அண்ணா சில நினைவுகள்/காய்ச்சலோடு ஏன் வந்தீர்கள்?

விக்கிமூலம் இலிருந்து
“காய்ச்சலோடு ஏன் வந்தீர்கள்?”

இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததால் 1965-ஆம் ஆண்டில் நடத்தமுடியாமல் போன RMS ஊழியர்களின் 9.வது மாநில மாநாட்டைச் சென்னையில் 4.1.66 முதல் 5.1.66 முடிய நடத்தினோம். அதனால், இதே ஆண்டின் இறுதியிலேயே பத்தாவது மாநில மாநாட்டைச் சோலையார் பேட்டையில் நடத்த நேரிட்டது. அங்கிருந்த லோகநாதன் போன்ற தோழர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர் ஆர்வத்துடன். துணைச் செயலாளர் கோவை ஞானப்பிரகாசம் ஒத்துழைத்தார்.

மலைகள் சூழ்ந்த இயற்கை கொலு வீற்றிருக்கும் எழில் மிகு ரயில்வே சந்திப்பு அருகே ரயில்வே இன்ஸ்டிட்யூட் கட்டடத்தில் மாநிலப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வந்தது. இரண்டாம் நாள் இறுதிக் கட்டமாகச் சிறப்புப் பொதுக் கூட்டம்; 20.11.1966 அன்று மாலை. இதில் பங்கேற்று எங்கள் பிரச்சினைகளை மக்களுக்குத் தக்கவாறு எடுத்துரைக்கப் பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் ஆகியோரை அழைத்திருந்தோம். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக நீண்ட நாள் அனுபவம் பெற்று, முன்பு பெரியார் ஆதரவுடன் தென் பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்கம் தொடங்கிப் பின், அதிலிருந்தும் விலகி, இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்ததன் பயனாய்ச் சென்னையில் சில தொழிற்சங்கங்களின் தலைவராக விளங்கிய நண்பர் இராகவானந்தம் ஒரு சொற்பொழிவாளர். மற்றும் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் நகரமன்றத் தலைவருமாகிய நண்பர் சி. கே. சின்னராஜூ இன்னொரு பேச்சாளர். எங்கள் வரவேற்புக்குழுத் தலைவரோ நாடாளுமன்ற உறுப்பினரான அரூர் முத்து அவர்கள்.

ஜோலார்பேட்டைக்குச் சென்னையிலிருந்து எங்கள் மாநிலச் சங்க நிர்வாகிகள் 19.11.66 அதிகாலை பிருந்தாவனம் எக்ஸ்பிரசில் செல்லத் திட்டமிட்டிருந் தோம். இவ்வாறு புறப்படுவதற்கு முதல் நாள், நுங்கம்பாக்கம் சென்று, அண்ணா அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, அவர்கள் எப்படி, எப்போது ஜோலார் பேட்டை வந்து சேருவார்கள் என்பதனை அறிந்து வரலாமென, மாநிலச்செயலாளர் நம்மாழ்வாரும் நானும் சென்றோம். ராணி அண்ணியார் மிக்க வருத்தத்துடன், “ஏம்ப்பா ஒங்களுக்குத் தெரியாதா? ஒங்க அண்ணனுக்கு ரொம்ப ஜூரம் வந்து, வீட்லெ ரெஸ்ட்டா இருக்க முடியாதுண்ணு, இசபெல்லா ஆசுபத்திரியிலே சேர்ந்திருக்காங்களே” என்றார்கள்.

இடி விழுந்தாற்போலிருந்தது எனக்கு மாநாட்டுக்கு அண்ணா வரமுடியாமற் போய்விட்டதே என்ற ஏமாற்றம் ஒர்புறம்! அண்ணா செயிண்ட் இசபெல் நர்சிங் ஹோமில் சேரவேண்டிய அளவுக்குச் சுரம் வந்துவிட்டதே என்ற கவலை மறுபுறம்! உடனே மயிலாப்பூர் விரைந்தோம். அண்ணா தனியே படுத்திருக்க, அருகே நிழல் நின்றிருந்தது? (நண்பர் சி. வி. ராசகோபால்) சென்னையில் இச் செய்தி அதிகம் பரவாததால், மருத்துவமனையில் மக்கள் கூட்டம் திரளவில்லை.

அண்ணாவைத் தொட்டுப் பார்த்தேன். உடல் அனலாய்க் கொதித்தது. “எப்படியண்ணா சுரம் வந்தது? என்ன சுரமாம்?” என்று கேட்டேன். ஃபுளுமாதிரித் தெரிகிறது. 104 டிகிரி ஏறிவிட்டது. சரி போகட்டும். நீ எப்போ ஜோலார்பேட்டை போகிறாய்? என்று வினவிய போது, அண்ணாவின் நினைவு அந்த நிலையிலும் குன்றா திருந்ததை எண்ணி வியந்தவனாய் நாளைக் காலை புறப்படுகிறோம். அதற்கும் மறுநாள்தான் பொதுக் கூட்டம். அதைப்பத்தி நீங்க நினைக்கவே வேண்டாம் அண்ணா! சமாளிச்சிக்கிறோம்!” என்றேன். “ஒண்ணு செய்யேன். இந்த மாதிரி நான் வரமுடியலேங்கிறதை எடுத்துச் சொல்லி, மனோகரனை அழைச்சிகிட்டுப் போயிடேன்“ என்ற ஆலோசனையை அன்புடன் வழங்கினார்கள்.

1957-ல் மாயூரம் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு நாஞ்சில் மனோகரனைப் போட்டியிடச் செய்து, அவரை அரசியல் பிரவேசம் செய்யவைத்தோம். அங்கே தோல்வி யுற்றார். எனினும், என் ஆருயிர் நண்பர் சம்பத் செய்த தவற்றால், தென் சென்னையில் 1962-ல் போட்டியிட்டு, அமோக வெற்றி கண்டார். அண்ணாவுக்குப் பதிலாக அவரை அழைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், அண்ணாவே சொல்லிவிட்டதால் உடனே வெளியில் சென்று, அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்தும் விளக்கினேன். தனக்கு வேறு வேலையிருப்பதாகச் சொல்லி, வர மறுத்து விட்டார் மனோகரன் M.P. திரும்ப அண்ணாவிடம் இதைத் தெரிவித்து, “பரவாயில்லை அண்ணா! ராகவானந்தம் வருவார். அவரை வைத்துக் கூட்டத்தை நடத்தி விடுகிறேன். 21-ந் தேதி காலையில் நேரே இங்கே வந்து உங்களைப் பார்க்கிறேன். நீங்க ஒடம்பைக் கவனிச்சிக்கீங்க-” என்று கூறியவாறே புறப்பட்டேன். சிந்தனை ரேகை படர்ந்த சோகமுகத்துடன் அண்ணா தலையசைத்தார்கள்.

அண்ணாவின் உடல் காய்ச்சலால் அவதியுறுவதை எண்ணியபடியே, எங்கள் மாநாட்டு நடவடிக்கைகளில் மூழ்கினேன். அண்ணா வருவதாக ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரத்தால் ரயில்வே சந்திப்பு எல்லை. முழுதும் திரளாக மக்கள் குழுமி நின்றனர், என் தலைமையில் பொது நிகழ்ச்சி துவங்கிற்று. அரூர்முத்து, சி.கே.சி., இராகவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் பேசியதும், நான் அண்ணாவின் உடல் 104டிகிரி சுரத்தினால் துன்பமுறுவதை எடுத்துச் சொல்லி, கூட்டம் அத்தோடு முடிவுறுவதாக அறிவித்தேன். மக்கள் கூட்டமும் கரையத் தொடங்கியது. அந்த நேரத்தில்......

“அண்ணா வாழ்க! அறிஞர் அண்ணா வாழ்க!” என்று வெளியே இடைவிடாத முழக்கம் செவிகளில் நிறைந்தது. பரபரப்புடன் வாயிற்புரம் நாங்கள் வருவதற்குள் ஒரு fiat காரிலிருந்து அண்ணா இறங்குகிறார். உடன் சி. வி. ராசகோபால் மாத்திரம்!

ஒரு வார இளைப்பும் களைப்பும், சுமார் 150 மைல் கார் பயண அலுப்பும், முகத்தில் தாடி மீசையும், வாரப்படாத கலைந்த தலையும், மேலே கம்பளிச் சால்வையுமாய் அண்ணாவைப் பார்த்ததும், கண்கள் கலங்கிவிட்டன. வாருங்கள் அண்ணா என மகிழ்வோடு வரவேற்பதற்கு மாறாக, அனைவரும் ஒரே குரலில் ஏன் அண்ணா வந்தீர்கள்?’ என்று அச்சத்துடன் கேட்டோம். திரும்பிப் போய்க்கொண்டிருந்த மக்கள் மீண்டும் விரைந்து ஓடோடியும் வந்து அமர்ந்தனர். முடிவுற்ற கூட்டம் மீண்டும் துவங்கியது.

“நான் எந்த வேலையை எப்போது சொன்னாலும் தட்டாமல் செய்பவர் என் தம்பி கருணானந்தம். அவர் அழைத்து இதுவரை நான் வரத் தவறியதே இல்லை. அதனால்தான், இப்போதும், என் காய்ச்சலுக்கிடையிலும் வந்தேன்” எனத் தொடங்கி, “இவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் புரட்சி செய்ய வேண்டும் என்று முந்திய மாநாட்டிலேயே யோசனை சொன்னேன். எத்தகைய புரட்சி என்பதை அப்போது சொல்லவில்லை. அதை இப்போது சொல்கிறேன். அந்தப் புரட்சி, நாம் கோரு வதைத் தராத ஆட்சியை மாற்றுவதாக இருக்கட்டும்!” என்று முடித்தார் அண்ணா.

அண்ணா பேசி அமர்ந்ததும் வலது காதில் நான் இவ்வாறு கிசுகிசுத்தேன். ஏண்ணா நீங்க இந்த நெலை மையிலே, இவ்வளவு தூரம் Risk எடுத்து Car travel பண்ணி வந்தீங்க? உள்ளதைச் சொல்லுங்கண்ணா!” என்று.

“வேற ஒண்ணுமில்லே அய்யா. ஒரு ஆள் வரமாட்டேன் என்றது. இன்னொரு ஆள் வந்திருக்கிறது. இது இரண்டுக்கும் பயந்துதான் வந்தேன்” என, உள்ளத்தின் எரிச்சலை அடக்கமாக உணர்த்தினார் அண்ணா.

நான் புரிந்து கொண்டேன்!

“என்னங்க சி. வி. ஆர்! நீங்க அண்ணா வர்றதைத் தடுத்திருக்க வேணா மா? காய்ச்சலோட இவ்வளதூரம் அழைச்சி வந்துட்டீங்களே?” என நான் அவரைக்கடிந்து கொண்டபோது, “அட, நீ ஒண்ணுய்யா! திடீருண்ணு கார்ல ஏறுண்ணார். சிட்டியிலேதான் எங்கேயோ போகக் கூப்பிடறார்ணு ஏறினா, கார் நேர இங்கே வந்துதான் நிக்குது” என்றார் அவர்!