அதிசயப் பெண்/அரசகுமாரன் சோதனை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அரசகுமாரன் சோதனை

ஓர் அரசகுமாரன் தனக்கு ஏற்ற மனைவியைத் தானே தேடிக்கொள்ள எண்ணினான். அழகும் அறிவும் பொறுமையும் உடைய பெண் ஒருத்தியைத் தேர்ந்தெடுக்க விரும்பினான். அதற்காக அவன் சாமான்ய மனிதனைப்போல ஆடை அணிந்து, தன் தலைநகரை விட்டுப் புறப்பட்டான்.

பல இடங்களுக்குப் போய்க் கடைசியில் ஒரு சிறிய ஊர் வழியே நடந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் தன் தலையின்மேல் ஒரு சட்டியில், வயலில் வேலை செய்யும் தன் தந்தைக்குக் கஞ்சி எடுத்துக்கொண்டு போனாள். அவள் இயற்கையாகவே நல்ல அழகும் பலமும் உடையவளாக இருந்தாள். ‘இவள் அழகுள்ளவளாக இருக்கிறாள். இவளை யாரென்று விசாரிக்கலாம்’ என்று எண்ணிய அரச குமாரன் அவளைப் பார்த்து, “ஏ, பெண்ணே! உன் பெயர் என்ன?” என்று கேட்டான். அந்தப் பெண், “வெண்ணெய்!” என்றாள்.

“நவநீதமா?” என்று ராஜகுமாரன் கேட்டான்.

“இல்லை; சாதாரண வெண்ணெய் அல்ல. மண்ணால் பண்ணாத சட்டியிலே, மரத்தால் பண்ணாத மத்தாலே, மட்டையால் பண்ணாத கயிற்றாலே கடைந்தெடுத்தது. அந்த வெண்ணெய் இங்கே முன்பும் இல்லை; இன்றும் இல்லை. நாளைக்கும் இராது.”

தேவலோகத்தில் பாற்கடலில் மேரு மலையை மத்தாகக் கொண்டு வாசுகியைக் கயிறாக வைத்துக் கடைந்த அமுதத்தை அவள் குறிக்கிறாள் என்று ஊகித்துக்கொண்டான் ராஜகுமாரன்.

“அமுதவல்லியா?” என்று பிறகு கேட்டான்.

“ஆம்” என்றாள் அந்தப் பெண்.

“யாருக்குக் கஞ்சி கொண்டு போகிறாய்?”

“என் முதல் தெய்வத்துக்கு.”

“உன் தகப்பனாருக்கா?”

“ஆம்.”

“அவர் என்ன செய்கிறார்?”

“ஒன்றை இரண்டாக்குகிறார்!”

“மண் கட்டியை உடைத்து உழுகிறாரோ?”

“ஆம்.”

“எந்த இடத்தில் உழுகிறார்.” "போனால் வராத புன்செய்க்கு அடுத்த நன்செய்யிலே,"

"ஓகோ! சுடுகாட்டுக்கு அடுத்த நிலத்திலா?"

“ஆம், ஐயா!" என்று மரியாதையுடன் விடையளித்தாள் அவள். கொஞ்சம் கஞ்சி சாப்பிடுகிறீர்களா?" என்றும் கேட்டாள். -

“சரி” என்று ஒப்புக்கொண்டான் ராஜகுமாரன்.

கஞ்சிச் சட்டியின்மேல் மூடியிருந்த கலயத்தை அவள் எடுத்தாள். அதில் அப்படியே கஞ்சியை ஊற்றுகிறாளா என்று கவனித்தான் ராஜகுமாரன். அதை முதலில் கழுவிவிட்டுப் பிறகு அதில் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள். ராஜகுமாரனுக்குச் சந்தோஷம் உண்டாகிவிட்டது. 'இந்தப் பெண் நமக்கு மனைவியாக வாய்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்' என்ற ஆசை அவனுக்கு அப்போது உண்டாயிற்று.

“உன் விடு எங்கே இருக்கிறது?" என்று கேட்டான்.

"பாலுக்கும் நூலுக்கும் நடுவிலே, சுட்ட கூரையும் சுடாத மதிலும் உள்ள வீடு, எங்கள் வீடு" என்றாள் அவள்.

'பால்காரன் வீட்டுக்கும் தறிகாரன் வீட்டுக்கும் நடுவில், ஒட்டு வில்லை வேய்ந்த வீடு இவள் வீடு. அதைச் சுற்றிச் செடி நிறைந்த வேலி இருக்கும்' என்று உணர்ந்து கொண்டான் இளவரசன்.

அவன் உடனே அவள் வீட்டுக்குப் போய் அவளுடைய தாயோடு பேச்சுக் கொடுத்துக்கொண்டு இருந்தான். அவள் வீட்டில் பெண் கொள்ள வேண்டும் என்று வந்திருப்பதாகவும், தான் மிகவும் பணக்காரன் என்றும் சொன்னான். அப்படிப் பேசிக்கொண்டிருந்த போது வயலுக்குக் கஞ்சி கொண்டு போன அமுதவல்லி திரும்பி வந்துவிட்டாள்.

“மாமி, மாமி, உங்கள் பெண்ணை இன்று சமையல் செய்யச் சொல்லுங்கள். நான் பணம் தருகிறேன். வேண்டியதை வாங்கி, வேண்டியபடி செய்யச் சொல்லுங்கள். ஒரு பிள்ளைக்காரியைக் கறி பண்ணி, பாவாடைக்காரியைக் குழம்பு பண்ணி, பாண்டியன் தேவியை ரஸம் பண்ணி எனக்கு விருந்திட வேண்டும்” என்றான்.

அமுதவல்லி, “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லி, வேண்டிய காய்கறிகளைத் தன் தாயைக் கொண்டு வாங்கி வரச்சொன்னாள். சமையல் செய்து பரிமாறினாள்.

ஒரு தாறு மாத்திரம் போடும் வாழையின் காயைக் கறி பண்ணியிருந்தாள். கத்திரிக்காயைக் குழம்பு பண்ணினாள். பாண்டியனுக்கு மாலையிடும் வேப்பம் பூவால் ரஸம் பண்ணியிருந்தாள்.

அரசகுமாரன் சாப்பிடும்போது ரஸத்தை அவள் மீது துப்பினான். அவள் கோபம் கொள்ளாமல் பரிமாறினாள். சோற்றை வாரி இறைத்தான். அவள் அப்போதும் கோபம் கொள்ளவில்லை. அவள் பொறுமைசாலி என்பதை அப்போது உணர்ந்து கொண்டான். “நான் போய் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்றான் அரசகுமாரன். பிறகு சில உறவினர்களுடன் வந்து அமுதவல்லியைக் கல்யாணம் செய்து கொண்டான். அப்போதும் தான் ராஜகுமாரன் என்று அவன் சொல்லவில்லை. திருமணம் முடிந்தவுடன் அவளை அங்கேயே விட்டுவிட்டுப் போனான்.

ஒரு நாள் நாலைந்து சேவகர்களை அமுதவல்லியிடம் அனுப்பி, “இந்த நாட்டு ராஜகுமாரன் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான்” என்று சொல்லச் சொன்னான். அவள், “நான் முன்பே கல்யாணம் ஆனவள்” என்றாள்.

“ஆனாலும் குற்றம் இல்லை; உன் அழகைக் கண்டு அவர் ஆசைப்படுகிறார், ஆடை ஆபரணம் எல்லாம் நிறையத் தருவார்” என்றார்கள்.

அவள் முதலில் சாந்தமாக மறுத்தாள். வரவர அவர்கள் அதிக ஆசை காட்டினார்கள். அவள் புலி போலச் சீறி விழுந்தாள். கடைசியில் சேவகர்கள் அவளைக் கயிற்றினால் கட்டிக்கொண்டு போனார்கள்.

ராஜகுமாரன் மாணிக்கக் கிரீடமும் பொன்னாடையும் புனைந்து சிங்காதனத்தில் வீற்றிருந்தான். எங்கும் ஒரே பிரகாசமாக இருந்தது. அவனுக்கு முன்னே அமுத வல்லியைக் கொண்டுபோப் நிறுத்தினார்கள். அவள் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சிங்காதனத்தையும் அவன் அரசக் கோலத்தையும் கண்ட அவன் முகத்தை உற்றுக் கவனித்திருந்தால் அவனே தன் கணவன் என்று உணர்ந்திருப்பாள். ஆனால் கவனிக்கவில்லை. உத்தமி அல்லவா?

அவள் சற்றே புன்னகை பூத்தாள்; பிறகு அழுதாள்.

அரசகுமாரன், “இதென்ன? வெயிலும் மழையும் தொடர்ந்தாற்போல் வருகின்றனவே!” என்று தன் குரலை மாற்றிக்கொண்டு கேட்டான்.

அமுதவல்லி, “ஆம்; உம்முடைய ராஜ வைபோகத்தைக் கண்டு, நீர் முற்பிறப்பில் புண்ணியம் செய்தவர் என்று எண்ணிச் சிறிதே நகைத்தேன். ஆனால் இப் பிறப்பில் மற்றோருவன் மனைவியை விரும்பும் பாவத்தினால் அடுத்த பிறவியில் என்ன ஆவிரோ என்று அஞ்சி அழுதேன்" என்றாள்.

“கயிற்றை அவிழுங்கள்” என்று அரசகுமாரன் தன் இயற்கையான குரலில் சேவகர்களுக்கு உத்தரவிட்டான். அமுதவல்லி நிமிர்ந்து பார்த்தாள். என்ன பார்க்கிறாய்? உன்னைப் பலவகையிலும் சோதித்த உன் புருஷன்தான் நான்" என்றான் அரசகுமாரன்.

அமுதவல்லி ஆசையோடு அவன் முன் சென்று அவன் திருவடிகளை வணங்கினாள்.