உள்ளடக்கத்துக்குச் செல்

அதிகமான் நெடுமான் அஞ்சி/படர்ந்த புகழ்

விக்கிமூலம் இலிருந்து

5. படர்ந்த புகழ்


அதிகமானுடைய வீரத்தைப் பாடிய ஔவையார் அவனுடைய ஈகையையும் வெவ்வேறு வகையில் அழகாக விரித்துப் பாடினார். அவனை எத்தனை பாராட்டினாலும் அவருடைய நாத்தினவு தீரவில்லை.

ஒரு புலவன் அதிகமானை நோக்கி வருவான். தன் சுற்றத்தாரையும் அழைத்துக்கொண்டு வருவான். அவனையும் அவர்களையும் வரவேற்று உபசரிப்பான் அதிகமான். அவர்களுக்கு இனிய விருந்தளித்து மகிழ்வான். பல நாட்கள் தன்னுடனே இருந்து தனக்குத் தமிழ் விருந்து அளிக்க வேண்டுமென்று சொல்வான். அவர்களுக்குப் பலவகைப் பரிசில்களை வழங்கி, அவர்களைப் பிரிய மனம் இல்லாமல் விடை கொடுத்து அனுப்புவான். அப்புலவன் மீட்டும் வந்தால், “முன்பே வந்தவன்தானே?” என்று புறக்கணிக்கமாட்டான். பலமுறை வந்தாலும் அன்பில் சிறிதும் குறையாமல் பழகுவான். எத்தனை பேருடன் வந்தாலும் மனமுவந்து குலாவுவான். இந்தப் பண்புகளை ஔவையார் எடுத்துரைத்தார்.

ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;
பல்நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ![1]

[செல்லலம்-காம் செல்லவில்லை. தலைநாள் போன்ற -முதல் நாளில் காட்டியதைப் போன்ற.]

தமிழ் நூல்கள் படிக்கப் படிக்கப் புதுமைச் சுவை உடையனவாகத் தோன்றும் என்று புலவர்கள் கூறுவார்கள். தமிழ்ப் புலவர்களோடு பழகப் பழக அவர்கள் புதிய புதிய தமிழ்ச் சுவையையும் அறிவையும் தனக்கு ஊட்டுவதாக எண்ணினான் அதிகமான். அதனால் அவர்கள் எப்போது வந்தாலும் தலைநாளில் காட்டிய அன்பிலே சிறிதும் குறைவின்றிக் காட்டி வந்தான்.

“நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு” [2]

என்பதை நன்கு உணர்ந்தவனாகி ஒழுகினான் அப்பெரு வள்ளல்.

அதிகமானைக் கண்டு பரிசிலைப் பெற்று உடனே தம் ஊரை அடைய வேண்டும் என்று சில புலவர்கள் வருவார்கள். அதிகமானோ அவர்களை எளிதில் விடமாட்டான்; சில காலம் தங்கிப் போகவேண்டும் என்று வற்புறுத்துவான். தமக்கு நாள்தோறும் உபசாரமும் இனிய விருந்தும் கிடைக்க, அரச குமரரைப்போல அவர்கள் இன்புற்றுத் தங்கினாலும், அவர்களுடைய உள்ளம் தாம் விட்டு வந்த வீட்டைச் சிலகால் நினைக்கும். தம் மனைவி மக்கள் அங்கே போதிய உணவில்லாமல் துன்புறுவதை எண்ணித் தனியே அவர்கள் பெரு மூச்சுவிடுவார்கள். ‘பரிசில்கிடைக்குமோ கிடைக்காதோ! இப்படியே விருந்துண்ணச் செய்துவிட்டுப் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டால் என் செய்வது?’ என்று கூடச் சிலர் தம் மனத்துக்குள்ளே வருந்துவதுண்டு.அவர்களுக்கு அதிகமானது இயல்பை வெளிப்படுத்துவதுபோலப் பாடலை அமைத்தார் ஔவையார். அதிகமான் வழங்கும் பரிசிலைப் பெறுவதற்குரிய காலம் நீண்டாலும், நீளாவிட்டாலும் அது உறுதியாகக் கிடைக்கும். யானை கரும்பை வாங்கித் தன் கொம்புகளினிடையே வைத்துக் கொள்கிறது. அடுத்த கணம் அதை வாய்க்குள் செலுத்துகிறது. கொம்பிலே வைத்தது எப்படி அந்த யானைக்கு உணவாவது நிச்சயமோ, அதுபோல அதிகமானை அணுகினவர்கள் பரிசில் பெறுவதும் நிச்சயம். இங்கே வந்தவர்களுக்கு அவன் தரும் கொடைப் பொருள் அவர்கள் கையில் இருப்பது போன்றதுதான். ஆகவே, அவன் தரும் பொருளை நுகரவேண்டுமென்று ஆவலுடன் உள்ள நெஞ்சமே, நீ வருந்தாதே! அவனுடைய நன் முயற்சிகள் ஓங்கி வாழட்டும்!” என்று தமக்குத்தாமே சொல்லிக் கொள்ளும் வகையில் அந்தச் செய்யுளைப் பாடினார்.

அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது; அது பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்,
வருந்த வேண்டா! வாழ்கவன் தாளே.[3]

[யானையையும் இயலுகின்ற தேரையும் உடைய அதியமான; இயலுதல்-ஓடுதல். கீட்டினும் தாமதமானாலும். அருந்தேமாந்த-அருந்த ஏமாந்த; பரிசில் பொருளைப்பெற்று நுகரவேண்டும் என்று எண்ணி ஏங்கி நின்ற, நெஞ்சம்-நெஞ்சமே, தாள்-முயற்சி.]

யாழ் முதலிய கருவிகளால் இசை எழுப்பியும் தாமே பாடியும் இசையை வளர்க்கும் கலைஞர்கள் பாணர்கள். அவர்களுடைய மனைவியர் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களை விறலியர் என்று கூறுவர். பாணரும் விறலியரும் எப்போதும் நாடு முழுவதும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அங்கங்கே உள்ள செல்வர்களை அணுகித் தம் கலைத் திறமையைக் காட்டிப் பரிசு பெறுவார்கள். எங்கே கொடையிற் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்று நாடிச் செல்வார்கள். ஒரு கொடையாளியிடம் பரிசில் பெற்ற பாணன் வேறு ஒரு பாணனைச் சந்தித்தால், தான் பெற்ற இன்பத்தை அவனும் பெறட்டும் என்று எண்ணி, அந்தக் கொடையாளியின் சிறப்பை அவனுக்கு எடுத்துரைப்பான்; அவன் இருக்கும் இடத்துக்குப் போக வழி இன்னது என்று கூறுவான். இப்படி வழி காட்டுவதாகப் புலவர்கள் பாடல்கள் பாடி வள்ளல்களை வாழ்த்துவார்கள். அந்த வகையில் அமைந்த பாடலை ஆற்றுப்படை என்று சொல்வர். ஒரு புலவன் வேறொரு புலவனிடம் தனக்குப் பரிசில் வழங்கிய வள்ளலிடம் செல்ல வழி காட்டுவதானால் அதற்குப் புலவராற்றுப்படை என்று பெயர் அமையும். கூத்துக்கலையில் வல்லவனுக்கு மற்றொரு கூத்தன் சொன்னால் அது கூத்தராற்றுப்படை என்ற பெயர் பெறும். அப்படியே பாணனைப் பார்த்துச் சொல்வதைப் பாணாற்றுப்படையென்றும், விறலிக்கு வழி காட்டுவதை விறலியாற்றுப்படையென்றும் பெயரிட்டு வழங்குவர். நேரே ஒருவனுடைய புகழைச் சொல்வதைவிட இப்படி ஆற்றுப்படை உருவத்தில் பாடுவது சுவையாக இருக்கும்.

ஔவையார் அதிகமான் புகழை விறலியாற்றுப் படையுருவில் அமைத்துப் பாடினார். அந்தப் பாட்டில் அதிகமானுடைய வீரத்தையும் கொடை இயல்பையும் இணைத்துப் பாடினாள். அந்தக் கற்பனையைச் சற்றே பார்ப்போம்.

ஒரு விறலி தன்னுடைய சுற்றத்தாருடன் தன் வறுமையைத் தீர்க்கின்ற செல்வர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு மலையும், குன்றும், நடக்க அரிய பொட்டல் காடுமாகப் போய்க்கொண்டிருக்கிறாள். உடன் வருகிறவர்கள் அவள் ஆடினாலும் பாடினாலும் வாசிப்பதற்குரிய இசைக் கருவிகளைக் கொண்டு வருகிறார்கள்; அவற்றை மூட்டையாகக் கட்டிச் சுமந்து வருகிறார்கள். அவள் கையில் வாய் அகன்ற வாணாய் இருக்கிறது. சோறு வாங்கிச் சாப்பிட வைத்திருப்பது அது. அதைக் கவிழ்த்து வைத்திருக்கிறாள். அதை நிமிர்த்திப் பிடிக்க யாரும் ஒன்றும் கொடுக்கவில்லை.

வழியில் இளைப்புற்று அவள் உட்கார்ந்திருக்கிறாள். அப்போது அவளை மற்றொரு விறலி சந்திக்கிறாள். இசைக் கருவிகளைக் கொண்டு அவள் விறலியென்று வந்தவள் தெரிந்து கொள்கிறாள்.

“ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்?” என்று கேட்கிறாள் வந்த விறலி.

“இவ்வளவு நேரம் நடந்து நடந்து சலித்துப் போனேன்; இங்கே உட்கார்ந்தேன். என்னுடைய பாத்திரத்தை நெடுநாளாகக் கவிழ்த்திருக்கிறேன்; அதை நிமிர்த்த யாரையும் காண முடியவில்லை” என்று அயர்ச்சியுடன் விடை கூறுகிறாள் ஏழை விறலி.

“அடடா! உன் வறுமையைப் போக்கும் பெருமான் ஒருவன் இருக்கிறான். அவனிடம் போ. அவனும் நெடுந்துாரத்தில் இல்லை. அருகில்தான் இருக்கிறான். இப்போதுதான் நல்ல சமயம். போனால் நிறையப் பொருளும் பொன்னும் கிடைக்கும்.”

“யார் அவன்? எங்கே இருக்கிறான்?”

“அவன் பெயர் அதிகமான் நெடுமான் அஞ்சி. அவன் தன் பகைவர்களோடு போரிட்டு அவர்களை அழித்து அவர்கள் ஊரைச் சுட்டு எரித்துவிட்டான். அப்படி எரிந்தபுகை அவனுடைய யானைகளைச் சுற்றித் தவழ்கிறது. அதைப் பார்த்தால் குன்றைச் சூழ்ந்த மஞ்சுபோலத் தோன்றும். பல வேல் வீரர்களுக்குத் தலைவனாகிய அஞ்சி போரிலே முகந்துகொண்ட பொருள்களோடு தன் நகரை அடைந்துவிடுவான். அதற்குள் நீ அவனிடம் போய்ச் சேர். அவனால் உன் வறுமை தீரும்.”

“அவன் வெற்றிப் பெருமிதத்தோடு இருக்கும் போது என்னைக் கவனிப்பானா?”

“இப்போதுதான் நன்றாகக் கவனிப்பான். இப்போது என்ன? உலகமெல்லாம் பஞ்சம் வந்துவிட்டாலும் அவன் தன்னை அடைந்தாரைப் பாதுகாப்பான். உன் பாத்திரமாகிய மண்டையை நிமிர்க்க வழியில்லை என்றல்லவா வருந்துகிறாய்? அங்கே போனால் அதைக் கவிழ்க்கவே முடியாது. பலவகை உணவுகளைக் கொடுத்துப் பாத்திரத்தில் அடை அடையாக உணவு ஈரத்துடன் படியும்படி செய்வான்.”

“அப்படியா! அப்படியும் ஒருவன் இருக்கிறானா”

“இருக்கிறான் அம்மா, இருக்கிறான். உடனேபோ, அவன் கொடையை அறிவாய். அவன் வாழட்டும்! அவன் முயற்சி ஓங்கட்டும்!” என்று வந்த புதியவள் வாழ்த்தினாள்.

இப்படி அதிகமானுடைய பகையை ஒழிக்கும் வீரத்தையும், உலகில் வறிய பஞ்சம் வந்தாலும் தன்பால் வந்தவர்களைப் போற்றிக் காக்கும் பண்பையும் ஓர் அழகிய கதையாக, இனிய காட்சியாக, கற்பனை செய்து காட்டினார் ஔவையார்[4].

வேறு ஒரு கற்பனைக் காட்சியிலும் அதிகமானுடைய ஈகையையும் வீரத்தையும் இணைத்தார் அப்பெருமாட்டியார். அந்தப் பாட்டு, ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காத்ல் நிகழ்ச்சிகளைச் சொல்லும் அகப்பொருள் வகையைச் சேர்ந்தது.

ஓர் ஆடவன் தன் மனைவியை விட்டுச் சில நாள் பிரிந்து பொதுமகள் ஒருத்தியின் தொடர்பு உடையவனாக இருந்தான். அதனால் அவன் மனைவி மிகவும் வாடினாள். அவன் மீண்டும் வந்தான். தன் கணவன் என்ன தீங்கு செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவ னுடன் வெறுப்பின்றி வாழும் கற்புடைய மகளாதலின் அவனை அவள் வெறுக்கவில்லை. இதை அவளுடைய தோழி கண்டாள். தீய ஒழுக்கத்தையுடைய ஆடவனிடம் கோபத்தைக் காட்டினால்தான் அவன் திருந்துவான் என்பது அத்தோழியின் எண்ணம். ஆனால் அந்தப் பெண் மணியோ சிறிதும் வருத்தத்தையோ வெறுப்பையோ காட்டாமல் அவனை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டாள். இதை அறிந்த தோழி அந்த மங்கை நல்லாளைப் பார்த்து, “ஒன்றோடு ஒன்று பிணங்கிச் சிக்கலாகப் பிரம்புகள் குளத்தில் வளர்ந்திருக்கின்றன. அவற்றில் கனிகள் பழுத்திருக்கின்றன; வளைந்து தொங்குகின்றன. ஆழமான நீரையுடைய குளத்திலுள்ள மீன்கள் அந்தப் பிரப்பம் பழங்களைக் கவ்வுகின்றன. இந்தக் காட்சியை உடைய துறைகள் பல இந்த ஊரில் உண்டு. இத்தகைய ஊரிலுள்ள தலைவனுக்கு எதிர் பேசாது அவன் செய்யும் கொடுமைகளுக்கெல்லாம் உட்பட்டுப் பொறுத்து, அவனை ஏற்றுக்கொள்ளும் கற்பிற் சிறந்த பெண்டாட்டியாக நீ இருக்கிறாய், இப்படியே இருந்து கொண்டிருந்தால் என்ன ஆகும் தெரியுமா? அவன் தன் போக்கிலே போவதை நிறுத்தமாட்டான். இதை நீ தெரிந்து கொள்ளாமல் நல்ல பெண்டாட்டியாகவே இருந்தால், எனக்கென்ன? உன் நெஞ்சிலே உண்டாகும் துயரம் பலவாகட்டும்! நீ உன் அவல நிலையை எண்ணி எண்ணித் தூக்கம் வராமல் கிடப்பாயாக! நீ தூங்குகிற நாட்கள் சிலவாக இருக்கட்டும்!” என்று சொன்னாள். அவள் சொல்வதாகப் பாட்டு அமைந்திருக்கிறது.

அந்தப் பாட்டில் அதிகமானுடைய ஈகையையும் வீரத்தையும் ஔவையார் எப்படி இணைத்தார் தெரியுமா? “நீ தூங்குகிற நாட்கள் சிலவே ஆக இருக்கட்டும்” என்னும் போது, ஓர் உவமை கூறுகிறாள் தோழி. “எப்போதும் நிறுத்தாமல் கொடுக்கும் மழை போன்ற வள்ளன்மையையுடையகையையும்,விரைந்துசெல்லும் ஆண் யானைகளையும், உயர்ந்த தேரையும் உடைய நெடுமான் அஞ்சி, பகைவரை அழிக்கும் போர்க் களத்துக்கருகில் உள்ள ஊர்க்காரர்கள், பல நாள் கவலையோடு விழித்திருந்து சில நாளே தூங்குவார்கள்; அப்படி நீ தூங்கும் நாட்கள் சிலவாகவே அமைக” என்று அதிகமானுடைய ஈகையையும் வீரத்தையும் இணைத்துச் சொல்கிறது அந்தப் பாட்டு.

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை ஆயின்
பலவா குகதின் நெஞ்சிற் படரே !
ஓவாது ஈயும் மாரி வண்கைக்
கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி
கொல்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சும் நாளே!

[5].

[அரில்-ஒன்றோடு ஒன்று சிக்கிப் பிணைந்த பிணைப்பு. பவர்- கொடி. வரிப்புறம்- கோட்டையுடைய வெளிப்பக்கம். குண்டு - ஆழம். இலஞ்சி - குளம். கதூஉம் - கவ்வும். பெண்டினை - அடங்கிய மனைவியாக இருப்பவள். படர் - துயரம். மாரி வண்கை - மழைபோன்ற வள்ளன்மையையுடைய கை. கடும் பகட்டு யானை - வேகமாகச் செல்லும் ஆண் யானை. கொல் முனை - பகைவரைக் கொல்லும் போர்க்களம். இரவு ஊர் போல - இரவையுடைய ஊர்க்காரர்களைப்பல. துஞ்சும் - உறங்கும்.]

இவ்வாறு அதிகமான் நெடுமான் அஞ்சியின் பல வகைப் புகழ் ஔவையாரென்னும் புலமைப் பெருஞ்செல்வியாருடைய பாட்டாகிய கொழுகொம்பில் ஏறித் தமிழுலகம் எங்கும் பரவிப் படர்ந்து மலர்ந்தது.


  1. புறநானூறு, 101.
  2. திருக்குறள், 788.
  3. புறநானூறு, 101
  4. புறநானூறு, 103.
  5. குறுந்தொகை, 91