உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா சில நினைவுகள்/ஒரே இரவில் சிதம்பர ரகசியம்

விக்கிமூலம் இலிருந்து
ஒரே இரவில் சிதம்பர ரகசியம்

1957-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தல்லவா? அதன் பிறகு சிதம்பரத்தில் ஒர் இடைத் தேர்தல் வந்து விட்டது. அதில் தி. மு. க. சார்பாகப் புலவர் ஆறுமுகம் போட்டியிட்டதாக எனக்கு நினைவு! தில்லை வில்லாளன் தேர்தல் பணிகளுக்கு முழுப் பொறுப் பேற்றுத் தொண்டாற்றினார். தேர்தலுக்குச் சில நாட் களிருக்கும் போது ஏதோ முக்கியமான செலவுக்குச் சிறிது பொருள் தேவைப்பட்டது போலும் சென்னையிலிருந்த அண்ணாவிடம் தொலைபேசி மூலம் அவர் அது பற்றிப் பேசினார்.

சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மூன்றாவது மாநாடு அப்போது S. T. A. A. திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தத்துவமேதை டி. கே. சீனிவாசன் இங்கே தலைமையுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார். புதுமையான அமைப்பாகத் தலைவர்கள் அமரும் மேடையிலிருந்து சற்று முன்புறம் தனியே வந்து, அங்குள்ள மைக்கில் பேசவேண்டும் அவ்வாறு அவர் பேசுகிறார். புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள் அப்போதுதான் மேடைக்கு வந்து அமர்கிறார்! அவரைக் கண்டதும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய் இன்றனர்! தலைவருக்குத் தன் பின்னால் நடப்பது என்ன என்பது முதலில் புரியவில்லை! திரும்பிப் பார்க்கிறார்; தன்னுடைய உரை பிடிக்காமல் கைதட்டுகிறார்களோ என்று! உண்மை அறிந்ததும், கோபங்கொண்டு, தொடர்ந்து பேசாமல், போய்த் தனது இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்! அவரைச் சமாதானம் செய்து பேச்சைத் தொடருமாறு சொல்கிறார்கள் அண்ணாவும் கலைஞரும். இந்தப் பரபரப்பான சூழ்நிலைக்குள், அண்ணா ஆட்பட்டிருந்த போதுதான் சிதம்பரத்திலிருந்து Trunk call வந்து அண்ணாவுடன் வில்லாளன் பேசிப் பணம் கேட்கிறார்?

அண்ணாவும் கலைஞரும் மேடையின் விலாப்புறம் சென்று கலந்து பேசுகிறார்கள். பிறகு என்னை அழைத்து வரச் சொல்லி, நான் சென்றதும் என்னிடம் தனியே பேசுகிறார் அண்ணா- ‘இதோ பார்! உன்னை ஒரு முக்கியமான வேலையாக இப்போது உடனே சிதம்பரத் துக்கு அனுப்புகிறேன். 10 நிமிடத்தில் தயாராக வா!” என்றார். டிக்கட் விற்பனைப் பொறுப்புகளை சண்முகத்திடம் தந்துவிட்டுத் திரும்ப அண்ணாவிடம் வருகிறேன். “கொஞ்சம் பணம் தருகிறோம். அதை எடுத்துச் சென்று பத்திரமாக வில்லாளனிடம் சேர்த்துவிட்டு, உடனே திரும் பிவிட வேண்டியதுதான். தனியே போவாயா?” எனக் கேட்கிறார் அண்ணா. கலைஞர் சொல்கிறார் “என்னுடைய காரை எடுத்துச் செல்லுங்கள், சார்” என்று. “சரி” என்ற ஒற்றைச் சொல்லில் பதில் தந்தேன்.

அப்போது கலைஞரிடம் இருந்தது. ஷெவர்லே கார். நிறையப் பெட்ரோல் சாப்பிடும் பெரிய, நல்ல கார். மணிக்கு 100 மைல் வேகம், சாதாரணமாகப் போகும். ரங்கசாமி ஒட்டுநர். காரில் ஏறப்போகும்போது, மீண்டும் அண்ணா அழைப்பதாகச் செய்தி வந்தது. இப்போது அண்ணாவுக்குப் பக்கத்தில் சேலம் தோழர் இராஜாராம் நின்றிருந்தார். அவர் அண்மையில்தான் திராவிடர் கழகத் திலிருந்து விலகி வந்தவர். “இந்தா, கருணானந்தம்! உனக்குத் துணையாக ராஜாராமை அழைத்துப் போ! வழியில் துTக்கம் வராமலிருக்கப் பேசிக்கொண்டே வருவார்” என்றார் அண்ணா.

அதேபோல் இருவரும் புறப்பட்டு விரைவாகச் சென்று, சிதம்பரம் அடையும் போது ஏறக்குறைய நள்ளிரவு நேரம். அப்போதும் வில்லாளன் வீட்டிலில்லை. நெடுகிலும் விசாரித்துக்கொண்டே போனோம். ஏதோ ஒரு சிற்றுாரில் அகப்பட்டார். எங்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும், ஒரளவு புரிந்துகொண்டு, புன்னகை புரிந்தார். தனியே கூப்பிட்டு விவரம் சொன்னோம்.

“சரி இருங்கள், உங்கள் காரிலேயே வந்துவிடுகிறேன். சிதம்பரத்தில் என் வீட்டுக்குப் போகலாம்” என்றார். சென்றோம். தந்தோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, “ரங்கா! என்ன சொல்றே. இப்பவே திரும்பலாமா?” என்று ஒட்டுநரைக் கேட்டேன். ரங்கன் தயார்!

காலையில் அண்ணா எழுந்திருக்கும் முன்பு சென்னை சேர்ந்தாகிவிட்டது! தூங்குகின்ற அண்ணாவை எழுப்பி விவரம் சொல்ல வேண்டுமே?

அண்ணாவை எழுப்புவது ஒரு சுவையான அனுபவம். ஒரு சிலருக்கே அந்த உரிமை இருந்தது. அந்தச் சிலரில் நான் ஒருவன்!

அண்ணா துரங்கும்போது, பெரும்பாலும் மேலே சட்டையோ, அவர் சொந்தமாகத் தைத்துப் போட்டுக் கொள்கிற கையில்லாத அந்த பனியனோ, இராது; வெற்றுடம்புதான்! நல்ல குறட்டை விடுவார்கள். அருகில் நின்று “அண்ணா! அண்ணா!” என மெதுவாக அழைப்பேன்; பயன் இருக்காது! உரக்க “அண்ணா! அண்ணா!"—அழைத்தால் சிறிது அசைவு தென்படும். அவ்வளவுதான், கண்விழிக்க மாட்டார்கள்!

பத்து நிமிடம் பொறுத்து “அண்ணா” என்று பலமாக அழைத்துக் கொண்டே, மெல்ல உடல் மீது கைவைப்பேன். உணர்வின் உந்துதலால் கண் மலர்வார்கள். “எழுந்திருங்க அண்ணா! நேரமாச்சே?” — “ஒரு five minutes பொறுய்யா" என்று ஐந்து விரலைக் குவித்துக் காண்பிப்பார்கள்; அதற்குள் கண்கள் மூடிக்கொள்ளும்!

சரி; பதினைந்து நிமிடமே போயிருக்கும்! இப்போது, “அண்ணா! என்னண்ணா இது? நீங்க கேட்ட நேரமெல்லாந் தாண்டிடுச்சி, எழுந்திருங்க அண்ணா!” சத்தமாகச் சொல்லிக்கொண்டே, உடல் மீது கையை அழுந்த வைப்பேன். சரேலென்று எழுந்து உட்கார்ந்து கொள்வார். கண்ணை மட்டும் திறக்கமாட்டார். கை, தலையணைக்கு அடியில் துழாவும். பொடி டப்பாவை எடுத்து ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சுவார்கள் அண்ணா. அப்பாடா! அண்ணாவை எழுப்பிவிட்டோம் என்று மகிழ்வதற்குள், மீண்டும் படுத்து விடுவார்கள். அடுத்த கணம்ே குறட்டை ஒலி பெரிதாக எழும்!

அப்புறம் கால்மணிநேரம் கழித்துக், கட்டாயம் அண்ணாவை எழுப்பித்தானாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன், “அண்ணா-அய்யய்யோ-ரொம்ப லேட் ஆயிடுச்சே!” என்று சொல்லிக்கொண்டே கையைப் பற்றிச் சிறிது அசைத்து, உசுப்பிவிடுவேன். வெற்றி, வெற்றி!

அண்ணா எழுந்து உட்கார்ந்ததும், அருகில் டீப்பாயின் மீது தொங்கும் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, உடனே புறப்பட்டு விடுவார்கள். முகம் கழுவ வேண்டும் என்றோ, தலைவார வேண்டுமென்றோ கருதுவதில்லை. அடுத்த நிமிடம், உலகப்பிரச்னைகளில் எதைப் பற்றிப் பேசவேண்டுமானாலும், அந்த நயாகரா அருவியிலிருந்து கருத்துகள் வெள்ளமாய்ப் பெருகும்!

அந்த ‘அண்ணாவை எழுப்பும் முறை’யில்தான் அன்றும் நான் எழுப்பிவிட்டுத், தில்லை சென்று வந்த செய்தி ச்ொல்லி முடித்துக், கலைஞரிடம் விரைந்தேன் காரை ஒப்படைக்க.

“Overnight தூக்கமில்லாமெ போய் வந்தியே. போயி ரெஸ்ட் எடுத்துக்கோய்யா!” -இவைதாம், அண்ணாவின் நன்றி பாராட்டும் மொழிகள்.