அதிகமான் நெடுமான் அஞ்சி/வீரமும் ஈகையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. வீரமும் ஈகையும்


அதிகமான் விரும்பியபடியே ஔவையார் பின்னும் ஒரு முறை தகடூருக்கு வந்தார். அப்போது அதிகமான் ஏழு குறுநில மன்னர்களையும் வென்ற பெருமிதத்தோடு இருந்தான். ஔவையாரை மிகச் சிறப்பாக வரவேற்று உபசாரம் செய்தான். நெடுநேரம் அவரோடு பேசிப் பொழுது போக்கினான். தான் செய்த போர்களைப்பற்றியும் அப்போது பெற்ற அநுபவங்களையும் எடுத்துச் சொன்னான். ஔவையார் அவற்றைக் கேட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார். பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் பாடியதைப்போல அமைத்தார். அவற்றைப் படித்தால், போர்க்களத்தில் அதிகமானுடன் இருந்து அவனுடைய வீரச் செயல்களைக் கண்டு கண்டு அவ்வப்போது பாடியவைபோலத் தோன்றும்.

பகைவர்களைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது ஒரு பாட்டு.

“பகையரசர்களே, போர்க்களத்திலே புகவேண்டாம். புகுந்தால் நீங்கள் தொலைந்து போவீர்கள். எங்களிடம் ஒரு வீரன் இருக்கிறான். அவனுடைய வலிமையை எப்படி அளந்து காட்டுவது ? மிகவும் கைவன்மையையுடைய தச்சன் ஒரு நாளைக்குச்சிறந்த தேர்கள் எட்டைச் செய்யும் ஆற்றலையுடையவனாக இருக்கிறான். அத்தகையவன் ஒரு மாதம் முயன்று ஒரு தேர்ச் சக்கரத்தைச் செய்தால் அது எவ்வளவு வலிவுடையதாக இருக்கும் ? அத்தகைய பெரு வலிமையை உடையவன் எங்கள் அதிகமான்” என்ற பொருளைக் கோண்டது அந்தப் பாட்டு. 

கனம்புகல் ஓம்புமின் தெவ்விர், போர்எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன் ; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே![1]

(களம்-போர்க்களத்தில். புகல்-புகுதலை. ஓம்புமின்-நிறுத்தி விடுங்கள். பொருநன்-போர் செய்யும் வீரன். வைகல்-கான் தோறும். வலித்த-எண்ணிச் செய்த.)

அதிகமானையே பார்த்துச் சொல்லும் பாட்டு ஒன்று எவ்வளவு அழகாக அவன் வீரப் பெருமையை எடுத்துச் சொல்லுகிறது! அந்தப் பாடல் முழுவதும் கேள்விகள்.“ மலைச்சாரலிலே உள்ள வலிமையை உடைய புலி சினம் மிகுந்தால் அதனோடு எதிர் நிற்கும் மானினம் உண்டோ ?” என்பது ஒரு கேள்வி. “இல்லை” என்று தானே சொல்ல வேண்டும் ? இப்படியே, இல்லை இல்லை என்று சொல்லும்படி சில கேள்விகளைக் கேட்டார் அந்த அறிவுடைப் பெருஞ்செல்வியார். “கதிரவன் சினந்தால் திசை முழுதும் செறிந்த இருள் இருக்குமோ? வண்டி மணலில் ஆழ்ந்தால் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மணலைக் கிழித்துக்கொண்டும் பாறையை உடைத்துக்கொண்டும் சக்கரம் உருளும்படி இழுக்கும் செருக்கையுடைய காளைக்கு இதுதான் எளிய துறை, இது எளிய துறை யன்று என்ற வேறுபாடு உண்டோ ?” என்று வினாக்களை அடுக்கினார். பிறகு இத்தனை வினாக்களையும் அடுக்கியதற்குப் பயனாக உள்ள வினாவையும் கூறினார்; “மதிற் கதவைப் பூட்டும் கணையமரம் போன்ற தோளையுடையவனே, வலிய கையையுடையவனே, நீ போர்க்களத்தில் புகுந்துவிட்டால் உன் மண்ணைக் கைக்கொண்டு வெற்றி முழக்கம் செய்யும் ஆற்றலை யுடைய வீரரும் இருக்கின்றனரா?” என்று கேட்டார் ஔவையார். [2] இவ்வாறு பல பாடல்களை அவர் பாடப் பாடக் கேட்டு மகிழ்ந்தான் அதிகமான்.

“உங்களுடைய பாடல்கள் என்னைப் புகழ்பவை என்ற எண்ணத்தோடு பார்த்தால் எனக்கு நாணமே எழுகிறது. ஆனால் அதை மறந்து சொற்பொருட் சுவையை நோக்கும்போது அந்தப் பாடல்களில் ஆழ்ந்து இன்புறுகிறேன். எத்தனை அருமையான பாடல்கள் !” என்று அவன் பாராட்டினான்.

“பாட்டிலே சிறப்பு இருக்கிறதோ, இல்லையோ, உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்தப் பாடல்களை நீ சுவைப்பதற்குக் காரணம் உனக்கு என்னைப்போன்ற புலவர்களிடத்தில் உள்ள பெரிய அன்புதான்.”

“என்ன, அப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஆம்; நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சின்னஞ்சிறு குழந்தைகள் மழலைச் சொல் பேசுகின்றன. அந்தப் பேச்சிலே ஏதாவது பண் ஒலிக்குமா? இல்லை. இன்ன காலத்துக்கு இன்ன பண்ணைப் பாடினால் இனிமையாக இருக்கும் என்ற வரையறை உண்டு. அப்படிப் பொழுதறிந்து வருகிற இசையா அது? அந்தச் சொற்களுக்குப் பொருள் உண்டா ? ஒன்றும் இல்லை. ஆயினும் தந்தைமார்களுக்குத் தம் குழந்தைகளின் மழலைச் சொற்கள் இன்பத்தைத் தருகின்றன; அருள் சுரக்கும்படி செய்கின்றன. என்னுடைய வாய்ச் சொற்களும் அத்தகையனவே. பகைவர்களுடைய காவலையுடைய மதில்களையெல்லாம் அழித்து வென்ற பெருவீரனாகிய நீ என்னிடம் அருளுடையவனாக இருப்பதனால்தான் அவை உனக்கு இனிக்கின்றன!” என்று ஔவையார் ஒரு பாட்டிலே சொன்னார்.[3] 

“நன்றாகச் சொன்னீர்கள் ! யார் தந்தை ? யார் குழந்தை? நீங்கள் ஆண்டிலே முதிர்ந்தவர்கள் ; நான் மிக இளையவன்; இன்னாரிடம் இன்னபடி பேச வேண்டும் என்பதை அறியாதவன். அப்படி இருந்தும் என்னோடு நீங்கள் பேசி அறிவுரை பகர்கிறீர்கள். உண்மையாக நீங்கள் எனக்குத் தமக்கைபோன்றவர்கள். உங்களுடைய பெருமையைத் தமிழுலகம் நன்றாக அறியும். உங்கள் அன்புக்கு ஆளாகும் பேறு எனக்குக் கிடைத்ததே என்று எண்ணிஎண்ணி இன்பம் அடைந்து கெண்டிருக்கிறேன். நான் உங்களுக்குத் தம்பி போன்றவன். தம்பி என்றே எண்ணி என்னிடம் உரிமையோடு பழகவேண்டும்.”

அவனுடைய பணிவும் உள்ளன்பும் ஔவையாரைக் கவர்ந்தன. ஔவையாரோடு பழகப் பழக அதிகமானுக்கும் செந்தமிழின்பத்தின் கூறுபாடுகள் புலனாயின. புலவர்களிடம் மதிப்பு உண்டாயிற்று. எத்தனை வீரம் உடையவனாக இருந்தாலும், கொடையை உடையவனாக இருந்தாலும் புலவருடைய அன்பைப் பெற்றால்தான் உலகம் மதிக்கும் என்ற உண்மையை உணர்ந்தான் ; ஔவையாரைத் தெய்வம்போலக் கொண்டாடினான். புலவர்களை நன்கு மதிக்கவேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் ஊன்றிப் பதிவதற்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்று ஒரு சமயம் நிகழ்ந்தது.

ஔவையார் விடை பெற்றுச் சென்றபிறகு ஒரு நாள் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அவனைத் தேடி வந்தார். அவர் வந்த சமயத்தில் அதிகமான் ஏதோ இன்றியமையாத வேலையில் ஈடுபட்டிருந்தான். முன்பெல்லாம் அத்தகைய செவ்வியில் யாரும் அவனை அணுக முடியாமல் இருந்தது. ஔவையாரைக் காக்க வைத்து அதனால் அவர் சினம் கொள்ளும்படி நேர்ந்ததல்லவா ? அது முதல் புலவர்கள் வந்தால் மட்டும் இன்னார் வந்திருக்கிறார் என்று தெரிவிக்கும்படி சொல்லியிருந்தான் அதிகமான்.

ஆதலின் பெருஞ்சித்திரனாரை வழக்கம்போல எதிர்கொண்டு அழைத்து இருக்கச் செய்த அதிகாரி, அதிகமானிடம் சென்று அவர் வரவைத் தெரிவித்தார். அந்தப் புலவரை முன்பு அதிகமான் கண்டதில்லை; அவரைப்பற்றிக் கேட்டதும் இல்லை. அப்போது அவன் ஈடுபட்டிருந்தது மிகவும் முக்கியமான வேலை; ஆதலால் அதை விட்டுவிட்டுச் செல்ல மனம் வரவில்லை. புலவரைக் காத்திருக்கும்படி சொல்வதும் முறையென்று தோன்றவில்லை. ஆகையால் அவருக்குச் சில பரிசில்களைக் கொடுத்து அனுப்பும்படி அதிகாரியிடம் சொன்னான். அப்படியே அவர் ஒரு தட்டில் பழம், வெற்றிலை பாக்கு வைத்துப் பொன்னும் உடன் வைத்துப் புலவரை அணுகி அவர்முன் வைத்தார்; “மன்னர் பெருமான் மிகவும் இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்; தங்கள் வரவைக் கேட்டு மகிழ்ந்து இவற்றைச் சேர்ப்பிக்கச் சொன்னார்; ஆறுதலாக மீட்டும் ஒருமுறை வரும்படி சொன்னார்.” என்றார்.

புலவர் பரிசில்கள் வைத்திருந்த தட்டைப் பார்த்தார்; அதிகாரியை ஏற இறங்க நோக்கினார். சிறிது நேரம் சும்மா இருந்தார்: கனத்துக்கொண்டார். அவரைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.

“உம்முடைய மன்னன் இதைக் கொடுத்து அனுப்பும்படி சொன்னானா? அவனுடைய புகழைக் கேட்டு அவனைக் கண்டு இன்புறவேண்டுமென்று நெடுந்தூரத்திலிருந்து நான் வருகிறேன். சிறிய குன்றுகளையும் பெரிய மலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். நான் பரிசிலைப் பெற்றுக்கொண்டு செல்வதற்காகவே வந்திருக்கிறேன் என்று என்பால் அன்பு வைத்தருளி, இதைப் பெற்றுக் கொண்டு இப்படியே போகட்டும் என்று சொல்லி அனுப்பினானே. அவன் என்னை எப்படி அறிந்திருக்கிறானோ, அறியேன். என்னைக் காணாமல் வழங்கிய இந்தப் பொருளைக் கொண்டுசெல்ல நான் வாணிக நோக்கமுடைய பரிசிலன் அல்லேன். பணம் ஒன்றே குறியாக நினைத்து நான் இங்கே வரவில்லை. மனம் மகிழ்ந்து முகம் மலர்ந்து கண்டு அளவளாவி, தரம் அறிந்து கொடுத்தனுப்புவதாக இருந்தால், அவர்கள் கொடுப்பது தினையளவாக இருந்தாலும் எனக்கு இனியது” என்று பாட்டினாற் சொல்லிப் புலவர் புறப்பட்டுச் செல்வதற்காக எழுந்துவிட்டார்.

“நீங்கள் சினம் கொள்ளக் கூடாது. தயை செய்து அமரவேண்டும்” என்று சொல்லி உள்ளே ஓடினார் அதிகாரி. “நான் வாணிகப் பரிசிலன் அல்லேன்” என்று அழுத்தந்திருத்தமாகப் புலவர் சொன்னது அவர் காதிலே புகுந்து குடைந்தது. அதை அப்படியே போய் அதிகமானிடம் சொன்னார்.

அதிகமான் உடனே எழுந்துவந்தான்; ஔவையாரைக் காக்கவைத்தது எப்படிப் பிழையோ, அப்படியே புலவரைக் காணாமல் பிச்சைக்காரர்களுக்குப் பிச்சையிடச் செய்வதுபோலப் பரிசிலை அனுப்புவதும் பிழை என்பதை உணர்ந்துகொண்டான். “குற்றத்தைப் பொறுக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

“நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே, சீரொழுகு சான்றோர் சினம்” என்பார்கள். அதிகமானைக் கண்டவுடன் பெருஞ்சித்திரனாருடைய சினம் மாறியது.

அதிகமான் அவரை உபசரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவர் சினத்தாற் பாடிய பாடலை மறுபடி யும் சொல்லச்சொல்லிக் கேட்டான்.[4] புலவரும் வள்ளலும் மனம் கலந்து உறவாடினார்கள். பிறகு பலபரிசில்களைத் தந்து அப்புலவர் கோமானை அனுப்பினான் தகடூர் மன்னன்.

அதன் பின்பு எந்தப் புலவர் வந்தாலும் உடனே கண்டு அகமும் முகமும் மலர்ந்து குலாவத் தொடங்கினான் அவன். அவர்களை எந்தவகையிலும் புறக்கணிக்காமல் பழக வேண்டும் என்று உறுதி பூண்டான். இதன் பயனாக அவனை நோக்கிப் பல பல புலவர்கள் வந்தார்கள்; பரிசில் பெற்றுச் சென்றார்கள். சிலருக்குப் பொன்னும் பொருளும் அளித்தான். சிலருக்குக் குதிரை கொடுத்தான். சிலருக்கு யானையை வழங்கினான். சிலருக்குத் தேரை ஈந்தான். அவனுடைய வீரத்தைத் தமிழுலகம் அறிந்ததுபோல ஈகையையும் உணர்ந்து பாராட்டியது.


 1. புறநானூறு, 87.
 2. புறநானூறு 90.
 3. புறநானூறு, 92.
 4. குன்றும் மலையும் பல பின் ஒழிய
  வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
  நின்ற என் நயந் தருளி, ஈது கொண்டு
  ஈங்கனம் செல்க தான்என என்னை
  யாங்கறிந் தனணோ தாங்கருங் காவலன்?
  காணாது ஈந்த இப்பொருட்கு யான் ஓர்
  வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
  தினையனைந் தாயினும் இனிது, அவர்
  துணையன வறிந்து நல்கினர் விடினே.

  -புறநானூறு, 208.

  [பரிசில் கொண்டுசெலற்கு வந்தனென் என. நயந்து-விரும்பி. தான்-அவன் (புலவன்.) வாணிகப் பரிசிலன்-பொருள் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட புலவன். பேணி-பாராட்டி. தினையனைத்து-தினையவ்வளவு. துணை அளவு அறிந்து-புலமை அளவைத் தெரிந்து கொண்டு. நல்கினர் விடின்-பரிசளித்து வழியனுப்பினால்.]