமையக் கூடிய ஓவியக் கலைக் காட்சியில் மிகுந்த அக்கறை காண்பிக்கும் வழக்கம் உள்ளவர். அங்கும் அப்படித்தான். தமது கற்பனையில் உதித்த புதியதொரு ‘ஐடியா’வைச் செயலாக்க, என்னுடைய பணியை விரும்பி னார். பந்தலைச் சுற்றிலும் நான்கு புறமும் பனைமரங் களை நட்டு, ஆறடி அகலமுள்ள சணல் கேன்வாஸ் துணி களை நீளமாக அவற்றின்மீது சுற்றி, அது ஒரு கோட்டை மதிற்கூவர் போல் காட்சியளிக்க வேண்டுமாம். நிறையப் பனைமரங்களைத் துண்டு போட்டுக் கொண்டு வருமாறு அன்பில் தர்மலிங்கத்திடம் சொல்லியிருந்தார். கேன்வாஸ் படுதாக்களை ஏராளமாக வாங்கி வர எம். எஸ். மணியிடம் சொன்னார் ; அவை மட்டும் முன்னதாக வந்துவிட்டன! பலவிதமான கலர் பவுடர்களை எடுத்துத் தனித்தனியே கரைத்துத் தரச் சொன்னார் ஓவியர்களை, அண்ணா வோடு வந்திருந்த சிறுவன் C. N. A. இளங்கோவன் எனக்குத் துணை. இளங்கோவும் நானும் பிரஷ்களை வர்ணத்தில் தோய்த்துக் கையை அசைத்து அசைத்து அந்தப் படுதாக்களில் துளித் துளியாகத் தெளிக்க வேண்டும் (Hand Spray). புள்ளி புள்ளிகளாகப் பல நிறங்களில் அவை விழுந்து, தூரத்திலிருந்து பார்த்தோமானால், கற்சுவர் போன்றே தோன்றும்! அண்ணா முதலில் செய்து காட்டி னார்கள். எங்களால் இயன்றது தினமும் கை ஒயும் வரை வர்ணம் தெளித்துப், படுதாக்களைக் காயவைத்து, அன்றாடம் மாலையில் அவற்றைச் சுருட்டி வைப்பது! இப்படியாக நாங்கள் இருவருமே பல நாட்கள் முயன்று, சில நூறு அடிகள் நீளமுள்ள ‘மதிற்சுவர்கள்’ தயாரித்தோம். ஆனால் யார் பனைமரங்கள் கொண்டு வந்து நடுவது? எங்களால் ஆகுமா?

பனைமரங்கள் பந்தலுக்கு வந்து சேரவில்லை! அண்ணா கடுமையாக அன்பிலிடம் கோபங் கொண்டார். முதல் நாள்தான் வந்து ஜேர்ந்தன. அந்த மரங்களையும் பந்தலைச் சுற்றி நட்டால் அல்லவா அவற்றின் மீது படுதாக்களை இழுத்துக் கட்டி ஆணி அடிக்க முடியும்? தனது ஆசை தோல்வியுற்றதோ என எண்ணி அண்ணா ஆயாசங் கொண்டார். கடைசியில் என்ன செய்ய இயன்றது தெரியுமா? ஒவியக் கலைக் கூடத்துக்குச் செல்லும் வழியில் அந்தப் படுதாக்களைச் சும்மா கட்டச் செய்தோம்! வீணாகிப் போன இந்த வேலையை, விடாமல் நான் செய்ததன் பயன்? வலது கையில் பொறுக்க வொண்ணா வலி ஏற்பட்டுப், பிறகு, சென்னை சென்று கலைஞர் வீட்டில் தங்கி நீண்ட நாள் சிகிச்சை செய்ய நேரிட்டதுதான்! இன்னும் அந்தப் பாதிப்பு நீடிக்கிறது.

மாநாட்டில் டிக்கட் விற்கும் வேலையை நான் துவங்கி யதும் திருச்சியில்தான். அங்கு மட்டும் எங்களுக்கு கே. கோவிந்தசாமி தலைவர். அடுத்த அனைத்து மாநாடு கட்கும், டிக்கட் கவுண்ட்டர் தலைவர் நானே!

எங்கள் கவுண்ட்டருக்கு ஒருமுறை அண்ணா வருகை தந்தது எனக்குப் பெருமையாயிருந்தது. இங்கிருந்துதான் மாநாட்டின் கடைசி நாள், ஒட்டுச் சீட்டுகள் பார்வையாளர்களுக்குத் தந்தோம். அதாவது தி.மு.க. தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்பதற்கு ஒரு பெட்டி-நிற்க வேண்டாம் என்பதற்கு வேறொரு பெட்டி-மாநாட்டுக்கு வருகை புரிந்தோர், ஜனநாயக முறையில் சீட்டுகளைப் பெட்டியில் போட்டுத், தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். மிகப் பெரும்பான்மையான மக்கள், தி.மு.க. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினர்!