அண்ணா சில நினைவுகள்/வியப்பு-வியப்பிலும் வியப்பு

விக்கிமூலம் இலிருந்து
வியப்பு-வியப்பிலும் வியப்பு!

டுவண் அரசின் ஊழியனாய், மாயூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, நான் அலுவல் புரிந்து வந்த போதிலும், நான் அதிக நாள் சென்னை வாசியாகத்தான் வாழ்ந்தேன். இங்கெனக்குச் சோற்றுக் கவலையில்லை, கலைஞர் வீடு என் வீடாயிருந்ததால்! அதிலும், தி. மு. க. ஆட்சி அமைந்த பிறகு, நான் சென்னை மாநகரில் தங்கும் நாள் அதிகரித்துவிட்டது. அரசு அலுவலராயிருந்தால் ஒய்வு பெற்றிருக்க வேண்டிய வயதில் அண்ணா முதலமைச்சரானார். வழக்கத்திற்கு மாறாக அதிகாலை எழுந்திருத்தல், மன உளைச்சல், புதிய பொறுப்புக்கள், கோப்புகள் பார்த்தல் இப்படியாக இயல்புக்கு மீறி உழைத்ததால் அண்ணா உடல் நலம் சீர்கெட்டது வெகு விரைவிலேயே!

அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னரும் அரசுப்பணிகளைக் கவனித்து வந்தார். ஒரு நாள் “விடுதலை” ஆசிரியர் என் நண்பர் வீரமணியும், நாகரசம்பட்டி நண்பர் என். எஸ். சம்பந்தமும் அண்ணாவைக் காண வீட்டுக்கு வந்தனர். “உக்காருப்பா!” என்றார் அண்ணா. வீரமணி உட்கார்ந்தார். சம்பந்தம் உட்காராமல் ஏதோ சொல்ல முயன்றார். “என்ன சம்பந்தம்?” எனஅண்ணா கேட்கவும், ஆத்திரம் மேலிட்ட வராய், “என்னங்கண்ணா! எங்க நாகரசம்பட்டி பள்ளிக் கூடத்துக்கு அய்யா பெயரை வைக்கிறதுக்கு நாவலர் அனு மதி குடுக்க மறுத்து file ஐத் தூக்கி மூஞ்சியிலே விட்டெறிஞ் சிட்டாருங்க!” என்றார் சம்பந்தம். அவரது சினத்தை ஆற்ற எண்ணி, “நெஜம்மா மூஞ்சியிலேவா விட்டெறிஞ் சார்?” எனக் கேட்டார் அண்ணா. உடனே புன்சிரிப்புடன் “இல்லிங்க; டேபிள் மேலேதான் போட்டார்.” என்று கூறிய சம்பந்தத்தைப் பார்த்து “சரி உட்காருங்க. அங்கே நம்ம சொக்கலிங்கம் (தனிச் செயலாளர்) இருப்பார்; பாருங்க!” என அண்ணா சொல்லவும், சம்பந்தமே சென்று அவரை அழைத்து வந்தார். அவரிடம் அண்ணா சொல்கிறார். “என்னங்க - நாகரசம்பட்டி - அதாவது தர்மபுரி டிஸ்ட்ரிக்ட்லெ - இவுங்க ஊர்ல. ஒரு ஹைஸ்கூல் இருக்குது. அதுக்குப் பெரியார் ராமசாமி உயர்நிலைப் பள்ளி அப்படிண்ணு பெயர் வைக்கிறதுக்காக ஒரு லட்சத்து இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்லெ கட்டடம் கட்டித் தந்திருக்காங்க. எழுபத்து அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தாலே டோனர் (நன் கொடையாளர்) சொல்ற பெயரை வைக்கலாம்னு நாம G. O. போட்டிருக்கோமே. அதை நாமே மீறலாமா! அந்த எஜுகேஷன் மினிஸ்டர் பீ. ஏ. நம்ம பண்டரிநாதன் இருப்பார். அந்த ஃபைலைக் கொண்டு வரச் சொல்லி, இந்த G. O. வையும் quote பண்ணி, இதன் பிரகாரம், பெரியார் பெயரைச் சூட்ட அனுமதிக்கப்படுகிறதுண்ணு order போடச் சொல்லுங்க உடனே” என்று ஒரே மூச்சில் இவ்வளவும் சொல்லி முடித்தார் முதலமைச்சர் அண்ணா.

பிறகு அவர்கள் இருவரிடமும் பேச்சை மாற்றினார். “என்னா வீரமணி! அய்யா எப்படியிருக்கார்? இந்த டுர் (tour) போடும் போது கொஞ்சம் பாத்துப் போடுங்கப்பா! மொதல் நாள் திருநெல்வேலி, மறுநாள் தர்மபுரிண்ணு எவ்வளவு distance! அதிலேயும், எங்கே போனாலும் அங்கங்கே நம்ம தோழர்கள் இருக்காங்க, அவுங்க வீடுகளிலேயே சூடா, பத்தியமா சாப்பிடணும். இப்ப தர்மபுரி மாவட்டத்திலே எங்கே கூட்டம்னாலும், நம்ம சம்பந்தம் வீட்லெதான் சாப்பாடுண்ணு வச்சிக்கணும். நான் அய்யாவோட சேர்ந்தப்போ, இப்ப எனக்கு என்ன வயசோ(60) அந்த வயசு அய்யாவுக்கு. அப்பவே வயிற்றுக் கோளாறு; பேதியாகும்; பொருட்படுத்தமாட்டாரு. அப்ப நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லே! அப்பவே அய்யா இறந்து போயிருப்பாரு. ஆனா மணியம்மா வந்த பிறகுதான் அவருக்கு இதிலே ஒரு திருப்பம். அவுங்க, அய்யாவை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அவுங்க இல்லேண்ணா நாம அய்யாவை எப்பவோ பறிகொடுத்துட்டுப் பரிதவிச்சிருப்போம். இவ்வளவு நாள் உயிரோட பாத்திருக்கவே முடியாது. அய்யா எவ்வள்வு நாள் இன்னும் வாழ்றாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லது! பாத்துக்குங்க-” என்று முடிக்கும்போது அவர் குரல் கரகரத்தது. உணர்ச்சி மீதுற, நாக்குழறியது. எதிரிலிருந்த இருவரும் உடனே எழுந்து, மேலும் அண்ணாவுக்குத் தொந்தரவு தர வேண்டாமென எண்ணி, விடைபெற்றனர்.

‘புதிய அன்னிபெச்ன்ட் புறப்படுகிறார்’ என்று 1949-ல் மண்ணியம்மையாரை வர்ணித்த அண்ணா இவர்தானா என்று, அவர்கள் இருவரும் கருதி, வியந்துகொண்டே சென்றிருப்பார்கள் என நான் எண்ணிச் சிந்தனையில் மூழ்கினேன். -

கல்வெட்டுச் சாசனமாய்ப் பொறித்து வைக்கத்தக்க ஒரு கடிதத்தை அண்ணா நியூயார்க் மருத்துவ மனையி னின்று பெரியாருக்கு எழுதினாரே. அதன் இறுதிப்பகுதியில் என்ன சொன்னார்:

“தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்த தில்லை; அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்.
தங்கள் அன்புள்ள அண்ணாதுரை. நியூயார்க் 10.10-68.”

நம்முடைய இயக்கத்தை வெறும் பயனையும் பதவியையும் எதிர்பார்க்கும் அரசியல் குழுவாக அமைக்காமல், பற்று பாசம் அன்பு அரவணைப்பு-இவற்றினடிப்படையில் அமைத்தார்களே! இயக்கத் தலைவர்களை வேறு யார் அய்யா என்றும் அண்ணா என்றும் வாஞ்சையுடன் அழைக்க முடியும்? அதனால்தானே பதினெட்டாண்டு இடை வெளிக்கும் பின் ஒரு முதலமைச்சர் தானே வலிந்து சென்று தன் தந்தையைக் கண்டார். ராஜாஜி வருத்தப் படுவாரே என்றார் ஒருவர். சென்னை வந்த பின்பு பார்க்கக்கூடாதா, திருச்சிக்குச் சென்று பார்க்க அப்படி என்ன அவசரம் என் றார் வேறொருவர். “என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப் படுத்தியவரே அவர்தான். முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால், அது மனிதப் பண்பே ஆகாது” என்று சொல்லிவிட்டார் அண்ணன்.

“அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். இன்றும் அவரையே தலைவராகக் கொண்டு தான் பணியாற்றி வருகிறேன்” என்றார் திருச்சியில். “தமிழ் நாட்டின் முதல் பேராசிரியரே பெரியார்தான். அவருடைய கல்லூரியில் பயின்றுவந்த மாணவர்கள் என்பது ஒன்றுதான் எங்களுக்கு உள்ள பெரிய தகுதி” என்று காஞ்சித் தலைவரே நாகரசம்பட்டியில் கூறினார். “தமிழகத்திற்கும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம், பெரியார் செய்திருக்கின்ற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள், ஓட விட்டிருக்கின்ற அறிவுப்புனல், உலகம் என்றுமே கண்டதில்லை. இனியும் காணப் போவதில்லை. இந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன் “தேசியம் என்பது மகா புரட்டு. இந்தியா என்கிறீர்களே அது மிகப்பெரிய கற்பனை. அவையிரண்டையும் உடைத் தெறிவதுதான் என்வேலை” என்றாரே பெரியார்! இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் putting centuries into capsules என்பார்களே அதுபோல” என்றார் அண்ணா.

பெரியாரின் கருத்துகளுக்கு சட்டவடிவம் தருவதற் காகத்தான் பதவியில் இருப்போம், எனத் திட்டவட்டமாகக் கூறித்தான், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட சம்மதம் தந்தார் அண்ணா.

அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்தது, மணியம்மை யாரை அவர் திருமணம் செய்து கொண்டதால்தான் என்ற கருத்தை நான் எப்போதும் மறுப்பவன். இதற்குச் சான்றாக அரூரில் 12. 7. 1968 அன்று அண்ணா பேசியதை நினைவு கூர்வோம்:- “என்னுடைய நண்பர்கள் எல்லாம் நான் பிரிந்து சென்றுவிட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூடத் தவறு. இந்த நாட்டு அரசியலை, கமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத் துவிட்டு, அவர்களுக்கு காம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து, அதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன்”

30.8.68 அன்று தர்மபுரியில் பெரியார் சிலைதிறப்பு விழா. இதற்குத் தேதி கேட்பதற்காக முன்பு ஒரு நாள் சம்பந்தம், அண்ணாவிடம் வந்து சென்றார். இப்போது அண்ணாவுக்கும். உடல் நலமில்லை. அய்யாவுக்கும் உடல் நிலை சரியில்லை. அதனால் ஒத்திவைத்திருக்கின்றோம். எனறு சொல்வதற்காக விடுதலை வீரமணியுடன் சம்பந்தம் வந்திருந்தார். அவர்களிடத்தில் அண்ணா அய்யாவும் அடிக்கடி ஹைக்கோர்ட் ஜட்ஜ் நியமனம் சம்பந்தமாநிறைய எழுதறார். ஏதாவது செய்யனும். நீதிபதிகள் யாரார், எப்ப ரிட்டையர் ஆகுறாங்க மற்ற particulars எல்லாம் எனக்கு வேணுமே, வீரமணி?” என்றார் அண்ணா. “இதோ! பத்து நிமிஷத்திலே போயி டைப் அடிச்சி குடுத்தனுப்புறோங்க” எனப் புறப்பட்டார்கள் இருவரும். “என் பெயரைக் கவர்மேல் எழுதி, நேராக என்னிடம் தரச் சொல்லுங்க!” என்றார் அண்ணா. “அதென்னத்துக்குங்க அவ்வளவு பயம்? நாங்களே கொண்டு வருகிறோம்” எனச் சென்றவர்கள் அரைமணியில் உண்மையாகவே கையில் Type செய்த தாளுடன் திரும்பி வந்தார்கள்!

“விடுதலையில் இவ்வளவு particularsம் readyயா வச்சிருக்கீங்களா?”

“இல்லீங்க! அய்யாவோட டயரியில இருந்து எழுதிக் கிட்டு வந்தேன்!” என்கிறார் சம்பந்தம்.

“அடெ; அய்யாவோட டயரியிலே இல்லாத விஷயமே ஒண்ணும் இருக்காது போலிருக்கே?” என வியக்கிறார் அண்ணா!

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே- என்ற புறநானூற்று வரிகள் என் நினைவில் நிழலாடின.