அண்ணா சில நினைவுகள்/தம்பித் தலைவர் அவர்களே!

விக்கிமூலம் இலிருந்து
தம்பித் தலைவர் அவர்களே!!

“அடெ, வாய்யா மாநாடு ஸ்பெஷலிஸ்ட்” என்று. உற்சாகத்துடன் அண்ணா என்னை அருகே அழைத்துத் தட்டிக் கொடுத்து “என்னா? எப்போ வந்தே? இங்கே என்னென்ன விசேஷம்?” என்று கனிவுடன் வினவினார்.

“‘நான் இப்பதான் முதல் தடவையா மாநாடு நடத்தறேன். நீ முன்னாடியே வந்திருந்து எனக்கு உதவணும். உன் அனுபவம் துணையாயிருக்குமல்லவா?’ என்று கடலூர் திராவிடமணி கடிதம் எழுதியிருந்தாரு அண்ணா. அதான் நாலு நாள் முன்னதாக வந்தேன். மாநாட்டு ஏற்பாடுகள், அலங்காரமெல்லாம் பார்த்தீங்களா? பண்ணுருட்டியிலேயிருந்து இந்தப் புதுப்பேட்டை வரை யிலே ரோட்டிலே இரண்டு பக்கமும் தென்னைமட்டை களை முழுசு முழுசாப் புதச்சி வச்சி, மயில் தோகைை விரிச்சாப்போலே அழகா வச்சிருக்கோம்.”

“நல்ல புதுமையான கற்பனைதான். சரி, வேறென்ன இங்கே தனியான சிறப்பு?” -அண்ணா கேட்டார்.

“மாநாட்டுக்கு முதல் நாளே—இது திராவிட மாணவர் மாநாடுதானே—இங்கே நமக்கென்ன வேலைண்ணு எண்ணாமெ—இந்தத் தென்னார்க்காடு மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலேயிருந்தும், கட்டுச். சோறு எடுத்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளோட, குடும்பம் குடும்பமாய் மக்கள் வந்துட்டேயிருக்காங்க. இந்த மாதிரி எழுச்சியெ வேற எங்கேயும் பார்த்ததில்லே அண்ணா!” வியப்புடன் கூறினேன். கடந்த ஆண்டு நான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மாவட்டம் இது.

“சரி. சேலம் மாநாட்டுக்குப் பின்னே நாம் எதிர் பார்த்த இப்படிப்பட்ட எழுச்சி உண்டாகியிருக்குது! வீரமணி வந்திருக்குதா, இங்கே?” கேட்டார்.

“வராமெ இருக்குமா? இந்த ஆர் லே மாநாட்டு வேலையெல்லாம் கழகத்தோழர் இராமலிங்கத்தோட முயற்சிதானே. வீரமணி அவருக்கு உதவியா, ஒடியாடி தொண்டு செய்யுது. இங்கே அது வெறும் பேச்சாளரா வரல்லியே—அவுங்க ‘வாத்தியார்’ திராவிடமணி நடத்துறதாச்சே.”

சிறுவன் வீரமணியை அண்ணா சேலம் மாநாட்டிலேயே சந்தித்துப் பாராட்டிவிட்டார். இப்போது உள்ள ஒரு இசைக் கலைஞருடன் வீரமணியை ஒப்பிடு வது சாலப் பொருத்தம். அவர்தான் மாண்டலின் பூ. சீனிவாசன், கர்நாடக இசையை இந்தச் சிறு கருவியில் இசைக்க முடியும் என இதற்கு முன் யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. அதே போல வீரமணியும் தன் பத்தாவது வயதிலேயே ஓர் எதிர் நீச்சல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இன்றளவும் அதிலேயே நிலைத்திருப்பது, மாபெரும் அற்புதமாகும். இசையுலகில் சிதம்பரம் ஜெயராமன், வீணை பாலச்சந்தர், பாலமுரளி கிருஷ்ணா, புல்லாங்குழல் டி. ஆர். மாலி, மிருதங்கம் டி. கே. மூர்த்தி ஆகியோர் பால்யத்திலேயே திறமை சாலிகள் எனினும், முன்னோர் சென்ற வழியிலேயே தான் இவர்களும் சென்றனர். புதுமையோ புரட்சியோ செய்ய வில்லை. அதைச் செய்த ஒரே சிறுவன் சீனிவாஸ். அஃதே போன்ற புரட்சிச் செய்த சிறுவன் வீரமணி ஒருவரே என்பதை நாம் மறத்தலாகாது! வேறு எவரும் இத் துறையில் இவருக்கு நிகரானோர் இலர்!

1945 சனவரித் திங்கள் இந்த மாநாட்டை முன்னின்று நடத்திய புதுப்பேட்டை இராமலிங்கம் பின்னர் சென்னை யருகே குடியேறி, இன்றைக்கும் அனகாபுத்தூர் இராம லிங்கம் என்ற பெயரில் பொதுத் தொண்டில் ஈடு பட்டுள்ளவர். புதுப்பேட்டை சிறந்த நெசவாளர் மய்யம். அதனால் அவர் கைத்தறியாளர் பிரச்னைகளில் நிபுணராக விளங்குகிறார். சிறந்த சுயமரியாதைத் தமிழன்பரும், கொள்கைக் குன்றும், நிகரிலாத் தொண்டரும். பல வீரமணிகள் உருவாக உழைத்தவருமான கடலூர் ஆ. திராவிடமணி பி.ஏ., அண்மையில் மறைந்துபோனார். சென்ற ஆண்டு, அதாவது, 15.10.1985 அன்று, என்னுடைய மணிவிழாவுக்கு வந்திருந்து, நண்பர்களுடன் நீண்ட நேரம் அளவளாவி மகிழ்ந்தவர்.

அண்ணா இந்த மாநாட்டில் தனிக்கவனமும் அக்கறையும் செலுத்திடக் காரணம், முதன் முதலாக மாநாட்டுக்குத் தலைமைப் பொறுப்பேற்பவர் அவருடைய அருமருந்தன்ன தம்பியான ஈ. வெ. கி. சம்பத். முழுநேர அரசியல்வாதியாக அவரை உருவாக்கிய பெருமை இந்தப் புதுப்பேட்டை மாநாட்டுக்கு உண்டு. இதற்கு அடுத்த மாதமே அவரும் நானும் எங்கள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து 20, 30 பொதுக் கூட்டங்களில் பேசினோம். பயண அமைப்பாளர் திருவாரூர் வி. எஸ். பி. யாக்கூப்.

அண்ணா ‘விடுதலை’ ஆசிரியராக ஈரோடு சென்ற பின்னர், தனது 10, 11 வயது முதல் அண்ணாவைத் தன் சொந்த அண்ணனாகக் கருதி, மிக மிக அன்புடன் நெருங்கிப் பழகியவர் சம்பத். அண்ணாவும் அவரைத் தனது உடன் பிறந்த தம்பியாகவே நடத்தியதோடு, அவன் இவன் என்று சம்பத் ஒருவரை மட்டுமே உரிமை யுடன் அழைத்தார். பொது மேடைகளிலும்கூடத் ‘தம்பி சம்பத் சொன்னான்-கேட்டான். பேசினான்-’ என்றே குறிப்பிடுவார். அதனால்தான் புதுப்பேட்டை மாநாட்டில் கூட அண்ணா பேச எழுந்தவுடன் , “தம்பித் தலைவர் அவர்களே!” என்று புதுமையாக விளித்தார்.

புரட்சிக்கவிஞர் இந்த மாணவர் மாநாட்டுக்காக எழுதி அனுப்பிய வாழ்த்துப்பாடலை-க. அன்பழகன் படித்து, எழுச்சியைத் தோற்றுவித்தார். நிகரில்லாத அந்த அகவற்பா என்றும் குன்றா இளமையுடன் நமது நினைவில் நிற்குமே :

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது, சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் கடுங்கப்
புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியே!

என்று தொடங்கி...

இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!

என்றெல்லாம் ஒடுமே, நமது குருதியில் வெப்பத்தை ஏற்றி!

“ஏன் அண்ணா! எப்படியோ சம்பத்தையும் படிக்க விடாமே பண்ணிட்டீங்க, தலைவராக்கி! இண்ட்டர் மீடியட் போதுமா? அப்படியானா படிப்பிலே எனக்கு ஒரு ஜோடி கிடைச்சிட்டாரு!” என்று நான் சொன்னது மகிழ்வால் அல்ல. பெரியாரின் மகனாக எங்களால் எண்ணிப் பார்க்கப்பட்டவர், ஒரு பட்டதாரியாக விளங்க வேண்டும் என்ற ஆசையால்! அந்த ஆசை நிறைவேற வில்லையே!

“படிப்பு அவனுக்கு ஒரு குறை இல்லேய்யா. நீ பாரு, நல்லா Shine பண்ணுவான் சம்பத்!” என்றார் நம்பிக்கையுடன் அண்ணா. வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமி நாயுடு நம் இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் மகன் கஜேந்திரன் பெரியாரிடம் தன்ரிச் செயலராக இருந்தபோது, சம்பத்தின் தமக்கையார் ஈ. வெ. கி. மிராண்டாவை விரும்பி மணந்தார். கஜேந்திரன் திருமணத்தின்போது, அவர் தங்கை சுலோச்சனாவைச் சந்தித்த சம்பத், அவரை மணக்க விரும்பி, அண்ணாவின் ஆதரவை நாடினார். ஏனென்றால், பெரியார், சம்பத்துக்குத், தன் தங்கை மகள் எஸ். ஆர். காந்தியை மண முடிக்க எண்ணியிருந்தார். ஆனால், அண்ணாவின் ஒத்துழைப்பினால்தான் சுலோச்சனாவை சம்பத் மணக்க முடிந்தது! என்றும் சம்பத் தன்னுடனிருப்பாரென அண்ணா நம்பியதில் தவறில்லையே!

அந்தோ! அண்ணாவின் நம்பிக்கை இப்படி நசித்து நாசமாகிப் போகுமென யார் எதிர் நோக்கினோம்? 1960 61—ல் “திருவாளர் அண்ணாத்துரை” என்று நாக்கூசாமல் சொல்லிவிட்டாரே சம்பத்? அவர் வீழ்ச்சிக்குத் தானே அமைத்துக் கொண்ட சறுக்கு மேடையாக இந்த மரியாதைக் குறைவான பேச்சுதானே விளங்கிற்று.

அண்ணா அவர்கள் தமது வாயால் இந்தக் கருத்தைக் கூறக் கேட்டேனே நான், பின்னாட்களில்!