அதிகமான் நெடுமான் அஞ்சி/முற்றுகை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11. முற்றுகை


கோட்டையைச் சுற்றி இப்போது கூட்டமான படைகள் நிற்கவில்லை. யாவரும் பாசறையிலே இருந்தார்கள். சில வீரர்களே வில்லும் அம்புமாகக் கவசத்தை அணிந்துகொண்டு கோட்டையைச் சூழ நின்றார்கள். காரியோ, பிட்டங் கொற்றனோ குதிரையின் மேல் ஏறிக்கொண்டு கோட்டையைச் சுற்றிவந்து அங்கங்கே நின்ற வீரருக்கு ஊக்கம் அளித்துவந்தனர். அங்கே நின்ற வீரர்களேயன்றி மற்றவர்கள் பாசறையில் விருந்துண்டு களித்தார்கள்; கதை பேசி இன்புற்றார்கள். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் ஒரு வேலையும் இல்லை. காவல் வீரர்கள் மாத்திரம் மாறி மாறி நின்றார்கள்.

ஐந்து நாட்கள் இப்படியே கழிந்தன. எந்த விதமான மாற்றமும் உண்டாகவில்லை. அதிகமான் உள்ளே இருந்தான். சேரன் வெளியிலே இருந்தான். போர் நடப்பதாகவே தோன்றவில்லை.

மறுபடியும் சேரமான் படைத்தலைவர்களோடு ஆராய்ந்தான். “இப்படியே ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருந்தால் என்ன செய்வது? நாம் அயல் நாட்டில் அதிகமான் வெளியே வருவானென்று காத்துக்கிடக்கிறோம். நம்முடைய அரண்மனை வாயிலில் தம் குறைகளைக் கூறக் காத்துக்கிடக்கும் குடிமக்களைப் போலவே இருக்கிறோம். அதிகமானே உள்ளே இனிமையாக உறங்குகிறான். இப்படியே இருந்தால் நம் எண்ணம் என்னாவது ?” - சேரமான்தான் பேச்சைத் தொடங்கினான்.

“அதிகமான் வெளியிலே வந்தால் இரண்டுநாள் நம்மோடு எதிர் நிற்க முடியாது” என்றான் நெடுங்கேரளன்.

“வெளியே வந்தால் என்றல்லவா சொல்கிறாய்? அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா என்பதுபோல இருக்கிறதே!” என்று சேரன் கூறும்போது அவன் உள்ளத்தில் இருக்கும் பொருமல் வெளியாயிற்று.

“பிட்டங் கொற்றனார் கருத்து என்ன ?” என்று காரி கேட்டான்.

“பெரியவர்களாகிய நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன தெரியும்?”

“இல்லை, உன்னுடைய கருத்தைச் சொல் அப்பா” என்றான் சேரன்.

“நாம் இங்கே வந்து ஐந்தே நாட்கள் ஆயின. இது நீண்டகாலம் அன்று. இன்னும் சில நாட்கள் இப்படியே முற்றுகையை நடத்திக்கொண்டிருப்போம். எவ்வளவு காலம் அவர்கள் உள்ளே இருப்பார்கள் ?” என்றான் அவன்.

“மாதக் கணக்காக இருந்தால் என்ன செய்வது?” என்று நெடுங்கேரளன் கேட்டான்.

“இருக்கலாம். ஆனல் அவர்கள் பசியா வரம் பெற்றிருக்கவேண்டும். உள்ளே சில நாட்களுக்கே உரிய உணவைச் சேமித்து வைத்திருப்பார்கள். அது தீர்ந்ததென்றால் அதிகமான் கோட்டைக் கதவைத் திறக்கத்தானே வேண்டும்?” என்றான் பிட்டங் கொற்றன்.

பிட்டங் கொற்றன் கூறியது பொருளுடையதாகப் பட்டது சேரனுக்கு. “ஆம், அதுவும் ஒருவாறு கருதத் தக்கதுதான்” என்றான் மன்னன்.

“நம்மிடமும் ஓரளவுதானே உணவுப் பொருள்கள் இருக்கின்றன?” என்று ஒரு கேள்வி போட்டான் நெடுங்கேரளன். அவன் ஆண்டில் இளையவன்; மிக்க அனுபவம் இல்லாதவன்.

அரசன் சிரித்துக்கொண்டான். “உனக்கு உணவுப் பஞ்சம் வராது; நீ அஞ்சவேண்டாம். நாம் வெளியிலே நிற்கிறோம். சேரநாட்டிலிருந்து உணவுப் பொருளை நாம் வருவித்துக் கொள்ளலாம். உள்ளே இருப்பவர்களுக்கு வெளியிலிருந்து சென்றாலன்றி வழி இல்லை. கோட்டையைத் திறந்தால்தானே வெளி உணவு உள்ளே செல்லும் ?”

நெடுங்கேரளன் தலையைக் குனிந்துகொண்டான். பிட்டங் கொற்றன் , “உணவுப்பொருளை நம் நாட்டிலிருந்து வருவிப்பதற்கு முன்னரே, மூங்கில்களையும் வருவிக்க வேண்டும். அவை வந்துவிட்டால் நாம் பாலம் போட்டுக் கோட்டையைத் தகர்க்க முயற்சி செய்யலாம்” என்றான்.

“உம்முடைய யோசனை என்ன ?” என்று மன்னன் காரியை நோக்கினான்.

“மூங்கில் பாலம் போட்டுப் போரிடுவது எளிதன்று. கோட்டையை அணுகினால் அவர்கள் மேலிருந்து பாறையை உருட்டி விடுவார்கள். அவர்களைப் பட்டினி போட்டு வெளியிலே வரச் செய்வதுதான் தக்கதென்று தோன்றுகிறது.”

காரியின் சொற்கள் எப்போதுமே ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக வருபவை என்பதை அரசன் உணர்ந்தான்; மற்றவர்களும் உணர்ந்தார்கள். அவன் கூறியபடியே முற்றுகையை நீட்டித்தார்கள்.

பத்து நாட்கள் ஆயின; இருபது நாட்கள் ஆயின. சேரன் பொறுமையை இழந்தான். “நான் வஞ்சிமா நகர் செல்கிறேன். நீங்கள் இருந்து போரை நடத்துங்கள்” என்றான்.

காரி உடனே பேசினான்: “அப்படிச் செய்வது தவறு. அரசர் பெருமான் இப்போது இங்கிருந்து போய்விட்டால் அது தோல்வியை வரவேற்பதுபோல ஆகிவிடும். படை வீரர்களுக்கு ஊக்கம் குறையும். எதற்காகத் தாங்கள் போகிறீர்கள் என்பதை அவர்கள் தெளிய மாட்டார்கள்; ஐயம் அடைவார்கள். காத்தது காத்தோம்; இன்னும் சில காலம் பார்க்கலாம். முன் வைத்த காலைப் பின் வைப்பது வீரம் அன்று.” இவ்வாறு அவன் சொன்னதை மறுத்துப் பேசச் சேரனால் இயலவில்லை.

உள்ளே அதிகமான் நிலை என்ன என்பதைப் பார்க்கலாம். வெளியிலே படைகள் தொகுதியாக நிற்கவில்லையென்பதை அவன் கண்டான். சேரனுடைய கருத்து அவனுக்குத் தெளிவாயிற்று. சேரன் எத்தனை காலம் வெளியிலே நின்றிருந்தாலும் அதுபற்றி அவனுக்குக் கவலை இல்லை. தன் அரண்மனையில் தானே அவன் இருந்தான்? ஒரு மாத காலத்துக்கு வேண்டிய உணவு அவனுக்கு இருந்தது. அதற்கு மேலும் உணவுப் பொருளை வெளியிலிருந்து வருவிக்கும் வழி அவனுக்குத் தெரியும்; யாரும் அறியாத சுருங்கை வழி இருக்கவே இருக்கிறது.

உள்ளே அதிகமான் வீரர்களுக்கு ஊக்கம் ஊட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய படையின் பெரிய தலைவனுக்குப் பெரும்பாக்கன் என்று பெயர். அவனுக்குப் படைக்கலங்களை உதவிப் போர்க்குரிய பொற்பூவை அணிந்து சிறப்புச் செய்தான்.[1] தன்னுடைய வீரர்களையெல்லாம் வயிறாரச் சாப்பிடச் சொன்னான். அவர்களுடன் தானும் அமர்ந்து உண்டான்.[2] இத்தகைய செயல்கள் வீரர்களுக்கு அதிகமான்பால் இருந்த அன்பைப் பன்மடங்கு மிகுதியாக்கின.

தோள் தினவெடுத்த வீரர்களுக்குப் பகைப் படைகளுடன் எதிர்நின்று தம்முடைய வீர்த்தைக் காட்டும் வாய்ப்பு வரவில்லையே என்ற ஏக்கம் உண்டாயிற்று. திருமணத்தில் ஒன்றுகூடி விருந்துண்பது போல அல்லவா அவர்கள் உண்டு களிக்கிறார்கள்?


  1. தகடுர் யாத்திரை (தொல். புறத். 63, உரை)
  2. தகடூர் யாத்திரை (புறத்திரட்டு, 1258.)

ஔவையாரும் கோட்டைக்குள் இருந்தார். அதிகமானுடைய பொழுது இனிமையாகக் கழிவதற்குக் கேட்க வேண்டுமா? கதவைத் திறந்துகொண்டு வெளியிலே சென்று போர் செய்வதாக இருந்தால் தான் அவனுக்கு வேலை இருக்கும். இப்போது ஒரு வேலையும் இல்லை. புறத்திலே இருப்பவர்கள் மதிலைக் குலைத்துக்கொண்டு உள்ளே வந்தால் அப்போது கடும் போர் மூளும்; அவனுக்கு வேலை இருக்கும். அது நடக்கக்கூடியதா ?

சில சிறிய படைத் தலைவர்கள், “எத்தனை காலம் இப்படியே வெட்டிச்சோறு தின்றுகொண்டு கிடப்பது?” என்று பேசிக் கொண்டார்கள்.

“கதவைத் திறந்துவிட்டுப் போர்க்களத்திலே குதித்துச் சேரன் படைகளை உழக்கிக் குலைத்து ஓட்டி விடலாம். நம் அரசர்பெருமான் எதற்காக அடைத்துக் கிடக்கிறாரோ, தெரியவில்லை” என்றனர் சிலர்.

“வெற்றியோ தோல்வியோ, விரைவில் முடிவு காணுவதுதான் நல்லது. இப்படியே நாம் இருந்தால் நம் படைக்கலங்கள் துருப்பிடித்துப் போய்விடும் ; நம் வலிமையும் துருவேறிவிடும்” என்றனர் சிலர்.

அவர்கள் பேசிக்கொள்வதை ஒருவாறு அதிகமான் உணர்ந்தான். ஔவையாரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, “இப்போதே கதவைத் திறந்து கொண்டு, ஆட்டுமந்தையில் புலி பாய்வதுபோல நாம் சேரன் படைமேல் பாயவேண்டுமென்று சில இளமை முறுக்குடைய வீரர்கள் பேசிக்கொள்கிறார்களாம். பொறுத்திருக்க வேண்டுமென்று அவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

அன்று யாவரும் ஒன்றாக இருந்து உண்ணும் போது ஔவையார் வந்தார். எல்லோரையும் பார்த்தார். அதிகமான் சொன்னபடி செய்தார். வீரர்களுக்கு நல்லுரை பகர்ந்தார் :

“நம்முடைய மன்னனுடைய பெருமையை நாளுக்கு நாள் மிகுதியாக உணர்ந்து பெருமிதம் அடைகிறேன். உணவுப் பொருள் இருந்துவிட்டால் எல்லோருக்கும் விருந்தளித்துத் தானும் உடன் உண்ணும் இயல்பை உடையவன் அவன். இப்போது உங்களுக்கு வேண்டிய உணவை அளிக்கிறான். மற்ற நாட்களில் என்னைப்போல வந்து இரப்பவர்களுக்கு எல்லையின்றிக் கொடுக்கிறான். நீங்கள் பெறுவதைவிட மிகுதியாகப் பெறுகிறவர்கள் அந்த இரவலர்களே. தான் அறிவிற் சிறந்தவனானாலும் அறிவு இல்லாதவர்களையும் இரங்கி ஆதரிக்கிறான், உயிர்க் கூட்டத்தின்பால் அவனுக்கு இருக்கும் கருணை அளவு கடந்தது.”

அந்தப் பெருமாட்டியார் இப்போது இதைச் சொல்ல வந்தது எதற்காக என்று பலர் எண்ணினார்கள். ஏதோ இன்றியமையாத செய்தியைச் சொல்லத்தான் அவர் முன்னுரை விரிக்கிறார் என்று படைத் தலைவர்கள் உய்த்துணர்ந்தார்கள் . ஔவையார் உரையைத் தொடர்ந்தார் :

“கருணை மிகுதி காரணமாக, அதிகமான் உடனே வெளியிலே சென்று போர்க்களத்தை உண்டாக்கத் துணியவில்லை. வீரம் இன்மையினாலோ, அச்சத்தாலோ அவன் கதவுகளைச் சாத்திக்கொண்டு இங்கே உட் கார்ந்து கொண்டிருக்கவில்லை.”

கதவைத் திறக்கவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ஏதோ குற்றம் செய்தவர்களைப் போன்ற நினைவினால் தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள். தமிழ்ப் பெருஞ்செல்வியார் தம் பேச்சை முடிக்கவில்லை ; பின்னும் பேசலானார் :

“நெருப்பை உண்டாக்க மரத்தைக் கடைய வேண்டும். அதற்கென்று தீக்கடைகோல் இருக்கிறது. கடைகோலை வீட்டின் இறப்பிலே செருகியிருப்பார்கள். அதைப் பார்த்தால், அதன் இயல்பு தெரியாதவர்களுக்கு என்னவோ கோல் என்று தோன்றும். ஆனால் எப்போது நெருப்பு வேண்டுமோ அப்போது அதை எடுத்துக் கட்டையைக் கடையத் தொடங்குவார்கள். கடையக் கடைய நெருப்புப் பிறந்து கொழுந்துவிடும். அப்போதுதான் அந்தக் கோலின் பெருமை தெரியும். அந்தத் தீக்கடைகோலைப் போன்றவன் நம் மன்னன்.”

ஔவையார் சிறிது பேசாமல் இருந்தார். உவமையை எதற்காகச் சொன்னார் என்று முன் இருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்புலமைப் பிராட்டியாரே உவமையை விளக்க முன்வந்தார்: “அந்தத் தீக் கடைகோல் வீட்டின் இறப்பிலே செருகியிருக்கும்போது தன் ஆற்றல் தோன்றாமல் வெறும் கோலாக இப்பதுபோல, மிடுக்கு அற்றவனைப் போல் அமைந்திருக்கும் இயல்பும் நம் அரசனிடம் உண்டு. தான் தோன்றாமல் இருக்கவும் வல்லவன் அவன். செவ்வி நேர்ந்தபோது அந்தக் கடைகோலில் எரிமுறுகி எழுந்து கொழுந்து விட்டுப் புறப்படுவது போல அவன் புறப்படவும் வல்லவன். இன்ன காலத்தில் இது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன் அவன். கிடக்கும்போது கிடந்து பாயும்போது நன்றாகப் பாயவல்ல பெரு வீரனையல்லவா நாம் மன்னனாகப் பெற்றிருக்கிறோம்?” பேச்சை முடித்த மூதாட்டியார் பொருள் செறிந்த பாடல் ஒன்றைச் சொன்னார்.

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
மடவர் மகிழ்துனை, நெடுமான் அஞ்சி,
இல்இறைச் செரீஇ ஞெலிகொல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்று அதன்

கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்,தான் தோன்றுங் காலே.

[உடையன் ஆயின் - உணவுக்குரிய பொருள்வளத்தை உடையனாக இருந்தால். கடவர்மீதும் - தான் காப்பாற்றக் கடமைப்பட்ட வீரர்களைவிட மிகுதியாக. ஈயும் அஞ்சி - துணையாகிய அஞ்சி. மடவர் - அறிவில்லாதார். இல் இறை - வீட்டின் இறப்பில். செரீஇய - செருகிய. ஞெலிகோல் - தீக் கடைகோல். கான்று - கனிந்து. படு - எழும். கனை எரி - கொழுந்துவிடும் நெருப்பு.]

ஔவையார் நல்லுரையும் பாடிய பாட்டும் வீரர்களின் வேகத்தை மாற்றி அமைதி பெறச் செய்தன.

வெளியிலே அன்று சேரமான் படைத் தலைவர்களோடு பேசினான். “விளையாட்டுப் போல இரண்டு மாதங்கள் ஆயினவே! எத்தனை நெல்லைத்தான் அவன் சேமித்து வைத்திருக்க முடியும்?” என்று கேட்டான்.

“ஒருகால் உள்ளேயே வயல்கள் இருக்குமோ?” -கேட்டவன் நெடுங்கேரளன்.

“தெய்வம் உணவு கொண்டுபோய் ஊட்டுமோ என்று கேள் அப்பா” என்றான் மன்னன்.

“இதில் ஏதோ சூது இருக்கிறது. உணவு வெளியிலிருந்துதான் போகவேண்டும்” என்று, யோசனையில் ஆழ்ந்திருந்த காரி கூறினான்.

அவன் கூறியதுதான் உண்மை. தகடூர்க் கோட்டைக்குள் சுருங்கையின் வழியாக நெல்லும் மற்ற உணவுப் பொருள்களும் யாரும் அறியாமல் இரவு நேரத்தில் போய்க் கொண்டிருந்தன. அந்த இரகசியம் சேரமானுக்குத் தெரியாது.

“அப்படியானால் கோட்டையைச் சுற்றி ஆராய வேண்டும்; இரவு நேரங்களில் விழிப்பாக இருந்து கவனிக்கவேண்டும்” என்றான் அரசன்.