அண்ணா சில நினைவுகள்/காக்கை-நரி கதை, அரசியலில்
“நான் இப்ப ராஜ்யசபைக்குப் போகாமே இருந்திருந்தா, இந்தப் பிரிவினைத் தடைச்சட்டத்தை இவ்வளவு அவசரமாக் கொண்டுவந்திருக்கமாட்டாங்க” என்றார் அண்ணா. “இப்ப இல்லேண்ணாலும், எதிர்காலத்திலே எப்பவாவது கொண்டுவருவாங்களா?” என்று கேட்டேன் நான் அண்ணாவிடம். “கட்டாயம் கொண்டு வரத்தான் செய்வாங்க! ஏன்னா, கருத்துக்குக் கருத்துண்ணு சொல்லி, நம்மோட வாதம் பண்ணி, நம்ம திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையிலே இருக்கிற ஞாயங்களைப் புரிஞ்சிக்க வேணுமிண்ணு அவுங்களுக்கு ஏது அக்கறை?” என்று பதில் தந்தார்.
“பிரிவினையைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுறாங்க? இந்தியா சுதந்திரம் பெறுமுன்பே நாம் 1940முதல் 24 வருஷமா திராவிடநாடு பிரிவினை கேட்கிறோம். 1940-ல் நேரு பாக்கிஸ்தான் திட்டம் ஆபாசமானது. விஷமதத்தனமானது காங்கிரஸ் யோசித்துப் பார்க்குமளவு யோக்யதை உள்ள விஷயம் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை” என்று சொன்னாரே! இவர்களே, கிடைத்தவரை லாபம்னு, பாக்கிஸ்தான் பிரிவினைக்கு ஒத்துக்கிட்டவுங்கதானே?” என்று கேட்டேன். “அதனால்தான் சூடுகண்ட பூனைபோல் பயப்படுறாங்க, நானும் சொல்லிட்டேன். திராவிடநாடு கோரிக்கையை இப்போது நான் கைவிட்டாலும், இதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று.” அண்ணா தந்த மறுமொழி இது.
1953-ல் அவசர அவசரமாக சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒருமைப்பாட்டுக் குழு ஒன்றை அமைத்தனர். இவரே திருவாங்கூர் திவானாயிருந்த போது, அந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு எதிர்ப் பாயிருந்தவர்தானே! எனினும்,இவர் தலைமைப் பதவியை எப்படியோ(?) பெற்றார். அதன் நடைமுறை எப்படி யிருந்திருக்கும்? டெல்லியில் நடந்த மாநாட்டிலும் அண்ணாவை அழைத்துக் கருத்துக் கேட்கவில்லை. அந்தக் குழுவினர் சென்னை வந்தபோதும் நமது கோரிக்கை என்ன, ஏன் பிரிவினை கேட்கிறோம் என்று கேட்டுப் பதிவு செய்து கொள்ளவில்லை. ஒருதலைப் பட்சமாகவே பரிந்துரை கூறி, விரைவில் நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடை மசோதா கொணரக் காரணமாயிருந்தது இந்தக் குழு. கருத்தை அறிந்துகொள்ளவே அவ்வளவு அச்சம் அவர்கட்கு!
அண்ணா பிரிவினைத் தடைச் சட்டத்தின் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்தார். தன் அருமைத் தம்பிமார்களுடன் மனம் விட்டுப் பேசிக், கலந்து உரையாடினார். நானும் அவ்வப்போது இருந்து, என்கருத்தைச்சொன்னேன். பிரிவினைத் தடைச்சட்டத்தை மீறிச் சிறைசென்று ஆறேழு ஆண்டுகள் வாடுவதால், உருப்படியான பலன் என்ன? அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் காங்கிரசார் சிறை சென்றதற்கும், சுதந்திர இந்தியாவில் நாம் சிறை செல்வதற்கும், பயனைப் பொறுத்த வரையில் நிரம்ப வேறுபாடு உண்டே !
அண்ணாவை நான் அறிந்த நாட்களாய், அவர் இல்வளவு கவலையுடனும், எந்த நேரமும் சிந்தனை தேக்கிய முகத்துடனும் வேறு எப்போதும் இருந்ததில்லை. திராவிடர் கழகத்தினின்று விலக நேரிட்டதுபோதும் இந்த அளவு வேதனையுற்றதில்லை!
“ஏண்ணா! இப்ப, திராவிடநாடு கொள்கை இந்தியா பூராவும்-ஏன்-உலகம் பூராவும் தெரிஞ்சி போச்சி. இதையே லாபமா நெனச்சி, இப்படி ஜனநாயக விரோதமா ஒரு எதிர்க்கட்சியை அழிக்கவே இந்தச் சட்டம் கொண்டு வாராங்கண்ணு, அவுங்களை Expose பண்ணலாமே” என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.
“செய்யலாம். பிடிவாதமா, சட்டத்தை மீறுவேண்ணும் சொல்லலாம். இருக்கிற நம்ம ஆட்களிலே உறுதியான சிலபேர் ஜெயிலுக்குப் போய் ஏழெட்டு வருஷம் உள்ளே கிடக்கலாம். கட்சி என்ன ஆகும்? நான் அதைத் தான் யோசிக்கிறேன்” என்றார்-அண்ணா. அவர் மன உளைச்சல் நன்கு வெளிப்பட்டது. தமிழ் தேசியக் கட்சி அமைத்திருந்த சம்பத், தோழர் அண்ணாதுரை என்று அண்ணாவையும், மற்ற தி மு. க. தலைவர்களையும், திட்டியதோடு, கழகத் தொண்டர்களையும் தாக்கியதுடன் நில்லாமல், திராவிடநாடு பிரிவினைக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்தார். “என்னண்ணா இது விபரீதமா யிருக்கு? நீங்க அய்யாவை விட்டு வந்த பிறகும், அவரைத் திட்டவும் இல்லை; சுயமரியாதைக் கொள்கைகளை நூத்துக்கு நூறு ஏத்துக்கிட்டீங்களே ஒழிய, விமர்சிக்கவுமில்லை! இவரு ஏன் இப்படிப் போனாரு!” என்று அண்ணாவிடம் விசனப்பட்டேன். துரத்துக்குடி பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார் :- “திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை விட்டுவிடுமாறு தோழர் சம்பத் சொல்கிறார். நேரு கூறினார் விட்டுவிடுமாறு. அப்போது நாம் விட்டிருக்கலாம்: அகில உலகத் தலைவர் சொல் கிறாரே-அதைக் கேட்டு நடப்போமே, என்று! ராஜாஜி கூறியபோது விட்டிருக்கலாம்; ராஜ தந்திரி ஒருவர் கூறுகிறாரே என்று! காமராஜர் சொன்னாரே, அப்போது விட்டிருக்கலாம்; கர்ம வீரர் சொல்கிறாரே என்று! அப்போதெல்லாம் கைவிடாத நாம், சம்பத் சொல்கிறாரே என்பதற்காகவா விட்டுவிடப் போகிறோம்? தேவை யில்லை! நாம் தொடர்ந்து செல்வோம்!” என்று.
திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைத் தி. மு. க. கைவிடுகிறது என்று அண்ணா அறிவித்தவுடன், கோழைகள் என்று அதே சம்பத் ஏசினார். அண்ணா இதற்காக வருத்தப்படவில்லை. மாறாக, சம்பத் இதை ஓங்கி உரத்த குரலில் அடிக்கடி சொல்லட்டும் என்றார். காக்கை, நரி, வடை-இந்தக் கதையைக்கூட அண்ணா சொன்னார். நேரியைப் போல, நம்மை வஞ்சகமாப் புகழ்ந்து பேசுறவங்களும் இருக்காங்க. நீ பெரிய வீரனாச்சே; பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராடு, என்பாங்க. இதை நம்பினா, வடையைப் பறி குடுத்த காக்கை கதைதான்! நான் காக்கையாயிருந்து என் கட்சியை அழிக்கத் தயாராயில்லேப்பா,” என்றார் அண்ணா, நாங்கள் கேட்டபோது. இவுங்க கோழைங்கறது னாலெயும் எனக்கு வெட்கமில்லே. “இவங்க விரன்னு சொல்லி என்னை உசுப்பிவிட்டாலும் மயங்கிடமாட்டேன். என் முடிவுக்குப் பேரு ராஜதந்திரம்னு நான் நினைக்கிறேன்” என்றும் அண்ணா திட்டவட்டமாகச் சொன்னார்.
கூட்டங்களில் அண்ணா பேசினார். நான் பிரிவினை கேட்டபோதும் என்னைத் திட்டினார்கள்; ஏசினார்கள்; இழித்துப் பழித்தும் தூற்றினார்கள், பேசினார்கள்: ஆனால், இன்று நான் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டேன் என்கிறபோது, என்னைப் பாராட்டுகிறார்களா என்றால், இல்லை! அப்போது திட்டிய அதே காமராஜரும், பக்தவத்சலமும், சம்பத்தும் இப்போதும் திட்டுகிறார்கள்! ஆகா! இந்திய ஒருமைப்பாட்டைப் போற்றுகிறான் பார்! என்று அவர்கள் என்னைப் புகழ்ந்தால்தான், என்னைப் பொறுத்தவரையில் நான் ஏதோ தப்பு செய்துவிட்டதாகவே கருதுவேன். அவர்கள் இப்போதும் என்னைத் திட்டுவதால்-ஒகோ, நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்று கருதுவேன்” எனப் பேசினார் அண்ணா.
நான் பாரதத்திலிருந்து ஒர் உதாரணம் எழுதினேன் :-அர்ச்சுனனுக்குத் தேரோட்டிய கண்ணன், கர்ண் னுடைய அம்பு பறந்து வந்தபோது, “மார்பைக் காட்டி, உன் வீரத்தை நிலைநாட்டுவாய் அர்ச்சுனா! என்று சொல்லவில்லை! மாறாதத், தேரைச் சிறிது கீழே அழுத்தி, அந்த அம்பின் இலக்கிலிருந்து அர்ச்சுனனைக் காப்பாற்றினான், அதேபோல அண்ணனும், இப்போதைக்குப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுக், கழகத்தைக் காப்பாற்றினார்-என்பதாக ஒர் கவிதை எழுதியிருக்கிறேன்.