அண்ணா சில நினைவுகள்/கார் வள்ளல் யார்?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கார் வள்ளல் யார்?

“புத்தம் புதிய ஸ்டாண்டர்ட் டென் கார் கொண்டு வந்திருக்கேன் அண்ணா! இப்போதே புறப்பட்டால், இரவு ஊர் சேர்ந்து, நன்றாகப் படுத்துத் துரங்கிட்டு, காலையில் பரபரப்பு இல்லாமெ நிதானமா எழுந்து, திருமணத்தை நடத்தலாம் அண்ணா!” என்றேன்.

இடம் காஞ்சியில் அண்ணா வீடு. வெளியில் வந்து காரைப் பார்த்ததும், “அட ஆமாய்யா! புதிய Standard-10தான்! நம்ம திருவரம்பூர் காமாட்சி வந்திருக்காரே! டிரைவர் இல்லியா?“ என்று கேட்டார்கள் அண்ணா அவர்கள்.

“நீங்கள் இதில் சவாரி செய்து வருவதைப் பெருமை யாகக் கருதி, ஒட்டுநர் இல்லாமல், என்னை நம்பி, இந்தக் காரைக் கொடுத்தனுப்பிய வள்ளலின் பேரைக் கேட்டால், நீங்களே அசந்து (அயர்ந்து) போவீங்கண்ணா!” சிரிப்புக் கிடையே இவ்வாறு சொன்னேன்.

“அது யாரய்யா, அப்பேர்ப்பட்ட கருணையுள்ள கார் வள்ளல்?” எனக் கேட்டு முடிப்பதற்குள் “நம்ம திருவாரூர் கருணை எம். ஜமால்தான்” என்றதும், உண்மையிலேயே வியப்பும் மகிழ்வும் கொண்ட அண்ணா அவர்கள்-"சரி. இருவரும் சாப்பிட்டு ஒய்வெடுங்க. இரவு புறப்படலாம்,” என்று, நாங்கள் எதிர்பார்த்துச் சென்றதற்கு மாறாக ஒரு முடிவைச் சொல்லிவிட்டார்கள்!

தனியே வெளியில் வந்து “என்ன மச்சான்-நம்ம தந்திரம் பலிக்காது போலிருக்கே! என்ன செய்யலாம்? நீங்க ராத்திரிக்குக் கண் விழிச்சி ஒட்டி முடியுமா?" என்றேன் காமாட்சியிடம். “அதெல்லாம் சமாளிப்பேன். நீங்க பயப்படாதீங்க மச்சான்” என்று எனக்கு தைரியம் சொன்னார்-பின் காலத்தில் திருவரம்பூர் சட்டமன்ற தி. மு. க. உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட காமாட்சி!

எதற்காக அண்ணாவை அழைக்கப் போனேன்? திருவாரூர் நகராட்சித் தலைவராகப் பிறகு இருந்தவரும், கருணாநிதி அச்சக உரிமையாளரும், கஞ்சன் என்று நெருங்கிய நண்பர்களாலும் - ‘தஞ்சை மைனர்’ என அண்ணாவாலும்.கேலியாக அழைக்கப்பட்டவரும் ஆன ஜமால், ஏன் கார் கொடுத்தார்? சொல்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் எங்கு கழக நிகழ்ச்சி நடந் தாலும் தவறாமல் "இந்த இரட்டையர்"களைக் காணலாம். எங்கள் மாவட்டத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர் ஜாதி மனப்பான்மையும், வசதியான நில வளங்களும் உடைய முதலியார் வகுப்பிலிருந்து துணிவுடன் தொண்டாற்ற முன்வந்தவர்கள் இவர்கள் இருவரும். நெடிதுயர்ந்த தோற்றமும், இளம் வழுக்கைத் தலையும் கொண்ட வெங்கிடங்கால் சந்தானம், ஒருவர்.

இவரைத் தாய் மாமனாகவும், சகோதரியின் கணவராகவும் கொண்டவரான வாழைக்கரை இராச கோபால் இன்னொருவர். பிறகு நாகை சட்ட மன்ற உறுப்பினராயிருந்த வழக்கறிஞர் இராச மாணிக்கம் இராசகோபாலின் தம்பியாவார்.

இப்போது, வாழைக்கரை ராசகோபால் திருமணத்துக்குத் தலைமை ஏற்பதற்காகத்தான், அண்ணாவைத் தாமதமின்றி அழைத்துவரும் பெரும் பொறுப்பில் என்னை அமர்த்தியிருந்தார்கள். காஞ்சியில் இரவு உண்வுக்குப் பின்புறப்பட்டு, (over night) இரவோடிரவாகத் திருவாரூர்-திருக்குவளை கடந்து, வாழைக் கரைக்கு அதிகாலையில் போய்ச்சேர வேண்டுமே!

திருமண வீட்டார் எதிர்பார்த்தபடி முதல் நாளிரவே இயலாவிட்டாலும், விடிவதற்குள் அண்ணாவை அவர்கள் கண்களில் காண்பித்து விட்டதால், எனக்கு நிரம்பப் பாராட்டு! அண்ணாவைச் சிறிதுதுரங்க அனுமதித்தார்கள்; ஆனால் என்னைத் துரங்கவிடவில்லை!

கையில் காகிதமும் பேனாவும் தந்து, எதிரிலுள்ள தோட்டத்திற்கு இட்டுச் சென்றார் சந்தானம். “கவிஞரே! சாயங்காலம் மதுரை சோமு கச்சேரி இருப்பது உங்களுக்கும் தெரியும். அவரும் இப்போதே இங்கு வந்துவிட்டார். அவரைக் கேட்டதில், அவருக்குக் கழகப்பாடல் ஒன்றும் தெரியாதாம். நீங்க ரெண்டு பாட்டு எழுதித் தாங்க. அண்ணா முன்னால பாட அவர் விரும்புறாரு” என்றார் மணமகன் ராசகோபால். நினைவாற்றல் மிக்க நண்பர் ராசகோபால் இப்போது இருந்தால் நான் அன்றைக்கு எழுதித் தந்த பாடல்களை அப்படியே ஒப்பிப்பார். நான் அப்போது எழுதித்தந்ததை மறந்துவிட்டேன். ஒரு பல்லவி மட்டும் நினைவில் நிற்கிறது :

மூன்றெழுத்து மந்திரத்தை மொழிவாய் என் தோழி-திராவிட
முன்னேற்றக் கழகம் என்றும் நமக்காக வாழி!”

-இன்னொன்று, விருத்தம். இரண்டு பாடல்களையும் இசைமேதை மதுரை சோமு, அழகுறத் தாமே இசை யமைத்து இன்பமாய்ப் பாடினார் மாலை இசையரங்கில்.

அண்ணா ஊருக்குத் திரும்பிடப் புறப்படுகையில் “என்ன கருணானந்தம், போவோமா!” எனக் கேட்க, நான் வரவில்லை எனத் தலையசைத்தேன். “அவ்வளவு தானா; தேர்தல் நேரத்தில் ஒட்டுப் போட வாக்காளரை அழைத்து வரக் கார் தந்து, திரும்பும்போது, நடந்து போகச் சொல்வார்களே-அப்படியா?“ என்று நகைச்சுவை வழங்கினார்கள். அப்படியில்லையண்ணா திரும்பிப் போக உங்களுக்கு அதே காரைத் தருகிறார் ஜமால்!” என்று கூறி வழியனுப்பி வைத்தோம்.