உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா நாற்பது/அறிஞர் அண்ணாதுரை வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

அறிஞர் அண்ணாதுரை வரலாறு


பல்லவப் பேரரசின் நல்ல தலைநகராய்த் திகழ்ந்த காஞ்சிபுரத்தில், 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் நடராசன் அவர்கட்கும் பங்காரு அம்மையார்க்கும் அரும்பெறல் மைந்தராய் அறிஞர் அண்ணாதுரை பிறந்தார்; உள்ளுரிலுள்ள பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரமும் அரசியலும் பயின்று 1935-ஆம் ஆண்டில் எம். ஏ. (M.A.) பட்டம் பெற்றார்.

அண்ணாதுரை அரசியல் உலகில் கால்வைக்குமுன்னரே, காஞ்சி நகராட்சி அலுவலகத்தில் கணக்கராயும் மற்றும் பள்ளியாசிரியராயும் பணியாற்றியுள்ளார். தம் வாழ்க்கைத் துணைவியாக இராணியம்மையாரை மணந்துகொண்டார்.

அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய அண்ணாதுரை, முதல்முதலாக, பெரியார் ஈ. வே. இராமசாமியவர்கள் செல்வாக்குற்றிருந்த நீதிக்கட்சியில் சேர்ந்தார். பின்னர், பெரியார் ஈ.வே.ரா. அவர்களால் 1947-இல் அமைக்கப்பெற்ற திராவிடர் கழகத்தில் சேர்ந்து, அதன் பொதுச் செயலாளராகவும் 'விடுதலை' என்னும் இயக்க நாளிதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1949-ஆம் ஆண்டு பெரியார் அவர்களோடு கருத்து வேறுபாடு கொண்டு 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் இயக்கம் (கட்சி) தோற்றுவித்தார். அவரைப் பின்பற்றிய நூறாயிரக்கணக்கான தொண்டர்கள் 'அண்ணா அண்ணா' எனப் போற்றி அவரைத் தெய்வமாக வழிபட்டு வரலாயினர். 'அறிஞர்' என்னும் அரும்பெரும் பட்டமும் அவருக்குச் சூட்டப்பட்டது. தலைசிறந்த அரசியல் வல்லுநர் அவர்.

அறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் திறம்பெறப் பேசவும் எழுதவும் வல்லவர். அவர் எழுதிய நூற்கள் பல. ஒவியம், நாடகம் முதலிய கலைகளிலும் வல்லுநர் அவர். காட்சியிலும் பேச்சிலும் எளியர், இனியர்; எவரையும் ஈர்க்கும் இயல்பினர். திராவிடநாடு, காஞ்சி, ஹோம்லாண்ட் என்னும் இதழ்களும் நடத்தியுள்ளார்.

அறிஞர் தம் கொள்கைக்காக ஏழுமுறை சிறை சென்றுள்ளார். 1957-இல் காஞ்சிபுரம் தொகுதியில் நின்று தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1962-இல் அதே தொகுதியில் தோல்வியுற்றார், பின் டில்லிப் பாராளுமன்ற இராச்சிய அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 1967-இல் தென்சென்னையிலிருந்து டில்லிப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். உடனே விலகி, தமிழக மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்றுத் தமிழகத்தின் முதலமைச்சரானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாவிற்கு 'டாக்டர்' பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது.

அவர் 1968-ஏப்ரல், மே திங்கள்களில் ரோம், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் முதலிய நாடுகட்குச் சென்று நாட்டுப் பெருமையினை நாட்டி வந்தார். அமெரிக்காவில் 'யேல்' பல்கலைக்கழகத்தில் ஐந்துநாள் தங்கித் திருக்குறள் வகுப்பு நடத்தினார். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் நியூயார்க் சென்று புற்றுநோய்க்கு மருத்துவம் பெற்று நலமுற்று வந்தார். மீண்டும் புற்றுநோயால் தாக்குண்டு சென்னையில் 1969 பிப்ரவரி 2-ஆம் நாள் நள்ளிரவு இறுதியெய்தினார்.

வரலாறு கண்டறியாத அளவில், பன்னூறாயிரவர் 'அண்ணா அண்ணா' என்று அலறிப் பதறி அழுது புலம்ப அண்ணாவின் உடலம் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டுச் சென்னை 'மெரினா' கடற்கரையில் அரசச் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

அறிஞர் அண்ணா புகழ் வாழ்க!