அண்ணா சில நினைவுகள்/நட்பிலும் இருபக்கம் உண்டு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
நட்பிலும் இருபக்கம் உண்டு

பேராசிரியர் மா.கி. தசரதன் சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வராயிருந்து அண்மையில் மாண்டுபோனார். இவர் முதலில் காஞ்சியில் தமிழாசிரியராயிருந்தபோது அண்ணாவுக்கு அறிமுகமானார். பின்னர் நெருக்கம் அதிக மாகி, ஈழத்தடிகள் போன்றார் அண்ணாவுடன் சீட்டு விளையாடும்போது இவரும் அங்கு இணைந்துகொள்வதைப் பார்த்துள்ளேன். ஒரளவு இவருக்கு இயக்க ஈடுபாடும் இருக்கட்டுமென அண்ணா என்னிடம் சொன்னதைச் செயல்படுத்திட என். எஸ். இளங்கோ தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்தபோது நடத்திய ஒரு தி. மு. க. மாநாட்டின் ஊடே, தசரதன் தலைமையில் ஒரு கவியரங் கம் நடத்தி, நானும் திராவிடம் பற்றிப் பாடினேன், காரைக்காலில்.

அண்ணா துங்கம்பாக்கத்தில் குடியேறிய சமயத்தில், இவரும் சென்னைக்கு மாற்றுதல்பெற்று அடிக்கடிஅண்ணா வீட்டில் தென்படுவார். 1967 தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணி நடை பெற்றுவந்தபோது, ஒருநாள் அண்ணாவுடன் நான் மட்டும் இருந்த நேரத்தில் தசரதன் “அண்ணா, நான் வேலையை விட்டுவிலகி, நாடாளுமன்றத் துக்குப் போட்டியிட எண்ணுகிறேன்!” என்று மெல்லிய குரலில் அறிவித்தார். “வேண்டாம் தசரதன்! பேசாம வேலையைப் பார்!” என்று பதிலிறுத்ததன் வாயிலாக, அண்ணா அவர் கூற்றை serious ஆக எடுத்துக் கொள்ள வில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஒரு வாரம் சென்றது. வாய்ப்பு நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தினால், இதே மாதிரி ஒரு தருணத்தில், தசரதன் தனது கோரிக்கையைப் புதுப்பித்தார். “எங்கள் மாத்தூர் இந்தத் தொகுதியில் தான் வருகிறது. நிறைய உறவினர்களும் இருக்கிறார்கள் அண்ணா!” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டபோது, அண்ணா சிறிது சினமுற்றவராய்த் தொந்தரவு “செய்யாதே தசரதன்! உனக்கு ஏன் தேர்தல் ஆசையெல்லாம்? என்னுடன் இருப் பதை advantage ஆக எடுத்துக் கொண்டுவிடாதே!” என்றார் குரலைச் சிறிதளவு உயர்த்தி, மிகக் கண்டிப்புடன்! எவ்வளவு உயர்வானதொரு பாடத்தைத் தன்னிடம் பழகு வோர்களுக்குக் கற்பித்தார் அண்ணா!

இதே அண்ணாவின் மறுபக்க மனத்தில், நட்புக்காகத் தன்தம்பிமார்களிடம் போராடும் பண்பும்மறைந்திருந்ததை வேறொரு நிலவரம் உணர்த்தியது. அது என்ன? தெனாலி ராமன் அல்லது கோமாளி என்றே (அண்ணாவை அறிந்த அனைவராலும்) கருதப்பட்டவர்- சி. வி. ராஜகோபால் உண்மையில் இவரை அண்ணாவின் இடிதாங்கி அல்லது shock absorber என்றே சொல்லலாம். இவருக்கு M.L.C பொறுப்பு தரப்பட வேண்டுமென அண்ணா தெரிவித்த போது, அண்ணாவுக்கு அடுத்த நிலையிலிருந்த கழகத்தலைவர்கள் அனைவருமே விளையாட்டாகவும் கேலியாகவும் கருதினர். தர விரும்பவில்லை. இது அண்ணாவின் கோபத்தைக் கிளறிவிட்டது.

சிவியார் “என்னப்பா கருணானந்தம்! அண்ணா சொல்லிக்கூட எனக்கு M. L. C. தரமாட்டாங்களாமே? நானா கேட்டேன் உங்களை? அண்ணாவே ஆசைப்பட்றாரு எனக்குத் தரணும்னு! நான் அண்ணா கூடவே மாட்டு வண்டியிலே போயி படிச்சி வந்தவன். இத்தனை வருஷமா பிரியாமெ இருக்கறதே எனக்கு disqualification என்று நினைக்கிறீங்களா? என்னோட weakness சிலதை அண்ணா பகிரங்கமாக் கண்டிக்கிறதாலே உங்களுக்கு இளக்காரமாப் போச்சா? நீங்க யாருமே நான் செய்கிற இந்தத் தவறு களைச் செய்றதில்வியா?” என்று என்னிடம் உரக்கக் கத்தினார், ஒருநாள் கொத்தவால்சாவடி அருகில்!

தி.மு.க. சார்பில் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காண்பிக்க முடிவெடுத்த நேரம், காஞ்சி நகர மன்ற வரவேற்புக் காக ராஜாஜி வருகிறார். கழகத் தோழர்கள் யாவரும் முன் கூட்டியே கைது. நகரசபை மண்டபத்தினுள், உறுப்பினர் என்ற தகுதியோடு நுழைந்துவிட்ட C.W.R. தனது கைக் குட்டைபோல் பையில் வைத்திருந்த ஒருகருப்புக் கொடியை நேரே ராஜாஜி கையில் கொடுத்துப் புரட்சியை உண்டாக் கியவர். இந்த வீரசம்பவத்தையெல்லாம் தம்பிமார்களுக்கு நினைவு படுத்தவேண்டிய நிலைமைவந்தது அண்ணாவுக்கு. ராஜகோபாலும் சட்ட மேலவை உறுப்பினரானார் பிறகு. இப்படி, ஒரு நண்பருக்காக வாதாடிய அண்ணாவே, தனது இன்னொரு நண்பரை அவர் தமது கடமையினின்று வழுவியமைக்காகச் சினத்தின் எல்லைக்கே சென்று, சுடு சொற்கள் கொண்டு தாக்கியதையும் நான் கண்ணுற்றேன். அண்ணா முதலமைச்சர். அவருடைய கல்லூரிச் சகாவான நாராயணசாமி (முதலியார்) அட்வகேட் ஜெனரல்; இரண்டொரு கழகச் சார்பான கிரிமினல் வழக்குகளில் ஆஜரான தகுதியினால் பெற்ற பதவி இது. பிற்காலத்தில் இவர் உயர் நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டும், திருப்தியடையாமல் உச்சநீதி மன்றம், அமைச்சுப்பதவி என ஆசைப்பட்டவர்.

அரசு வழக்கறிஞர் என்ற நிலையில் தமது கடமையை உரிய முறையில் ஆற்றத் தவறினார் என்பதை அண்ணா அழுத்தமாகச் சுட்டிக் காண்பித்ததுடன், அவர் என்னென்ன செய்திருக்கவேண்டும் என்பதையும், தமது சட்ட அறிவு துணுக்கத்தால் எடுத்துரைத்துக் கண்டித்தார். என்னைப் போன்ற சாமான்யனுக்கே அந்த வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! அவரோ நேரிலேயே அமர்ந்து எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். ராஜினாமா செய்து விட்டுப் போங்கள் என்று மட்டுந்தான் சொல்ல வில்லை அண்ணா!

கழகப் பொதுச் செயலாளரான அண்ணாவிடம் யாரா வது எனக்கு வேண்டிய நண்பர்களை வேட்பாளராகச் சிபாரிசு செய்தால், நான் சொல்வதற்கு அண்ணா இசைவார் என்பதில் அய்யமில்லை. ஆனால் நான் அப்படிப்பட்ட பரிந்துரைகளுக்காகப் போனதில்லை. அதற்கு மாறாக 1967.ல், குறிப்பிட்ட ஒருவருக்கு seat தரவேண்டாம் எனக் கேட்டேன்.

அவர் யார்? அண்ணாவின் எதிரொலி என எங்களால் சிறப்பிக்கப் பெற்ற தத்துவமேதை டி. கே. சீனிவாசன் 1962-ல் கும்பகோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்; 1967-ல் அதே தொகுதியைத் தனக்குக் கேட்கும் உரிமை அவருக்கே உண்டல்லவா? ஆனால் 1966-ன் இறுதிப் பகுதியில் அவர் உடல்நிலையும், மனநிலையும் குன்றித், தஞ்சையில் வாழ்ந்து வந்தார். அவர் நன்மையில் அக்கறையுடைய நண்பர்களான வழக்கறிஞர் சாமிநாதனும் மாணிக்கவாசகமும் ஒருநாள் அவரை அழைத்து வந்து, மாயூரத்தில் என் வீட்டில் விட்டு, நிலைமையை எடுத்து விளக்கினர். அதாவது அவரே கேட்டாலும் தேர்தலில் அவர் நிற்க அனுமதிக்கூடாது என. அண்ணா மாயூரம் வந்திருந்தார்கள், சீனிவாசனை என் வீட்டில் இருக்க விட்டுத், தனியே அண்ணாவைச் சந்தித்து, விவரங்களைக் கூறினேன். அண்ணாவும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டாமென நாங்கள் முடிவு செய்தோம். யாவுமே டி. கே. சி. யின் நன்மைக்காகத்தான்! அவரைத் தஞ்சைக்கு ரயிலேற்றி அனுப்பிய பின்னர் அண்ணாவை என் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து வந்தேன் இரவு. பின்னர் மாநிலங் களவை உறுப்பினர் பொறுப்பினில் கலைஞர் சீனிவாசனை அமர்த்தியபோது நானே, அதனை ஆதரித்தேன். அப்போது அவர் நலமடைந்து விட்டார்.

நாணயத்தின் இருவேறு பக்கங்களைப் போல அண்ணா வின் நட்பிலும் இருவேறு பக்கங்கள் உள்ளனவே!

அழிவினவை நீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

என்னும் 787-ஆவது திருக்குறள், அண்ணாவின் இப்பேர்ப்பட்ட நட்பினடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு, நல்ல எடுத்துக்காட்டு ஆகுமன்றோ?