அண்ணா சில நினைவுகள்/கன்வென்ஷனும் கம்ப்பல்ஷனும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
“கன்வென்ஷனும் கம்ப்பல்ஷனும்”

ஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் திராவிட மாணவர் கழகத்தின் இரண்டாவது மாகாண மாநாடு 1946 பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெற்றது. இதன் வரவேற்புக் குழு பொருளாளர் நான். முதல் மாநாட்டை நாங்கள்தானே கும்பகோணத்தில் நடத்தினோம்! அப்போது நாங்களே அழைக்காத அய்யா, இந்த மாநாட் டில் கலந்துகொண்டார்கள். வழக்கம்போல் அண்ணா வந்திருந்தார். சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர், தமிழாசிரியர் இராசாக்கண்ணனார் பங்கேற்றனர்.

உள்ளுர் மாணவத் தலைவர் சரவணன் பி.ஏ. இவர் பெரியாரின் அன்பர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் அவர் களின் சீடர். சரவணன் வீட்டில் அண்ணாவைத் தங்க வைத் திருந்தோம். மாநாடு துவங்குவதற்கு முன்பு, அண்ணாவை அழைத்து வரப் போனேன். காலைச் சிற்றுண்டி முடிந்தது. ‘இதோ வந்துவிட்டேன்’ என்று அண்ணா புறப்பட்டார்.

“என்னண்ணா இது-வெள்ளை ஜிப்பாவோட வர் lங்க? கருப்புச் சட்டை எங்கே?” என்றேன்.

“இங்க ஏன்யா கருப்புச் சட்டை? இது மாணவர் மாநாடுதானே?” என்றார் கள்ளங் கபடமற்ற மனத் துடன் அண்ணா.

“சரியாப்போச்சி. வம்புதான் போங்க. அய்யா மேடையிலிருக்கறப்போ, கருப்புச் சட்டை இல்லாதவுங்க, அங்க ஏறவே முடியாதே!"

“இதான் எனக்குப் பிடிக்காத சங்கதி! திருச்சி மாநாட்டில என்ன தீர்மானம் போட்டோம்? கருப்புச் சட்டைப் படைன்னு ஒரு வாலண்ட்டியர் படை அமைக் கிறதாத்தானே! உன்னைத்தானே அதுக்கு அமைப் பாளராப் போட்டார் அய்யா. மேடைப் பேச்சாளரும் கருப்புச் சட்டை போடணும்னு தீர்மானம் போட்டோமா?” -அண்ணா கேள்வியில் சிறிது வெறுப்பும் உணர்ந்தேன்.

நான் அமைதியான மெல்லிய குரலில் அது சரிண்ணா! நம்ம அய்யா வழக்கப்படி (Resolution) தீர்மானத்தை விட, அதற்கு மேம்பட்ட வழக்கத்துக்கு, அதாவது கன்வென்ஷனுக்குதானே (Convention) மதிப்பு அதிகம் என்றேன்.

“போய்யா-இது கன்வென்ஷன் இல்லே, கம்ப்பல்ஷன். (Compulsion) விருப்பத்துக்கு விரோதமா கட்டாயப் படுத்துறதுதான்! ஆனாலும், இப்ப எங்கிட்ட கருப்புச் சட்டையில்லியே; நான் மேடைக்கி வராம இருந்துடறேனே!” என்றார். “அய்யய்யோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க அண்ணா! சரவணன்! உங்க கருப்புச் சட்டையில ஒண்ணு குடுங்க!” என்று அவரிடம் ஒடினேன். “எங்கிட்ட காலர் வச்ச சட்டை,தானே இருக்கு. பரவாயில்லையா?” என்று எடுத்துத் தந்தார்.

வெற்றி எனக்குதான். அண்ணா புதிதாகக் காலர் வைத்த கருப்புச் சட்டையுடன் மேடையில் தோன்றி யதைப் பலரும் வியப்புடன் கண்டு களித்தனர்.

பெரியாரின் உளப்பாங்கைப் புரியாதவரா அண்ணா? இதற்கும் அடுத்தபடியாக, மே திங்கள் 11, 12 நாட்களில் மதுரையில் கருப்புச் சட்டைப் படையின் முதல் மாநில மாநாட்டை அண்ணாதானே திறந்து வைத்தார்? அங்கு தானே வைத்தியநாதய்யர் கும்பல், தீ வைத்துப் பந்தலைக் கொளுத்தி, மக்களையெல்லாம் குண்டர்களை விட்டு அடிக்கச் சொன்னது? இதன் தொடர்பாகத்தமிழகம் முழுதும் திராவிடர் கழகக் கொடிகளை அறுத்துக் காங்கிரசார் கலவரம் விளைத்தனரே!

இதனால் ஓய்ந்தா போனோம். இதற்கும் மறுவாரமே கும்பகோணத்தில் இரண்டு நாள் மாநாடு; ஆசைத்தம்பி தலைமையில். அண்ணா காலில் ஒரு சிரங்குக் கட்டியோடு மாநாட்டில் பங்கேற்றதுடன், இரு இரவுகளிலும் நோயைப் பொறுத்துக் கொண்டு “சந்திரோதயம்” நாடகமும் “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகமும் நடத்தினார். காகபட்டர் வேடம் புனைந்து உட்கார்ந்தபடியே சமாளித்தார். சிவாஜிகணேசன் சிவாஜி வேடம் ஏற்றிருந்தார். இங்குதான் பெரியார் அவர்கள் இன்னும் சிலபேர் நம்மில் கருப்புச் சட்டை அணியக் கூச்சப்படுகிறார்கள். வெள்ளைச் சட்டை அணியும் குள்ளநரிகள் என்று அவர்களைச் சொல்லுவேன்” என்று கண்டனம் தெரிவித்துப் பேசினார். இது அண்ணா வைக் குறிப்பிடத்தானோ- என்பதாக எங்களில் பலருக் கும் அய்யமுண்டு!

1948-ல் காந்தியார் சுடப்பட்டதன் விளைவாகக் கருப்புச் சட்டைப் படையை ஒமந்துரார் ஆட்சி தடை செய்தது. (அமைப்பாளர் என்பதால் என்னைக் கூடப் போலீசார் தேடினார்கள்.) அப்போது அண்ணா என்ன செய்தார் தெரியுமா? பகலிலும் இரவிலும், தொடர்ந்து கருப்புச் சட்டை அணிந்திருந்தார். இடுக்கண் வந்துற்ற போது தடுக்கி விழாமல் மிடுக்குடன் நின்றார் அடுக்கு மொழி வேந்தர் அண்ணா!