அண்ணா சில நினைவுகள்/பிரிந்ததும் சேர்ந்ததும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரிந்ததும், சேர்ந்ததும்

1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. அந்த நேரத்தில் பெரியாரைத் துறந்து அண்ணா தன்னுடன் இணைந்தவர்களைக் “கண்ணிர்த்துளிகள்” என்று தலைப்பிட்டு “திராவிட நாடு” இதழில் வாரந் தோறும் பட்டியல் வெளியிட்டார். மணியம்மையாரை மணம் புரிந்தபின், பெரியார் இரண்டு முறை மாயூரம் வந்து ஒய்வாக என் வீட்டில் சில நாள் தங்கினார்கள், அம்மையாருடன்.

நான் இந்தக் கால கட்டத்தில் அண்ணாவையும் சந்திப்பேன். “அய்யாவைப் பார்த்தாயா? வந்திருந்தாரா? என்ன சொன்னார்?” என்று பெருந்தன்மையுடன் அண்ணா என்னிடம் விசாரிப்பார். ஆயினும், நான் “கண்ணிர்த் துளிகள்” பட்டியலில் சேரவில்லை. 1932.ம் ஆண்டுக்குப் பிறகுதான் தி. மு. க. வளர்ச்சியில் பங்கேற்றேன்.

என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத்தி விருந்து பகைமையால் பிறந்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. காலத்தின் கட்டாயத்தினால், அண்ணா ஒர் அரசியல் பிரிவை ஏற் படுத்தியுள்ளார் என்றே கருதினேன். இதற்குச் சான்று பகரும் சில எடுத்துக்காட்டுகள், என்னால் இருதரப் பினின்றும் காண்பிக்க இயலும்,

தி. மு. க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப்பின் ஒருநாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ஒர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் ‘எதுவேண்டும் சொல் மனமே’ என்று ஒருபாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும் என் செவிப்புலனை நிறைத்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்:–

எது வேண்டும் எம் தலைவன்-தலைவா (எது!)
மதி வேண்டும் என்ற உம் கொள்கையா-இல்லை
மணம்வேண்டி கின்ற உம் வேட்கையா (எது)
பணிசெய்வோர் விசுவாசமா-இல்லை
மணியம்மை சகவாசமா? (எது)

இதை எழுதும் போதே படித்துப் பார்த்த சம்பத், சட்டென்று அந்தத் தாளை உருவி, அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம் மாறியது! “செச்சே! இது மாதிரி எழுதாதேய்யா! அய்யா ரொம்ப வருத்தப் படுவார். அதிலேயும் நீ இப்படி எழுதுனேண்ணு தெரிஞ்சிதோ-அப்புறம் அவருக்குத் தூக்கமே வராது!” என்று சொல்லிக் கொண்டே, அந்தத் தாளைக் கிழித்து எறிந்து விட்டார். சம்பத்தும் அண்ணாவையே ஆதரித்தார்!

“அண்ணா! சும்மாதான் கிறுக்கினேன்; மன்னிச்சுடுங்க. இந்த மெட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததாலே எழுதிப் பார்த்தேன். நான் intensional ஆக அய்யாவைப் பற்றி எழுதுவேனா?” என்று சொன்னேன். அண்ணாவின் அரும்பெரும் பண்பினை எண்ணி எண் ணி வியந்தேன். இவரா அய்யாவை விட்டு விலகி வந்தவர்?

1947-ல் ஆகஸ்ட் 15 மகிழ்ச்சிநாள் என்று அறிவித்த அண்ணா, பெரியார் துக்கநாள் என்று கூறிய கருத்துக்கு முரண்பட்டாரல்லவா? அப்போது கூட அண்ணா வெளியிட்ட முக்கியமான அறிக்கையை எப்படி முடிக்கிறார் தெரியுமா? :–

“தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி, என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான், சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனியரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி இந்த அறிக்கையை முடிக்கிறேன்!

அன்பன்

சி. என். அண்ணாதுரை

(“திராவிடநாடு” 10.8.1947)

1951-ல் மாயூரத்தில் தி. மு. க. தஞ்சைமாவட்ட முதல் மாநாடு நடந்தது. அங்கு தமது உரையினிடையே அண்ணா குறிப்பிட்ட ஒர் கருத்து மறக்க வொண்ணாதது. அண்ணா சொன்னார்: “தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம், பட்டினக்கரைகளில் எல்லாம், மூலை முடுக்குகளிலெல்லாம், தெருத்தெருவாகக் கருப்பு சிவப்பு இரு வண்ணக்கொடி பறக்க வேண்டும். அது திராவிட முன்னேற்றக் கழகக் கொடியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல! திராவிடர் கழகக் கொடியாகவும் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒரு கொடி-கருப்பு சிவப்புக்கொடி கட்டாயம் பறந்தாக வேண்டும்!” என்றார் பெருந்தன்மையுடன், எதிரிகள் தாக்கும்போது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகப் (double barrel gun) பயன்படும் என்றாரே. திராவிடர் கழகத்துக்கும், தானே அதிகாரி போன்ற உரிமையுடன்! வேறு யாரால் இங்கனம் பேச இயலும்? அண்ணா இப்படியெல்லாம் பேசியபோது, நான் மட்டும் ஆச்சரியப்படுவதில்லை. அண்ணா என்றாவது ஒரு நாள் வந்து அய்யாவைச் சந்திப்பார் என்றே நான் நம்பி வந்தவன்.

சென்னையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் தலைமையுரையாற்ற எழுந்த அண்ணா “இந்த நேரத்தில் நம்மையெல்லாம் ஆளாக்கி, உருவாக்கிய பெரியார்......” என்று அதற்கு மேல் தொடர இயலாமல் கண்ணிர் சிந்த வில்லையா?

இதே போன்றுதான், குழித்தலையில் கலைஞர் போட்டியிட்ட 1957-ல் இரண்டு முறை, பெரியார் காங்கிரஸ் காரர்களின் அழைப்பினை ஏற்று வந்து கூட்டங்களில் பேசினார்; நான் கலைஞரின் தலைமைத் தேர்தல் அலுவலக நிர்வாகியாதலால், வெளியில் செல்வதில்லை; இரண்டு பொதுக்கூட்டங்களையும் கேட்டேன்; அய்யா கலைஞரை எதிர்த்து அங்கே ஒரு சொல் கூட உதிர்க்க வில்லை!

இது இருக்கட்டும்; 1950-ல் ‘பெரியார் பொன்மொழிகள்’ வழக்கில் அய்யாவும், ஆரியமாயை வழக்கில் அண்ணாவும் தண்டிக்கப்பட்டுத் திருச்சி சிறையிலிருந்த போது, அய்யா, அண்ணாவுக்கு பிஸ்கட், பழங்கள் அனுப்பியதும் 28.9.1950-ல் விடுதலையானபோது அண்ணாவுக்குக் கார் வராததால், அய்யாவே தம் வேனில் அழைத்துச் சென்று அண்ணாவைச் சங்கரன் பங்களாவில் விடச் சொன்னதும், தி. மு. க. பிரிந்த பிறகுதானே?

1956-ல் திருச்சி மாநில மாநாட்டில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கலைவாணர் என். எஸ். கே. அவர்கள் பாடும் போது

புத்தர் சொன்னதும் அய்யா சொல்வதும் ஒன்று
அய்யா சொல்வதும் அண்ணா சொல்வதும் ஒன்று
இந்த இருவரும் இணைந்தால் மிகவும் நன்று

என்று குறிப்பிட்டார். பிறகு அண்ணா இதுபற்றிப் பேசிய பொழுது “நாங்களிருவரும் இணையவேண்டும் என்ற கலைவாணர் பாடினார். இணைவோமா என்னும் கேள்வியைக் கேட்டால், பதிலாக ஒரு பெருமூச்சுதான் வருகிறது” என்று அண்ணா தனது ஏக்கத்தை வெளிப் படுத்தினார். இணைய வேண்டும் என்பது அவரது நோக்கம் என்பதைத்தானே அந்தப் பெருமூச்சு உணர்த்தியது.

உலக முழுதும் தெரிந்துள்ள Prodigal son என்ற கதை கூடத், தந்தையிடமிருந்து பிரிந்து சென்ற மகனொருவன் சீர்கெட்டு, வறுமையில் வாடி, வாழ வழியின்றி மீண்டும் தந்தையை நாடித் திரும்பியவனைத், தந்தை அரவணைத்து ஏற்றார் என்பதுதானே! ஆனால், இங்கு நடந்தது என்ன? பிரிந்து சென்ற மகன் ஆட்சியைக் கைப்பற்றி, முதலமைச்ச ராகவும் ஆனபின்னர், தந்தையைக் காணத் தானே சென்ற செய்தி வரலாற்றில் கிடையாதே! கேட்டதுண்டா? கண்டதுண்டா?

திருச்சியிலிருந்த தந்தை பெரியாரைக் காணவேண்டும் என்று விரும்பிய அண்ணா, தம்முடன் நாவலர், கலைஞர், ஆகிய இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு திடுமெனப் புறப்பட்டுத் திருச்சி சென்று அன்பிலையும் அழைத்துக் கொண்டு அய்யாவைச் சந்தித்தாரே இரா. செழியன் போன்றோர் தடுத்தும் கேளாமல!

இந்தச் சமயத்தில் நான் சென்னையிலோ, திருச்சியிலோ இல்லை. ஆனால் அய்யாவைச் சந்தித்துத் திரும்பியவுடன், அண்ணாவை வீட்டில் பார்த்தபோது, “என்னண்ணா! அய்யாவை விட்டுப் பிரிஞ்சப்ப ஊரையே கூட்டிகிட்டு வந்திங்க, ஒங்களோட! இப்ப திரும்பப்போயி அவரோட சேரும்போது, தனியே போயிட்டீங்களே?” என்று கேட்டேன். என்னைத் தம் அருகில் அழைத்துக், காதோடு, “கல்யாணந்தாய்யா எல்லாருக்கும் எதிரிலே நடக்கும். அடுத்தது?” என்றார். குபிரென்று சிரித்தேன். இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.