உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தை மகள்/அத்தியாயம் 1

விக்கிமூலம் இலிருந்து


அத்தை மகள்

1

'ரத்னம்...ஏ ரத்னம்...ஏட்டி ரத்னம்...ஏளா, ஏவுளா ஏம்பிளா...ஏ ரத்னா.....-ரத்னாபாய்.. ரத்தினாம்பா...ரத்தினம்மா...ரத்னத்தம்மா...ஹொ ஹோஹோ - பேர்களைப் பாருங்கடா ஏட்டி யேட்டி ரத்தினோம்......'

'வவ்வவ்வே...வவ் வவ் வவ்...மோறையைப்பாரு. கொழுப்பு புடிச்சு அலையிதியோ? இல்லே, கேட்கிறேன். ஏட்டியாம். ஏன் சொல்லமாட்டே? ஏட்டியா மில்லா. இன்னமே சொல்லு பார்க்கலாம்.'

இரண்டு குரல்கள். முதல் குரல் ஒரு 'அவன்' . இரண்டாவது ஒரு 'அவள்’.

அவன் ஒரு பையன், பெயர் சுந்தாம். பதின்மூன்று: வயதிருக்கலாம். அவளுக்குப் பத்து வயது.

'சொன்னா என்ன செஞ்சிருவியாம்?' என்றான் அவன் ஜம்பமாக.

'இல்லே, சொல்லேன் பார்க்கலாம்' .

'சொன்னா என்னட்டி செஞ்சிருவே? ஏட்டி ஏட்டி ரத்தினேம்..ஏ புள்ளே ரத்தினேம் ' என்று வாய்ப் பாட்டு ராகம் இழுத்தான் பையன். 'ஆனா ஆனா.ஆவேன்னா.... ஈன்னா ஈன்னா ஈயேன்னா' என்று பள்ளிக்கூடத்தில் தொண்டைகிழியக் கத்திக் கூப்பாடு போட்ட பழக்கம்கைவிட்டு விடுமா என்ன! அதிலும் அவளைக் கேலி செய்வதிலே அவனுக்குத் தனி மகிழ்வு.

அவள் அவனை கவனித்தாள். அவள் முகத்தில் கோபமும் சிரிப்பும் கொஞ்சி விளையாடின. புள்ளெயாம். ஏன் சொல்லமாட்டே? ஏன் ஐயாப்பிள்ளை, எதுக்காகப் புள்ளெயின்னு சொல்லுதே? நான் என்ன உங்க வீட்டுக்கு மோருக்கு வந்த புள்ளையா; தயிருக்கு வந்த புள்ளையா? பாலுக்கு வந்த புள்ளையா?...புள்ளையாம்! மோறையைப் பாரு. வவ் வவ்வே ' என்று ஒரு பாட்டம் பொழிந்து தள்ளிவிட்டு வாயைச் சுழித்து 'வலிப்புக் காட்டினாள்”.

சொன்னா என்னட்டி செய்வே? என்னமோ செஞ்சிருவேன்னியேட்டி, ஏட்டி!' என்று ரகளைப்படுத்தினான் அவன்.

ஊர்ப் பிள்ளைகள் 'தளபாடமாக'க் கற்று வைத்திருந்த கைச் சரக்குகளில் ஒன்றை உதறினாள் அவள். 'ஏட்டின்னா எட்டுப் பேரு கிட்டேக் கூட்டி விட்டுருவேன், ஒன்பது பேரு கிட்டே ஓட்டி விட்டுருவேன். தெரியுமா?' எங்கே ? என்று சத்தம்போட்டாள். பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பேசவேண்டும் என்பது பெரியவர்களில் பலருக்குக்கூட பிடிபடாத வித்தையாக இருக்கும்பொழுது, அவள்பேச்சில் அர்த்தமிருக்க வேண்டும்; அதை அவள் சரியாக உணர்ந்து மிருக்கவேணும் என எதிர்பார்க்கக் கூடாதுதான்.

அவள் கத்தல் டையனின் உற்சாகத்தை தீயாக வளர்க்கும் பெட்ரோல். அவன் அட்டகாசம் பண்ணி தனது பெரும் ராகத்திலே பாட்டிழுத்தான் 'ஏட்டி யேட்டி ரத்தினோம்.....'

ரத்னம் செயலற்றுப் போனாள் என்பதை 'அம்மா! இந்தா பாரம்மா இவனை....-ஏட்டி யேட்டின்னு சொல்லிக் கேலி பண்ணுதான்' என்று சிணுங்கியது பிரகடனப் படுத்தியது.

அவள் தாய் சிரித்துக்கொண்டே வந்தாள். 'என்னட்டி கொலாங் கொலாங்குன்னு திண்ணையும் மண்ணும் புரியாம என்ன கத்துதே? என்ன?' என்று கேட்டாள். 

ரத்னம் அழுகை பாவம் பிடித்து சினுங்கிக்கொண்டே சொன்னாள்; 'ஏட்டி ஏட்டின்னு சொல்லுதானம்மா அவன்'.

'சொன்னால் என்ன கெட்டுப்போச்சு?' என்றாள் தாய்.

அவன் அமர்க்களமாகச் சிரித்தான். ஒஹ்ஹொ ஹொஹோ...ஒஹ்ஹொஹோ......”

ரத்னத்துக்குப் பற்றிக் கொண்டு வந்தது. 'ஆமா, இவொ வந்துட்டோ. அவொ மருமகப்புள்ளே யல்லவா! மருமொவோப் புள்ளே! அதினாலே பரிஞ்சுக்கிட்டு வந்துட்டோ. வவ்வவ் !'

தாய்க்கு வேடிக்கையாகத் தானிருந்தது. அவள் சிரித்தாள். மகளுக்கோ வேதனை. 'இளியுங்க அம்மா நல்ல இளியுங்க. பல்லு முப்பத்திரெண்டையும் பளிச்னு காட்டிக்கிட்டு இளியுங்க. இஹறிஹின்னு. ஏட்டியாம். அப்ப நானும் சொல்லுவேன்.....-ஏலே. ஏலே ஏலே ஏலேய் ...ஏலெ சுந்தரம்..ஏலெ ஏ அய்யா ஏ. ராசா சுந்தரோம்.:

'எட்டி அத்தானை அப்படிச் சொல்லலாமா?' என்று குறுக்கிட்டாள் தாய்.

'பத்தியா! அவ மருமகனுக்குத்தான் ஏண்டுக் கிட்டு வருவா, அத்தானாம், அவன் மட்டும் சொல்லலாம் போலிருக்கு பின்னே !'

'அவன் என்ன சொன்னான் ?’.

'சொன்னுன் சோத்துக்கு உப்பு இல்லேயின்னு: ஒண்னும் தெரியாதது மாதிரித்தான். ஏட்டியின்னான். புள்ளெயின்னான். ரத்னம், ரத்னாபாய் அப்டின்னுயெல்லாம் சொல்லலியோ?”

தகரக்கொட்டகையில் மழை பெய்ததுபோல் சட சட படபட வென்று பொரிந்து தள்ளினாள் அவள். 

அம்மா! அம்மா! காது செவிடாப் போகும் போலிருக்கு நீ கத்துற கத்து, மெதுவாகப் பேசேன்' என்று சொல்லி, காதுகளைத் தன் இரு கைகளாலும் மூடிக் கொண்டு. சிரித்தாள் தாய்.

'சொன்னா என்னன்னு கேளு, அத்தெ! அவ பேரு ரத்னமா இல்லையா?' என்று 'ஊடுபாவு’ ஒட்டினான் சுந்தரம்.

'நீ பேசாம இரேன். உன்னையாரு கூப்பிட்டா இப்போ' என்று வாயடி அடித்தாள் சிறுமி.

நீயும் பேசாமல் இருக்க வேண்டியது தானே? என்று கனைத்தான் பையன். -

'வவ் வவ்.....'

'லொள் லொள் லொள்! புல் டாக்... ஏ குட்டி நாய்....உன் பேரு ரத்னமில்லாமே கொழுக்கட்டையா? பையனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கனைத்தான்.

அவள் உறுமினாள். 'நீ தாண்டா கொழுக்கட்டை. ஊசக்கொழுக்கட்டை சுந்தரம்-மந்தரம்-மாயக் கொழுக் கட்டை...மறுநாத்துப் பார்த்தா ஊசக்கொழுக்கட்டை!.... டோடோ. ஊசக்கொழுக்கட்டை ...டோடோ... டோடோ...'

அவன் சும்மா யிருப்பானா ?

'அத்தை மக ரத்தினம்
பத்து இட்லி தின்பாளாம்!
பத்து இன்னும் கிடைச்சாலும்
அத்தனையும் தின்பாளாம் !
எத்தனை இட்லி இருந்தாலும்
அத்தனையும் மொக்குவா
அத்தை மக ரத்தினம்!'


ரத்னத்திற்கு அழுகை வந்துவிட்டது. 'அம்மா, பாரம்மா' என்றாள் இழையும் குரலில், 

'நீயும் தான் பதிலுக்குப் பதிலு பேசினியே இப்ப ஏன் அழுதே?' என்று சமாதானப்படுத்தினாள் அன்னை..

சுந்தரம் சொன்னான் : 'அழாதேம்மா கண்ணு. அழாதே அழாதே-அழுகுணிப் பழம் வாங்கித்தாரேன்'

அவள் சகல சமய சர்வ வீச்சும் பாணமான 'வவ் வவ்வே-...வவ்வவ்' என்பதைத் தான் பிரயோகிக்க முடிந்தது.

'இத்தனை நேரம் கத்தினாளே. இப்ப ஏன் அழ ஆரம்பிச்சா? என்ன சண்டை?' என்று கேட்டபடி வந்தாள் பக்கத்து வீட்டுச் சித்தி.

  • சண்டை என்ன சண்டை! அத்தை மக அம்மான் மகன் இப்படி இசலிக்கி சலிக்கிட்டுத்தான் கிடக்கும். சிறுவயசு தானே' என்று பூரித்துப் போனாள் தாய்.

'ஆமாமா,’----இது சித்தி.

அவள் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னாள்: 'என்ன இருந்தாலும் இவளுக்கு வாய் அதிகம் அம்மா. வாயி வாயி எட்டு வீடு இடம் கொள்ளாது, அவ்வளவு கிழியுது.'

அழுவதுபோல் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்த பெண் ஆங்காரமாகத் தலை நிமிர்த்திக் கத்தினாள் : 'ஆமா, உங்க வீட்டிலே வந்து இடம் கேட்டமாதிரித் தான். இவொ வந்துட்டோ பெரிய மனுஷி. ...'


சித்தி சிரித்தாள். அம்மை சிரித்தாள். அவன் சிரிக்க அவளும் சிரித்தாள். அவள் போக்கு எல்லோருக்கும் சிரிப்பையே தந்தது.

'ஹேஹே! அழுத புள்ளெயும் சிரிச்சுதாம்; கழுதைப்பாலையும் குடிச்சுதாம். ஹே ஹே' என்று தான் கற்றிருந்த பாடத்தைக் கக்கினான். 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத் தவறாத பையன். 

அவள் அவனை அடிக்க விரைந்தாள். அவன் கத்திக்கொண்டே ஓடினான். அவளும் துரத்தியபடி பின்சென்றாள். -

'பெரிய வாயாடி' என்றாள் தாய்.

'சிறுசு தானே. வயசு வந்தால் தானாகவே சரியாகி, தங்கக் கம்பியாகி விடுவாள்' என்று 'பூச்சுமானம்' செய்தாள் சித்தி.

அது அந்தக் காலம்!

'அந்தக் காலம்' என்றால் என்ன கணக்கில் அடங்காத ஆண்டுகளா ஒடி மறைந்து விட்டன? இல்லையே ஆறேழு வருஷங்கள்----அதிகம் போனால், எட்டுவருஷம்---போயிருக்கும்.

எட்டு வருஷங்கள் என்றாலும் அற்ப மல்ல. ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது காலம். ரத்னம் எவ்வளவு மாறிப் போனாள், பாவாடையை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக்கொண்டு---மறுபடியும் அவிழ்த்து, சரியாகக் கட்டாமல் நாடாவைக் கையிலே பிடித்துக்கொண்டு எதையாவது கத்தியபடி நடுத்தெருவிலே 'கழுதைக் கூத்து' பண்ணத் தயங்காத வாயாடிச் சிறுமி தானா இன்றையப் பேசமடந்தையாக---ஆளைக்கண்ட உடனேயே அடுப்பங்கரையில் போய் பம்மும் பொம்மையாக---வளர்ந்திருப்பது? நம்ப முடியவில்லை.

சுந்தரத்தால் நம்ப முடியவில்லை தான். எட்டு வருஷங்களுக்குப் பிறகு அத்தை வீட்டுக்கு வந்திருந்தவன் இதை எதிர் பார்க்கவில்லை. பரட்டைத் தலையும் பாவாடையும் கூப்பாடுமாகக் குதியாட்டம் போட்டுத் திரிந்த சிறுமி 'கோவேறு கழுதையாக' வளர்ந்திருக்கும் என்று தான் எண்ணினான். அதனால் முதன் முதலில் அவன் பார்வையில் பட்டு பளிச்செனப் பாய்ந்து மறைந்த 

பாவைதான் முன்னாள் வாயாடி என்பதைப் புரிந்து கொள்ள அவனுக்குக் கொஞ்சம் சிரமமாக யிருந்தது. அவள் வேறு யாரோ என்று கூட நினைத்து விட்டான். ரொம்ப நேரமாக அத்தை மகள் எதிர்ப்படவே யில்லை, சத்தத்தையும் கேட்க முடியவில்லை என்றதும் அவளைப் பற்றி அத்தையிடம் கேட்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்து பின் கேட்டே தீர்த்தான்.

'என்ன அத்தை, ரத்னத்தை எங்கே காணோம்? சௌக்கியமா இருக்கிறாள் அல்லவா? மூச்சுப் பேச்சு காணோமே !'

அத்தை சிரித்தாள். 'நீ வாசலில் வந்து இறங்கியவுடனேயே அடுப்பங்கரைக்குப் பறந்தோடிப் போயிட்டாளே அவ ! திண்ணையிலேயே நின்னுக்கிட்டிருந்தா, திடுதிடுன்னு அங்கே ஓடி வரவும் என்னட்டி ஏன் இன்னு கேட்டேன். அத்தான்.... அத்தான் வந்தாச்சு என்றாள். உடனேதான் நான் இங்கு வந்தேன்' என்றாள்.

மின்னல் போல் தோன்றியவளா ரத்னம்! அடாடா! அவன் கவிதை யுள்ளம் முனகியது---

'இத்னி போலே கிடந்த புள்ளெ
எத்தாப் பெருசா வளர்ந்துட்டு......ஏ
எத்தாப் பெருசா வளர்ந்திட்டு (னு) !'

இப்பொழுது அவளைப் 'புள்ளெ' என்று சொல்ல அவனுக்குத் துணிச்சல் இல்லை! அவன் பழைய ரத்னத்தைப் பற்றி---தானும் அவளும் ஆடித் தீர்த்த சண்டைகளைப் பற்றி----ஒரு கணம் நினைத்தான்.

அவன் பேசாமலிருப்பதைக் கண்ட அத்தை கேட்டாள் : 'ஆமா, நீ அவளைப் பார்க்கலியா பார்த்தும் அடையாளம் தெரியலையோ? ரொம்ப வருஷமாச்சு, ஏழெட்டு வருஷமிருக்காது ?"  'ஊம், ஆச்சு....அது சரி. என்னைக் கண்டு அவ ஏன் அப்படி. ஓடினா? பயமா ? என்று விசாரித்தான் சுந்தரம்.

'பயமாவது! அத்தானைக் கண்டதும் வெட்கமாயிராதா அவளுக்கு? பழைய ரத்னம்னு நினைச்சுக்கிட்டியா? அவ இப்போ ரொம்ப மாறிப் போனா.... ரத்னம்..ஏ ரத்னம்.......

தாய் அழைத்தாள். ஆனால் அவள் முன் வந்தால் தானே ! எதிர்பார்த்து விழி திறந்திருந்த அவனுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டது. காதுகள் கைவளைக் கல கல ஒலியை இழுத்து அறிவித்தன. கண்கள் அதிர்ஷ்டம் செய்யவில்லை போலும் ! அவள் எந்த மூலையிலோ, அல்லது ஜன்னல் மறைவிலோ, நின்று தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு நன்கு தெரிந்தது. எனினும் அவள் உருவம் அவன் கண்களுக்குத் தெரியவில்லை.

'சரி. நேரமாகுது. காப்பி சாப்பிடவா. தோசை காப்பி யெல்லாம் சாப்பிட்டுவிட்டு அப்புறம் சாவகாசமாக் குளிக்கலாம்’ என்று சொல்லி உள்ளே போனாள் அத்தை.

அவனும் போனான். அடுப்பங்கரையில் தானே இருப்பாள்; இப்பொழுது சந்தித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது அவனுக்கு. பயனில்லை. அங்கும் ஏமாற்றமே!

'எந்த இருட்டிலே பம்மிட்டா அவ? முன்னைப் போலே இல்லை தான். உம் ரொம்ப ரொம்ப மாறிப் போனா ரத்னம்; அப்ப பார்த்தேனே, ஆனா நல்லாப் பார்க்கலே. அழகா, ஜோராத்தான் வளர்ந்திருக்கா' என்று மனம் புலம்பிக் கொண்டிருந்தது.

முன்பு--அவன் சிறுவனாகத் திரிந்தபோது; அவளும் கேலி பேசியும் கேலிக்கு உள்ளாகியும் அலைந்த சின்னப் பெண்ணாகயிருந்தபொழுது---அவன் கத்தியது உண்டு. அவளையும், அவனையும் ஒன்றாகப் பார்க்கும் போதெல்லாம் மற்றச் சிறுவர்களும் சிறுமிகளும் கத்தியது உண்டு. 'அஞ்சும் மூணூம் எட்டு ; அத்தை மகளைக் கட்டு’ என்றுதான். இதைக் கேட்டு அவள் சீறுவாள். அம்மாவிடம் சொல்வாள். அத்தையோ சொன்னா என்ன? யாரு சொல்லுதா? உன்னைக் கட்டிக்கிடப் போறவன்தானே சொல்லுதான்' என்பாள். அவள் மற்றவர்களிடம் அடிக்கடி சொல்லி மகிழ்ந்திருக்கிறாள். 'ரத்னமும் சுந்தரமும்தான் பொண்ணு மாப்பிள்ளை. நல்ல பொருத்தம்' என்று.


இப்பொழுது சுந்தரத்துக்கு வேடிக்கையான ஆசை எழுந்தது. கூவ வேண்டும். 'ஏ. ரத்னம்..ஏட்டி ஏ. ரத்னம்! ஏ புள்ளெ ரத்தினோம் என்று சின்ன வயசிலே கத்தி ரகளைப் படுத்தினானே அது மாதிரிக் கூச்சலிட வேண்டும். அத்துடன் 'அஞ்சும் மூணூம் எட்டுதான் அத்தை மகளைக் கட்டுவான் என்று சொல்லி அவளைப் பிடித்து இழுத்து.......

மனசிலே எண்ணி விடலாம். ரொம்ப சுலபம். ஆனால் அப்படியே செய்து காட்ட முடியுமா? அதற்கு அவனிடம் துணிச்சல் தான் உண்டா ?

ஆகவே, அவனால் அப்போது வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடிய சாப்பிடும் அலுவலை கவனிக்கச் சென்றான் சுந்தரம். -

பட்டுடைச் சரசரப்பு காதில் விழுந்தது. இனிய வாசனை அலைகள் மிதந்து வந்தன. வளைகள் கலகலத்தன. அவன் ஆர்வமாகத் திரும்பித் திரும்பிக் கவனித்தான். பாவம் துரதிர்ஷ்டம் பிடித்தவைதான் அவன் கண்கள்! அவன் அவ்விதமே நினைத்தான். ஏனெனில் அத்தை மகள் ரத்தினத்தின் அழகான கிழலைக்கூடப் பார்க்க முடியவில்லையே! • . . . ------ -

"https://ta.wikisource.org/w/index.php?title=அத்தை_மகள்/அத்தியாயம்_1&oldid=1663917" இலிருந்து மீள்விக்கப்பட்டது