அந்தமான் கைதி/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

காட்சி 12

இடம்: நடராஜன் வீடு
காலம்: காலை
 

பாத்திரங்கள் : காமாட்சி, நடராசன், லீலா.

[நடராசன் ரெங்கோன் புறப்படத் தயார் செய்துகொண்டிருக்கிறான், லீலா தமயனுக்கு வேண்டிய சாமான்களையும் துணி மணிகளையும் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள். காமாட்சி முந்தானையில் கண்ணைத் துடைத்துக் கொள்ளுகிறாள்.]

காமா : என்னமோப்பா நீ பொறந்த நேரம் இப்படி யெல்லாம் ஆகணூன்னு இருந்திருக்கு. (அழுகிறாள்)

 நட : இதெல்லாம் மனித வாழ்க்கையிலே சகஜம் தானே? ஏம்மா புறப்படும்போது இப்படி அழுகிறாய்? லீலா மணி ஏழுக்குமேல் ஆகிவிட்டது. எட்டு மணிக்கு ட்ரையின் டயமாச்சு சீக்கிரம் ஆகட்டும்.

லீலா : ஏன் அண்ணா ரெங்கோனுக்குக் கணக்கு வேலைக்குப்போனால் மூன்று வருஷத்துக்குக் குறைந்து வர முடியாது என்று சொல்லுகிறார்களே......

நட : யார் அப்படிச் சொன்னது? உன்னை விட்டு விட்டு நான் அங்கே நீண்ட நாள் தங்குவேனா? கண்டிப்பாய் ஒரு வருஷத்திற்குள் திரும்பிவிடுவேன். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே லீலா.

லீலா : நான் எப்படி அண்ணா உங்களை விட்டுப் பிரிந்து ஒரு வருஷம்வரை தனியாய் இருக்கமுடியும்? நானும் எவ்வளவோ மனதைச் சமாதான்ம் செய்துதான் பார்க்கிறேன்; முடியவில்லையே? (ஆத்திரத்தோடு பெருமூச்சு விட்டு அழுகிறாள்)

நட : இதென்ன லீலா நீயும் அம்மாவைப்போல் அழ ஆரம்பித்துவிட்டாய்? நீ சின்னப்பிள்ளையா என்ன? அட பைத்தியமே! படித்த பெண்ணாச்சே உனக்குக் கூடவா நான் தைரியம் சொல்லவேண்டும் நீயல்லவா அம்மாளுக்குத் தைரியம் சொல்லி எல்லாவற்றையுங் கவனித்துக் கொள்ள வேண்டும். என்ன பிரமாதம்! ஒரு வருஷந்தானே! எனக்குக்கூட உன்னே விட்டுப் போக வருத்தமாய்த்தான் இருக்கிறது. வீணாகக் கவலைப்பட்டு என்ன பிரயோசனம்?

காமா : என்னைப் பத்தி ஒன்னுமில்லே, லீலாவுக்கு ஒரு கலியாணத்தே பண்ணிப்புட்டுப்போனா..... நட: ஆரம்பித்துவிட்டாயா அம்மா மறுபடியும். உன் குழந்தைக்கு வயது இன்னும் 14 கூடப் பூர்த்தியாக வில்லை. அதற்குள் என்ன கல்யாணம் வேண்டியதிருக்கிறது? மேல் நாடுகளிலெல்லாம் பெண்களுக்கு எத்தனை வயதுக்குமேல் கலியாணம் செய்வார்கள் என்று தெரியுமா?

காமா : ஏண்டாப்பா அவுங்களுக்கும் நமக்கும் ஈடுகாட்ட முடியுமா? அவுங்க நெனைச்சா கல்யாணம் பண்ணிக் கிருவாங்க, நெனைச்சா ரத்து பண்ணிக்கிருவாங்க; ஒருத்தியே பல புருஷனைக்கூட கட்டிக்கிருவா என்றெல்லாம் கேவலமா நீயே அவங்களெப்பத்தி எத்தினி தரஞ் சொல்லியிருக்கே நம்ம நாட்டுக்கு அதெல்லாம் ஒத்துவருமா? ஒரு வயசுப் பொண்ணெ வச்சுக்கிட்டு நான் ஒண்டியா எப்படித்தான் காலந்தள்ளப் போறேனோ? ஒலைவாயை மூடினாலும் ஊருவாயெ மூட முடியாதுன்னு சொல்லுவாங்களே......

நட : போதும் போதும்; அடாடா எப்பொழுதும் உன்னுடன் இதுதான் தொல்லை. எல்லாம் நான் வந்ததும் முடித்துவிடலாம் என்று சொன்னால் நீ வெள்ளைக்கார பெண்களை விமர்சனம் பண்ண ஆரம்பித்துவிட்டாயே! ஏன் அவர்களும் நம் நாட்டுப் பெண்களைப்போல் 10 வயதுக்குள்ளேயே கல்யாணம் செய்துகொண்டு, 13-லிருந்து 20 வயதுக்குள்ளே ஏழெட்டுப் பிள்ளைக்குத் தாயாகித் தொண்டு கிழவியைப்போல் தள்ளாட வேண்டுமென்கிறாயா என்ன? ......போம்மா! லீலா கல்யாணத்துக்கு இப்பொழுது ஒன்றும் அவசரம் இல்லை. எல்லாம் நான் வந்த பிறகு நல்ல இடமாகப் பார்த்துச் செய்துகொள்ளலாம். நீ அதை நான் இங்கு இருக்கும்பொழுது பேசுவது போல் சிடுக்கு வெடுக்கென்று ஒன்றும் சொல்லாமல் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்; என்ன? நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? லீலா! நீயும் அம்மாளை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள், அடிக்கடி தபால் எழுது......

ஜட்காவாலா : அரே! என்னாங்கோ சாமி! ஒங்களுக்காவ எவ்வளவு நாயி சாமி காத்துக்கிட்டு இருக்கிறது? அங்கே எங்க நின்னாலும் கோரட்டுக்கும் டேசனுக்குமா மூணு நாலு நடை அடிச்சிருப்பேனே சாமி.

நட : சாயபு இதோ ஆய்விட்டது; போகலாம். கொஞ்சம் பொறு, இதோ இந்தப் பெட்டி படுக்கைகளை வண்டியில் எடுத்துவை. (எடுத்துவைக்கிறான்) சரி டயமும் அதிகமாகிவிட்டது. ஏம்மா! நான் வரட்டுமா? லீலா! போய்விட்டு வரட்டுமா? நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். கவலைப்படவேண்டாம். நான் போனவுடன் தபால் எழுதுகிறேன். போய் வருகிறேன்" (காமாட்சியை வணங்குகிறான். லீலா நடராஜனை வணங்குகிறாள்.)

(நடராஜன் போகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/12&oldid=1073499" இருந்து மீள்விக்கப்பட்டது