அந்தமான் கைதி/13

விக்கிமூலம் இலிருந்து

காட்சி 13.

இடம்: திவான்பகதூர் மாளிகை

காலம்: காலை


பாத்திரங்கள்:
திவான்பகதூர், முனியாண்டி, காமாட்சி.

[முனியாண்டியும் திவான்பகதூரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.]

முனி : என்ன வெறப்புங்க அந்தப் பையனுக்கு! ஒங்க பேரைச் சொன்னா நல்லபாம்பு மாதிரியில்லே சீறுது.  பொன் : சீறுவான் சீறுவான்; சீறமாட்டானா? சரி. பாக்கிக் காரியமெல்லாம் எப்படி? என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?

முனி : அது தானுங்க! அந்தப் பையனே சம்மதிக்க வச்சு, செட்டியையும் சரிப்படுத்தி, ஒருவழியா ஊருக்கு அனுப்பினேன?

பொன் : ஆமாம், அப்புறம்

முனி: அப்புறம் என்னங்க முனியாண்டி சும்மாவா இருந்துடுவான்னு நினைக்கிறீங்க! பையன் ஊருக்குப் போனதிலே இருந்து இந்த ஒரு வாரமா ஒழிஞ்ச நேரமெல்லாம் எனக்கு அங்கேதான் வேலை அப்படி இப்புடீன்னு உங்க பெருமையெல்லாம் அள்ளிவிட்டு அதைச் செய்வாரு இதைச் செய்வாருன்னு சொல்லி பெரியம்மா ஒரு மாதிரி நம்ம வழிக்கு வந்துட்டாங்க. இப்பக்கூட இங்கே வந்ததாகச் சொன்னாங்க.

பொன் : என்ன! உண்மையாகவா? காமாட்சியே இங்கே வருவதாகச் சொல்லிற்ரு? எப்பொழுது எத்தனை மணிக்கு.........

முனி : அதுக்குள்ளே எஜமான் இப்படி அவசரப்பட்றீங்களே! அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். எல்லாந் தானா நடக்கும்; நீங்கபாட்டுக்கு இருங்க.

பொன் : சபாஷ் முனியாண்டி! நீ இவ்வளவு தூரம் செய்வாயென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சரி காமாட்சி வரட்டும். அதெல்லா மிருக்கட்டும். முனியாண்டி! நீ என்னைப் பற்றிப் பேசும் போதெல்லாம் லீலா அங்கே இருப்பாளா? சந்தோஷப்படுவாளா. நீ பார்த்தவரையில் என்மேல் அவளுக்குப்... முனி : சிறுசு தானுங்களே இன்னமே நீங்கள்தான் எல்லாம் சரிப்படுத்திக் கொண்டாரணும்.....அதோ அந்த அம்மாகூட வந்துட்டாங்களே!

(காமாட்சி வருகிறாள்.)

பொன்: வாவா! காமாட்சி வாம்மா! இப்படி உட்கார். அடாடா! இவ்வளவு தூரம் நடந்தா வந்தே? நீ வருவாயென்று இப்பொழுதுதான் முனியாண்டி சொன்னான், என் காரையே அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தேன்; அதற்குள்......

காமா : பரவால்லேண்ணா. இந்தப் பாழாப்போன கட்டைக்கு காரு வேறையா வேணும் காரு!

பொன் : ஏன் காமாட்சி! நீ என்ன அப்படிச் சொல்லுகிறாய்? என் மூச்சு உள்ளவரை உனக்கென்ன குறை? உன் குணம் எனக்குத் தெரியும். உன் மகன் மட்டும் ஒழுங்காய் இருந்திருந்தால் உங்களை இப்படிக் கஷ்டப் பட விட்டிருப்பேனா?

காமா : ஆமாம். யார் இருந்து என்ன? என்னமோ பாடி பரதேசியா யிருந்தாலும் முனியாண்டி சமயத்திலே வந்து உதவினான். அவனாவது இந்தச் சமயத்திலே உதவாமல் இருந்திருந்தால் குடியிருக்கிற குச்சையும் இழந்துவிட்டு என் பிள்ளைகுட்டிகளோட நான் சந்தியிலே நிற்கவேண்டியதுதான்.

(துணியை முகத்தில் வைத்து அழுகிறாள்.)

பொன் : ஓகோ! நீ அப்படியா நினைத்துக் கொண்டிருக்கிறாய்! இந்தத் திவான்பகதூர் பொன்னம்பலம்பிள்ளை மனது வைக்காமல் இருந்திருந்தால், முனியாண்டியும் உதவியிருப்பான்! சேர்வையும் சும்மா விட்டிருப்பான்! செட்டியும் இந்தக் காலிக் கழுதையைக் கூட்டிக் கொண்டு போயிருப்பான்! என்னமோ அந்தப் பாவிப் பயலுக்காகப் பார்த்தால் அநியாயமாக நம் தங்கை குடும்பம் கெட்டுப்போகுமென்று நினைத்துத்தான் மறைவாயிருந்து இவ்வளவு ஏற்பாடும் செய்தேன். உங்களுக்கு ஏது அந்த நன்றி?

காமா : உண்மையாகவா? இப்படீன்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியாதே! ஏனப்பா முனியாண்டி! நீ கூட இதுவரைக்கும் இப்படீன்னு ஒரு வார்த்தை, சொல்லலையே.

முனி : எஜமான்தான் இந்தக் காரியமே ஒருவருக்கும் தெரியக்கூடாதுன்று சொன்னங்க! அதனாலேதான் நானும் சொல்லலே.

காமா : அப்படியேதான் இருக்கட்டுமே; கூடப் பொறந்தவளுக்கு நீங்க செய்யாமே வேறே யாருதான் உதவி செய்யப் போறா?

பொன் : ஆமாம். செய்து செய்து என்ன பலன்? தூற்றலும் ஏச்சும் அவமதிப்பும்தான். என் குடும்பமும் நன்யிறாருக்கவேண்டுமெ என்ற எண்ணம் இருந்து, நாம் பிறந்த குடும்பம் இந்தத் தலைமுறையோடு பூண்டற்றுப் போய்விடுமே என்ற கவலையும் இருந்தால் இத்தனை நாள் கழித்து வலிய வந்த என்னை அவன் அப்படி அவமதித்து அனுப்பியதைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாயா? எனக்கென்ன உலகத்திலேயே வேறு பெண் கிடைக்காதென்றா உன் பெண்ணைக் கேட்க வந்தேன்?

காமா : என்னண்ணா இப்படிச் சொல்றீங்க? நானா வேண்டாமுன்னு சொன்னேன். ஒங்களுக்கே என் பெண்ணைக் கட்டி வைக்கணும். அதுக்காவது ஒரு குழந்தை குட்டி பிறந்து நம்ம பொறந்த எடத்துப் பேரு சொல்லணுன்னுதான் எனக்கு மட்டத்த ஆசை. அதுக்குத்தான் அந்தப் பயல் முட்டுக் கட்டையா இருந்தானே! நான் என்ன செய்வேன்?

பொன் : ஆமாம், உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு சாக்குச் சொல்ல வழி உண்டு முட்டுக்கட்டையாக இருந்த அவன்தான் இங்கே இல்லையே! இப்பொழுதுதான் ஆகட்டுமென்று சொன்னாலென்ன?

காமா : என்னப்பத்தி என்னண்ணா யோசனை? அவன் இல்லாத போது......

பொன் : பார்த்தாயா முதலில் அவன் முட்டுக்கட்டையாய் இருந்தான் என்றாய். இப்போது அந்த முட்டுக் கட்டை இல்லையே யென்று வருத்தப் படுகிறாய் உம். பேஷ் காமாட்சி ரொம்ப நன்றாயிருக்கிறது உன் பேச்சு, நான் எப்படிப் போனால் உனக்கென்ன?

காமா : சரி, சரி! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் இன்னைக்கி அவளையே நேரில் கேட்கிறேன். அவள் சரீன்னு சொல்லிட்டா......

பொன் : இதோ பார் காமாட்சி! நீ என்ன சுத்தக் கர்னாடகமாக இருக்கிறாயே? தனக்கு இன்ன மாப்பிள்ளை தான் வேண்டுமென்று கல்யாணப் பெண் வெட்கத்தை விட்டு வெளியே சொல்லுவாளா எங்கேயாவது? இல்லை எவனாவது ஒரு காலிப்பயலையோ அல்லது அன்னக்காவடியையோதான் கட்டிக் கொள்வேன் என்று சொன்னால் அவள் இஷ்டத்திற்கு விட முடியுமா? நாம் பார்த்துக் கழுத்தை நீட்டு என்று சொன்னால் நீட்டவேண்டிய பெண்ணிடம், யோசனை கேட்கப் போகிறேன் என்கிறாயே! அடே யாரடா அங்கே! (ஒருவன் ஓடி வந்து நிற்கிறான்) காப்பி கொண்டுவா (உள்ளே போகிறான்) முனியாண்டி! வெற்றிலைத் தட்டைக் கொண்டுவரச்சொல். (அனைவரும் சாப்பிடுகிறார்கள்) சரி இதோ பார் காமு!" இனிமேல் நாளைக் கடத்தக்கூடாது. வீட்டில் பெண் பிள்ளை என்று ஒருத்தி இல்லை யென்றால் எவ்வளவு கஷ்டம் என்பது உனக்குத் தெரியாதா என்ன? நான் ஒருவன் எவ்வளவு காரியங்களைத்தான் கவனிக்க முடியும்? (வேலைக்காரனைப் பார்த்து) அடே முட்டாள் வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டுவந்து வையடா! (வெற்றிலைத் தட்டை வைக்கிறான்) ஊம், காமு! வெற்றிலை போட்டுக்கொள்.

(தட்டைக் காமாட்சியிடம் எடுத்துக் கொடுக்கிறார்) இந்த மாதம் 22-ந் தேதி ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கிறாதாம். அந்த முகூர்த்தத்திலேயே கூட வைத்து விடலாம். என்ன முனியாண்டி?

முனி : ஆமாமா, சீக்கிரமா முடிகிறதுதான் தேவலை. எத்தனை ஆள் மாகாணங்கள் இருந்தாலும் வீட்டுக்குன்னு ஒரு சீதேவி இல்லேன்னா அது என்னக் குடித்தனங்க?

காமா : 22-ந் தேதின்னா, ஒரு வாரங்கூட இல்லையே! அவ்வளவு அவசரமா செய்யாட்டி என்னண்ணா? கொஞ்ச...

பொன் : ப்பூ...ஒரு வாரத்திலே எட்டுக் கல்யாணம் செய்யலாம். இப்ப எந்த சாமான் இல்லையே என்று கவலைப் படப்போகிறோம்? இதோ பார் (பீரோவைத் திறந்து ஒரு பெட்டியை யெடுத்து நகைகளை அள்ளிப்போட்டு) இந்தா இவைகளை யெல்லாம் கொண்டுபோய் லீலாவுக்குப் போடு. இனிமேல் அவள் திவான் பகதூர் மனைவி (ஒரு கத்தை நோட்டை எடுத்து வீசி) இதோ இந்தப் பணத்தை வைத்துக்கொள். அவளுக்கு வேண்டிய துணிமணி எல்லாம் வாங்கிக்கொண்டு. நீயும் வாங்கிக் கொள். அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடு; போதாவிட்டால் சொல்லி அனுப்பு. வேண்டிய பணம் அனுப்புகிறேன். இதோ பார்! இந்தச் சங்கிலி 30 பவுன். இப்பொழுது கடைசியாய் மூன்றாந்தாரமாக வாழவந்தாளே மங்களம், அவளுக்காகச் செய்தது. இதை நீ போட்டுக்கொள். இன்னும் வேண்டியதை சங்கோஜமின்றிக் கேள்.

காமா : எனக்கென்னத்துக்கண்ணா இதெல்லாம்.

பொன் : அடடே பயித்தியம், சும்மா போட்டுக்கொள்; நீ ஒரு திவான் பகதூருடைய மாமியாரல்லவா? சும்மா போட்டுக்கொள்.

காமா : ஏண்ணா? இதெல்லாம் இருக்கட்டும். அந்த வீடு...

பொன் : எனக்கென்ன அவ்வளவு தூரம் தெரியாதென்றா நினைத்துவிட்டாய்... (ஒரு பத்திரத்தைக் காட்டி) இதோ பார் சேர்வைக்குப் பூராத்தொகையும் செலுத்திக் கணக்கைத் தீர்த்துப் பத்திரத்தையும் திருப்பி வாங்கி வைத்திருக்கிறேன். இது மட்டுமா? கீழக் குறிச்சி கிராமப் பட்டாவை அப்படியே லீலா பேருக்கே மாற்றிவிட ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறேன்.

காமா : உம்...இதை யெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்காம அந்தப் பையன் ஒங்களே எவ்வளவு தூரம் பேசிப்புட்டான்.

பொன் : அவன் போகிறான் மடையன், சின்னப் பையன் தானே? என்னமோ தெரியாமல் பேசிவிட்டான். அதற்காக நான் உங்களே வெறுத்துவிட முடியுமா என்ன? (வேலையாள் வருகிறான்)

வேலை ஆள் : சாப்பாடு தயாராகிவிட்டது. பொன் : சரி, இலை போடு. இதோ வருகிறோம். (வேலை யாள் போகிறான்) சரி காமாட்சி எழுந்திரு, முதலில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மற்றவற்றைப் பேசிக்கொள்ளலாம்.

காமா : இல்லை யண்ணா! லீலா, வீட்டில் தனியா இருக்கா, நான் உடனே திரும்பி வந்துவிடுவதாகச் சொல்லி விட்டு வந்தேன். நீங்க சாப்பிடுங்க, நான் வீட்டுக்குப் போயிட்டு நாளைக்குக் காலையில் வர்ரேன்.

பொன் : நன்யிறாருக்கிறது, உன்னிடம் இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. சாயங்காலம் கார் அனுப்புகிறேன்; அதில் போகலாம். லீலா சின்னக் குழந்தையா என்ன? எழுந்திரு. (இருவரும் சாப்பிடப் போகிறார்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/13&oldid=1073500" இலிருந்து மீள்விக்கப்பட்டது