அந்தமான் கைதி/21
இடம் : நடராஜன் வீடு.
காலம் : காலை
பாத்திரங்கள் : காமாட்சி, லீலா.
காமா : ஏண்டி! நான் சொல்றது காதிலே கேக்கலையா? காரு வந்து ஒருமணி நேரமாக் காத்துக்கிட்டு இருக்கு. முகூர்த்த நேரம் நெருங்கிப் போச்சி. வந்த மனுசா ளெல்லாம் காத்துக்கிட்டு இருக்காங்க இன்னு, நான் அப்பவேபுடிச்சி சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்குக் கல்லுப்பிள்ளையாரு மாதிரி உக்காந்துக் கிட்டு அசையமாட்டேங்கிறியே! இது தேவலாமா?
லீலா : நீ என்னை, என்னதான் அம்மா செய்யச் சொல்லுகிறாய்? நீ என்ன சொன்னாலும் சரி; நான் கண்டிப்பாய் வர முடியாது.
காமா : என் கண்ணுல்லே. நீ, அப்படியெல்லாஞ் சொல்லலாமா? பொண்ணழைக்க வந்தவங்க எல்லாம் எவ்வளவு நாழியா வெளியே காத்துக்கிட்டு இருக்காங்க. நீ இப்படி மொரண்டு பண்ணின அவுங்கள்ளாம் என்ன நெனப்பாங்க? ஆனது ஆயிப் போச்சி. இன்னமே அதெல்லாம் நெனைக்கலாமா? நான் சொல்றதக் கேளம்மா? உம், இந்தா இதெல்லாம் போட்டுக்கொண்டு சீக்கிரமா......
லீலா : இந்தா அலங்கார மெல்லாம் வேண்டா மென்றால் விட்டு விடேன். என்னை ஏன் இப்படி இம்சிக்கிறாய்?
காமா : நானா இம்சிக்கிறேன். ஏண்டி! நகை போட்டுக்கிறதும் பொடவை கட்டிக்கிறதுமா உனக்கு, இம்சையாயிருக்கு?
லீலா : உனக்கு இம்சை இல்லை; எனக்கு இம்சையாய் இருக்கிறது. இதைவிட நான் இறந்து விடுவதே மேல்,
காமா : கல்யாணத்துக்குப் பயந்து உயிரை விட்டவ ஒலகத்திலே ரொம்பப்பேருடி யம்மா ரொம்பப்பேரு! அடியே வேண்டாம். ஊருலே நாலு பேருக்கு, மதிப்பா பெரிய மனுஷென்னு இருக்கிற அவெம் பேரு வீணாக் கெட்டுப் போயிடும். எல்லா ஏற்பாடும் ஆனதுக்கு அப்பறம் இந்தக் கல்யாணம் நின்னு போனா! அது நமக்குங் கேவலம். நம்ம சாதியிலே ஒரு தரம் ஒரு மாப்பிள்ளைக்கு நிச்சயமான பொண்ணெ வேறே ஒருத்தரும் எடுக்கவும் மாட்டாங்க, இதெல்லாம் யோசனெ பண்ணாமே நீ பாட்டுக்கு சின்னப் புள்ளேத்தனமா.......
லீலா : யாருடைய கேவலத்தைப் பற்றியும் எனக்குக் கவலை யில்லை! இந்தச் சம்மந்தத்தையோ அல்லது இன்னொரு சம்மந்தத்தையோ நான் விரும்பவுமில்லை. இதைவிட நான் கன்னியாகவே இருப்பது போதும் உனக்குக் கோடி புண்ணியம் உண்டு, என்னை வீணாகத் தொந்தரவு செய்யாதே.
காமா : ஊஹூம், அவ்வளவு தூரம் ஆயிடுச்சா! ஒன்னெச் சொல்லக் குத்தமில்லேடி, ஒன்னெச் சொல்லக் குத்தமில்லே. ஒன்னெ இந்த-இந்த-இந்த (வயிற்றில் அடித்துக் கொள்ளுகிறாள்) வயிற்றில் பத்து மாசம் செமந்து பெத்தேன்பாரு, அதுக்குப் பலன் இது. இதை அவன் கேட்டா இந்த ஊரிலேயே குடி வைக்க மாட்டான். தொலைச்சேப்புடுவான்; இந்த மானக்கேட்டைப் பொறுத்துக்கிட்டு என் உயிரை வச்சிக்கிட்டு அரநாளிகூட இருக்கமாட்டேன். ஒன் இஷ்டப்படி செய். இந்தா ஒரு நிமிஷத்திலே என் உயிரெ மடிச்சிக்கிறேன்.
(கையிலிருந்த எல்லாவற்றையும் வீசியெறிந்து விட்டுக் கொல்லப்புறம் ஒடிக் கேணியில் குதிக்க முயற்சிக்கிருள்; லீலா பீதியடைகிறாள்.)
லீலா : ஐயோ! அம்மா, வேண்டாம் வேண்டாம்....... (கத்திக் கொண்டே பின் தொடர்ந்து போய்ப் பிடித்துக் கொள்ளுகிறாள். இந்தக் கூச்சலைக்கேட்டு வெளியில் பெண் அழைக்க வந்திருந்த யாவரும் ஓடிவந்து கூடி விடுகிறார்கள்.)
கூட்டத்தில் ஒருவர் : இதென்ன வேடிக்கை! என்ன நடந்தது? கார் காத்துக்கிட்டிருக்கு இன்னும் சிங்காரிக்கலையா?
காமா : (தலையில் மட மடவென்று அடித்துக்கொண்டு) இது என் தலைவிதி தலைவிதி தலைவிதி இவ்வளவு ஏற்பாடும் ஆனபிறகு பெண்ணுக்கு இஷ்டமில்லையாம்! இந்த வயிற்றெரிச்சலை நான் யாரிடத்தில் சொல்லி அழுவது? (முகத்தில் துணியை வைத்துக் கொண்டு அழுகிறாள்.)
ஒரு பெண் : (லீலாவிடம்) ஏம்மா இஷ்டமில்லேன்னா முன்னாலேயே சொல்லியிருக்கப்படாதா?
மற்றொரு பெண் : பாவம், சின்னப் பொண்ணு, மனசு கேக்கவாண்டாமா?
கிழவி : தாயார் சொல்றதைக் கேளம்மா. பெத்த தாய் ஒனக்குக் கெடுதல் பண்ண நினைப்பாளா? அவுங்க அவுங்களுக்குக் குடுத்து வச்சதுதானே கெடைக்கும். கோட்டையிலே பொறந்தாலும் போட்ட புள்ளி தவறுமா?
பெரியவர் : உம், உம், சீக்கிரம் புடவையை உடுத்தி அழைச்சிக்கிட்டு வாங்க. கொழந்தப் பொண்ணு. அதுக்கிட்டே எதமாச் சொல்லாமே மொரட்டுத் தனம் பண்ணின சரிப்படுமா? இந்தா! பங்கஜம், தலையை வாரிப் பொட்டுவச்சு உம். ம். ஆகட்டும்...
பங்கஜம் : சீப்பு எங்கேம்மா? வாம்மா - வா. நல்லா படிச்சவளாச்சே நீ, ஒரு பெண்: அதனாலேதானே இவ்வளவு கெடுதலும் வந்தது.
பங்கஜம் : ஏம்மா, நீ சும்மா இருக்கமாட்டே? கிழவி சொந்த மாமா; ஊருக்கே பெரியவரு; அறுபது வயசானாலும் ஆம்பிளைக்கு என்ன? ராஜாங்கமா கார்லே போக வர, நகை நட்டுப்போட,....... ம், ம். பூவை வையடி.......ம். சரி புறப்படும்மா. (காமாட்சியிடம்) ம், ம். காமாட்சி எழுந்திரும்மா. நீ வேறே சின்னப் பிள்ளையாட்டம் அழுதுக்கிட்டு, ம், ம், வா. வா.
(ஆளுக்கொரு பக்கமாய்ப் பேசுவதைக்கண்டு லீலாவின் உடல் குன்றிவிடுகிறது. உணர்ச்சியற்ற பதுமை போல் போகிறாள்.)