அண்ணா சில நினைவுகள்/திருச்சியில் அடிக்கல் நாட்டினார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
திருச்சியில் அடிக்கல் நாட்டினார்

நான் ஒரு விண்ணப்பம் கொடுத்தேன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம், “என்னய்யா, நீ கூட மனு கொடுக்க ஆரம்பித்து விட்டாய்?” என்றார். “நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள், ஜனநாயக ஆட்சியில் பொது மக்கள் விண்ணப்பம் கொடுப்பதும் தவறல்ல. சிபாரிசுக்காகத் துண்டுத்தாள் தருவதும் குற்றமல்ல என்று.” “சொன்னது மெய்தான். ஒட்டுப்போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள், நம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வார்கள்? அதற்காக, அவர்கள் சொல்வது அனைத்தையும் செய்துவிடவும் முடியாது! நியாயமான கோரிக்கையா எனப் பார்த்து, உரிய முறையில் முடிக்கவேண்டும். உதாரணமாக, ‘ஒரு அதிகாரி சரியில்லை; அவரை எங்கள் ஊரிலிருந்து மாற்ற வேண்டும்’ என்பார்கள். சரி. அவரை வேறொரு ஊருக்கு மாற்றினால் அங்கு போனால் மட்டும் அவர் நல்லவராகி விடுவாரா? அதனால், அம்மாதிரி கோரினால் நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். ஆனால், அவர் ஊழல் செய்கிறார் என்று நிரூபிக்க முடிந்தால், அவரை வீட்டுக்கு அனுப்பவும் தயங்கமாட்டேன். சரி, இப்போது உன் மனு என்ன? சொல்லு!” என்று கேட்டார் அண்ணா.

“திருச்சியில், பிளாசா டாக்கீஸ் அருகில், எங்கள் RMS சூப்பரிண்டெண்டெண்ட் அலுவலகம் இருக்கிறது. அதன் எதிரே சிறிது புறம்போக்கு நிலம் தனியார் உபயோகத்தில் இருந்து வருகிறது. அந்த இடம் எங்களுக்குக் கிடைத்தால், தொழிற்சங்கத்துக்கு ஒரு சிறு கட்டடம் கட்டிக் கொள்வோம். திருச்சியிலுள்ள எங்கள் கோட்டக் கிளையினர் இப்போதே 5000 ரூபாய் நிதி திரட்டி வைத்துள்ளனர்- என்றேன். உடனே ஆவன செய்யுமாறு திருச்சி கலெக்டர் திரு. ஹரிபாஸ்கர் அய். ஏ. எஸ். அவர்களுக்குப் பரிந்துரைத்தார் அண்ணா.

அண்ணாவிடம் நேரே இந்தச் சிறு விஷயத்துக்காக வர வேண்டிய சூழல் எப்படி நேர்ந்தது? திருச்சியிலுள்ள என் நண்பர் H. பித்சை ஒருநாள் மாயூரம் ஓடிவந்து என்னிடம் ஓவென அழுதார். தேற்றி, விவரம் கேட்டேன். மேற்படி புறம்போக்கு நிலம் சம்பந்தமாக வருவாய்த்துறை சிறு அலுவலர்களிடம் போய் விசாரித்தபோது, அவர்கள் மரியாதையின்றிப் பேசிவிட்டார்களாம். “இதை உங்களுக்குப் பெற்றுத் தருவது இனி, என் கடமை” என உறுதி கூறி அவரை அனுப்பினேன். நடந்தது!

இந்தக் கட்டடத்துக்கு அண்ணாதான் அடிக்கல் நாட்ட வேண்டுமெனவும் திருச்சி நண்பர்கள் விழைந்தனர். “இது சிறிய நிகழ்ச்சியாகும்; இதற்காக அண்ணாவின் நேரத்தை வீணாக்கிடக்கூடாது; திருச்சிக்கு வேறு சந்தர்ப்பத்தில் வரும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்” - என்று சொன்னேன். அவ்வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அன்றைக்கு அங்குள்ள தொலைபேசி ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க, (மச்சான்) அன்பில் தர்மலிங்கம் வேறொரு விழா ஏற்பாடு செய்திருந்தார். நான் ஊடே புகுந்து, அதனை ரத்துசெய்து, எங்கள் கால்கோள் விழாவுக்கு மட்டும் அண்ணாவிடம் ஒப்புதல் பெற்றேன்.

எங்கள் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே மேடை அமைத்து விழா நடத்தினோம். அப்போது திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் அதிகாரி. என்பால் பேரன்பு பூண்டவர். இவரே சிறந்த இயற்கை விஞ்ஞானி. ஆங்கில எழுத்தாளர். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதோடு, விழாவிலும் பேசினார். என் தலைமையில் கூட்டம். நமது பழம் பெரும் தொழிற் சங்கவாதி பொன்மலை பராங்குசம், தொலைபேசிச் சங்கத்தின் செயலாளர் பத்மாவதி நடேசன் ஆகியோரும் உரையாற்றினர். நண்பர் பிச்சை, தானே அப்போது மெட்டமைத்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி, தன் 5 வயது மகன் மனோகரனைக் கொண்டு அண்ணாவுக்கு மாலை சூட்டினார். பத்மாவதி நடேசன், தங்கள் சங்கத்திற்கும் இடம் வேண்டுமெனக் கோரினார்.

அண்ணா பேருரையில், எங்கள் கண்காணிப்பாளர் திரு எஸ். டி. பாஸ்கரன் அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.

“ஒரு குடும்பத்தில் மகனுக்குத் தந்தை சில சலுகைகள் செய்யும்போது, மகள் சும்மாயிருக்குமா? தனக்கும் ஏதாவது கேட்க எண்ணுமல்லவா? அதே போல, இன்று நான், RMS மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்குச் சிறியதொரு இடத்தை வழங்கியது போல், தங்களுக்கும் அளித்திட வேண்டுமெனத் திருமதி பத்மாவதி நடேசன் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் விருப்பமும் நிறைவேற ஆவன செய்கிறேன்” என வாக்குறுதி தந்தார்கள் அண்ணா.

அந்த அடிப்படைக் கல்லை, எதிரிலுள்ள புறம்போக்கு நிலத்தில் புதைத்து வைத்தோம், ஒரு மூலையில், மிகுந்த நம்பிக்கையோடு, கட்டடம் எழுப்ப எண்ணி! ஆனால் அண்ணா அவர்களே அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் நேரில் எங்கள் முன்னிலையில் ஆணை பிறப்பித்தும், செயலளவில் எங்களுக்கு ஒன்றும் நடைபெறவில்லை.

பின்னர் அங்கு கலெக்டராக வந்த திரு. வைத்தியலிங்கம் I. A. S. என்னிடம் கேட்டுக் கொண்டார். “அந்த இடத்தில் ஜவான்பவன் வருகிறது. உங்களுக்கு வேறு நிலம் தருகிறேன்” என்று தரவில்லை அவரும்.

அவர் மேலும் தவறில்லை: follow up action என்பார்களே அந்தத் தொடர் நடவடிக்கை இரு புறத்திலும் இல்லாமல் போயிற்று. எங்கள் தோழர்களும் சிலர் மாற்று தலுக்கு ஆளானார்கள். சங்கமும் பிளவுற்றது. ஆனால் அந்தப் பணம் மட்டும் இன்னும் காத்திருக்கிறது!

அண்ணா திறந்துவைத்த அந்த அடிக்கல்லில் என் பெயரும் இருக்கிறது. விழாவில் எடுத்த அருமையான புகைப்படங்கள் திருச்சியில் என் நண்பர் முத்துக்குமாரிடம் உள்ளன.

ஆமாம், அந்தக் கல் இப்போது எங்கே? கட்டடம் எழும்பாவிட்டால் பரவாயில்லை! அந்த அடிப்படைக் கல்லே ஒரு நினைவுச்சின்னமாகுமே! யாராவது கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்! இது நடைபெற்றது 1967 ஆகஸ்ட் திங்களில். தேதி ஞாபகமில்லை!

(இந்த விழாவின் புகைப்படமும் 161-ஆம் பக்கத்தி லுள்ள நிகழ்ச்சியின் புகைப்படமும் நூலின் பின்புற அட்டையில் உள்ளன.)