உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் கைதி/27

விக்கிமூலம் இலிருந்து

காட்சி 27.


இடம் : இரங்கூனில் நடராஜன் இருப்பிடம்.

காலம் : காலை

[நடராஜன் பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தபால்காரன் கடிதங்களைக் கொண்டு வந்து கொடுக்க நடராஜன் ஒரு கவரை உடைத்துப் படிக்கிறான்.]

ஷண்முகனாதபுரம்

அன்பார்ந்த அண்ணா!

தாங்கள் அம்மாளுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்தேன். தாங்கள் செய்திருந்த எச்சரிக்கை யெல்லாம் இறந்துபோன பிணத்திற்குச் செய்த இன்செக்ஷன் போல் பயனற்றுப் போய்விட்டது. உங்களைக் குறை கூறுவதாக எண்ணவேண்டாம். விதியென்று சொல்லுகிறார்களே. அதுதான் போலும் என்னைத் தினமும் கொன்று வருகிறது. தாங்கள் என்று என்னைத் தனியே விட்டுச் சென்றீர்களோ அன்றே என் எதிர்கால மனக்கோட்டைகள் யாவும் இடிந்து விழ, ஆரம்பித்துவிட்டன.

அருமை அண்ணா! ஏதோ நான் பிதற்றுவதாக எண்ணவேண்டாம். தங்களையும் என்னையும் பெற்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த ஒரு

ஜீவன் உண்டே! என்ன யோசிக்கிறீர்கள்? நம் தாய் தான். அவர்களின் அரும் பெரும் முயற்சியால் இன்று நான் மாமா என்று சொல்லக்கூடிய அந்த மிருக மனிதன் திவான்பகதூருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கப்பட்டிருக்கிறேன். தாங்கள் சென்ற மறு வாரமே எனக்குத் திருமணம் என்னும் கொடு மணம் நடத்தப்பட்டுவிட்டது. அந்த அக்ரமத்தைச் சொல்லி அழவும் ஆறுதல் கூறவும் இந்த அதே உலகில் ஒருவருமில்லை. இருந்த தாங்களும் என்னிடமிருக்கக் கொடுத்து வைக்கவில்லை. அதுவும் என் காலம்தான். இக் கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை, இனிமேலாவது இப் பரந்த உலகில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடவாதிருக்கும் பொருட்டு உருகியோடும் என் சரீரத்தை மண்ணில் மறைக்கத் தீர்மானித்துவிட்டேன். இருந்தாலும் என் கோழை மனம் இறப்பதற்கு முன் தங்களின் திவ்ய முகதெரிசனத்தைக் காணத் துடித்துக்கொண்டிருக்கிறது, இதுதான் என் கடைசி ஆசை.
இப்படிக்குத் தங்கள் தங்கை,
அபாக்கியவதி, லீலா,

நட : லீலா, லீலா! உனக்கா இக்கதி நேரிடவேண்டும்? இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லையே! என்ன அக்ரமம் பாபி நான்தான் இதற்குக் காரணம். உன்னை அந்தச் சண்டாளர்களிடையே விட்டு வந்தது என் தப்பிதம்தான்........ அடே அயோக்கியக் கிழட்டுப் பயலே! உன் எண்ணம் நிறைவேறிவிட்டதென்றா நினைத்துக்கொண்டிருக்கிறாய்? ஊம்...... எங்களைப் பெற்ற தாயே பேயாகவா இருக்கவேண்டும்! இருக்கட்டும். லீலா இதோ புறப்பட்டுவிட்டேன், கவலைப்படாதே! அடுத்த கப்பலில் பதிவு செய்யப்படும் முதல் சீட்டு என்னுடையதுதான்.

(விரைந்து செல்லுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/27&oldid=1073519" இலிருந்து மீள்விக்கப்பட்டது